Showing posts with label நட்பு - துரோகம். Show all posts
Showing posts with label நட்பு - துரோகம். Show all posts

September 17, 2012

கணேஷ் குமார்



எப்போதாவது இப்படி ஆவது உண்டு. இன்று காலையில் பார்த்த, கைகளை சாய்வாக ஆட்டி ஆட்டி நடந்த பெண் எனக்கு கணேஷ் குமாரை ஞாபகப்படுத்தினாள். ஆனால் யோசித்துப் பார்த்தால் இரண்டு சம்பவங்களுக்கும் ஒன்றோரொண்டு சம்பந்தம் இல்லை. எப்படி கணேஷ் குமார் ஞாபகம் வந்தது எனக்கு.
கணேஷ் குமார் எனது பள்ளிப் பருவ நண்பன். ஒரு வகுப்பு, இரண்டு  வகுப்பு அல்ல. எனது மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பக்கத்திலேயே அமர்ந்து படித்த பள்ளித் தோழன். மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செக்சன் எதுவும் கிடையாது. எல்லோரும் ஒரே வகுப்பில் ஒரே ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளி அது. மதியம் கோதுமை உப்புமாவும் சுண்ட வத்தலுமாக காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு சாப்பிட்டு வளர்ந்தவர்கள் நாங்கள்.எங்கள் ஊர் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. ‘மேற்படிப்பு’ படிக்க ஆறு கிலோ மீட்டர் நடந்து பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும்.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ‘எ’ செக்சன், ‘பி’ செக்சன் என இரண்டு பிரிவுகள் உண்டு. பள்ளி தொடங்கி ஒரு வாரம் வரை ஒரே வகுப்பில் அமர்ந்திருக்கும் நாங்கள் செக்சன் பிரிக்கும் நாளில் கடவுளை வேண்டிக்கொள்வோம். நானும் கணேஷ் குமாரும் ஒரே செச்சனில் வர வேண்டும் என்று. நண்பர்களில் எனக்கு நிறைய பேர் இருந்தாலும் கணேஷ் குமாரை மட்டும் அதிகமாகப் பிடித்துப் போனதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. அதில் முக்கியக் காரணம் நானும் கணேஷ் குமாரும் கிளாஸ்மேட் (Classmate) என்றால் எனது அப்பாவும் அவன் அப்பாவும் க்ளாஸ்மேட் (glassmate). ஆனால் கணேஷ் குமாரின் அப்பா ஆசிரியர், அம்மா டீச்சர். எங்களுக்கு மூன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை டீச்சர் தான் கிளாஸ் எடுத்தார்கள். என்ன சோமு எப்படி இருக்க என்று ஒரு பக்கமாக தலையைச் சாய்த்து கேட்கும் டீச்சரின் பிம்பம் அப்படியே மனத்தில் இருக்கின்றது.
அப்பாக்கள் குடிக்கும் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளுக்கு எப்போது வீடு அமைதியாக இருக்கும், எப்போது சண்டையாக இருக்கும் என்பதே தெரியாது. அதைத் தீர்மானிப்பது  அன்று அப்பாக்கள்  குடிக்கும் சாராயத்தின் அளவே என்பதால் ஒரு வித குழப்ப மனநிலையிலேயே வளர்வார்கள்.   இந்த ஒரு காரணமே எங்கள் இருவருக்குமிடையேயான நட்பில் இறுக்கத்தை உருவாக்கியது. என்னடா உம்முனு இருக்க.. வீட்ல பிரச்சினையா.. விடு மாப்ள எங்க வீட்லயும் நடக்குறது தானே என ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வோம்.
கணேஷ் குமார்,  அவர்கள் வீட்டில் இரண்டாவது ஆண் பிள்ளை. டீச்சருக்கு பெண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்து பிறந்த ஆண் குழந்தை ஆதலால் அவனிற்கு சிறு வயதில் பெண் குழந்தை உடை அணிவித்து பொட்டு வைத்து அழகு பார்ப்பார்கள். அதனால் தானோ என்னவோ கணேஷ் மிக மென்மையான உணர்வுகளைக் கொண்டவனாக இருந்தான். நாங்கள் எல்லாம் கடலை மிட்டாய், முறுக்கு என்று சாப்பிட்டால் அவன் மட்டும் ஆரஞ்சுப்பழம் சாப்பிடுவான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கிள்ளும் பழக்கம் எனக்கு ஆரம்பித்தது அவனிடம் இருந்து தான். எது ஒன்று சொல்லும்போதும் கிள்ளாமல் சொல்ல முடியாது அவனால். காலையில் ஸ்கூல் செல்லும் போது எனது வீட்டிற்கு வந்து விடுவான். அவனும் நானும் சேர்ந்தே செல்வோம். வரும்போதும் அப்படித்தான். ஸ்கூல் பேக்கை வீட்டில் வைத்த கையோடு விளையாட எனது வீட்டிற்கு வந்து விடுவான். புளிய மரத்தில் ஏறி உட்கார்ந்து படிப்பது, கோ கோ விளையாடுவது என எந்நேரமும் இணை பிரியாமல் சுற்றிக் கொண்டிருப்போம்.
சண்டையும் வந்திருக்கிறது ஆனால் அவனாலும் என்னாலும் ஒரு நாள் முழுதும் பேசாமல் இருக்க முடிந்ததில்லை. டீச்சர் என் கூட மட்டும் விளையாட அனுமதித்ததற்கு நான் எப்போதும் எடுக்கும் முதல் மதிப்பெண்கள் காரணமாக இருந்திருக்கலாம். கணேஷ் சுமாராகத் தான் படிப்பான். ஏனென்றால் எங்கள் வீட்டில் எப்போதாவது நடக்கும் சண்டை கணேஷ் வீட்டில் தினமும் நடக்கும். அந்தச் சூழ்நிலையில் அவன் அவ்வளவு மதிப்பெண்கள் எடுத்ததே பெரிய விஷயம். ஏதோ ஒரு நாளில் தலையில் காயத்தோடு பள்ளிக்கு வந்தான். எங்கடா அடி பட்டுச்சு.. நேத்து நல்லாத்தானே இருந்த’ என்று கேட்டால், அதெல்லாம் ஒன்னும் இல்லடா என்று சொல்லி விட்டான். மறு நாள் செல்வி அக்கா சொல்லித் தான் தெரிந்தது. டீச்சரை அடிக்குப் போது வேண்டாம்பா அடிக்காதீங்க என்று இவன் குறுக்கே சென்றதாகவும் அவன் அப்பா இவனை கீழே தள்ளி விட்டதால் மண்டை உடைந்து இருக்கின்றது என்றும். கணேஷ் அப்பாவிற்கு டீச்சர் மேலே சந்தேகம்.
அவன் அதிகமாகச் சிரித்து சந்தோசமாக இருக்கும் நாட்கள் சபரி மலைக்கு பக்தர்கள் மாலை போடும் தை, மார்கழி மாதங்களில் தான்.
கணேஷ் குமாரின் அப்பா வருடா வருடம் மாலை பொட்டு விரதம் இருந்து மலைக்குச் செல்வார். அந்நாட்களில் டீச்சரும் சந்தோசமாகவே இருப்பார்கள். நாங்கள் தினமும் நடக்கும் பஜனையில் சாமிகள் கூடச் சேர்ந்து பாட்டுப் பாடுவதுண்டு. கணேஷ் சொல்வான், வருடம் பூரா மார்கழியாகவே இருக்க்கலாம்டா என்று. அவன் அப்பாவிற்கு இது கடைசி வரை புரியவில்லை. குடி அதிகமாகி வயிற்றில் ஏதோ பிரச்சினை வந்து நான் பிளஸ் டூ படிக்கும் போது இறந்து போனார்.       
சோமு, கணேஷ பத்திரமா பாத்துகோப்பா, இது வரை அவன் தனியா எங்கேயும் போனதில்ல என்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் போது சொல்லி அனுப்பினார்கள். அந்த தேர்வு நடந்த நாட்கள்தான் நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்ட நாட்கள். டீச்சர், வேலைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு திருச்சுழி சென்று விட்டார்கள். கணேஷ் திருச்சுழியில் உள்ள நாடார் மேல் நிலைப் பள்ளியில் சேர்ந்து விட்டான். அங்கெ அரசு மாணவர் விடுதி இல்லாததால் நான் கல்லூரணி எஸ்.பி.கே நாடார் மேல் நிலைப் பள்ளியில் சேர்ந்து விட்டேன். அப்புறம் இருவரும் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை
இன்று கதை சொல்லலி தூங்க வைக்கும் நேரத்தில் சஞ்சய் கேட்டான்.. ஸ்கூல் படிக்கும் போது நீங்க எப்படி இருந்தீங்கப்பா? அப்ப உங்க பெஸ்ட் பிரென்ட் யாருப்பா என்று.
நான் ‘கணேஷ் குமார்’ என்று சொன்னவுடன் இப்போ அவங்க எங்கேப்பா இருக்காங்க என்று கேட்டான்.
தெரியலப்பா என்றவுடன் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்த பாலா தலையை உயர்த்தி கேட்கிறது.. ‘பெஸ்ட் பிரென்ட்னு சொன்னீங்க’ என்று.
அவ்வளவு தான் எனக்கு தூக்கி வாரிப் போடுகின்றது. குழந்தைகள் சில நேரம் சொல்லும் வார்த்தைகள் நாம் எவ்வளவு தூரம் இயல்பான வாழ்க்கையிலிருந்து விலகி விட்டோம் என்பதை படம் பிடித்துக் காட்டி விடும். அப்படியான தருணங்களில் இதுவும் ஒன்று. எப்போதும் வாழ்வின் எந்த நிலையிலும் நாம் பிரியவே கூடதுரா என்று எட்டாம் வகுப்பு படிக்கும் போது சொல்லிக் கொண்டோம். அது இப்போது ஞாபகம் வருகின்றது.    .
கணேஷ் குமாருக்கு இந்நேரம் திருமணம் நடந்திருக்குமா?  நடந்திருந்தால் அவன் மகனும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கலாம்...              

July 29, 2012

நண்ப(கள்வ)ர்கள்



சார், இந்த சண்டே நீங்க ப்ரீயா இருப்பீங்களா?

இந்தக் கேள்வியை அவர் கேட்கும் போது அதன் பின் இவ்வளவு பெரிய தர்ம சங்கடம் ஏற்படப் போவது தெரியாது.

ப்ரீயாத் தான் சார் இருக்கேன் என்றவுடன், அப்படியென்றால் ஈவ்னிங் ஆறு மணிக்கு நம்ம வீட்டுக்கு வந்துடுங்க சார். ஒரு சின்ன மீட்டிங் இருக்கு என்றார்.

இவர் எனக்கு தொழில் ரீதியாகப் பழக்கம் என்பதால் சார் என்று நானும் அவரும் மாற்றி மாற்றி கூப்பிட்டுக் கொண்டாலும், அவர் வீட்டு விசேஷங்களுக்கு நான் போவதும், என் வீட்டிற்கு அவர் வருவதும் தொடர்ந்தது.

ஆறு மணிக்கு அவர் வீட்டில் ஒரு இருபது பேர் கூடியிருந்தோம். அவர் நட்பு வட்டம் கொஞ்சம் பெரிது, அதிலும் சில பேரை எனக்கும் தெரியும்.

அப்போது கோட், சூட் போட்ட நான்கு பேர் ஆளுக்கு ஒரு காரில் வந்து இறங்கினார்கள். இந்த வெயில்ல எதுக்கு இந்த கோட் சூட் என்று மனதில் தோன்றினாலும், ஏதோ பெரிய மனுஷங்க போல என்று நினைத்தேன்.

அவர்கள் உள்ளே வந்து அமர்ந்தவுடம் மீட்டிங் ஸ்டார்ட் ஆகியது. கோல்கேட் பேஸ்ட்டோட உண்மையான விலை தெரியுமா? என்று அவர் கேட்டவுடன் எனக்குத் தெரிந்து விட்டது. ஒரு மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்று சொல்லப்படும், முகமூடி அணியாக் கொள்ளைக் கூட்டத்தின் மீட்டிங் என்று.

சார் ஒரு முக்கியமான வேலை என்று எழுந்து சென்று விடலாம் என்றால் அவர் மனம் சங்கடப் படுவரோ என்று தயக்கமாக இருந்தது!! ஏனெனில் இந்த மோசடிக் கும்பலிடம் நாக்கு பிடிங்கி சாகும் அளவு நிறைய கேள்விகளுடன் இருந்த நான் இடம்,பொருள்,ஏவல் பாராது இங்கேயே அதனைக் கேட்டுவிடும் அபாயம் இருந்ததனால், சாமி, ப்ளீஸ் காப்பாத்து என மனதில் வேண்டிக் கொண்டு பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் வாடகை வீட்டிலேயே இருந்து கஷ்டப் படப் போகிறீர்கள்? ( ரோட்டுக்கு வர வச்சுடாதடா!!)

தாம்பரத்துல இருக்கிறதெல்லாம் தியேட்டர்னு நீங்க தான் சொல்றீங்க ( சார், துபாயா? )

கார், சொந்த வீடுன்னு நீங்கல்லாம் செட்டில் ஆக வேணாமா? ( இருக்குற பைக்கையும் விக்க வச்சுடாதடா ?)

இந்த மாதிரிக் கேள்விகளுக்கெல்லாம் நம்ம ஆட்கள் அவன் எதிர் பார்த்த பதில்களைச் சொல்லி வந்தார்கள் அல்லது சொல்ல வைக்கப்பட்டார்கள்.

அதனால நீங்க சேத்து விடுற ஒவ்வொரு ஆளுக்கும் உங்களுக்கு இருநூறு ரூபாய் கிடைக்கும். எனக்குப் பக்கத்துல இருக்குற இந்தத்தம்பி சீனிவாசன் ரெண்டு மாசத்துக்கு முன்ன தான் இந்த திட்டத்துல சேர்ந்துச்சு, இந்த மாசம் அம்பது ஆயிரம் செக் வந்துருக்கு,

தம்பி, அந்த செக்க கொஞ்சம் காமிங்க என்றவுடன் அவர் எடுத்துக் காண்பித்தார்.

அதனால நான் சொல்ற மாதிரி இங்க வந்திருக்கிற ஒவ்வொருவரும் அடுத்த வாரம் வரும்போது உங்க நன்பர்கள கூட்டிட்டு வாங்க, அவங்க மெம்பர் ஆனதும் உங்க கமிஷன் உங்களுக்கு வந்துடும்.

நம்ம கம்பனி விளம்பரத்துக்கு செலவளிக்கிற பணத்த நம்மளுக்கு கமிஷனா தருது, அதனால இது ஏதோ தப்பான பிசினஸ்னு தப்பா நினைக்காதீங்க என்று அவர் முடித்தவுடன் அங்கிருந்த ஒவ்வொருவரும் தனது நட்பு வட்டத்தின் எண்ணிக்கை பர்ர்க்க ஆரம்பித்திருந்தார்கள். சில பேர் முதல் மாதம் வரும் செக் அமௌன்ட்டை எந்த பேங்க் அக்கௌண்டில் போடுவது? என்று ‘பாசிடிவ்’ பரந்தாமன் ஆகி இருந்தார்கள்.

அப்போது நான் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

சார், நாம வாங்கிக் கொடுக்கிற ஆறாயிரம் ரூபாய்ல கமிஷன் இருநூறு போக மிச்சம் இருக்கும் பணம் எங்கு போகுது? அதன் கணக்கு விபரம் எப்ப கிடைக்கும் என்று.

அதற்கு அந்தக் ‘கோட்டின்’ பதில். சார், உங்களுக்கு இந்த ஸ்கீம் பத்தி சரியாத் தெரியல ( பய புள்ள ஏமாற மாட்டான் போல!!), நீங்க இன்னும் ரெண்டு மீட்டிங் அட்டென்ட் பண்ணா தெரியும் என்றவனைப் பார்த்து, சரி, அப்ப வர்றேன் சார் என்று கிளம்பி விட்டேன்.


உங்கள் நண்பர்களில் எத்தனை பேர் இதே மாதிரியான நட்பு வியாபாரிகள். எதனையும் காசாக்கத் துடிக்கும் கலியுகத்தில் நட்பையும்  ஒரு வியாபாரப் பொருளாகவே பார்க்கின்றார்கள் !)

இப்படித் தான் ஒரு நான்கு வருடம் முன்பு ஒரு நண்பன் ஆபீஸ்ற்கு வந்தான். சரவணா, இந்த ஸ்கீம் ஓனக்கு சூட் ஆகும் பாரு. வருடத்திற்கு இருபதாயிரம் ரூபாய். ஐந்து வருடம் கட்டு. மார்க்கெட் பிக் அப் ஆயிடுச்சுன்னா உனக்கு எக்கச் சக்க லாபம் கிடைக்கும் என்றவனிடம்,

வேண்டாம்டா , ஏற்கனவே எல்.ஐ.சி பாலிசியே கட்ட முடியாம இருக்கேன், இதுல நீ வேற என்றேன் .

இப்போ கொஞ்சம் கஷ்டப்பட்டு எப்படியாவது கட்டிட்டனு வச்சுக்க, இங்க பாரு அது எப்படி பலன் தரும்னு ஒரு டேட்டா சீட் காமிச்சான். இறுதியில் நண்பன் மனம் வருத்தப்படக் கூடாது என்று சம்மதித்தேன். இந்த வாரம் மேக்ஸ் நியூயார்க் வெப் சைட்டில் செக் செய்தால், நான் கட்டியிருந்த பணத்தை விட ஏழாயிரம் குறைவாக இருக்கின்றது.

நாம் பேப்பர் பார்த்துச் சிரித்திருப்போம், அதிக வட்டி தருவதாகவும், கிப்ட் தருவதாகவும் சொல்லி மக்களிடம் பணம் பறித்து விட்டு ஏதோ ஒரு நாளில் எஸ்கேப் ஆகி விட்ட பைனான்ஸ் கம்பெனிகளைப் பற்றி, இந்த ஜனங்க ஏன்தான் இப்படி ஏமாறுகின்றனரோ என்று. ஆனால் டேட்டா சீட் பார்த்து அதிக ரிடர்ன்காகவும், இன்கம் டாக்ஸ் பெனிபிட் என்ற தேன் தடவிய வார்த்தைகளை நம்பி இன்று ஏமாந்து இருக்கும் படித்த முட்டாளான என்னைப் பற்றி என்ன சொல்ல!!   

இன்னொரு முக்கியமான நண்பனும் எல்.ஐ.சி ஏஜென்ட் ஆக அவதாரம் எடுத்து, நான்கு பாலிசிகளைப் போட வைத்தான். இந்த மாதம் செலுத்த வேண்டிய ப்ரீமியம் அமௌன்ட்க்கு கழுத்தில் போட்டிருந்த செயின்தான் ‘நான் எதுக்கு இங்க சும்மா இருக்கேன், கொஞ்ச நாள் இந்தியன் பேங்க்ல இருந்துட்டு வர்றேன்’ என்று போயிருக்கிறது.

இன்னும் ஒரு நண்பன் இந்த சண்டே ப்ரீயா இருந்தா வீட்டுக்கு வாயேன், ஒரு நல்ல ஸ்கீம் பத்தி பேசலாம் என்கின்றான். இப்படியான நண்பர்களை  DNA1, DNA2 …. என்று மொபைலில் போட்டு வைத்திருந்தாலும் வேறு வேறு நம்பர்களில் வந்து, பாலிசி போடு என்று டார்ச்சர் செய்கிறார்கள்.

இப்படியான ஒரு நாளில் தான் என் ஆபீஸ் பாலா சொன்னார். மேனேஜர பாத்தியா? ஏதோ பாலிசி விஷயமா ஒன்னைய மேல கூப்பிட்டார் என்றார். ஏற்கனவே கடுப்போடு இருந்த நான், அய்யய்யே, இந்த ஆளுமா... என்று செம கடுப்போடு உள்ளே சென்றேன்.

சோமு, இந்த பாலிசி' என்று அவர் ஆரம்பிப்பதற்குள்,

சாரி சார், ஏற்கனேவே ஏகப்பட்ட பாலிசி போட்டு, அதக் கட்ட முடியாம அவதிப் பட்டுக்கிட்டு இருக்கேன்,

அதனால நோ மோர் பாலிசி சார் என்றேன்.

என்ன சோமு உளர்ரீங்க, யு.டி.ஐ யோட ‘ஆண்ட்டி ப்ரைபரி பாலிசி’ பத்தின ட்ரைனிங் முடிச்சிட்டீங்களா’ ன்னு செக் பண்ணக் கூப்பிட்டா நீங்க என்ன என்னவோ பேசுறீங்க என்றவுடன்,

சாரி, சார் என்று வழிந்தேன் நான்.        

July 24, 2012

பரம பதம்



ஏதாவது வேலை இருந்தா சொல்லு மாப்ள, வேலை இல்லாம வீட்டுல தான் இருக்கேன் என்று ‘சரவணன்’ சொன்னது என் ஆபீஸ் முன் இருந்த டீ கடையில்.
எங்கள் இருவர் பெயரும் ஒன்றாக இருந்தாலும் அந்த சரவணன் எனக்கு மூத்தவன். நான் முதன் முதலில் வேலைக்குச் சென்ற கம்பெனியில், அவன் எனக்கு சீனியர்.

எனது வேலையாகக் கொடுக்கப்பட்டது, ‘டாகுமென்ட்ஸ் டெலிவரி செய்வது, டீ வாங்கி வருவது, எக்ஸ்போர்ட் கார்கோ பிக்-அப் செய்வது, இவை தான். சரவணன் எனது ஊர்க்காரன், சொல்லப் போனால் சிறு வயதில் இருந்தே நட்பாகப் பழகியவன். என் அண்ணனின் கிளாஸ் மேட். அந்தக் காரணத்தினால் தான் இந்தக் கம்பனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன்.

ஒரு நாள் ‘கார்கோ பிக் அப்’ செய்து ஏர்போர்ட் வருவதற்கு லேட் ஆனதால் ‘**தா , ஏன்டா என் உயிரை வாங்குறீங்க? என்று கேட்டதனால் அழுது கொண்டே வீட்டுக்கு வந்து மொட்டை மாடியில் படுத்திருந்தேன். அண்ணன் வீட்டுக்கு வந்தவுடன் ‘ஏன்டா ஒரு மாதிரி இருக்க? என்று கேட்டதற்கு, ‘நடந்ததைச் சொன்னேன்’. சரி, விடுறா நான் அவனிடம் கேக்குறேன்’ என்றதற்கு, ‘இல்லண்ணே, எனக்கு இந்த வேலையே வேணாம், பிடிக்கல, நான் ஊருக்குப் போறேன்’ என்று மறு வாரத்தில் மதுரைக்குத் திரும்பி விட்டேன்.
அந்த நேரத்தில் 'யுரேகா போர்ப்ஸ்’ ல் வேலைக்கு ஆபர் அனுப்பி இருக்கவே அங்கே சேர்ந்து விட்டேன்.

ஒரு மாதம் கோயம்புத்தூரில் ட்ரைனிங் முடித்து மதுரையில் வேலை கொடுத்தார்கள்.

ராமமூர்த்தி எனது சீனியர். டீம் லீடர் பாலா. காலையில் ஆபீஸில் கொடுக்கும் காபியுடன், ஏழு மணிக்கு ‘டோர் நாக்’ எனப்படும் ‘கதவு தட்டும் வேலை’ ஆரம்பமாகும்.
கதவைத் திறந்து பதில் சொல்பவர் ஓரிருவர், ஆனால் ‘அதெல்லாம் ஒன்னும் வேணாம்பா’ என்றோ ‘ வீட்ல யாரும் இல்ல’ அப்புறம் வாங்க’ என்றோதான் பெரும்பாலான வீடுகளில் பதிலாகக் கிடைக்கும். கதவைத் தட்டுவதற்கு முன் ‘பொட்டென்சியல்’ பார்க்க வேண்டும், வீடு, ‘மார்பிள்’ போடப்பட்டதா, மொசைக் தரையா’ என்று கவனிக்க வேண்டும்’ என ஒருவன் வீட்டில் திருடப் போவதற்கு பிளான் போடுவது மாதிரி, ‘டோர் நாக்’ பண்ணுவதற்கும் பிளான் பண்ண வேண்டும். ஒரு மாத ட்ரைனிங் என்று சொன்னேன் அல்லவா, அதில் இது மாதிரி விசயங்களை சொல்லித் தருவார்கள். பத்து வீடுகளைத் தட்டினால், ஏதாவது ஒரு வீட்டில், நாங்கள்  போட்டிருக்கும் டிரெஸ்சை நம்பி, ஏதாவது ஒரு ராமசாமியோ, முனியாண்டியோ ‘வாங்க சார், என்று கதவைத் திறக்கும். அணிந்திருக்கும் ‘டை’, கூடுதல் மரியாதையுடன் கூப்பிட வைக்கும். சொல்லுங்க சார் என்று அவர் ஆரம்பிக்கும் போது, ‘நமக்கு ஒரு அடிம சிக்கிட்டாண்டா, இந்த வீட்ல இன்னைக்கு, ஒரு சேல் எடுக்குறோம்டா’ என்று மனது ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.

இப்படியாகத் தான் ஆரம்பிப்போம். சார், இந்த ஏரியாவுல எங்க கம்பெனி சார்பா ‘ப்ரீ டெமான்ஸ்ட்ரேசன்’ பண்றோம் சார். சாயந்தரம் எப்போ சார் ப்ரீயா இருப்பீங்க சார்’ என்று நாங்கள் போடும் ‘சார்கள்’ நன்றாகவே வேலை செய்திருக்கும். இப்படி ஒரு ஐந்து ‘அப்பாய்ன்மென்ட்’ பிக்ஸ் பண்ணி விட்டு ஆபீஸ் செல்வோம் அல்லது எங்காவது ரெஸ்ட் எடுப்போம்.

‘டெமான்ஸ்ட்ரேசன்’ முதலில் கஸ்டமர்க்கு நல்லாத்தான் ஆரம்பிக்கும். சூப்பர் மெசின், காசு இருந்தால் உடனே வாங்க வேண்டும், இல்லை என்றால் காலியாகிப் போய் விடும்’ என்று தோணும் அளவுக்கு எங்களின் திறமையைக் காட்டுவோம். ‘காசு இல்ல சார்’ என்று தயங்கிபடி சொல்வார். ஆனாலும் விட மாட்டோம். எப்படியாவது அவரின் தலையில் கட்டி, போஸ்ட் டேட் செக், அட்வான்ஸ் அமௌன்ட் என்று எதையாவது வாங்கி, அந்த வீட்டில் சிறு பிள்ளை யாராவது இருந்தால், பாப்பா, இந்தா பாரு, இந்த பார்சல பிரிக்கக் கூடாது, உள்ள சாக்லேட் எல்லாம் இல்ல, அங்கிள் தர்றேன் சாக்லேட் என்று கையோடு கொண்டு சென்ற சாக்லேட் ஒன்றைக் கொடுத்துவிட்டு வந்து விடுவோம்.

அடுத்த நாள் சென்றால், நம் மிசின், பிரிக்கப்பட்டு, தனித் தனியாகக் கிடக்கும். சரிண்ணே, மிச்சக் காசு ரெடியா என்று ‘சார்’ என்பது அண்ணன் ஆக மாறி இருக்கும். அவருக்கு வேறு என்ன வழி இருக்கப் போகிறது பாவம்.

இப்படியான திறமைகள் எனக்குக் கம்மியாகவே இருந்தன. அதனால்  எனது சீனியர் வீட்டுக்குப் போக வேண்டியது, அவரும் நானும் நன்றாக அவர் வீட்டில் சாப்பிட்டு விட்டு, ஏதாவது படத்துக்குப் போக வேண்டியது. மேனேஜர் கேட்டால், அஞ்சு டெமோ சார் , பட் ஒன்னே ஒன்னு தான் தேறுச்சு, அதுவும் நாளைக்கு கன்பார்ம் பண்றேன்னு சொல்லிருக்காரு கஸ்டமர்’ என்று ஆளுக்கு ஒரு பொய்யை பேசி வைத்துச் சொல்வோம். ஒரு மாதத்திற்கு பதினைந்து முதல் இருபது மிசின் வரை விற்றுக் கொண்டிருந்த ‘ராமு அண்ணன், அந்த மாதம் ஐந்து மட்டுமே விற்றிருந்தது.

அந்த மாதம் ‘பெர்பார்மான்ஸ்’ மீட்டிங், ராமு அண்ணனை மட்டும் தனியாக மேனேஜர் அழைத்தார். உள்ளே போனவுடன் கதவு பூட்டப் பட்டது.
வெளியே வரும் போது அண்ணனின் முகம் மிகவும் வாடி இருந்தது.

என்ன ஆச்சுண்னே, ஏன் டல்லா இருக்க, என்று கேட்டதற்கு, டேய், நீ என்கூட சேர்றதுக்கு முன்னாடி, என்னைய மேனேஜர் திட்டியதே இல்லடா, ஆனா இன்னைக்கு கெட்ட கெட்ட வார்த்தையால அசிங்க அசிங்கமா திட்டிட்டாண்டா,

அனேகமா, ஒன்னைய வேற டீம்ல போடுவாங்க 'ன்னு நினைக்கிறேன்டா என்ற போது உண்மையிலேயே அழுது விட்டிருந்தது.

சரவணா, உண்மையிலேயே இது நல்ல வேலடா, ஒரு மிசினுக்கு இருநூற்று ஐம்பது ரூபா கமிஷன் கிடைக்கும், நீ நல்லாப் பேசுரடா, ஆனா கஸ்டமர் கிட்ட மட்டும் தான் பேச மாட்டேங்குற.
உனக்குத் தெரியுமாடா? நம்ம டீம்ல இருக்குற ‘விஜய குமார்’, டாக்டரோட பையன்டா. ரொம்ப வசதியா வாழ்ந்தவன். அவங்க அப்பா இறந்தவுடனே, இருந்த சொத்து எல்லாம் அவங்க சித்தப்பா எடுத்துகிட்டு இவங்கள வெளியே அனுப்பிசுட்டாங்க. இங்க வேலைக்குச் சேர்ந்து சம்பாதிச்ச பணத்துல அவன் தங்கச்சிய கட்டி குடுத்தான், தம்பிய இஞ்சினியர்க்கு படிக்க வச்சான். அவனுக்கும் நாந்தாண்டா ‘ட்ரைனிங்’ குடுத்தேன். இன்னும் எவ்வளவோ பேர் என்கிட்டே வந்து வேல கத்துக்கிட்டு இப்போ நல்லாச் சம்பாதிக்கிறாங்க.

ஆனா முதல் தடவையா, ஜூனியர் ஆன உன்னால என்னோட பெர்பார்மான்ஸ் போயிடுச்சு’ என்றதற்கு, ‘சாரின்னே’ என்று சொன்னேன்.

எனக்கு என்னோமோ யாரையும் ஏமாத்தப் பிடிக்கலன்னே, நீயே சொல்லுண்னே, இந்த மெசினோட உண்மையான வெல என்ன இருக்கும்?

ஒரு மூவாயிரம் இருக்கும்டா?

நாம இத ஆறாயிரத்துக்கு விக்கிறோம். எவ்வளவு ஏமாத்துறோம் பாரு என்ற என்னை, ராமு அண்ணன் கடுப்போடு பார்த்தது.

டேய், அப்புறம் எப்படிடா நீ விக்கப் போற, உனக்குத் தெரியும்ல, இந்த மாதத்துல இருந்து உனக்கும் டார்கெட் ‘பிக்ஸ்’ பண்ணுவாங்க. நீ என்னடான்னா, இப்படி சொல்ற’ என்று என்னை பரிதாபத்துடன் பார்த்தது.

அப்போது தான் முஹம்மது மீரானை சந்தித்தேன். என்னை ஏன் மீரானிற்குப் பிடித்தது என்று இன்று வரை தெரியவில்லை. இத்தனைக்கும், மீரான் ‘வாட்டர் ப்யுரிபயர்’ டிவிசன். இருந்தாலும் என்னுடன் மிக நட்பாக இருந்தார். திருமங்கலத்தில் வேலை செய்த போது மீரான் வீட்டில் தான் தங்கினேன். அவரின் வீடு மிகவும் சிறியதாக ஒரு சமையலறையும், படுப்பதற்கு ஒரே ஒரு சின்ன ரூம் மட்டுமே இருந்த எளிய, ஆனால் அன்பு மிகுந்த வீடு. நான்கு தங்கைகள் இருந்த அந்த வீட்டில் தங்குவதற்கு  சங்கடப் பட்ட போது, வேற எங்கடா தங்குவ, சும்மா சகஜமா இருடா, என்று அவரின் குடும்பத்தாரிடம் அறிமுகப் படுத்தினார். ஒரு வாரம் அவர்கள் வீட்டில் தான் சாப்பாடு, தூக்கம் எல்லாம். அது வரை முஸ்லிம் என்றால் என் மனதில் ஏற்பட்டிருந்த ஒரு மாதிரியான பிம்பம் அகன்றது.    

அடுத்த மாதத்தில் என்னை வேறு டீமில் போட்டார்கள். அந்த டீமில் எனக்கு சீனியர் முத்துக் கிருஷ்ணன். மற்ற டீமில் இருப்பவர்கள் ‘ இனி முத்து அவ்வளவு தாண்டா, சரவணன் சேர்ந்துட்டான்ல’ என்று எங்களின் காதுபட பேச ஆரம்பித்தார்கள்.    

நானும் திருந்தியபாடில்லை. முதல் பதினைந்து நாட்கள் கடந்து விட்டிருந்தன. முத்துவையும் நான் வேலை செய்திருக்க விட்டுருக்கவில்லை. மேனேஜர் ஒரு நாள் எங்களை ‘செக்’ செய்ய முடிவு செய்திருந்தார் போல. திடீரென ஒரு நாள் ‘ சரவனனுடன் இன்று நான் 'டெமோ' போகின்றேன்’. எப்படியும் அவனுக்கு ஒரு சேல் இன்று க்ளோஸ் செய்வோம்’ என்று மதிய மீட்டிங்ல் சொல்லி விட்டு, ‘பைக்கில் உட்கார் போகலாம்’ என்றார்.

அன்று நான் ‘டோர் நாக் ஸ்லிப்’ ல் எழுதி இருந்த ஏரியாவிற்குப் போயிருக்கவே இல்லை. சரி, சமாளிக்கலாம் என அந்த ஏரியாவிற்குக் கூட்டிச் சென்றேன். சாரி, அழைத்துச் செல்லப்பட்டேன். பெரிய வீடு இருக்கும் தெருவில் அவரைக் கூட்டிச் சென்று, பூட்டியிருக்கும் வீட்டைக் காட்டி, ‘ சார், இந்த வீடு தான் சார், பட், பூட்டி இருக்கே என்று சமாளிக்க, அவரும் உண்மையிலேயே நம்பினார்.

எல்லா அப்பாயின்மென்ட்களுக்கும்’ இப்படி சொல்ல முடியாதே! எனவே ஒன்னே ஒண்ணாவது பிக்ஸ் செய்வது என முடிவு செய்திருந்தேன். ஒரு இடத்தில அவரை நிற்க வைத்து ’ சார் டீ சாப்பிட்டு, ஒரு தம் போடுங்க, நான் போய் கஸ்டமர் வீடு திறந்திருக்கா, இல்ல பூட்டிருக்கா எனப் பார்த்து விட்டு வருகின்றேன், நீங்க எதுக்கு சார் வேஸ்டா அலையுறீங்க’ என்ற எனது ‘அக்கறை’ அன்று வேலை செய்தது.

ஒரு பெரிய வீட்டில், காலிங் பெல் அடித்து அங்கு வந்த பெரியவரிடம், சார், புது புராடக்ட் அறிமுகப் படுத்துறோம். ஒருத்தர் வந்து மிசின் காமிப்பாரு, நீங்க பார்த்தாப்போதும், காசு எதுவும் கொடுக்க வேண்டாம் என்று சொன்னவுடன், தமிழன் தனக்கெ உரிய தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல், ப்ரீ தானே, சரி வரச் சொல்லுங்க என்று என் வயிற்றில் பீர் வார்த்தார்.

சார், வாங்க சார், கஸ்டமர் வீட்ல இருக்காரு, அர்ஜெண்டா எங்கயோ கிளம்பிக்கிட்டு இருக்காரு’ அதனால அஞ்சு நிமிசத்துல முடிக்கணும் என்றவுடன், ரொம்ப ஆர்வமாக வந்து உயிரைக் கொடுத்து  ‘டெமோ’ காட்டினார். எந்த உணர்வையும் வெளிக் காட்டாமல் ரொம்ப சமத்தாக டெமோ கேட்ட கஸ்டமர், என்ன சார் பிடுச்சுருக்கா, ஒன்னு புக் பண்ணலாம்ல’ என்ற மேனேஜரின் கேள்விக்கு, வேறு எதுவும் உளறி வைக்காமல், வாங்குவோம் சார், அடுத்த மாசம் பாக்கலாம் என்றார்.

சரிங்க சார், நாம கிளம்பலாம், வாங்க என்று ஆபீஸ்க்கு அழைத்து வந்தவுடன் தான் முத்துவுக்கு போன உயிர் திரும்பி வந்தது. எப்படிடா சமாளிச்ச என்ற கேள்விக்கு ‘நடந்ததைச் சொன்னேன்.

இந்த திறமைய ஒழுங்கா வேலையில காமிச்சு இருந்தா இந்நேரம் பத்து மெசின் வித்துருக்கலாம்டா’ என்று ராமு அண்ணன் சொன்னது.

உனக்கு என்ன அண்ணே, இந்த மாசம் பத்து மெசின் விக்கணும் அவ்வளவு தான, வித்துக் காமிக்கிறேன் பாரு என்று சவால் விட்டேன்.

ஒரு நாள் ஒரு பெரிய வீட்டின் காலிங் பெல் அடித்து விட்டு, காத்திருந்தேன். வெளியே வந்த ஒருவர், காலங் காத்தால வேற வேலை இல்லையாடா, வந்துரான்க, என்று கண்ணா பின்னா வென்று கத்த ஆரம்பித்தார். சாரி சார், டிஸ்டர்ப் பண்ணியதுக்கு. இருந்தாலும் அதுக்காக இவ்வளவு தூரம் திட்டுறிங்க, எனக்கும் காலையில, மொத மொதல்லா, இப்படி திட்டு வாங்குறது கஷ்டமாத் தான் சார் இருக்கு, என்ன பண்றது, எங்க வேல அப்படி என்று தைரியமாகச் சொன்னேன்.

நான் பேசியதில் ஏதோ ஒன்று அவர் மன சாட்சியை உறுத்தி இருக்க வேண்டும், உள்ள வாப்பா என்று கூப்பிட்டார். அவர் ஒரு வேக்குவம் கிளீனரை எடுத்து வந்து , தம்பி இத கொண்டாந்து கொடுத்துட்டு, பணம் வாங்கிட்டுப் போன ஒரு பண்ணாட, மறு நாள் வந்து டெமோ குடுக்குறதா சொன்னான், ஆனா இது வரையும் வரல, அது தான் கோபத்துல பேசிட்டேன்’ என்றார். நான் எப்படி பயன்படுத்துவது என்று சொல்லிக் கொடுத்தேன்.

பொறுமையா கோபப்படாம, நிதானமா கேட்ட பாரு ஒரு கேள்வி, ‘எனக்கும் இது காலங் காத்தால தான சார்னு’ நீ நல்லா வருவப்பா என்று திரும்பவும் ஒரு சாரி சொல்லி அனுப்பி வைத்தார்.

அப்போது தான் வேலையே பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் ஐந்து தான் விக்க முடிந்தது.

பரவால்லடா, இந்த மாசம் எல்லோருக்குமே டல் தான், நீ அஞ்சு வித்துருக்குறதே பெரிய விஷயம் என மேனேஜர் சொன்னார்.

ஆனால் இந்த ஆறு மாதத்திற்குள் நான் பாதியாக இளைத்திருந்தேன். வாரம் ஏழு நாலும் வேலை, சரியான சாப்பாடு கிடையாது, தூக்கம் இல்லை என அந்த நாட்கள் மிகவும் கொடுமையானவை. அப்போது ஏதோ ஒரு வேலையாக ஊருக்கு வந்திருந்த சித்தப்பா, ஏன்டா இப்படி இருக்க, நீ திரும்பவும் சென்னைக்கு வா, உனக்கு என்ன வேற கம்பனியா இல்ல, என்று அழைத்தார்.

வேலையை விடுவதற்கு முன்னால் நான் விற்ற ஐந்து மெசின் கமிசன் தொகையையும், ராமு அண்ணனிடம் கொடுக்கச் சொல்லி அக்கவுண்டன்டிடம் சொல்லி விட்டு, டெமோ கிட்டை ரிடர்ன் செய்தேன். ட்ரெயின் ஏறும் போது ராமு அண்ணன், மீரான் மற்றும் முத்துவும் ரயில்வே ஸ்டேஷன் வந்திருந்தார்கள். டேய், சென்னைக்குப் போனதும் எங்கள மறந்துடாதடா, கண்டிப்பா லெட்டர் போடு, மதுரைக்கு வரும் போது நீ எங்களப் பாக்க வரணும்’ என்று அன்புடன் கேட்டு வழி அனுப்பி வைத்தார்கள்.

மீண்டும் திரும்பி வந்த எனக்கு சென்னை அவ்வளவு அவமானத்தை எந்த இடத்திலும் தரவில்லை. சாரி, தவறு. எந்த அவமானத்தையும் அவமானமாக நினைக்கவில்லை. ‘யுரேகா போர்ப்ஸ்’ அனுபவம் என்னை அப்படி மழுங்க வைத்திருந்தது. சென்னைக்கு முதன் முதலில் வேலைக்கு வந்த புதிதில் நான் அடிக்கடி  சொன்ன ‘ சரவணன் இப்படித் தான் இருப்பான், அல்லது இப்படி இருந்தா தான் அவன் சரவணன்’ என்பதெல்லாம் நான்தான் சொன்னேனா என்று எனக்கே சந்தேகமாக இருந்தது.

‘முன் அநுபவம்’ என்பதே முனை மழுங்கும் பருவம் தானோ? கல்லூரி முடித்தவுடன் இருந்த வேகம், கோபம், சுய கௌரவம் எல்லாம் இந்த இரண்டு வருடத்தில் ‘மழுங்கடிக்கப் பட்டிருந்தது’ யுரேகா போர்ப்ஸின் புண்ணியத்தால்.

அப்புறம் என்ன, எல்லாமே ஏறுமுகம் தான். நான் வாழும் இந்த வாழ்க்கை ‘சரவணனை’ சாகடித்து சோமசுந்தரத்தால் வாங்கப்பட்டது.

பள்ளியில் படிக்கும் போது அடிப்படை கணக்குப் பாடம் புரியாமல், இரவு வகுப்பில் நான் சொல்லிக் கொடுத்தும், பத்தாம் வகுப்பில் பெயில் ஆனவன், இன்று சொந்தக் கார், வீடு, வசதி, வாழ்க்கை என்று செட்டில் ஆனதும், எனக்கு வேலை சொல்லிக் கொடுத்தவன், ஆணவத்தால் அசிங்கமாகப் பேசியவன் இன்று என்னிடம் வேலை கேட்பதும் கடவுள் ஆடும் பரம பதம் அன்றி வேறு என்ன?       .                  

போன மாசம் ஒரு நாளில், நல்ல வெயில் நேரத்தில், கழுத்தில் டையுடன் என் வீட்டில் ‘டோர் நாக்’ செய்த யுரேகா போர்ப்ஸ் ‘ரெப்பை’, உள்ள வாப்பா, டீ சாப்பிடு என்று, எனக்கு மதுரையில் ஒரு மழைக்காலத்தில் ஒரு வயதான தம்பதி கொடுத்த டீயை அன்று அவனுக்குக் கொடுத்தேன்.