'வழக்கம் போல பள்ளியோடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் நீராரம் தேடினேன். இல்லை. அம்மா அரிசி வாங்க சென்றிருக்கலாம். இந்த அரிசி வாங்கும் வழக்கம் மட்டும் எங்கள் ஊரில் இல்லாமல் இருந்திருந்தால் நிறைய குடும்பங்கள் தற்கொலை செய்திருக்க வேண்டியதுதான். அரிசி வாங்குதல் என்றால் நீங்கள் நினைப்பது போல் கடையில் காசு கொடுத்து வாங்குதல் அல்ல. அக்கம் பக்கத்துக்கு வீடுகளில் கடனாக வாங்குவது. இதற்கென்றே ஒரு ஓலைப் பொட்டி இருக்கும். அனேகமாக எல்லோர் வீட்டிலும் இருக்கும். காசு பணம் இருக்குறவுக ஒரு குவிண்டால் அரிசி வாங்கி வருவார்கள். முன்னர் அவர்கள் வாங்கிய கடன் அரிசி எல்லாம் திருப்பி தருவார்கள். ஒரு தடவை வாங்கி வரும் அரிசி, கடன் அரிசி கொடுத்தது போக ஒரு வாரம் வரும். இது பொதுவான 'அரிசியல் விதி'. எல்லோர்க்குமான ஒரு வாரக் கணக்கு எங்களுக்கு இருந்ததில்லை. கடன் வாங்கிய அரிசியை திருப்பி கொடுக்கவே சில சமயம் பத்தாது.
அரிசியே இப்படி என்றால் அடுத்த காய்கறி, குழம்பு எல்லாம் எப்படி இருந்திருக்கும். அந்த ஆடம்பரத்திர்கெல்லாம் வசதி இல்லை. வடி தண்ணீர் குடிப்பதே பேரானந்தமாக இருக்கும். தொட்டுக்கொள்ள கொஞ்சம் பழைய குழம்போ, வெங்காயமோ கிடைத்தால் கூட இரண்டு செம்பு குடிக்கலாம்.
அப்போதெல்லாம் நான் நிறையே சாப்பிடுவேன். ஒரு நாளைக்கு நாலு அல்லது ஐந்து தடவை சாப்பிடுவேன்.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது . ஒரு தடவை நான் மூன்று தட்டு சோறு சாப்பிட்டேன். அப்பாவிற்கு சோறு கொஞ்சம் தான் இருந்தது. அம்மா அப்பாவின் முகம் பார்க்க, அவனிற்கு இன்னும் போடு என்று சொல்லி அவரே போட்டது. அதையும் நான் சாப்பிட்டு விட்டுத்தான் தூங்கினேன்.
இயலாமையின் வெளிப்பாடு கோபம் தானே! எப்போதும் காசு கொடுக்கும் அப்பா எப்போதாவது இல்லைடா என்பார். காசு என்றால் பத்து பைசா அல்லது இருவது பைசா. நிறைய இருந்தாலோ, சொந்தக்காரங்க வந்தாலோ ஒரு ருபாய் கிடைக்கும். நன்றாக செலவு செய்யலாம். ஆனால் சில நேரங்களில் காசு இல்லைடா, போடா என்பார். கேட்க மாட்டேன், அழுதால் தருவார் என அடம் பிடித்து அழுவேன். போடுவார் முதுகில் ஒன்னு.
அழுது கொண்டே சாயாக்கடை தாத்தா, மரப் பெஞ்சில் படுத்து தூங்கி விடுவேன். அந்த பெஞ்சின் ஒரு கால் உடைந்து ஒரு பக்கம் அழுத்தினால் இன்னொரு பக்கம் தூக்கும். இப்படி காலால் அழுத்தி, முகத்தால் அழுத்தி விளையாடுவேன். அப்படியே தூங்கி விடுவது வழக்கமானது. அந்த மரப் பெஞ்சின் வாசனை அப்படியே மனதில் இருக்கிறது. ( விவேக் இதை படித்தால் டீ கடை பெஞ்சை நக்கல் செய்ய மாட்டார் )
(தொடருவேன்!)