September 28, 2012

தாத்தா


இன்று தாத்தா ஹாஸ்பிடலிருந்து வீட்டுக்கு திரும்பினார். தாத்தாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம். பத்து வருடங்களுக்கு முன்பு பை பாஸ் சர்ஜரி செய்திருந்தார். சும்மா காய்ச்சல் என்று இப்போது டெஸ்டுக்கு சென்றவர்க்கு பல்ஸ் ரேட் மிகவும் குறைவாக இருக்கவே அட்மிட் செய்து இரண்டு நாட்களாக அவரும், அவருக்காக நாங்களும் தூக்கம் தொலைத்தோம்.


மூப்பு, பிணியிலிருந்து மீள வேண்டும் என்ற சித்தார்த்தனின் கனவு தான் எவ்வளவு பெரிய கட்டடங்களாக வளர்ந்திருக்கின்றது என்று இந்திரா பார்த்தசாரதி ஒரு நாவலில் ஹாஸ்பிடல் பற்றி எழுதிருப்பார். ஒரு சிறிய இடத்தில் ஆரம்பிக்கும் ஒரு நர்சிங் ஹோம் ஒரு வருடத்தில் பக்கத்தில் இருக்கும் இடங்களில் எல்லாம் விரவிப் பரவுவது எதனைக் காட்டுகிறது. உண்மையில் ஹாஸ்பிடல்களின் வளர்ச்சியும், டாஸ்மாக் விற்பனை வளர்ச்சியும் எதனைக் காட்டுகிறது. ஒரு ஆரோக்யமான சமுதாயத்தையா?
இன்னமும் புரியாத புதிராக இருப்பது ஹாஸ்பிடல் பில்லும் டாக்டர்களின் கையெழுத்தும் தான்.. ஐந்தரை மணிக்கு அல்லது ஆறு மணிக்கு ஒரு துண்டுப் பேப்பர் கொடுக்கின்றார்கள். அது மறு நாள் எடுக்க வேண்டிய  லேப் டெஸ்ட்டுக்கான சீட்.. வேறு வேறு நோய்களுக்காக வந்திருக்கும் எல்லா நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான ப்ளட் டெஸ்ட் அல்லது யூரின் டெஸ்ட்.. எல்லாம் கூட்டமாக கவுண்டரில் பணம் கட்டி கீழே லேப்பில் கொடுப்போம். அது எப்படி எல்லா நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான ரிசல்ட் வருகின்றது?



அறியாமையே வரம் என்பது எவ்வளவு பெரிய உண்மை! எங்கள் கிராமத்தில் சாவு என்பது திடீர் என்று தான் வரும்.  ஹாஸ்பிடல் சென்று அங்கு ‘உனக்கு இந்த வியாதி!  இவ்வளவு நாள் தான் இருப்பாய்’ என்பதற்கோ அல்லது இவ்வளவு செலவானால் காப்பற்றலாம் என்பதற்கோ அவ்வளவு வாய்ப்பு இருக்காது... 

வயக்காட்ல இருந்து வந்த மனுஷன் பொஞ்சாதிக்கிட்ட நெஞ்சக் கரிக்கிற மாதிரி இருக்கும்மா’ கொஞ்சம் தண்ணி கொடுன்னு கேட்டுருக்காரு... அந்தப் புள்ள தண்ணிய எடுத்துட்டு வரதக்குள்ள அப்படியே கல்தூன்ல சாஞ்சிட்டாரு’. கொடுத்து வச்ச மனுஷன், ஒரு நோய் நொடின்னு படுக்கைல விழுந்து கெடக்காம’ படக்குன்னு போய்ட்டாரு... என்ன ஒரு வருத்தம்னா, இந்தக் கடைசிப் புள்ளய ஒருத்தன் கைல புடிச்சு கொடுத்துட்டு போயிர்க்கலாம்’, சரி நம்ம கைல என்ன இருக்கு எல்லாம் அவங் கைல.. மரத்த வச்சவன் தண்ணிய ஊத்துவான்’  என்று பெரும்பாலானவர்களின் சாவுகளுக்கு வந்திருந்தவர்களின் பேச்சு இப்படியாகத் தான் இருக்கும்.

சுகர், ரத்த அழுத்தம், கிட்னி என எந்தப் பிரச்சினைக்கும் டெஸ்ட்டுக்கு சென்றது கிடையாது.. அவன் மேல் பாரத்தைப் பொட்டு விபூதியை எடுத்துப் பூசி விட்டு படுத்துக் கொண்டே பிழைத்துக் கிடக்கும் பெருசுகள் இன்னும் நிறையப் பேர் இருக்கின்றார்கள். இன்னும் அம்மாவுக்கு ஹாஸ்பிடல் வருவதற்குப் பிடிக்காது. காய்ச்சலோ, கால் வலியோ, அப்பனே முருகா காப்பாத்து என்று நேரடியாக கடவுளிடம் தான் ட்ரீட்மென்ட் எடுப்பது...

தாத்தாவிற்கு கோபம் என்பது நாமெல்லாம் சாப்பிடுவது, தூங்குவது போல ஒன்று.. சப்பாத்தி நல்லா இல்லை என்று தட்டை தெருவில் எறிந்திருக்கிறார்.. அத்தை எங்கோ விஷேசத்திற்கு சென்று விட்டு தாமதமாக வந்ததற்காக வீட்டைத் திறக்காமல் இரவு முழுதும் வெளியில் நிற்க வைத்திருக்கிறார்.. இப்போதும் எதற்காக கோபப்படுவார் என்று யாராலும் ஊகிக்க முடியாது..

முதலில் செய்த ஆபரேசனின் போது உடனிருந்து கவனித்துக் கொண்டது நான் தான். அதுவரை அவர் பார்த்து வந்த பைனான்ஸ் கம்பெனி எனது பொறுப்பில் வந்தது.. இது தான் சென்னைக்கு வந்த எனக்கு முதல் வேலை. ஒரு நாள் ஆபிஸ் லேட்டாகத் திறந்ததற்கு, நாளையிலிர்ந்து நீ போக வேண்டாம் என்று சொல்லி விட்டார்..
தாத்தா ரொம்பவும் ப்ராக்டிகல்.. ‘சரவணா.. தங்கச்சி வீடு தான் இருக்கே.. இங்கேயே சாப்பிட்டுக்கிடலாம்னு நினைக்கக் கூடாது.. நீயும் அண்ணனும் சமைச்சுத் தான் சாப்பிடனும்னு’ வேற ஏரியாவிலிருந்து இங்கே குடி வரும் போது சொன்னார். இன்றும் அவர் இருக்கும் என் தங்கை வீட்டில் தண்ணீர் கூடக் குடிக்காமல் தவிர்த்து வருகின்றேன்.
ஆனால் சித்தி ‘ இங்க இவ்வளவு பேர் இருக்கோம்... நீங்க தனியா சமைச்சு சாப்பிடனுமாடா? ஒழுங்கா இங்க வந்து சாப்பிடுங்க என்று அன்பாக மிரட்டினார்.. இல்ல சித்தி நாங்க வர லேட்டா ஆகும். அதனால சமையல் பண்ணியே சாப்பிடுறோம்  என்று மறுத்து விட்டோம்.
சரிடா அப்படின்னா ஞாயித்துக் கிழமை மட்டுமாவது இங்க சாப்பிடுங்கடா என்று சொல்லி ஒவ்வொரு ஞாயிறும் தங்கைகளை அனுப்பி சாப்பிட வரச் சொல்வார்கள்..

இந்த சித்தி தாத்தாவின் முதல் பெண். தாத்தா எவ்வளவு ப்ராக்டிகலோ அதற்கு நேர் மாறாக என் சித்தி அவ்வளவு செண்டிமெண்ட்.. ( சித்தியைப் பற்றி எழுத வேண்டுமானால் அது தனியாக இரண்டு பிளாக் வரும்... அதனால் இப்போது வேண்டாம் )


ப்ராக்டிகல் ஆக இருக்கின்றேன் எனச் சொல்லும் தாத்தா மாதிரி ஆட்களுக்கு பெரும்பாலும் எந்தக் கெட்ட பழக்கங்களும் இருக்காது.. தாத்தா மட்டுமல்ல அவரின் இரண்டு பையன்களுக்கும் எந்தக் கெட்ட பழக்கங்களும் ஏற்பட்டு விடாதவாறு வளர்த்தது அவரின் சாதனை.

சில விசயங்களில் கறார் காட்டினாலும் பல நேரங்களில் பாசக்காரர் தான். என்னையா வேலைக்கு ஆர்டர் வந்திருக்காமே... செருப்பு போட்டுக் கிட்டா போறது.. வாயா என்று கடைக்குக் கூட்டிட்டுப் போய் ஷூ வும், டை யும் வாங்கிக் கொடுத்தவர். ஒரு இடம் வருதுய்யா.. வீடு கட்ட வாங்கிப் போடுய்யா என்று அவர் சொன்ன போது, என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது.. அங்கெ இங்கே பொரட்டி தயார் செய்தபோதும் ஐம்பது ஆயிரம் குறைந்தது.. வேலைக்குப் போன புதிதில் தான் வாங்கி, இது வரை கழட்டாமல் இருந்த செயினை அடகு வைத்து எனக்குக் கொடுத்தவர். உங்கப்பா கஷ்டப்பட்டத்துக்கு நீங்களெல்லாம் நல்லா வரணும்யா என்று எங்கள் வளர்ச்சியில் பெருமிதம் கொள்பவர்.

அறுபதாம் கல்யாணத்திற்கு நான் வாங்கிக் கொடுத்த பட்டு வேட்டியைக் கட்டிக் கொண்டு, பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு, என்னையா, நல்லா இருக்கனா என்று குழந்தையாய் கேட்டார். ஈஸி சேரில் படுத்துக் கொண்டு இதத் தான்யா வாங்கனும்னு நினச்சேன். கரெக்டா வாங்கிக் கொடுத்துட்ட.. ரொம்ப தேங்க்ஸ் என்று கை குலுக்கினார்.     

குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து படிப் படியாக முன்னேறி இரண்டு பெண்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து, இரண்டு பையன்களுக்கும் வீடு கட்டி, பேரன் பேத்திகளுக்கும் திருமணம் செய்து பார்க்கப் போகும் எங்கள் தாத்தா எங்களுக்கு எல்லாம் ரோல் மாடல்.

வேண்டிக் கொள்கிறேன் இத்தருணத்தில்.. அவர் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ வேண்டுமாய்...           

September 22, 2012

டெசோ மாநாடு



                  டெசோ மாநாடு – விளைவுகள்

நேற்று கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் தெரிந்தது. நம் முத்தமிழ் வித்தவர், தமிழனத் தலைவர் டாக்டர் கொலைஞர் அவர்கள் நடாத்திய டெசோ மாநாட்டின் சாதனை என்னவென்று. பின்னர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் ‘அப்படி போடு போடு கண்ணாலே..’ என்ற தமிழிசைப் பாடல் ஒலித்ததே..

இது நம் முத்தமிழ் வித்தவரின் தலை சிறந்த சாதனை அல்லவா... நம் கொலஞரின் வேண்டுகோளுக்கு இணங்க இது போன்ற இலக்கிய கருத்தாழமிக்க பாடல்களைத் தொடர்ந்து ஒலி பரப்ப மஹிந்தா முடிவு செய்துள்ளார். அப்போது தானே கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் ஈழத் தமிழனின் காசையும் புடுங்க முடியும்.

ஆனால் தமிழனத்தின் தலைவராக, எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கையாக நாங்கள் உங்களையே நம்பிக் கொண்டிருந்தோம் தலைவரே... உங்கள் வாயிலிருந்து அந்தப் பொன்னான, கல்வெட்டில் எழுதி வைக்க வேண்டிய வாசகமான ‘ மழை விட்டு விட்டது. தூவானம் தொடர்கின்றது’ என்று பதில் சொன்னீர்களே அது வரை.  அதுவும் எதற்காகச் சொன்னீர்கள்.. ஒரு நிருபர் கேட்கிறார்.. தலைவரே, இலங்கையில் போர் நின்று விட்டதாகச் சொன்னீர்களே.. .ஆனால் இப்போதும் குண்டு வீச்சில் பல பேர் இறந்து போனதாகத் தெரிகின்றதே என்ற கேள்விக்குத் தான் உங்கள் திருவாய் மலர்ந்து மேலே சொன்ன உவமானத்தை சொன்னீர்கள். இந்நேரம் உங்கள் ஆட்சியாக இருந்தார், ஒரு பாராட்டு விழா எடுத்து, இருபதாம் நூற்றாண்டின் உமறுப் புலவர் என பட்டம் கொடுத்திருப்போம்.

தமிழன் கொத்து கொத்தாய் சாவது உங்களுக்கு மழை பெய்வது போலவும், கொஞ்சம் கொஞ்சமாகச் சாவது தூவானமாகவும் தெரிகின்றதே.. என்னே உங்களின் இலக்கிய ரசனை.. நீங்கள் முத்தமிழ் வித்தவர் மட்டும் அல்ல தமிழனையும் டெல்லிக்கு வித்தவர்..

டெசோ மாநாடு நடத்த முழுத் தகுதி வாய்த்தவர் நீங்கள் தான் அய்யா.. நீங்கள் தான் எழவு வீட்டில் அரசியல் நடத்துவதை கண்ணதாசன் காலம் முதல் கடைப் பிடிக்கிறீர்களே...

கண்ணதாசன் இறந்து விட்டார்.. அவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற நீங்கள் ‘ யார் அழைத்தாலும் சென்று விடுவாயே கண்ணதாசா.. அழைத்தது எமன் என்று தெரியாமல் அவருடன் சென்று விட்டாயா என்று  கண்ணதாசன் அடிக்கடி கட்சி மாறியதை குத்திக் காட்டி குதுகூலப்பட்டவர் ஆச்சே.. உங்களையும் நம்பி கடைசி வரை உங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய எம் சொந்தகளுக்கு இது தெரியாமல் போய் விட்டதே...

இப்போதும் அதே ஓலத்துடன் ‘ சகோதரச் சண்டை தான் தோல்விக்குக் காரணம்’ என்று ஏதோ புதிதாகக் கண்டு பிடித்தது போல முழங்கி இருக்கிறீர். ஒரு வேளை உங்கள் வீட்டில் நடக்கும் சகோதரச் சண்டையை சொல்ல வருகின்றீர்களா.. அதற்கு எதுக்கு அய்யா மேடை? அது சரி உங்கள் வீட்டில் நீங்கள் பேசுவதை யார் கேட்கப் போகிறார்கள். அதனால் தானே மேடை போட்டுச் சொல்கின்றீர்கள்.

அடுத்து உங்கள் ஆட்சி அமைந்தால் ஈழம் என்ற பெயரில் டாஸ்மாக் சரக்கு ஒன்றுக்கு பேர் வைக்கலாம் தலைவரே.. ஈழம் ஈழம் என்று பேசும் ஈனத் தமிழர்களாகிய நாங்கள் அதைக் குடித்து விட்டு ‘தலைவன் வால்க’ என்று கோஷமிட்டு சந்தோசப் படுவோம்.   

உங்களுக்குத் தரலாம் ‘ஈழம் கொன்றான்’ என்ற பட்டம். ஏனென்றால் தமிழனுக்கு ‘எல்லாம்’ செய்தவர் நீங்கள் தான் அய்யா... இன்னுமா அய்யா உங்களுக்கு பணம் ஆசை பதவி ஆசை விடவில்லை? மரணம் வரை எப்படி மனம் உறுத்தாமல் வாழ முடிகின்றது உங்களால்..

அது சரி.. அதெல்லாம் மனசாட்சி உள்ளவர்களுக்குத் தானே.. ராபின்சன் பூங்காவில் நடந்த கூட்டத்தில் மழையில் நனைந்தபடி உரையாற்றும் போதே மனசாட்சியை அந்த மழையில் கரைத்து விட்டவர் தானே நீங்கள்.

உங்களின் கல்லறையில் எழுதுவதற்குப் பொருத்தமான வாசகம் இதோ..

மழை இங்கே உறங்குகிறது... தூவானங்களை தொடரவிட்டு விட்டு...
          

September 20, 2012

அப்பா - II


                     அப்பாவின் வலப்புறம் இருப்பது சஞ்சய் , இடப்புறம் ஹேமந்த் (அண்ணன் மகன்)

ஆனால் வாழ்க்கை நாம் நினைப்பது போல மட்டுமே நடப்பதில்லையே.. அப்பாவிற்கு விவசாயத்தின் மீது இருந்த ஆர்வம், சித்தப்பா கிணறு வெட்டித் தந்தவுடன் மிகவும் அதிகமானது.

ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் ஏதாவது ஒரு புதிய மரச் செடியை நட்டு வைத்திருப்பதை பார்க்கலாம். சின்ன வயதில் இப்போது சஞ்சய் கேட்கும் கேள்விகள் போலவே நானும் தொனத்தொன வென கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பேன். மிகவும் பொறுமையாக பதில் சொல்வார். எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை அடித்து வளர்க்கும் கிராம வழக்கத்தில் எங்களை ஒரு முறை கூட அப்பா  அடித்ததே இல்லை.

வாழ்க்கை நடத்த பணம் வேண்டும். அந்தப் பணத்தை சம்பாதிக்க வேலைக்கு வந்த நாம், ஒரு கட்டத்தில் வேலை பார்ப்பதையே வாழ்க்கையாக்கிக் கொள்கின்றோம். இந்த மாற்றம் நம்மை அறியாமலேயே நமக்குள் நடந்து விடுகின்றது. அதனால் தான் மனைவி உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கும்போது, இன்னைக்கு முக்கியமான வேலை இருக்கு, ராத்திரி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் என்று சொல்ல வைக்கின்றது.

ஆனால் விவசாயம் சார்ந்த தொழிலில் இப்படி நடப்பதில்லை. நாங்கள் சிறு வயதிலேயே விவசாய வேலைகளைப் பார்த்தோம். குடும்பமே சேர்ந்து வேலை பார்க்கும் குலத் தொழில் விவசாயம். எங்களின் பொழுதுபோக்கு எல்லாமே காடுகளிலோ அல்லது வயல்களிலோ தான். அதனால் விவசாய வேலை செய்வது இங்கே நாம் வேலைக்குச் செல்வது போல அல்ல.    

ஊரிலிருந்து ஒரு நாள் அம்மா போன் செய்தார்கள். அப்பாவுக்கு பூச்சி கடிச்சுருச்சுப்பா. சின்னக்குட்டி மருந்து கொடுத்திருக்கார் என்று. சின்னக் குட்டி எங்கள் ஊரின் பாம்புக்கடிக்குக் கூட  மருந்து கொடுத்து காப்பாற்றும் பச்சிலை மருத்துவர். அப்பாவிடம் பேசிய போது தான் மருந்து சாப்பிட்டு வருவதாகவும் ஒன்னும் பயப்படவேண்டாம் என்றும் சொல்லி விட்டார்கள்.

ஆனாலும் ஹாஸ்பிடலுக்கு போகுமாறு சொன்னோம்.  நல்ல பாம்பு கடித்தவர்களையே காப்பாற்றிய சின்னக்குட்டி என்னைக் காப்பாற்ற மாட்டானாப்பா’ என்று சொல்லி மருந்து சாப்பிட்டு,  பத்தியம் இருந்து வந்தார்.

அதற்கு அடுத்த நாள் எனக்கு ஏதோ விபரீதம் நடக்கப் போவதாக உள்ளுணர்வு சொல்லியது. மதுரையில் ட்ராவல்ஸ் வைத்துள்ள மாமாவிற்கு போன் செய்து, கார் எடுத்துக் கொண்டு ஊருக்குப் போய் அப்பாவை உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணுமாறு சொல்லிவிட்டு அன்று இரவே மதுரை செல்ல முடிவு செய்தேன். நான் வருவதை அம்மாவுக்குச் சொல்லி விடலாம் என்று போன் செய்யும் போது தான், அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தான் அப்பா இறந்து போனார்.

ஞானமூர்த்தி சித்தப்பா அம்மாவிடம் இருந்து போனை வாங்கி அப்பா நம்மள விட்டுட்டு போயிட்டார் என்றார். நம்பவே முடியவில்லை. ஒரு மனிதனுக்கு சாவு இப்படித் திடீர் என்று வருமா? கூட இருக்கும் எல்லோரையும் விட்டு விட்டு எப்படி திடீர்னு.... இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே கண்களில் கண்ணீர் வர,  வாய் விட்டு அழுது விட்டேன். ட்ரெயினில் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர், ஆம்புள புள்ள அழக் கூடாதுப்பா.. அடுத்து நடக்க வேண்டியத யோசி. கஷ்டம் தான்.. என்ன செய்றது என்று ஆறுதல் படுத்தினார்.

ஆனால் அன்று தோன்றிய உள்ளுணர்வு முதல் நாள் வந்திருந்தால் நான் என் அப்பாவைக் காப்பாற்றி இருப்பேன். ஏன் வரவில்லை?

வீட்டுக்குப் போய் பார்த்தால், ‘நான் என் கடமையை முடித்து விட்டேன்.. உங்களிடம் வந்து தங்கி சாப்பிடும் பலன் எதுவும் எனக்கு  வேண்டாம் என்று தீர்மானித்தவராக, வாழ்க்கையில் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்து ஆளாக்கிய என் அப்பா அந்த அன்புக்கடனை திரும்ப அடைக்கவே முடியாதபடி எங்களைத் தவிக்க விட்டுச் சென்று விட்டார்.

காரணங்கள் ஆயிரம் சொன்னார்கள். மருந்து சாப்பிடும் போது பத்தியம் இருக்க வேண்டும்.  ஆனால் இரண்டு நாளுக்கு முன்பு கருவாட்டுக் குழம்பு வைக்கச் சொல்லி சாப்பிட்டார். அது தான் அவரின் உயிரைப் பறித்தது என்றும், அவருக்கு தெரிந்து விட்டது, தான் சாகப் போகிறோம் என்று அதனால் தான் கடைசி விருப்பமாக கருவாட்டுக் குழம்பை வைக்கச் சொல்லி சாப்பிட்டார் என்றும் ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். கூடி அழுது, கொண்டு போய் கொளுத்தி விட்டோம்.

ஒரு மனிதன் எல்லோர்க்கும் நல்லவனாக வாழ்ந்து மறைய முடியுமா? ஆனால் அப்பா அப்படித்தான் வாழ்ந்து மறைந்தார்.

பையில் காசு இருந்தால் எல்லோர்க்கும் செலவழித்து, இல்லை என்றால் கூச்சப் படாமல் கேட்டு,  என அவர் மட்டும் குழந்தையாகவே வாழ்ந்து விட்டார். நம் உலகில் பார்த்தோம் என்றால் அவர் பொழைக்கத் தெரியாதவராக இருந்திருக்கலாம்.. ஆனால் அவர் வாழ்ந்த உலகத்திற்கு  நம்மால் போகவே முடியாதபடி நாம் நம் வாழ்க்கைப் பயணத்தைத் தேர்ந்து எடுத்திருக்கிறோம்.

ஊரில் இருந்து அவர் இங்கு வந்து தங்கியிருக்கும் போது தினமும் செலவுக்கு என்று கொடுக்கும் பணத்தை ஒரே நாளில் செலவழித்து விடுவார். எல்லாப் பேரன்களுக்கும், மருமகள்களுக்கும் சாக்லெட் வாங்கிக் கொடுப்பார்.

மறு நாள் ஆபீஸ் கிளம்பும் போது ஒரு சின்னப் பையன் போல என் முகத்தையே பார்ப்பார். என்னப்பா என்று கேட்டால் ‘செலவுக்கு காசு குடுப்பா’ என்பார். நேத்து குடுத்த இருநூறு ரூபாய் அதுக்குள்ள செலவு பண்ணிட்டீங்களா? என்று கேட்டால், எவ்வளவு சாக்லேட் வாங்க வேண்டியிருக்கு.. காலி ஆயிடுசுப்பா என்று சிரித்தபடி சொல்லும் போது நிசமாகவே ஒரு குழந்தையின் அழகு இருக்கும்..

ஊரில் பாம்பை, பாம்பு என்று சொல்ல மாட்டார்கள். பூச்சி என்று தான் சொல்வார்கள். நல்ல பாம்பைக் கூட நல்ல பூச்சி என்று தான் சொல்வார்கள்.


ஆனால் அப்பாவை பூச்சி ஏதோ கடிச்சிடுச்சுப்பா என்று அம்மா சொன்ன போது, ஏதோ பூச்சி தான் கடிச்சிருக்கும் போல என்று என்னை நினைக்க வைத்தது இந்த வேலையின், இயந்திரமயமான நகரத்தின், மனிதாபிமானம், அன்பு எல்லாம் பார்க்காமல் ரேஸ் குதிரை போல நம்மை ஓட வைக்கும் இந்த வாழ்க்கை முறையின் வெற்றி..  
சொர்க்கம் என்பதும் கடவுள் என்பதும் உண்மையாக இருந்தால், அப்பா சொர்க்கத்தில் இருப்பார். கடவுளின் பக்கத்தில் இருப்பார். கடவுளிடம் காசு வாங்கி அவரின் பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் சாக்லெட் வாங்கிக் கொடுத்துக் கொண்டு...    

September 18, 2012

அப்பா



அப்பா எங்கள் தாத்தா குடும்பத்தின் மூத்த ஆண் வாரிசு. அவருக்கு முன்னால் என் அத்தை ஒருவர் இருக்கின்றார். அப்பாவுக்குச் சின்ன வயதாக இருக்கும் போதே அவரின் அம்மா இறந்து விட்டார்கள். தாத்தா எங்கள் ஊரின் கணக்கப்பிள்ளை ஆக வேலை பார்த்தார்கள். எங்கள் குடும்பத்தை ‘கணக்க வீடு’ என்று தான் அழைப்பார்கள். தாத்தாவிற்கு இரண்டாவது திருமணம் நடந்து அப்புறம் எனக்கு நான்கு சித்தப்பாக்களையும், மூன்று அத்தைகளையும் தாத்தா உற்பத்தி செய்தார்.

இரண்டாம் தாய்க்கே உரிய சினிமாத்தனமான கொடுமைகள் அத்தைக்கும் அப்பாவிற்கும் நடக்கவில்லை, என்றாலும் எங்கள் சித்தப்பாக்களுக்கும் மற்ற அத்தைகளுக்கும் கிடைத்த அன்பும் அரவணைப்பும் கிடைத்திருக்கும் என்று தோன்றவில்லை. முதல் இரண்டு பிள்ளைகளை அதுவும் ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் பெற்று விட்டு அடுத்து வந்த பெண்டாட்டியுடன் ஏழு பிள்ளைகளைப் பெற்ற எங்கள் தாத்தா எவ்வளவு கொடுமைக்காரராக இருந்திருக்கக்கூடும். அவர் எப்படி என் அத்தைக்கும் அப்பாவுக்கும் பாசத்தைக் காட்டி வளர்த்திருப்பார். எல்லாப் பசங்களுக்கும் கூழும், வெங்காயமும் கொடுத்து விட்டு நெல்லுச் சோறு சாப்பிட்ட புண்ணியவான் எங்கள் தாத்தா.    

இப்படியாக யோசிக்கும் நான் தான் அவருக்குப் பிடிக்காத பேரன்.  என்னை எப்போதும் ‘இவன் மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்பார். (உண்மையில் இது வரை நான் பார்த்த வேலைகளிலேயே எனக்குப் பிடித்த வேலை ஒரு வருட காலம் மாடு மேய்த்தது தான் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது)

ஆனால் அவரின் மகன் வழிப் பேரன்களாக பத்துப் பேர் இருந்தாலும் அவரின் பெயரை எனக்கு மட்டும் வைத்தது என்னே ஒரு நகை முரண். (இப்போது தெரிந்திருக்கும் உங்களுக்கு!  எனது பெயர் எனக்குப் பிடிக்காமல் போனதன் காரணம். சரவணன் என்ற பெயர் என் அம்மா எனக்கு வைத்தது)

ஆனால் அப்பா அவர் இருக்கும் வரை அப்பத்தாவை அம்மா என்று தான் அழைத்தாரே தவிர சின்னம்மா என்று கூப்பிட்டதே இல்லை. மேலும்  எங்களுக்கு அவர் இளம் வயதில் அப்பத்தாவிடம் கஷ்டப்பட்ட கதைகளை, வாழ்ந்த  வரலாற்றை சொன்னதே இல்லை.            

அப்பா அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி. அப்பாவிற்கு திருமணம் நடந்து சொத்து பிரிக்கும் போது எல்லோர்க்கும் சம பங்காக பிரித்து வைத்தார்கள்.  பெரிய வீட்டை ஐந்தாகப் பிரித்ததில் எங்கள் வீடு என்று சொல்லி ஒரு சிறிய அறையைக் கொடுத்தார்கள்.

அப்பா எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அ.தி.மு.கா காரர். (சஞ்சய் பிறந்திருக்கும் போது, ஹாஸ்பிடலில் பார்க்க வந்தவர்,  ஒரு சிறிய அ.தி.மு.கா துண்டை அவன் மேலே போட்டு,  என் கட்சிக்கு ஒரு ஆள் கிடைச்சுட்டாண்டா’ என்று எல்லோரையும் சிரிக்க வைத்தார்). லோக்கல் எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர் இவர்களிடத்தில் எல்லாம் நல்ல அறிமுகம் இருந்தது. அதனை வைத்து தன்னிடம் வருபவர்களுக்கு தேவையான செர்டிபிகேட் வாங்கிக் கொடுப்பது மற்றும் காண்ட்ராக்ட் எடுத்து கண்மாயை ஆழப்படுத்தும் வேலை, ரோடு போடும் வேலை என சிறு சிறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். எங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட விவசாய நிலத்தில், விவசாய வேலைகளை அம்மா பார்த்துக் கொண்டார். அப்பாவிற்கு அப்போது விவசாயத்தில் விருப்பம் இல்லை.

இது வரை நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. குடும்பத்தில் ஓரளவு வருமானம் இருந்து கொண்டு தானிருந்தது. நன்றாக நினைவு இருக்கின்றது.   நான் அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவிற்கு குடிப் பழக்கம் ஆரம்பித்தது அப்போது தான். வரும் வருமானத்தில் முக்கால் வாசியை குடித்தே அழித்தார். கடன் வாங்கி காண்ட்ராக்ட் வேலை பார்த்து, பேமென்ட் வாங்கும் போது திருப்பி கடனை  அடைக்காமல் முழுவதுமாக குடிப்பதற்கே செலவழித்தார். அப்போதுதான் எங்கள் வூருக்கு வந்திருந்த எங்கள் அத்தை (அப்பாவின் அக்கா) அண்ணனை சென்னைக்கு அழைத்துச் சென்று படிக்க வைத்துக் கொள்வதாகச் சொன்னார்கள். அப்பாவும் சரி என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். என் அண்ணனோடு மிகத் தோழமையோடு இப்போதும் இருப்பதற்கு அந்தப் பிரிவே காரணமாகவும் இருக்கலாம். சுமார் பத்து வருடங்கள் என் அண்ணனைப் பார்த்ததே இல்லை. சிறு வயதில் பேனாவிற்கோ, புது நோட்டிற்கோ, மிட்டாய்க்காகவோ அண்ணனோடு சண்டை போடும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அண்ணன் பிளஸ் டூ முடித்து விட்டது. மேலே படிக்க ஆசைதான் என்றாலும் குடும்ப சூழ்நிலை அவ்வளவாக சரியில்லாத காரணத்தால் வேலைக்குப் போக ஆரம்பித்தது. எனக்கு கல்லூரி பீஸ் கட்டியது, ஹாஸ்டல் பீஸ் கட்டியது, என் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தது என எல்லாமே என் அண்ணன் தான் செய்தது. பேஸ் புக்கில் நான் எழுதி இருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பேன்.  குடும்பத்தின் முதல் பிள்ளை ஆண் என்றால் அதற்குப் பின் வரும் குழந்தைகளுக்கு ரெண்டு அப்பா. பெற்றவர் முதல் அப்பா என்றால் வளர்த்தவர் அண்ணன்அப்பா என்று.

ஆனாலும் அப்பாவால் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்ற ஒரே குறையைத் தவிர சொந்தங்களில், பாசத்தில், குழந்தைகளை கொண்டாடுவதில் எவரும் போட்டி போட முடியாது.

சஞ்சய் அப்போது தான் ‘ஆபுட்டயா’ என்று கேட்க ஆரம்பித்திருந்தான். அந்த ஒரு வார்த்தையைக் கேட்பதற்கு தினமும் போன் பண்ணுவார். போன சஞ்சய்கிட்ட குடுப்பா என்று சொல்வார். அவனும் ‘தாத்தா ஆபுட்டயா’ என்று கேட்பான். அவரின் சிரிப்புச் சத்தம் ஸ்பீக்கர் போன் இல்லாமலேயே எல்லோர்க்கும் கேட்கும்.

அவர் எப்போது போன் செய்து பணம் அனுப்புமாறு கேட்டாலும் நான் எதற்குப்பா பணம் என்று கேட்டதே இல்லை. நான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தபோதிலும் காண்ட்ராக்ட் எடுத்துக் கடன் வைத்தார். பணம் எதுவும் கேட்க மாட்டார். ஆனால் கழுத்தில் சித்தப்பா வாங்கிக் கொடுத்திருந்த செயின் காணாமல் போயிருக்கும். இரண்டு மூன்று தடவை நாங்கள் அவர் அடகு வைத்ததை திருப்பிக் கொடுத்திருக்கிறோம். ஒரு முறை விளையாட்டாய் கேட்டிருக்கிறோம். ஏம்பா, தங்கச்சியக் கட்டிக் கொடுத்தாச்சு. எங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்க.. இப்போ யாருக்காகப்பா காண்ட்ராக்ட் வேலை செஞ்சு சம்பாதிக்கிறீங்க... இன்னும் வேற தங்கச்சி, தம்பின்னு யாராவது இருக்காங்கலாப்பா’ என்று . 'போடா வெட்டிப் பயலே'.. ன்னு சிரிச்சுக் கிட்டே சொன்னார்.

முக்கியமா எங்கள் குடுபத்தின் எல்லா மருமகள்களுக்கும் பிடிச்ச மாமா எங்க அப்பா. எல்லாத் தங்கச்சிகளுக்கும் பிடித்த அண்ணன் , மற்றும் என் அத்தை பெண்களான ‘இரண்டு சித்தி’ களுக்கும் பிடித்த தாய் மாமன்.

சஞ்சய் இப்போது சிரிப்பது எப்படி இருக்கின்றதோ.. அப்பா சிரிப்பதும் அப்படியே இருக்கும்.. வளர்ந்த குழந்தை மாதிரி கள்ளம் கபடமில்லாமல் சிரிப்பார்.

எதனையும் ‘பாசிடிவ்’ ஆகவே பார்த்துப் பழக்கப்பட்டவர். ஏதோ ஒரு விசயத்தில் நடந்த சிறு சண்டையிலிருந்து நான் அதில் சம்மந்தப்பட்ட சித்தப்பா வீட்டுக்கு போகாமல் தவிர்த்து வந்தேன். ஆனால் ஊரில் இருந்து வந்த அப்பா நேராக அந்தத் தம்பி வீட்டுக்குத் தான் சென்றார். அண்ணன் தம்பி நாங்க அடிச்சுகிடுவோம், நீ ஏன்டா போக மாட்டேங்குற.. தம்பி வருத்தப்படுறான் என்று நல்ல விசயத்தை ஞாபகம் வைத்துக்கொண்டும், கெட்ட விசயத்தை அப்போதே மறந்து விடுவதும் அப்பாவின் குணம்.

அண்ணனின் திருமணம் வரை அண்ணனும் நானும் மூன்று வருடங்கள் ஒரு வீட்டில் இருந்தோம். கூட வேறு யாரும் இல்லை.

அப்பா ஊரில் இருந்து வருகிறார் என்ற தகவல் கேட்டதும் கடைக்குப் போய் தேங்காய் எண்னையும் பாண்ட்ஸ் பவுடரும் வாங்கி வைப்போம். நிறைய எண்னை தேய்த்து இடது ஓரம் உச்சி எடுத்து படிய வாரிக்கொள்வார். முகத்தில் பவுடர் போடாமல் வெளியே செல்ல மாட்டார். நானும் அண்ணனும் எண்னையும் பவுடரும் பயன்படுத்துவதில்லை.

எதுக்குப்பா இந்த வயசுல ஊர்ல கஷ்டப்படுறீங்க.. எங்களோட வந்து இருங்கப்பா என்று ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் வற்புறுத்துவோம்.. ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு வேறு காரணத்தைச் சொல்லி மறுத்து விடுவார். அதுவும் இல்லாமல் அவருக்கு இங்கே சும்மா இருப்பது பிடிக்கவில்லை. ஊரில் இருந்தால் அவருக்கு ஏதாவது ஒரு வேலை அல்லது யாராவது பெண் பார்க்க அல்லது பஞ்சாயத்து என அழைத்துச் செல்வார்கள். இங்கே இருப்பது அவரின் உடல் நிலைக்கும் ஒத்துவரவில்லை. இங்கே வந்தால் தான் கைவலி, கால் வலி வருவதாகவும். ஊரில் இருக்கும் போது தான் நன்றாக இருப்பதாகவும் சொல்லுவார்.

குடிப்பதை பத்து வருடங்களுக்கு முன்பே நிறுத்தி விட்டார். வருடந்தோறும் விரதம் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வந்தார்.

ஆனால் சிறு வயதில் பண்ணிய சிறு சிறு  தவறுகளுக்கும் வருந்துபவராய் நல்லவராக திருந்தி, திரும்பவும் விவசாயத்தில் அக்கறை செலுத்தினார். சஞ்சய்க்கும், ஹேமந்த்க்கும் ( அண்ணன் மகன்) ஊரில் சொத்து வாங்கனும்பா என்று சொல்லி அந்த வருடம் கிடைத்த வருமானத்தில் அரைக்காணி நிலமும் வாங்கினார். ஆனால்......                            
   

September 17, 2012

கணேஷ் குமார்



எப்போதாவது இப்படி ஆவது உண்டு. இன்று காலையில் பார்த்த, கைகளை சாய்வாக ஆட்டி ஆட்டி நடந்த பெண் எனக்கு கணேஷ் குமாரை ஞாபகப்படுத்தினாள். ஆனால் யோசித்துப் பார்த்தால் இரண்டு சம்பவங்களுக்கும் ஒன்றோரொண்டு சம்பந்தம் இல்லை. எப்படி கணேஷ் குமார் ஞாபகம் வந்தது எனக்கு.
கணேஷ் குமார் எனது பள்ளிப் பருவ நண்பன். ஒரு வகுப்பு, இரண்டு  வகுப்பு அல்ல. எனது மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பக்கத்திலேயே அமர்ந்து படித்த பள்ளித் தோழன். மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செக்சன் எதுவும் கிடையாது. எல்லோரும் ஒரே வகுப்பில் ஒரே ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளி அது. மதியம் கோதுமை உப்புமாவும் சுண்ட வத்தலுமாக காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு சாப்பிட்டு வளர்ந்தவர்கள் நாங்கள்.எங்கள் ஊர் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. ‘மேற்படிப்பு’ படிக்க ஆறு கிலோ மீட்டர் நடந்து பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும்.
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ‘எ’ செக்சன், ‘பி’ செக்சன் என இரண்டு பிரிவுகள் உண்டு. பள்ளி தொடங்கி ஒரு வாரம் வரை ஒரே வகுப்பில் அமர்ந்திருக்கும் நாங்கள் செக்சன் பிரிக்கும் நாளில் கடவுளை வேண்டிக்கொள்வோம். நானும் கணேஷ் குமாரும் ஒரே செச்சனில் வர வேண்டும் என்று. நண்பர்களில் எனக்கு நிறைய பேர் இருந்தாலும் கணேஷ் குமாரை மட்டும் அதிகமாகப் பிடித்துப் போனதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. அதில் முக்கியக் காரணம் நானும் கணேஷ் குமாரும் கிளாஸ்மேட் (Classmate) என்றால் எனது அப்பாவும் அவன் அப்பாவும் க்ளாஸ்மேட் (glassmate). ஆனால் கணேஷ் குமாரின் அப்பா ஆசிரியர், அம்மா டீச்சர். எங்களுக்கு மூன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை டீச்சர் தான் கிளாஸ் எடுத்தார்கள். என்ன சோமு எப்படி இருக்க என்று ஒரு பக்கமாக தலையைச் சாய்த்து கேட்கும் டீச்சரின் பிம்பம் அப்படியே மனத்தில் இருக்கின்றது.
அப்பாக்கள் குடிக்கும் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளுக்கு எப்போது வீடு அமைதியாக இருக்கும், எப்போது சண்டையாக இருக்கும் என்பதே தெரியாது. அதைத் தீர்மானிப்பது  அன்று அப்பாக்கள்  குடிக்கும் சாராயத்தின் அளவே என்பதால் ஒரு வித குழப்ப மனநிலையிலேயே வளர்வார்கள்.   இந்த ஒரு காரணமே எங்கள் இருவருக்குமிடையேயான நட்பில் இறுக்கத்தை உருவாக்கியது. என்னடா உம்முனு இருக்க.. வீட்ல பிரச்சினையா.. விடு மாப்ள எங்க வீட்லயும் நடக்குறது தானே என ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வோம்.
கணேஷ் குமார்,  அவர்கள் வீட்டில் இரண்டாவது ஆண் பிள்ளை. டீச்சருக்கு பெண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்து பிறந்த ஆண் குழந்தை ஆதலால் அவனிற்கு சிறு வயதில் பெண் குழந்தை உடை அணிவித்து பொட்டு வைத்து அழகு பார்ப்பார்கள். அதனால் தானோ என்னவோ கணேஷ் மிக மென்மையான உணர்வுகளைக் கொண்டவனாக இருந்தான். நாங்கள் எல்லாம் கடலை மிட்டாய், முறுக்கு என்று சாப்பிட்டால் அவன் மட்டும் ஆரஞ்சுப்பழம் சாப்பிடுவான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கிள்ளும் பழக்கம் எனக்கு ஆரம்பித்தது அவனிடம் இருந்து தான். எது ஒன்று சொல்லும்போதும் கிள்ளாமல் சொல்ல முடியாது அவனால். காலையில் ஸ்கூல் செல்லும் போது எனது வீட்டிற்கு வந்து விடுவான். அவனும் நானும் சேர்ந்தே செல்வோம். வரும்போதும் அப்படித்தான். ஸ்கூல் பேக்கை வீட்டில் வைத்த கையோடு விளையாட எனது வீட்டிற்கு வந்து விடுவான். புளிய மரத்தில் ஏறி உட்கார்ந்து படிப்பது, கோ கோ விளையாடுவது என எந்நேரமும் இணை பிரியாமல் சுற்றிக் கொண்டிருப்போம்.
சண்டையும் வந்திருக்கிறது ஆனால் அவனாலும் என்னாலும் ஒரு நாள் முழுதும் பேசாமல் இருக்க முடிந்ததில்லை. டீச்சர் என் கூட மட்டும் விளையாட அனுமதித்ததற்கு நான் எப்போதும் எடுக்கும் முதல் மதிப்பெண்கள் காரணமாக இருந்திருக்கலாம். கணேஷ் சுமாராகத் தான் படிப்பான். ஏனென்றால் எங்கள் வீட்டில் எப்போதாவது நடக்கும் சண்டை கணேஷ் வீட்டில் தினமும் நடக்கும். அந்தச் சூழ்நிலையில் அவன் அவ்வளவு மதிப்பெண்கள் எடுத்ததே பெரிய விஷயம். ஏதோ ஒரு நாளில் தலையில் காயத்தோடு பள்ளிக்கு வந்தான். எங்கடா அடி பட்டுச்சு.. நேத்து நல்லாத்தானே இருந்த’ என்று கேட்டால், அதெல்லாம் ஒன்னும் இல்லடா என்று சொல்லி விட்டான். மறு நாள் செல்வி அக்கா சொல்லித் தான் தெரிந்தது. டீச்சரை அடிக்குப் போது வேண்டாம்பா அடிக்காதீங்க என்று இவன் குறுக்கே சென்றதாகவும் அவன் அப்பா இவனை கீழே தள்ளி விட்டதால் மண்டை உடைந்து இருக்கின்றது என்றும். கணேஷ் அப்பாவிற்கு டீச்சர் மேலே சந்தேகம்.
அவன் அதிகமாகச் சிரித்து சந்தோசமாக இருக்கும் நாட்கள் சபரி மலைக்கு பக்தர்கள் மாலை போடும் தை, மார்கழி மாதங்களில் தான்.
கணேஷ் குமாரின் அப்பா வருடா வருடம் மாலை பொட்டு விரதம் இருந்து மலைக்குச் செல்வார். அந்நாட்களில் டீச்சரும் சந்தோசமாகவே இருப்பார்கள். நாங்கள் தினமும் நடக்கும் பஜனையில் சாமிகள் கூடச் சேர்ந்து பாட்டுப் பாடுவதுண்டு. கணேஷ் சொல்வான், வருடம் பூரா மார்கழியாகவே இருக்க்கலாம்டா என்று. அவன் அப்பாவிற்கு இது கடைசி வரை புரியவில்லை. குடி அதிகமாகி வயிற்றில் ஏதோ பிரச்சினை வந்து நான் பிளஸ் டூ படிக்கும் போது இறந்து போனார்.       
சோமு, கணேஷ பத்திரமா பாத்துகோப்பா, இது வரை அவன் தனியா எங்கேயும் போனதில்ல என்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் போது சொல்லி அனுப்பினார்கள். அந்த தேர்வு நடந்த நாட்கள்தான் நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்ட நாட்கள். டீச்சர், வேலைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு திருச்சுழி சென்று விட்டார்கள். கணேஷ் திருச்சுழியில் உள்ள நாடார் மேல் நிலைப் பள்ளியில் சேர்ந்து விட்டான். அங்கெ அரசு மாணவர் விடுதி இல்லாததால் நான் கல்லூரணி எஸ்.பி.கே நாடார் மேல் நிலைப் பள்ளியில் சேர்ந்து விட்டேன். அப்புறம் இருவரும் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை
இன்று கதை சொல்லலி தூங்க வைக்கும் நேரத்தில் சஞ்சய் கேட்டான்.. ஸ்கூல் படிக்கும் போது நீங்க எப்படி இருந்தீங்கப்பா? அப்ப உங்க பெஸ்ட் பிரென்ட் யாருப்பா என்று.
நான் ‘கணேஷ் குமார்’ என்று சொன்னவுடன் இப்போ அவங்க எங்கேப்பா இருக்காங்க என்று கேட்டான்.
தெரியலப்பா என்றவுடன் நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்த பாலா தலையை உயர்த்தி கேட்கிறது.. ‘பெஸ்ட் பிரென்ட்னு சொன்னீங்க’ என்று.
அவ்வளவு தான் எனக்கு தூக்கி வாரிப் போடுகின்றது. குழந்தைகள் சில நேரம் சொல்லும் வார்த்தைகள் நாம் எவ்வளவு தூரம் இயல்பான வாழ்க்கையிலிருந்து விலகி விட்டோம் என்பதை படம் பிடித்துக் காட்டி விடும். அப்படியான தருணங்களில் இதுவும் ஒன்று. எப்போதும் வாழ்வின் எந்த நிலையிலும் நாம் பிரியவே கூடதுரா என்று எட்டாம் வகுப்பு படிக்கும் போது சொல்லிக் கொண்டோம். அது இப்போது ஞாபகம் வருகின்றது.    .
கணேஷ் குமாருக்கு இந்நேரம் திருமணம் நடந்திருக்குமா?  நடந்திருந்தால் அவன் மகனும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கலாம்...              

September 15, 2012

கண் கட்டி (வித்தை)




இதுக்கு எல்லாம் வேற மருந்து கேக்காது சரவணா... ஒன்னும் இல்ல ஒன்னோட எச்சிய கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவ தடவிக் கிட்டே இரு.. சரியாப் போய்டும்..

கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும் செய்து பார்த்தேன். வீக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. சுட்டு விரலை உள்ளங்கையில் சூடு பறக்க தேய்த்து அந்தச் சூட்டை வீக்கத்தின் மீது வை...

வைத்துப் பார்த்தேன்.

ராமக் கட்டிய உரசிப் போடு..

போட்டும் பார்த்தேன்.

மஞ்சளை உரசி உப்பு சோப்பு கொஞ்சம் தேய்த்து பூசு..

பூசிப் பார்த்தேன். வலி இரண்டு நாட்களில் குறைந்து விட்டது. ஆனால் வீக்கம் அப்படியே இருந்தது. அதாவது கண்ணின் மேல் இமையில் வந்த கட்டி வீக்கம் குறையாமல் கல் மாதிரி அப்படியே நின்று விட்டது.

விதம் விதமாக சி. பி. ஐ விசாரித்தும் பதிலே சொல்லாத ராசா போல எனக்கென்ன என்று அப்படியே இருந்து விட்டது. ( தி.மு.கா காரர்களுக்கு மட்டும் ‘என்ன கையப் புடிச்சு இழுத்தியா’ என்று கேட்கும் வடிவேலு போல)   என்ன சார் கண்ல கட்டியா என்று அலுவலகத்திலும் என்ன மாப்ளே.. கண்ல கட்டி.. இதுக்குத் தான் எண்ண தேச்சு குளிக்கனும்கறது என்று உறவுகளும் ஆளாளுக்கு அட்வைஸ் செய்தனர். இது ஒரு புறம் இருக்க பண்ணிய பாவங்களில் எந்தப் பாவத்திற்கான தண்டனை இதுவென மனசு ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்க்கின்றது. அகலிகைக்கு சாபம் கொடுத்த முனிவனாவது, ராமன் என்று ஒருவன் வருவான், அவன் கால் பட்ட கணத்தில் உனக்கு சாபம் விமோசனம் ஆகும் என்று பரிகாரத்தையும் சேர்த்தே சொன்னான்.  எனக்கு வந்த கட்டிக்கு என்ன விமோசனம் என்றே தெரியவில்லை. கடவுள் கனவில் வந்து, நீ கண் தெரியாத பத்து பேர்களுக்கு ரோடு கிராஸ் பண்ண உதவி செய்... பத்தாவது ஆள் கிராஸ் பண்ணி முடித்தவுடன் உனக்கு கண் கட்டி சரியாகி விடும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். ஆனால் தூக்கமே வரவில்லை, அப்புறம் கனவு எங்கிருந்து வருவது.

கடைசியில் கவிதாலெட்சுமியிடமே காணிக்கை தந்து சரி பண்ணிக் கொள்வோம் என கே.கே கண் மருத்துவமனை சென்றோம்.  

எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு தடவை இப்படித் தான் கட்டி வந்து வீக்கம் குறையாமல் அப்படியே கன்னிப் போய் விட்டது. இதுக்கு ஒரே வழி சின்னதா கீறி எடுப்பது தான் எனவும் கண் ஆஸ்பிடல் செல்லவும் அட்வைஸ் செய்யப்பட்டேன். அப்போது அப்போலோ ஹாஸ்பிடல் என்ற பெயரில் சிறியதாக பஸ் ஸ்டாப் அருகிலேயே இருந்தது. உள்ளே சென்று பார்த்தால் சினிமா ஹீரோயின் என்று சொல்ல முடியாது ஆனால் சீரியல் ஹீரோயின் போல கவிதாலெட்சுமி என்ற கண் டாக்டர், வாங்க சொல்லுங்க என்று ஆரம்பித்தார்.

கண்ல கட்டி வந்து அந்த வீக்கம் குறைய மாட்டேங்குது என்று என் குறையை சொன்னவுடன், ஆபரேஷன் கவுனை மாட்டி விட்டு ‘படுங்க கட்டியக் கீரி எடுத்துடலாம்’ என்றார்.

நான், இல்லங்க வேணாம், நான் இன்னொரு நாளைக்கு வரேன் என்று சொல்ல, ஏன் இன்னைக்கு என்ன நல்ல நாள் இல்லையா என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

இல்ல நாளைக்கு இந்தியா கிரிக்கெட் மேட்ச் இருக்கு.. நான் பார்க்கணும் என்றேன்..

நீங்க தாராளமா பார்க்கலாம், காலையிலேயே சரியாப் போய்டும் என்று சொல்லி சின்னதாக ஒரு ஊசி கண்ணுக்கு அருகிலேயே போட்டார்.. கண் இமை மரத்துப் போனது.. என்ன செய்தார் என்று தெரியவில்லை ஆனால் கண்ணில் பெரிய கட்டுப் போட்டு அனுப்பி விட்டார். ஒற்றைக் கண் மூடிய நிலையில் பஸ் ஏறி வீட்டிற்கு வந்தேன். உண்மையில் கண் வலிக்கவே இல்லை.

இப்போது அந்த கவிதா தான் கே.கே ஹாஸ்பிடல் என்ற பெயரில் பெரிய மருத்துவமனை கட்டி ‘சரவணா ஸ்டோர் சியர் கேர்ள்ஸ்’ போல யூனிபார்ம் சேலை அணிந்த பெண்களை நர்ஸ்கள் என்று சொல்லி  குறுக்கும் நெடுக்குமாக நடமாட விட்டிருக்கிறார். சரி அங்கேயே போகலாம் என்று முடிவு செய்து அதற்குப் பின் ஒரு வாரம் கழித்து ஒரு வெள்ளி அன்று போனோம். ( நான், சுரேஷ் அண்ணன் வினோத் தம்பி என மூன்று பேர்)

கவிதா டாக்டர் கண்ணை செக் செய்து இரண்டாயிரம் ஆகும் என்றவுடன் இதுக்கு இவ்வளவா, அப்படியே இருந்தால் என்ன என்று நடுத்தர வர்க்க புத்தி யோசித்தது. இதே போல யோசனை நிறைய நேரங்களில், அதுவும் பொதுவாக ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட்டுக்காக பணம் செலவாகும் வேளைகளில் வந்திருக்கிறது. அதுவும் டெஸ்ட் எடுத்து விட்டு ஒன்னும் இல்ல, நார்மலா தான் இருக்கு என்றவுடன் வரும் சிறிய ஏமாற்ற உணர்வை எப்படி முயன்றும் தவிர்க்க முடியவில்லை.

நல்லவேளை, சரியான நேரத்தில் இங்க வந்தீங்க.. சின்ன ப்ராப்ளம் தான். இந்த மாத்திரைய நாலு நாள் சாப்பிடுங்க என்று சொன்னால் ஒரு வேளை சந்தோசம் வருமோ..

தயங்குவதைப் பார்த்த டாக்டர் ஏன் காசு எடுத்துட்டு வரலையா.. பரவால்ல நாளைக்கு வந்து பண்ணிக்குங்க என்று சொன்னார்கள். அது இல்ல டாக்டர். போன தடவை இவ்வளவு செலவு ஆகல ஆனா இப்ப அதிகமா சொல்றீங்க என்ற என்னை வித்தியாசமாக பார்த்தார்கள். ஒரு வேளை எல்லோரும் அவங்க சொல்ற காசை சாரி.. தப்பு, பீஸை கொடுக்குறாங்க போல..

ஓகே டாக்டர் இப்பயே பண்ணிடலாம் என்றவுடன் கண் டெஸ்ட் செய்யப் பட்டேன். டெஸ்ட் ஊசி போட்டார்கள். அதன்பின் மரத்துப் போகச் செய்யும் ஊசியை கண் அருகில் மேல் இமையில் போட்டு ஆபரேஷன் ஐந்து நிமிடத்தில் முடிந்தது. ஆறாவது நிமிடம் கண் வலிக்க ஆரம்பித்தது.

வீட்டுக்கு வந்தால் சஞ்சய் தூங்கியிருக்க்வில்லை. என்னப்பா கண்ல இவ்ளோ பெரிய கட்டு என்றான்.

ஒன்னும் இல்லப்பா சின்ன ஆபரேஷன் என்றவுடன் அதுக்கா இவ்ளோ பெரிய கட்டு என்று கேட்டான்.

அடுத்த கேள்வி எங்கள நாளைக்கு யாரு பஸ்ல ட்ராப் பண்ணுவா, அம்மாவுக்கு யாரு காய்கறி வாங்கித் தருவா என்று கேட்டது சிரிப்பை வரவழைத்தது.

ஆண் பிள்ளை கொஞ்ச நேரத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று ப்ராக்டிகல் உலகத்திற்கு வந்து விடுகின்றது. ஆனால் பாலா என் பக்கத்திலேயே நின்றுகொண்டு என்னப்பா ரொம்ப வலிக்குதா என்று கேட்டுக் கொண்டே இருந்தது.    

தொடர்ந்து ஐந்து நாட்கள் மாத்திரை சாப்பிட்டும் வலி குறையவே இல்லை. சரி வழக்கம் போல நெட்ல பார்க்கலாம்.. என்ன பிரச்சினை நமக்கு வந்தது, எப்படி சரியாகும், நமக்கு கொடுத்தது சரியான ட்ரீட்மென்ட் தானா என்று.

இப்படித் தான் ஒரு முறை உடம்பெல்லாம் தடுப்பு தடுப்பாக வந்தது. டாக்டரிடம் போகாமல் நெட்டில் தேடியதில் எனக்கு வந்திருப்பது சோரியாசிஸ் என்று தோன்றும் படி இருக்கவே பயந்து டாக்டர் குமாரிடம் ஓடினேன். குமார் தாம்பரத்தில் பேர் பெற்ற டாக்டர். முக்கியமாக அழகான கை எழுத்தில் அதுவும் கேபிடல் லெட்டர்ஸில் தான் பிரிஸ்கிரிப்சன் எழுதுவார். அவரிடம் சொன்னதற்கு சிரித்துக் கொண்டே சொன்னார்.. நீயா முடிவு பண்ணிட்டு இங்க வரியா.. அறை குறை அறிவு எப்போதும் ஆபத்தானது. இனிமே இப்படி பண்ணாத என்று அட்வைஸ் செய்து ஒரு வாரம் சாப்பிட மருந்து கொடுத்தார், அத்தோடு தடிப்பு வருவது நின்று போனது.

கே.கே ஹாஸ்பிடல் கொடுத்த பிரிஸ்கிரிப்சனில் ‘சாலேசன்’ என்று எழுதி இருந்தார்கள். அப்படி என்றால் என்ன என்று கூக்லியதில்

கண்ணில் வரும் கட்டி அப்படியே நின்று விட்டால் அதை நீக்கும் முறைக்கு சாலேசன் என்று பெயர். ஆனால் ஏன், எப்படி அது வருகின்றது என்பதெல்லாம் அதில் இல்லை.  அது சரி.. இப்போது தான் எந்த டாக்டரும் ‘நோய் நாடுவதும் இல்லை’.. ‘நோய் முதல் நாடுவதும் இல்லையே’ நேரடியாக  ‘அது தணிக்கும் வாய் நாடுவதும்’ அடுத்து நம் பர்ஸ் வெய்ட் நாடுவதும் தானே நடக்கின்றது.

மேல் இமையில் கீறினால் தழும்பாகத் தெரியும் என்பதால் உள் பக்கமாக கீறி எடுப்பார்களாம். கட்டி வராமல் தடுக்க

உடம்பு சூடு ஏறினால் என்னை தேய்த்து குளிக்கலாம்,

முகம் அடிக்கடி கழுவலாம்..

வெளியே டூ வீலரில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மெட் போட்டுச் செல்லலாம்

கோயிலில் கண் மலர் வாங்கிப் போட்டு கடவுளை வேண்டலாம்.

மேலே சொன்னவற்றை எல்லாம் செய்பவர்களுக்கு கண்ணில் கட்டி வராது என்று சொல்ல முடியாது. ஏனெனில் நீங்கள் போகும் அதே கோவிலுக்கு டாக்டர் கவிதா லெட்சுமியும் வரலாம், வேண்டுதலும் வைக்கலாம்.

எட்டு வருடத்திற்கு முன்னால் இந்தக் கட்டியை எடுக்கும் போது வலிக்கவும் இல்லை. சீக்கிரமாக குணமாகவும் செய்தது. இந்த முறை அதிகமாக வலித்ததற்கு காரணம்  எனக்கு வயசானதாலும் இருக்கலாம்.. கவிதாவிற்கு வயதானதாலும் இருக்கலாம்...