Showing posts with label கல்லூரி. Show all posts
Showing posts with label கல்லூரி. Show all posts

July 17, 2016

                                                           கல்லூரி, காதல், கல்யாணம்




அன்று இரவு முழுதும் குடித்துக் கொண்டே இருந்த ‘அமரை’  என்ன சொல்லியும் சமாதானப்படுத்த முடியவில்லை. மாப்ள, தப்பு எம்மேல தாண்டா.. மன்னிச்சுடு அல்லது ரெண்டு அடி அடிச்சுடு. ஏன்டா இப்டி நாள் முழுதும் குடிச்சிட்டே இருக்க என்றேன்.
மாப்ள.. ஒம்மேல ஒன்னும் வருத்தம் இல்லடா. ஆனா கணேசன் கேட்டாம் பாரு ஒரு கேள்வி அதத் தாண்டா தாங்கிக்க முடில. செத்துரலாம் போல இருக்குடா மாப்ள என்றான்.
நான், அமர்நாத், கணேசன் என்று நாங்கள் பத்து பேர் கல்லூரி நண்பர்கள். அப்படியே ஹாஸ்டல் ரூம் மேட்ஸ். தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகளில் எங்கள் பத்து பேரையும் அப்படியே வெளியே அனுப்புவது பேராசிரியரின் வழக்கம். ஏனென்றால் நாங்கள் எப்போதும் பத்து பேராகவே சுற்றிக் கொண்டிருப்போம். எவனோ ஒருவன் மட்டும் சேட்டை செய்தாலும் என்னப்பா பத்துப் பெரும் வெளியே போறீங்களா இல்ல இவன மட்டும் அனுப்பட்டுமா என்பார். இல்ல சார் எல்லோரும் போறோம் என்று பத்து பேரும் கட் அடிப்போம். 

இதில் எனக்கு அமர்நாத் மட்டும் கொஞ்சம் க்ளோஸ் பிரெண்ட்.
ஏனெனில் நான் கவிதைகள் என்று கிறுக்கியவற்றிற்கு எல்லாம் முதலில் லைக் போடுபவன். இப்டியே நூல் பிடிச்சு சினிமாவுக்கு நீ பாட்டு எழுதணும் மாப்ள என்பான். எப்போதாவது வரும் நல்ல கவிதைக்கு பஜ்ஜி சமோசா என்று எங்கள் எல்லோர்க்கும் ஸ்பான்சர் செய்பவன். வாழ்க்கையை ரசனையோடு வாழ்பவன். பேஸ்ட் தீர்ந்து போன நாட்களில் மற்ற எல்லோரும் செங்கல் போடியையோ அல்லது குச்சியை கொண்டோ கடமை தீர்க்கையில் அவன் மட்டும் ஸ்டெப்னியாக இன்னொன்று வைத்திருப்பான்.

ஆப்டர் ஷேவ், பேர் அண்ட் லவ்லி, ஷாம்பூ பாட்டில், பியர்ஸ் சோப், திருநீறு மற்றும் குங்குமம் என அமர்நாத் வைத்திருக்கும் பெட்டி மட்டுமே பூட்டியிருக்கும். மற்ற எல்லோர் சூட்கேசும் ஓபன் தான். அவன் பெட்டியை பூட்டி வைப்பதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அது அவனின் பர்சனல் டைரி. தினமும் ஏதோ ஒன்றை அதில் எழுதி திரும்பவும் உள்ளே வைத்து மறக்காமல் பூட்டியும் விடுவான்.

அமரிடம் மட்டும் புது பிளேடுகள் பாக்கெட் பாக்கெட்டாக இருக்கும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு மூலையில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து பிளேடால் பெருவிரலை கீறிக் கொண்டு அதில் வரும் ரத்தத்தை பேனா நிப்பிளைத் தொட்டு கடிதம் எழுதுவான். ஒரு கடிதம் எழுத அரை மணி நேரம் ஆகும். இரண்டு பிளேடுகள் ஆகும். டேய் பங்காளி.. நீ மட்டும் ரத்த தானம் பண்ணிருந்தா பத்து பேரையாவது காப்பாத்தி இருக்கலாம்.. இப்டி வேஸ்ட் பண்றயடா என்று கிண்டல் செய்தாலும் இதை எல்லாம் அமர் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கடிதம் எழுதும் நேரங்களில் வேறு ஒரு உலகில் வாழ்வான். அவனிற்கு வரும் கடிதங்களும் ரத்தத்தில் தான் எழுதப்பட்டிருக்கும் அவனின் முகவரியும் கூட.
ஒவ்வொரு திங்கள் கிழமையிலும் போஸ்ட் ஆபீஸ் சென்று அவனிற்கு வரும் கடிதத்தை அவனே நேரடியாக வாங்கி படித்து விட்டு பெட்டியில் பூட்டி வைத்து விடுவான்.

இப்படியான ஒரு நாளில் ஏதோ ஒரு அவசர வேலையாக வெளியில் சென்றவன் அவனிற்கு வந்த கடிதத்தை பாட்டணி ரெகார்ட் நோட்டில் வைத்துவிட்டு சென்று விட்டான். படம் வரைவதற்காக நோட்டை எடுத்த என் கையில் அந்தக் கடிதம் சிக்கியது.

கொசகொச வென ரத்தத்தில் எழுதப்பட்ட கடிதத்தில் கடைசி வரி மட்டும் தெளிவாக இவ்வாறாக இருந்தது. ‘வரும் வாரத்தில் அவர் வேலை விசயமாக திருப்பூர் செல்கின்றார். நீ வீட்டிற்கு வா.. என்று. அது வரை அமர்நாத் மீது நாங்கள்  வைத்திருந்த மதிப்பு சரியத் தொடங்கிய தருணம் அது. இருந்தாலும் இந்த விஷ(ய)த்தை நாங்கள் தெரியாத மாதிரி நடந்து கொண்டோம் அவன் மனது கஷ்டப் படும் என்று.

இளையராஜாவா ஏ. ஆர். ரஹ்மானா, வாலியா கண்ணதாசனா வைரமுத்துவா  என்று எங்கள் நண்பர்களுக்குள் பட்டிமன்றம் அல்லது விவாத மேடை நடைபெறும். ஏதோ ஒரு கோபம் வந்த சமயத்தில் கணேசன் சொல்லி விட்டான். அடுத்தவன் பொண்டாட்டிக்கு லவ் லெட்டர் எழுதுறவன் எல்லாம் பேச வந்துட்டான்கள் என்று. அமருக்கு தெரிந்து விட்டது.. அவனைப் பற்றி எங்களுக்கு தெரிந்து விட்டது என்றும் கணேசன் குத்திக் காட்டிப் பேசியது அவனைப் பற்றித் தான் என்றும்.
அந்த நாளில் தான் குடித்துக் கொண்டே இருந்தான். சரி விடு மாப்ள.. வா தூங்கலாம் என்று கூப்பிடும் போது வர மறுத்தான். மாப்ள இவைங்கள விடு மாப்ள நீ மட்டும் என்ன நடந்ததுன்னு தெருஞ்சிக்க
.
விஜி யும் நானும் பிளஸ் டூ ல கிளாஸ் மேட்ஸ். பக்கத்துக்கு வீடு வேற. என்னைய அவளுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா பிளஸ் டூ முடிச்ச ஒடனே அவளுக்கு கல்யாணம் பேசினாங்க. அவள் மருந்தக் குடிச்சு செத்துப் போயிடலாம்னா.. ஆனா நாந்தேன் சமாதானப் படுத்தி நீ கல்யாணம் பண்ணிக்கோ.. நா படிச்சு ஒரு வேலைக்குப் போன ஒடனே ஒன்னைய கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி வாக்குக் கொடுத்து காப்பாத்தினேன். நா கண்டிப்பா அவளக் கல்யாணம் பண்ணிக்குவேன் மாப்ள. இன்னும் சொல்லப் போனா அவளுக்கு கொழந்த ஏதாவது இருந்தா அந்தக் கொழந்தையோட ஏத்துக்குவேண்டா என்று சொல்லும் போது கண்ணீரோடு உடைந்திருந்தான்.

இப்போ சொல்லு மாப்ள என்னோட லவ்வர ஒருத்தன் கல்யாணம் பன்னிருக்கானா இல்ல இன்னோர்த்தன் மனைவிக்கு நான் லெட்டர் போடுறனா.. இது ஒனக்கு மட்டும் தெரிஞ்சா போதும் மாப்ள..வேற எவனுக்கும் தெரிய வேண்டாம் என்றான்.

இப்போது இந்த காதல் மன்னன் என்ன செய்கின்றான்.. அதே பெண்ன கல்யாணம் பண்ணிட்டானா.. இல்ல இன்னும் கல்யாணம் ஆகாம தாடி வளர்த்து கே.கே பட்டி தேவதாசா அலையிரானா என்று பார்க்க கம்பம் போய்க் கொண்டிருக்கின்றேன். உடன் வர விருப்பமிருப்பவர்கள் காத்திருங்கள் அடுத்த சண்டே வரை.. 
                                               

July 25, 2012

கடவுள்



டேய் மாப்ள, கடவுளப் பாத்தியா,
இல்லியே மாப்ள, இங்க வரலடா
இரண்டு வாரமா வரலடா, இன்னைக்கு வரட்டும் அவன் , பிச்சு எடுத்துடுறேன் என்பது நான் கல்லூரி விடுதியில் இருக்கும் போது பெரும்பாலும் கேட்கும் டயலாக். நாங்கள் எல்லோரும் ஒவ்வொரு திங்கள் கிழமையும் கடவுளையே நம்பி இருப்போம். காலை எட்டு மணிக்கு கடவுள் வருவார் சைக்கிளில், காரியரில் பெரிய துணி மூட்டையுடன்.
ஆம், கடவுள் எங்கள் கல்லூரி விடுதியின் ஆஸ்தான துணி வெளுப்பவர். நம்ம ஊரு வழக்கத்தில் ‘டோபி’.
கடவுள் என்பது அவரது சொந்தப் பெயர், பட்டப் பெயர் அல்ல. இந்த வகையில் நம் ‘கும்புடுறேன் சாமி’ ஆர்யாவுக்கு எல்லாம் மூத்த முன்னோடி எங்கள் கடவுள் தான்.
சொல்லுங்க கடவுளே, எவ்வளவு ஆச்சு, என்றால் குடுங்க சாமி, உங்களுக்கு தெரியாதா என்பார்.  துணிகளை ஆள் மாற்றிக் கொடுப்பதும் சில நல்ல சட்டைகளை, அவரிடம் போடவே இல்லை என்பதும், ஒரு மாதம் கழித்து சில சட்டைகளை திரும்பக் கொடுப்பதும் எங்கள் கடவுள் ஆடும் திருவிளையாடல்.
நான் புதிதாக வாங்கிய டி-சர்ட் ஒன்றைக் காணவில்லை. கடவுளிடம் கேட்டால்,நீங்க எங்கிட்ட போடவே இல்ல சாமி என்றார். திரும்ப மறு வாரத்தில் கேட்டதற்கும்,  இல்லையே சாமி, நா என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன், வேணுமுன்னா நீங்க எங்க வீட்டுக்கு வந்து பாத்துகிடுங்க’ என்றார்.
சில சீனியர்களிடம் கேட்ட போது, இந்த வேலைய இந்த ஆள் ரொம்ப நாளா பண்ணிக்கிட்டு இருக்காரு, என்னோட புது சர்ட் கூட காணோம், கேட்டதுக்கு இதே பதிலைத் தான் சொன்னார் என பல பேர் கூற, நானும் அமரும் முடிவு செய்தோம், கடவுளைச் சோதிப்பது என, ( படிக்க நல்லா இருக்குல்ல!)
அவர் கல்லூரிக்கு வராத ஒரு நாளில் அவர் வீட்டுக்குச் சென்றோம். கடவுள் வாழும் வீடு ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்தது. வீட்டிற்கு முன்னால் இரண்டு கழுதைகள் பொதி மூட்டையுடன் நின்று கொண்டிருந்தன. கடவுளின் துரதிருஷ்டம் அவர் பேரன் எனது புது டி-சர்ட்டை, கடவுளால் எங்கிட்டபோடவே இல்ல என்று சொல்லப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் டி-சர்ட்டை போட்டிருந்தான்.
‘என்ன கடவுளே எப்படி இருக்கீங்க’ என்றவுடன், அவருக்கு தூக்கி வாரிப் போட்டது. இது வரை ‘வீட்டுல வேணா செக் பண்ணிக்குங்க’ என்று நிறைய பேரிடம் சொல்லி இருக்காரே தவிர ஒருவரும் அவர் வீட்டிற்குச் சென்றிருக்கவில்லை. அவருக்குத் தெரிந்து விட்டது, நாங்கள் கண்டு பிடித்து விட்டது.
சாமி, ஏழப்பட்டவன் சாமி, மன்னிச்சுருங்க? இனிமே இப்படி பண்ண மாட்டேன் என்று கண்ணீருடன் கேட்ட கடவுளை, பார்ப்பதற்கே பாவமாக இருந்தது.
கடவுள்னு பேர் வச்சுக்கிட்டு நீங்க இப்படி பண்ணிருக்கக் கூடாது பெரியவரே என்று சொன்னபோது, கிட்டத்தட்ட அழ ஆரம்பித்திருந்தார்
இதுவரை நீங்க தொலஞ்சு போச்சு என்று சொல்லிய எந்த துணியையும் குடுக்க வேண்டாம். ஆனால் இனிமே இப்படி பண்ணக் கூடாது.
அப்புறம் இது வரை துணிக்கு இரண்டு ரூபா வாங்கிட்டு இருக்குறீங்க, இனி மேல் அத மூணு ரூபாயா ஏத்திக்குங்க. ஆனா எங்களோட துணிகள ஒங்க பேரன்களுக்கு குடுக்கக் கூடாது. அப்படி டிரெஸ் வேணுமுன்னா கேட்டு வாங்கிகுங்க.
இனிமே நாங்க இரண்டு பெரும் உங்க கிட்ட துணி துவைக்க கொடுக்க மாட்டோம். நாங்களே துவச்சு அயன் பண்ணிக்கிறோம், என்று சொன்னோம்.
இனிமேல் இப்படி பண்ண மாட்டேன் சாமி, ஆனா நீங்க என்கிட்ட துணி போட மாட்டேன்னு சொன்னது தான் எனக்கு சங்கட்டமா இருக்கு என்றார்.
அதற்குப் பின் நானும் அமரும் எங்களின் துணிகளை நாங்களே துவைத்துக் கொண்டோம். காரணம் கேட்டவர்களுக்கு, நாம போடுற துணிய நாம தாண்டா துவைக்கணும், இல்லையின்னா அடுத்தவன் போடுவான் என்று சொன்னது வேறு யாருக்கும் புரியவில்லை, எங்கள் இருவரைத் தவிர
          

July 5, 2012

'முத்து' அல்லது கல்லூரியின் கதை



போன வாரம் ஊருக்கு போயிருந்த போது, முத்துவைப் பார்த்தேன். முத்து என் பெரியப்பா பையன், அதாவது ‘அண்ணன்’. என் கல்லூரி மற்றும் விடுதித் தோழன். நடுவில் ஏதோ ஓரு வகுப்பில் ‘பெயில்’ ஆனதால், தம்பியாகிய என்னுடன் படிக்கும் ‘வாய்ப்பு’ முத்துவுக்கு கிடைத்தது. முத்து என்று கூப்பிட்டால், ‘அண்ணன்னு கூப்பிடுறா அறிவு கெட்டவனே’ என்று திட்டும். 

‘அண்ணனுக்கு ரொம்ப அறிவுடா, வேணுமுன்னா கேட்டு வாங்கிக்கங்க’ என்று சொல்லும் ‘அமர்நாத்’ கம்பத்துக்காரன். நான், முத்து, ‘கிளாவரை’ செந்தில், ‘தூங்கு மூஞ்சி’ மன்னன், ‘கஞ்சா’ செந்தில், அமர், மற்றும் ‘மாப்பிள்ளை’ கணேசன் அனைவரும் விடுதி அறை எண் 176 ல் தங்கிப் படித்தோம்.

எங்கள் நட்பு வட்டம் மிகப் பெரியது. இதில் ‘அமர்’ எனது கவிதைகளுக்கு முதல் விமர்சனம் செய்பவன். செமஸ்டர் விடுமுறையில் நாங்கள் அனைவரும் அமரின் வீட்டுக்குச் செல்வோம்.

அமர், நண்பர்கள் அனைவரையும் ‘மாப்ள’ என்றே கூப்பிடுவான். அமரின் தென்னந்தோப்பில் இருந்த வீடு எங்களின்  விடுமுறை சொர்க்கம்.

தோப்பிலிருந்து ‘சுருளி தீர்த்தம்’ அருவி நடை பயண தூரம் தான். அருவியில் குளித்து விட்டு, தோப்பு வீட்டிற்கு நடந்து வந்தால், மீன் குழம்பும், சுடச்சுட சோறும் தயாராக இருக்கும்.

அப்படியே மூன்று நாட்கள் தங்கி விட்டு, தேக்கடி, வீரபாண்டி, வருஷ நாடு என்று ஒரு ரவுண்டு வருவோம். விடுமுறை முடிந்திருக்கும்.

வார விடுமுறைக்கு முத்துவின் வீட்டுக்கு செல்வோம். செல்வோம் என்றால் நண்பர்களில் குறைந்தது ஐந்து பேராவது என்று கொள்க.

முத்துவின் வீட்டுக்கு, மெயின் ரோடிலிருந்து மூன்று கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழியில் தான் பனை மரக் காடும், ‘கள்’ எறக்கும் இடமும். ( உங்களுக்கு புரிந்திருக்குமே, ஆமாம், வார வாரம் முத்துவின் வீட்டின் மாடியில் ஆரவாரம் தான்)

எங்கள் பெரியப்பா வீடு மிகப் பெரியது. முத்துவுக்கு, மூன்று தம்பிகள், ஒரு அக்கா, ஒரு தங்கை.        

அக்காவை ஒரு முறை கூடப் பார்த்ததில்லை. ஒரு தடவை முத்துவிடமே கேட்டேன்.  ‘எத்தனயோ தடவ வந்திருக்கேன், அக்காவ மட்டும் பார்க்கவே முடியல, ஏண்ணே, ‘ஊர்க்கு போயிருக்காங்களா’ என்று.

வீட்டில தாண்டா இருக்காங்க, ஆனா நான் பார்த்தே ஐந்து வருசமாச்சு. இங்க வயசுக்கு வந்துட்ட அப்புறம், கட்டிக்குடுக்கிற வரை அப்பா, அண்ணன், தம்பின்னு யாரையும் பார்க்க மாட்டாங்க'.  

(ஆனால், அந்த அக்காவின் திருமணத்தின் போது, வாடா சரவணா, எப்படி இருக்க என்று சரளமாக பேசியது ஆச்சரியமாக இருந்ததது. அப்போது தான் தெரிந்தது, நாம் தான் அவர்களைப் பார்க்க முடியாதே தவிர, வீட்டுக்குள் இருக்கும் அவர்கள் நம்மளை பார்க்கும் ‘வசதி’ இருந்ததை அல்லது ஏற்படுத்திக் கொண்டதை)

முத்து அண்ணனும் பெரியப்பாவும் நேரடியாகப் பேசிக் கொள்ள மாட்டார்கள். பெரியப்பா ஹாஸ்டல் வந்தால் என்னிடமே நிறைய நேரம் பேசுவார்.

சரவணா, அண்ணன நல்லா படிக்கச் சொல்றா. எங்க காலம் இந்த ‘மண்ணோட’ போயிடுச்சு. எங்களுக்கு சம்பாரிச்சு போட வேணாம்பா. நீங்க புத்தியோட பொழச்சுகிட்டா போதும்ரா’ என்று சொல்லிவிட்டு, இந்தா உனக்கு, இத அவன்கிட்ட கொடு என்று பெரியப்பா தரும் பணத்தில் ‘நெல்’, கடலை வாசம்’ இருக்கும்.

‘என்னடா, பெரிசு என்ன சொல்லுச்சு’ என்றபடி பணத்தை வாங்கும் முத்து, ஏன்டா இந்த பணம் எப்படிடா பத்தும்? இன்னும் கொஞ்சம் கேட்க வேண்டியதுதான’ என்று கேட்கும்.

நான் சிகரெட் பிடிக்கும் போதும் சரக்கு அடிக்கும் போதும் ‘ இங்க பாருங்கடா ‘ எல்லாத் தப்பும் இவன் பண்றான், எங்க பெரிசு இவன நம்புது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத என்னைய நம்ப மாட்டேங்குது’ என்று முத்து சொல்லும் போது, அமர் சொல்லுவான்,

மாப்ள, எல்லா கெட்ட பழக்கமும் இருந்தாலும் ‘சரவணன் நல்லவன்டா’ ஆனால் எந்த கெட்ட பழக்கமும் இல்லாட்டாலும் நீ ‘கேடித் தாயோளிடா’ என்றவுடன் ரூம் களை கட்ட ஆரம்பிக்கும். ஆம், முத்து அண்ணனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.

முதலாம் வருடம் FIRST SEMESTER முடியும் போது எனக்கு லவ் லெட்டர் வர ஆரம்பித்து இருந்தது.

‘இது ஒன்னு மட்டும் தாண்டா குறையா இருந்தது, இப்போ அதையும் பண்ணிட்டியா’ என்று அதட்டிய முத்து அடுத்த வாரமே வந்து, ‘ஈஸ்வரிய பஸ்ல பார்த்தேண்டா’, நல்ல பொண்னு மாதிரி தெரியுதுடா, ஏமாத்திராத என்று சர்டிபிகேட் கொடுத்தது.

இரண்டாம் வருடம் காலேஜ் ஓபன் பண்ணிய முதல் வாரம் ஊருக்குப் போகும் போது ‘ தயங்கி தயங்கி’ என்னிடம் வந்து ‘தம்பி ஒரு ஹெல்ப் பண்றா’ என்றது.

‘சொல்லுண்னே’ என்றவுடன் ஒரு இன்லேண்ட் லெட்டர் கொடுத்து ஒரு லவ் லெட்டர் எழுதிக் கொடுரா, பொண்ணு பேரு துர்கா, ‘பக்கத்து ஊருல படிக்குது’ என்றவுடன் எனக்கு பயங்கர சிரிப்பு வந்தது. ஏனென்றால் முத்துவின் கேரக்டர் அப்படி. சரியான முரடு, குரலும் தான். பேசும் போதே நாலு அடி அடித்து தான் பேசும்.

இருந்தாலும் ஒரு வழியாக சமாளித்து,   சரிண்ணே, அதுக்கென்ன எழுதித் தர்றேன், என்று சொல்லி எழுத ஆரம்பித்தேன்.

அன்புள்ள ‘துர்ஹா’ விற்கு, என்று எழுத ஆரம்பித்தவுடன் ‘ டேய் துர்ஹா இல்லடா, ‘துர்கா’ டா, ஒரு லெட்டெர வேஸ்ட் பண்ணிட்டயே’ என்றது. ஒன்னும் பிரச்சினை இல்ல, இப்ப எப்படி சமாளிக்கிறேன் பாருன்னு சொல்லி, அதற்குக் கீழேயே ‘துர்ஹா’ என்பதில் எழுத்துப் பிழை இல்லை. உன் பெயரை வன்மையாக உச்சரிக்க மனசு வரவில்லை அதனால் தான் ‘கா’ வுக்குப் பதில் ‘ஹா’ என்று ஆரம்பித்து, கவிதையாய் இரண்டு பக்கத்தில் எழுதிக் கொடுத்தேன்.

அடுத்த வாரம் விடுமுறை முடிந்து வரும் முத்துவிற்காக நானும் என் நண்பர்களும் காத்திருந்தோம்.

முத்து வந்தவுடன் ‘என்ன ஆச்சுன்னே’, முகத்துல சந்தோசமே இல்ல, லெட்டர் கிடைக்கலையாமா’ என்று கேட்டேன்.

முத்து சொன்ன பதில்.

நான் கையில தாண்டா கொடுத்தேன். என்னோமோ தெரியல, படுச்சுட்டு ஒரே அழுக, ‘என்ன மாமா, ஒண்ணுமே புரியல’ என்று சொல்லிட்டுப் போயிடுச்சு’ என்று படு சோகமாகச் சொன்னவுடனே தான் நான் அந்தக் கேள்விய கேட்டேன்.

அண்ணே, துர்கா அண்ணி என்ன படிக்கிறாங்க என்று.

‘எட்டாப்புடா, முதுகுளத்தூர் ஸ்கூல்ல’ ‘நம்மளுக்கு தூரத்து சொந்தம்’ என்றவுடன் எங்களுக்கு வந்தது பாருங்க சிரிப்பு, அறை அடங்குவதற்கு அரை மணி நேரமாகியது.

அதிலும் என் ‘அறிவு ஜீவி’ அண்ணன் கையில் கொடுக்க வேண்டிய லவ் லட்டரைத் தான் இன்லேண்ட் லெட்டரில் எழுதச் சொல்லியிருக்கிறது. ஒரு வாரம் இதை வைத்தே ஓட்டினோம்.

இரண்டாம் வருடம் முதல் செமஸ்டர் முழுவதும் ‘சிகரட் ஸ்பான்சர்’ செய்தது முத்து அண்ணன் தான். ஆம், முத்து 'தம்மடிக்க' ஆரம்பித்து விட்டது.

அந்த வருடக் கடைசியில் ‘தண்ணியும்’ பழகி விட்டது. வேண்டாம்னே, பெரியப்பா என்கிட்ட உன்னைய பாத்துகிடச் சொல்லிட்டு போயிருக்காரு, 'இதெல்லாம் பண்ணாதே' என்று சொன்னால், ‘ நல்லவரு சொல்லிட்டாரு’ போடா, நீ முதல்ல திருந்து, அப்புறம் மத்தவங்கள திருத்து’ என்று சொல்லி விட்டு பீடிக் கட்டை இடுப்பில் சொருகிக் கொண்டே 'ரம்மி' இழுக்கப் போய் விட்டது.

நிறைய அரியர்ஸ் வைத்திருந்தாலும் இரண்டாம் வருடம், செகண்ட் செமெஸ்டரில் எல்லாவற்றையும் கிளியர் செய்து விட்டது. ஒன்றே ஒன்றைத் தவிர. அது பயோ கெமிஸ்ட்ரி.

மூன்றாம் வருட முதல் செமஸ்டர் ஆரம்பம். தம்பி, எனக்கு ஒரு ஹெல்ப் பண்றா, உன்னால தாண்டா முடியும், எனக்கு வேற வழி இல்ல என்று தயங்கியபடியே கேட்டது.

சொல்லுண்னா, திரும்ப ஏதாவது லெட்டர் எழுதனுமா என்று சிரித்துக் கொண்டே கேட்க, ஏன்டா, நான் எவ்வளவு சீரியஸா கேட்டுக்கிட்டு இருக்கேன். விளையாடதடா, என்று சொல்லி விட்டு மீண்டும் தயங்கியபடியே என்னைப் பார்த்தது.

சும்மா சொல்லுண்னே, உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன், எதுக்கு இவ்வளவு தயங்குற என்றேன்.

இல்லடா, நானும் இரண்டு தடவ எழுதிப் பார்த்துட்டேன். பயோ கெமிஸ்ட்ரி பேப்பர் அரியர் பாஸ் பண்ண முடியல? அதனால எனக்குப் பதிலா நீ எழுதுடா, ப்ளீஸ். இது உன்னால மட்டும் தான் முடியும். ஏன்னா, நம்ம செட்ல அந்த பேப்பர அரியர் இல்லாம பாஸ் பண்ணியது நீ மட்டும் தான்.

இந்த ஒரு பேப்பர் மட்டும் தாண்டா, இது மட்டும் கிளியர் ஆயிடுச்சுன்னா உன் பெரியப்பா ஆசைய நிறைவேத்திருவேன்.

இதைக் கேட்டவுடனே எனக்கு கை, கால் ஆடியது. அண்ணே, எனக்கு தைரியம் பத்தாது, நிச்சயமா மாட்டிகிடுவேன். அதனால வேண்டாம்னே, நீ நல்லாப் படி, டவுட் இருந்தா சொல்லு, சொல்லித் தர்றேன் அல்லது 'நாம பேப்பர் சேஸ் பண்ணலாம்' என்றேன்.

அதல்லாம் வேலைக்கு ஆவாதுடா, நீ எழுது. அது தான் ஒரே வழி என்று சொல்லி விட்டு போய் விட்டது.

மிக நீண்ட அண்ணனின் கெஞ்சலாலும், நண்பர்களின் வற்புறுத்தலாலும், தயக்கத்துடன் ஒத்துக் கொண்டேன்.

எக்ஸாம் முடித்து கீழே இறங்கி வரும் போது, ‘ஹால் சூபெர்வைசர்' தம்பி, தம்பி, நில்லுங்க என்றார்.நெஞ்சில் பயம் குப்பென்று உட்கார்ந்தது. பயத்துடன் ‘சொல்லுங்க சார்’ என்றேன்.

என்ன தம்பி நீங்க! நம்பர் எழுதாம பேப்பர் கொடுத்துட்டு போறீங்க, இந்தாங்க, ரோல் நம்பர் எழுதிக் கொடுங்க என்று சொன்னவுடன் தான் உயிரே வந்தது,

அந்தத் தேர்வில் அறுபத்தி நாலு மதிப்பெண் பெற்று ‘முத்து’ பாஸ் ஆகி விட்டது.                

மூன்றாம் வருடம் நடந்த ‘காலேஜ் ஸ்ட்ரைக்கில்’ முத்து அண்ணன் ‘ஆக்டிவ்’ ஆக கலந்து கொண்டதால் ப்ராக்டிகல் வகுப்பில் வேண்டும் என்றே பெயில் மார்க் போட்டார் ப்ரொபசர் எஸ்.கே சார்.

ப்ராக்டிகல் தேர்வை இரண்டு முறை எழுதியும் பாஸ் பண்ண முடியவில்லை.

அந்த வருட விடுமுறையில் பக்கத்துக்கு வீட்டுக்கு லீவில் வந்த பெண்ணோடு ‘காதல்’ வந்து, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து வத்தலக்குண்டில் செட்டில் ஆகி விட்டது.

ஆனால் இப்போது வரை எனது பெரியப்பாவின் ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை. ஆம் முத்து, டிகிரி முடிக்கவே இல்லை. ஒரு ட்ரான்ஸ்போர்ட் கம்பனியில் மேனேஜர் ஆக வேலை பார்க்கும் முத்துவிற்கு இரண்டு பெண் குழந்தைகள்.

போன வாரம் நேரில் பார்த்த போது, தமிழ்நாடு டூரிசம் பாரில் வைத்துக் கேட்டேன், ஏன்னே, அந்த ‘ப்ராக்டிகல் எக்ஸ்சாம்’ எழுதி முடிச்சியா?  

முத்து அண்ணன் சொல்லியது, எங்கடா, அந்த எஸ்.எம் தான் என்னைய பழி வாங்கிட்டான்ல.

உனக்கு தெரியுமா? அந்த எஸ்.எம் ப்ரொபசர் குடும்பத்தோட செத்துப் போனான்டா?

எப்படிண்ணே ?

என் பாவம் சும்மா விடுமா, கேஸ் சிலிண்டர் வெடிச்சு, வீடே தீ புடிச்சு எரிஞ்சுடுச்சுரா.