சிகப்பு கலர் பர்சும் ஸ்விக்கி சரணும்
இன்று அலுவலகம் செல்வதற்காக தாம்பரம் இரயில் நிலையத்திற்கு வரும் போது ரோட்டில் ஒரு சிகப்பு கலர் மணி பர்ஸ் விழுந்து கிடப்பதை பார்க்கின்றேன். அதே நேரத்தில் மூன்று நபர்களும் இதனை பார்க்கின்றனர். ஸ்விக்கி டெலிவரி பையன் (சரண் என்பது அந்த நல்லவனின் பெயர்). இரண்டு அரவாணிகள்
இரண்டு அரவாணிகளின் ஒருவர் அந்த பர்ஸை எடுத்து, இந்தா பார் ..உனது பர்ஸ் கீழே விழுந்து விட்டது என்று நாடகமாட அந்த நாடகம் எங்கள் இருவரின் தலையீட்டால் தடுக்கப் படுகின்றது.
இது உங்கள் பர்ஸ் இல்லை. பஸ்ஸில் இருந்து கீழே விழுந்ததை நான் பார்த்தேன் என்று சரன் சொல்லவும் அதனை அவனிடமே கொடுத்து விட்டு செல்கின்றனர்.
இப்போது அந்த பர்ஸை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பு எங்களுடையதாகின்றது. பர்சில் போன் நம்பர் இருந்தால் அழைத்து கொடுக்கலாம் என்று திறந்தால் அதில் மூன்று ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் மற்றும் சில்லறைகள். ஒரு பழைய நைந்து போன விசிட்டிங் கார்டு. அதில் ராம் என்று இருந்தது. அந்த 'ராமை'அழைத்தோம். என் அம்மாவின் பர்சாக அது இருக்கலாம் என்று சொன்னவர் சிறிது நேரத்தில் மீண்டும் அழைத்து அது அவரோடது இல்லை என்றார்.
இன்னும் ஒரு துண்டு சீட்டும் அதில் இரண்டு நம்பர்களும் கிடைத்தன. வைஷ்ணவி என்று எழுதப் பட்ட ஒரு எண்ணிற்கு அழைத்தோம். என்னது .. பர்ஸ் ஆ. உனக்கு எப்படி இந்த நம்பர் தெரியும். போன வை என்று துண்டிக்கப் பட்டது . இன்னொரு எண்ணிற்கு அழைப்பு செல்லவில்லை. மீண்டும் அந்த வைஷ்ணவியை அழைத்தோம். இந்த பாரு..நீ சொல்றதுல நம்பிக்கை இல்ல. அப்டி அக்கறை இருக்கிறவன் போலிஷ் ஸ்டேஷன் ல குடுத்துட்டு உன் வேலைய பாத்துட்டு போக வேண்டியது தான என்றார்.
அக்கா..அவங்க மேல நம்பிக்கை இருந்தா நாங்க ஏன் அரை மணி நேரமா இந்த வேலைய பாத்திட்டு இருக்கோம் என்று சொல்லும் போதே அழைப்பு துண்டிக்கப் பட்டது. அக்கா நம்பரை ஸ்டோர் பண்ணி கடைசி முயற்சியாக அந்த துண்டு சீட்டை வாட்சப் பண்ணினோம்.
மீண்டும் அழைத்த போது ...இங்க பாரு இந்த நம்பரே போலிஷ் டி எஸ் பி நம்பர் தான். அவர் தூன்கினு இருக்காரு..என்ன போட்டோ லாம் வாட்சப் பண்ற. அவ்ளோ தான் பாத்துக்க ..இனி நீ அவரோட தான் பேசணும் என்றார். அக்கா என்னோட நோக்கம் தப்பா இல்ல..அதனால பயப்பட மாட்டேன். இந்த சீட்ல உங்க பேர் எழுதி இருக்கு நம்பரோட..யாரொ தெரியாதவங்க எழுதி வச்சிருக்க போறதில்ல. உங்களுக்கு ஞாபகம் வந்தா எனக்கு கால் பண்ணுங்க என்று அழைப்பை துண்டித்தோம்.
சரி தம்பி எனக்கு ரொம்ப நேரமாச்சு.. நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தால் சரண்… அண்ணா விட்டுட்டு போறீங்களே என்றான். நீ எந்தூரா ..தூத்துக்குடினா .
எனக்கு மதுரை டா ..வேலை நிறைய இருக்குடா ..பர்சை பார்த்தால் அது கஷ்டப்படுபவர் கையில் இருந்து தான் தவறி இருக்குனு தெரியுது..ஆனா தொலைத்தவருக்கு இங்கு தான் அது விழுந்திருக்கும் னு தெரியாதே..
சரினா நான் இன்னும் ஒரு அரை மணி நேரம் வெயிட் பன்றேன்னு சொன்னவனிடம் போன் நம்பரை வாங்கிக் கொண்டு அலுவலகம் வந்தேன். சோசியல் மீடியாவில் பரப்புவோம். இரண்டு நாட்களில் யாரும் வரவில்லை என்றால் போலிஷ் ஸ்டேஷன் சென்று ஒப்படைப்போம் என்று முடிவு செய்திருந்தோம்
ஏழு மணிக்கு வைஷ்ணவி அக்காவிடமிருந்து அழைப்பு. தம்பி ..அந்த பர்ஸ் எங்க வீட்ல அஞ்சு வருசத்துக்கு முன்னால வேலை செஞ்ச அம்மாவுடையதாம். ரொம்ப நேரமா யோசிச்சு அப்புறமா கண்டு பிடிச்சேன். அவங்க பொண்ணு போன் நம்பர் எங்கிட்ட இருந்துச்சு.. கால் பண்ணி இப்ப தான் பேசினேன் வீட்டுக்கு வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்காங்க னு அவங்க பொண்ணு சொல்லிச்சு. உங்க நம்பரை கொடுத்திருக்கேன்.
சிறிது நேரத்தில் அந்த அம்மா அழைத்தார்கள். தொலைஞ்சு போச்சு இனி கிடைக்கதுனே நெனச்சேன் பா.. ரொம்ப நன்றிப்பா. உன் பேர் என்னப்பா ...என்றார்கள். பெயரை சொன்னதும் ' நான் சிவனுக்கு விரதம் லாம் இருப்பேன் பா அந்த விரதம் லாம் வீண் போகல. அந்த கடவுள் தான் உன் மூலமா இந்த பணத்த திரும்ப கிடைக்க வச்சிருக்கார் என உணர்ச்சி வசப் பட்டு பேசினார்கள். அம்மா ..கஷ்டப் பட்டு உழைச்ச பணம் உங்கள விட்டு போகாதும்மா.
அந்த நல்ல பையன் சரண் அந்த அம்மா வீட்டிற்கே சென்று இதோ இப்போது தான் பர்ஸை கொடுத்து விட்டான். மீண்டும் அந்த அக்காவிடமிருந்து கால். என்னப்பா குடுத்திட்டிங்கலா.
இப்பதான் கொடுத்தோம் கா.. எல்லாம் உங்களால தான் ஆச்சு. அந்த அம்மா எனக்கு நூறு கோடி புண்ணியம் சொன்னாங்க. ஆனா அவ்வளவும் உங்களுக்கு தான் கா என்றேன். இல்லப்பா ..உன்னால தான் இது நடந்திச்சு. அக்கானு சட்னு கூப்பிட்ட பாரு... குடும்பம் குட்டியோட சந்தோசமா இருடா என்றார்கள்.
ரொம்ப நன்றிக்கா..இருந்தாலும் டி எஸ் பி னு லாம் மிரட்டீடீங்க..
நிசம்மாவே டி எஸ் பி தாண்டா ..நாட்ல எவ்ளோ நடக்குது..நீயும் பாக்குற தான.. அதனால தான் அப்டி பேசிட்டேன். சாரி டா என்றார்கள்.
இரண்டு மணி நேரத்தில் எவ்வளவு ட்விஸ்ட்கள்.
நீதி : பர்ஸ் மற்றும் எளிதில் தவற விடும் பொருட்களில் சரியான தொலைபேசி எண்னை எழுதி வைக்கவும்.
கடைசியாக : அந்த விசிட்டிங் கார்டு பத்தி கேக்கணும் போல இருக்கவே அந்த அம்மாவின் பெண்ணிற்கு அழைத்தேன். அந்த கார்டு ல இருக்குற நம்பருக்கு தான்மா முதல்ல கால் பண்ணோம். அவர்க்கு தெரியல னு சொன்னார். அந்த கார்டு யாரோடது மா..
அதாண்ணா ..கார்டு பின்னால எதுனா எழுதி வைக்கலாம்னு அம்மா வச்சிருப்பாங்க... யாரதுனு தெரியாது னா

