August 12, 2010

பேனா மன்னன்


பேனா மன்னன், சொன்னால் நம்புவதற்கு உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் இந்த பெயரோடு அல்லது இந்த அடைமொழியோடு ஒருவர் எண்பதுகளில் வலம் வந்தார். மை ஊற்றி எழுதும் மை பேனாக்களை ரிப்பேர் செய்வது அவரின் தொழிலா அல்லது பொழுதுபோக்கா என சரியாக தெரியவில்லை.
அவரின் உண்மையான் பெயர் எனக்கு மட்டுமல்ல், என் அப்பாவிற்கே தெரியாது. எங்கள் சுற்று வட்டாரத்தில் யாவர்க்கும் தெரிந்த நபர் பேனா மன்னன் என்று அழைக்கப்பட்ட பெரியவர். பெயருக்கு ஏற்றார் போல பேனா ரிப்பேர் செய்வதில் மன்னன் அவர். சாமியார் அல்லது பரதேசி போல தாடி வைத்திருப்பார். கக்கத்தில் ஒரு காக்கி கலர் தபால் பை வைத்திருப்பார். அந்த பையுள் தான் ரிப்பேர் செய்யும் 'தொழில் கருவிகள்' இருக்கும். மை கசிதல், பேனா நிப் சரி செய்தல், நாக்கட்டை ரிப்பேர் என இந்தத் தலைமுறை அறியாத பிரச்சினைகள் எங்கள் காலத்தில் இருந்தன.

சனி, க்ஹ்யிறு விடுமுறைகளில், பேனாவை கிளீன் செய்வது பொழுதுபோக்கு. நேவி பேனா அப்போது பிரபலம். புது பேனா ஒரு வாசனையாகவும், மை ஊற்றி மை ஊற்றி பழசான பேனா ஒரு வாசனையாகவும் இருக்கும்.
கேம்லின் பேனா தேர்வுக்கு தயார் ஆகும் போது அப்பா வங்கித் தருவார். அதை கல் ஒன்றில் ஒரு சைசாக உரசி, தேர்வுக்கு தயார் செய்வது பேனா மன்னனே தான். நங்கள் ஒரு கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம். ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று பேனா ரிப்பேர் செய்து கொடுப்பார். மை கசியும் பேனாவிற்கு கிரீஸ் போடுவது மற்றும் எழுதாத பேனாக்களை எழுத வைப்பது என அவர் செய்யும் வேலைகளை பார்ப்பது மிகவும் விருப்பமான பொழுதுபோக்கு.

அவரின் உண்மையான் பெயர் என்ன, எங்கிருந்து வந்தார், எங்கே தங்கினார். இதுவும் எனக்கு மட்டும் அல்ல, எங்க அப்பாவுக்கும் தெரிந்திருக்காது என்றே நினைகிறேன்.