ஆரம்பப் பள்ளியின் வாத்தியார், தலைமை ஆசிரியர் எல்லாமும் சுப்பையா வாத்தியார் மட்டும் தான் . ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை இருந்த வா.வே.சுப்ரமணி அய்யர் தொடக்கப் பள்ளி என்பது ஒரே ஒரு நீளமான கூடத்தில் கோடு போட்டு வகுப்புகள் பிரிக்கப்பட்ட பள்ளி. எங்களுக்கு எல்லாம் இரண்டாம் வகுப்பு போரடித்தால் மூன்றாம் வகுப்பில் அமர்ந்து பாடம் படிக்கும் வசதி (?) இருந்தது. சுப்பையா வாத்தியார் காலையில் எட்டு மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்து விடுவார். அவர் காலையில் தூங்கி எழுந்தவுடன் வீட்டில் இருந்து கிளம்பி விடுவார் என்றும் வரும் வழியில் அவரின் காடு வயல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, பல் துலக்கி கிணற்றில் குளித்து விட்டு வேட்டியை காயப் போட்டுக் கொண்டே பள்ளிக்கு வந்து விடுவார் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். குளிப்பதற்கு மறக்காத அவர் சில நாட்கள் பல் துலக்க மறந்து விடுவார் போல.
சுப்பய்யா வாத்தியாரின் ஸ்பெசாலிட்டி மாணவர்களை அவர்களின் அப்பா பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது. உதாரணமாக குண்டு செந்திலை 'டேய் பஞ்சவர்ணம் பெத்த பாலகனே' என்று கூப்பிடுவார். காரணம் நிறைய மாணவர்களின் அப்பாக்களுக்கும் அவர் தானே கிளாஸ் டீச்சர் இல்லை ஸ்கூல் டீச்சர்.
பன்னிரண்டு மணிக்கு ரேடியோவில் மாணவர்களுக்கு என அரை மணி நேர நிகழ்ச்சி உண்டு. அதற்கு முன்பு வரும் சங்கு ஊதுவது போன்ற மியூசிக் கேட்டது இன்னமும் ஞாபகம் இருக்கின்றது. அந்த ரேடியோ அவரின் சொந்த ரேடியோ. அது போக பள்ளிக்கு என்று ஒரே ஒரு டைம் பீஸ் கடிகாரம் இருந்தது. கீ கொடுத்தால் ஓடும் பச்சை ரெடியம் வைத்த முட்கள் கொண்ட அலாரம் டைம் பீஸ்.
சுப்பையா வாத்தியார் டிச்டேசன் வைப்பதில் கில்லாடி. தமிழ் உச்சரிப்பு சரியாக வரவில்லை என்றால் திட்டி உதாரண வார்தைகள் சொல்லி உச்சரிப்பு சரியாக வரும் வரை விட மாட்டார். ஒழுங்காக பள்ளிக்கு வராத மாணவர்களை அவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் பேசி பள்ளிக்கு வர வைப்பார். அடம் பிடிக்கும் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு மாணவர்களை ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களை வைத்து தூக்கி வந்ததும் உண்டு.
மூன்றாம் வகுப்பில் படிக்கும் போது படிப்பு போரடிக்க மாடு மேய்க்கச் சென்று விட்டேன். அந்த வருடத்தில் முப்பது நாட்கள் கூட பள்ளிக்குச் செல்லவில்லை. என்னையும் இப்படித் தான் தூக்கிச் சென்றார்கள். அந்த வருடம் நான் மட்டும் பெயில். இந்த வருஷம் இவன் சரியா பள்ளியோடம் வரலைய்யா.. அதனால இந்த வருசமும் மூணாப்புலயே போடுங்க.. என்று அப்பா சொன்னார். இல்ல கிட்டு பையன் அழுவான்.. விடு இந்த வருஷம் ஒழுங்கா பள்ளிக்கு வருவான், நான் பாத்துக்கிடுறேன் என்று வாத்தியார் சொல்லியும் கூட அப்பா பிடிவாதமாக பெயில் போடச் சொன்னார்.
பள்ளி வாழ்க்கையில் அடி வாங்குவது எல்லாம் அன்றாட நிகழ்ச்சி. அடிப்பதற்கு என்றே தும்பை செடி குச்சிகளை ஒடித்து வைத்திருப்போம். சேட்டை செய்த அல்லது நன்றாகப் படிக்காத மாணவர்களை குனிய வைத்து தொடை மற்றும் ‘பின்புறத்தில்’ அடிப்பார். இதற்கெல்லாம் பெற்றோரோ அல்லது வேறு யாரும் வந்தோ சுப்பய்யா வாத்தியாரிடம் ‘ஏன் அடித்தீர்கள்’ என்று கேட்டதே கிடையாது. ஆனால் ‘ ரொம்ப சேட்டை பண்றான் இவன கொஞ்சம் கண்டிச்சி அனுப்புங்க அய்யா’ என்று இழுத்து வந்து அடிக்க விட்ட அப்பாவி பெற்றோர்கள் உண்டு. சுப்பையா வாத்தியாரின் கை எழுத்து மிக நன்றாக இருக்கும். எழுதும் போதும் , மாணவர்களை அடிக்கும் போதும் நாக்கின் நுனியை கடித்துக்கொள்வார்.
சுப்பையா வாத்தியாரின் மனைவி கல்யாணமான கொஞ்ச நாட்களில் இறந்து விட்டார்கள். குழந்தை இல்லாத காரனத்தால் அவருக்கு மறுமணம் செய்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் ஊருக்கு ஒரு நர்ஸ் அம்மா வந்தார்கள். அவரின் பேத்தி சுதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒன்றாம் வகுப்பில் சேர்த்திருந்தார்கள். கொஞ்சம் பப்ளியாக இருக்கும்.
சுப்பையா வாத்தியார் மதிய நேரங்களில் வட்டமாக நிற்க வைத்து அவர் நடுவில் உட்கார்ந்து கொண்டு எங்களை வெளிப்புறமாக பார்த்தபடி புத்தகத்தை படிக்கச் சொல்வார். யாராவது ஒரு மாணவனை அழைத்து அந்த சுதா புள்ளைய கூட்டிட்டு வாடா என்று அனுப்பி விடுவார். அந்த சின்ன புள்ளையின் காதைப் பிடித்து அருகில் இழுத்து கவட்டுக்கள் வைத்துக் கொண்டு சேட்டை பண்ணுவியா என்று கேட்டபடி அவரின் இரண்டு கால்களையும் பிண்ணிக் கொள்வார். ரெங்கராஜன் தான் சொல்லுவான், மாப்ள இந்த ஆளு கண்டிக்குற அழக பாத்தியாடா என்று.
அப்பு தாத்தாவை எடுத்துச் செல்லும் போது தான் சுப்பய்யா வாத்தியாரைப் பார்த்தேன். இன்னமும் சின்ன புள்ளைகளை கவட்டுக்கு இடையில் வைத்து கண்டிக்கும் பழக்கம் இருக்கா சார் என்று கேட்டது அவருக்குப் புரியவில்லை. காது கேட்காமல் இருந்திருக்கலாம் அல்லது கேட்காது மாதிரியும் இருந்திருக்கலாம்.
மோகன் வாத்தியார் எங்களுக்கு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சொல்லிக் கொடுத்த வாத்தியார். மோகன் சாருக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. மோகன் சார் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் என்றும் அவரின் அப்பா மாசா மாசம் அவருக்கு செலவுக்கு என தனியாக பணம் அனுப்புகின்றார் எனவும் கேள்விப் பட்டிருக்கிறேன். எழாவது எட்டாவது வகுப்பில் படிக்கும் சில பெண்களுக்கு மட்டும் ‘அன்புடன் மோகன்’ என்ற அவரின் கையெழுத்துடன் நோட்ஸ் வாங்கித் தருவார். அந்த மாணவிகளை மட்டும் மற்ற மாணவர்கள் சற்று பயம் கலந்த மரியாதையுடன் பார்ப்பது வழக்கம்.
மனிதன் ஒரு துளிப் பொழுதையும் வீணாகக் கழிக்கக் கூடாது என்று எடுத்துக் காட்டாக வாழ்ந்த பெரியசாமி சாரைப் பற்றி நிறைய எழுதலாம். சிமென்ட் கலர் பேன்ட்டும், வெள்ளை சட்டையும் பெரியசாமி சாரின் பள்ளி அடையாளம். விவசாயம் பார்த்தார், டைலர் வேலை தெரியும், அவரின் அம்மா பள்ளிக்கு எதிரே சிறிய கடை வைத்திருந்தார். அந்தக் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவது இப்படி எல்லா வேலைகளையும் செய்யும் இவர் பாடம் எடுப்பதிலும் குறை வைப்பதில்லை. ஏ கிளாஸ் வாத்தியார் என எங்களால் அடையாளம் காணப்பட்ட இவர் காதைப் பிடித்து கிள்ளினால் அன்று முழுவதும் வலி இருக்கும்.
சடாச்சரம் அய்யாவைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன். பாடம் சொல்லித் தருவதை வேலையாக அல்ல, கோவிலில் கண் மூடித் தவம் செய்வதைப் போல செய்தவர். படிப்பை விட ஒழுக்கம் முக்கியம் என்பதனை வாழ்ந்து காட்டியவர். இவரின் மகன் மரகத மணி எனக்கு மூன்றாம் வகுப்பில் பாடம் எடுத்த வாத்தியார். இவரின் கடைசிப் பையன் பாலசுப்ரமணி எனக்கு கிளாஸ்மேட். மரகத மணி சார் நன்றாகக் கதை சொல்வார். ஏழு மலை ஏழு கடல் தாண்டி கிளியிடம் இருந்த ராட்சசன் உயிர் கதைகள் மற்றும் பல சுவாரஸ்யமான கதைகள் இப்போது ஞாபகத்தில் இல்லை.. ஆனால் தரையில் வட்டமாக நாங்கள் அமர்ந்திருக்க ஸ்டீல் சேர் போட்டு ( உட்காரும் இடத்தின் வலது ஓரம் துரு பிடித்திருக்கும்) சார் உட்கார்ந்து கதை சொன்னது அப்படியே காட்சி பிம்பமாய் ஞாபகம் இருக்கின்றது. ( சாருக்கு ஒரு பல் மட்டும் கட்டப்பட்ட பல்)
பொருளாதாரத்தை மட்டுமே அளவுகோலாக வைத்துப் பார்க்கப்படும் இன்றைய சமூகத்தில் ஆசிரியப் பணி சற்று அலுப்பு ஊட்டுவதாக இருக்கலாம். ஆனால் நல்ல சமூகத்திற்கான பங்களிப்பு அவர்களிடம் தான் இருக்கின்றது. மற்ற வேலைகள் எல்லாம் ஒரு ஆள் இல்லை என்றால் இன்னொரு ஆள் பார்த்து விட முடியும். ஆனால் ஒரு மாணவனின் மூளைக்குள் புகுந்து அவனுக்கு புரிய வைக்கும் விதத்தில் சொல்லித் தரும் வித்தை ஒரு அர்ப்பணிப்பு உள்ள ஆசிரியனுக்கே முடியும்.
அப்படியான நல்லாசிரியர்களுக்காக
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஷ்வரக – குரு சாட்சாத்
பரப் பிரம்ஹா தஸ்மே ஸ்ரீ குருவே நமக..
