டெசோ மாநாடு – விளைவுகள்
நேற்று கிரிக்கெட்
மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் தெரிந்தது. நம் முத்தமிழ் வித்தவர்,
தமிழனத் தலைவர் டாக்டர் கொலைஞர் அவர்கள் நடாத்திய டெசோ மாநாட்டின் சாதனை
என்னவென்று. பின்னர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் ‘அப்படி போடு போடு கண்ணாலே..’ என்ற
தமிழிசைப் பாடல் ஒலித்ததே..
இது நம் முத்தமிழ்
வித்தவரின் தலை சிறந்த சாதனை அல்லவா... நம் கொலஞரின் வேண்டுகோளுக்கு இணங்க இது
போன்ற இலக்கிய கருத்தாழமிக்க பாடல்களைத் தொடர்ந்து ஒலி பரப்ப மஹிந்தா முடிவு
செய்துள்ளார். அப்போது தானே கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்கும் ஈழத் தமிழனின் காசையும்
புடுங்க முடியும்.
ஆனால் தமிழனத்தின்
தலைவராக, எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கையாக நாங்கள் உங்களையே நம்பிக்
கொண்டிருந்தோம் தலைவரே... உங்கள் வாயிலிருந்து அந்தப் பொன்னான, கல்வெட்டில் எழுதி
வைக்க வேண்டிய வாசகமான ‘ மழை விட்டு விட்டது. தூவானம் தொடர்கின்றது’ என்று பதில்
சொன்னீர்களே அது வரை. அதுவும் எதற்காகச்
சொன்னீர்கள்.. ஒரு நிருபர் கேட்கிறார்.. தலைவரே, இலங்கையில் போர் நின்று
விட்டதாகச் சொன்னீர்களே.. .ஆனால் இப்போதும் குண்டு வீச்சில் பல பேர் இறந்து
போனதாகத் தெரிகின்றதே என்ற கேள்விக்குத் தான் உங்கள் திருவாய் மலர்ந்து மேலே சொன்ன
உவமானத்தை சொன்னீர்கள். இந்நேரம் உங்கள் ஆட்சியாக இருந்தார், ஒரு பாராட்டு விழா
எடுத்து, இருபதாம் நூற்றாண்டின் உமறுப் புலவர் என பட்டம் கொடுத்திருப்போம்.
தமிழன் கொத்து
கொத்தாய் சாவது உங்களுக்கு மழை பெய்வது போலவும், கொஞ்சம் கொஞ்சமாகச் சாவது தூவானமாகவும்
தெரிகின்றதே.. என்னே உங்களின் இலக்கிய ரசனை.. நீங்கள் முத்தமிழ் வித்தவர் மட்டும்
அல்ல தமிழனையும் டெல்லிக்கு வித்தவர்..
டெசோ மாநாடு நடத்த
முழுத் தகுதி வாய்த்தவர் நீங்கள் தான் அய்யா.. நீங்கள் தான் எழவு வீட்டில் அரசியல்
நடத்துவதை கண்ணதாசன் காலம் முதல் கடைப் பிடிக்கிறீர்களே...
கண்ணதாசன் இறந்து
விட்டார்.. அவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற நீங்கள் ‘ யார் அழைத்தாலும் சென்று
விடுவாயே கண்ணதாசா.. அழைத்தது எமன் என்று தெரியாமல் அவருடன் சென்று விட்டாயா என்று கண்ணதாசன் அடிக்கடி கட்சி மாறியதை குத்திக்
காட்டி குதுகூலப்பட்டவர் ஆச்சே.. உங்களையும் நம்பி கடைசி வரை உங்களுடன் பேச்சு
வார்த்தை நடத்திய எம் சொந்தகளுக்கு இது தெரியாமல் போய் விட்டதே...
இப்போதும் அதே
ஓலத்துடன் ‘ சகோதரச் சண்டை தான் தோல்விக்குக் காரணம்’ என்று ஏதோ புதிதாகக் கண்டு
பிடித்தது போல முழங்கி இருக்கிறீர். ஒரு வேளை உங்கள் வீட்டில் நடக்கும் சகோதரச்
சண்டையை சொல்ல வருகின்றீர்களா.. அதற்கு எதுக்கு அய்யா மேடை? அது சரி உங்கள்
வீட்டில் நீங்கள் பேசுவதை யார் கேட்கப் போகிறார்கள். அதனால் தானே மேடை போட்டுச்
சொல்கின்றீர்கள்.
அடுத்து உங்கள் ஆட்சி
அமைந்தால் ஈழம் என்ற பெயரில் டாஸ்மாக் சரக்கு ஒன்றுக்கு பேர் வைக்கலாம் தலைவரே.. ஈழம்
ஈழம் என்று பேசும் ஈனத் தமிழர்களாகிய நாங்கள் அதைக் குடித்து விட்டு ‘தலைவன் வால்க’
என்று கோஷமிட்டு சந்தோசப் படுவோம்.
உங்களுக்குத் தரலாம் ‘ஈழம்
கொன்றான்’ என்ற பட்டம். ஏனென்றால் தமிழனுக்கு ‘எல்லாம்’ செய்தவர் நீங்கள் தான்
அய்யா... இன்னுமா அய்யா உங்களுக்கு பணம் ஆசை பதவி ஆசை விடவில்லை? மரணம் வரை எப்படி
மனம் உறுத்தாமல் வாழ முடிகின்றது உங்களால்..
அது சரி.. அதெல்லாம்
மனசாட்சி உள்ளவர்களுக்குத் தானே.. ராபின்சன் பூங்காவில் நடந்த கூட்டத்தில் மழையில்
நனைந்தபடி உரையாற்றும் போதே மனசாட்சியை அந்த மழையில் கரைத்து விட்டவர் தானே
நீங்கள்.
உங்களின் கல்லறையில் எழுதுவதற்குப்
பொருத்தமான வாசகம் இதோ..
மழை இங்கே
உறங்குகிறது... தூவானங்களை தொடரவிட்டு விட்டு...

