பிசினஸ் என்பது வியாபாரம். வாங்கிய விலைக்கும் விற்கும் விலைக்கும் இடையில் இருப்பது இலாபம் என்று சொல்லலாம். ஆனால் உண்மையில் அங்கிருப்பது ஒரு பொய். பையிங் ரேட்டே 50 டாலர் சார் என்பது முதல் சர்விஸ் சார்ஜ் தவிர மற்றதெல்லாம் நெட் டூ நெட் ரேட் சார் என்பது வரை ஒரு நாளில் எவ்வளவு பொய்கள். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்பார்கள். ஆனால் பொய் சொல்லித் தான் போஜனம் செய்ய விதித்திருக்கிறது.
இங்கே வாங்கிய விலை சொல்லி விற்பதுமில்லை. விற்கும் விலை சொல்லி வாங்குவதுமில்லை. இப்ப தான் பறிச்ச தோட்டத்து காய் என்பது முதல் இன்னைக்கு மட்டும் 20% டிஸ்க்கவுண்ட் என்பது வரை தினமும் பொய்களை சொல்லியும் கேட்டும்...இந்த வேலையை தான் ஆங்கிலத்தில் பிஸினெஸ் என்று பெருமையாய் சொல்லிக் கொள்கிறோம். பண்டமாற்று முறையிலிருந்து 'விற்றல் வாங்குதல் முறைக்கு' நம்மை இட்டுச் செல்வதற்காக கண்டுபிடிக்கப் பட்டதே நாணயம்.
ஆனால் இந்த முறைக்கு நாணயம் என்று பெயர் வைத்தவன் பெருஞ்சிரிப்பு ஒன்றை சிரித்திருக்கக் கூடும். நாணயம் என்ற ஒன்றை - இனி எவரும் கடைப்பிடிக்க முடியாத முறை ஒன்றை அறிமுகப்படுத்தி அதற்கு 'நாணயம்' என்று பெயர் வைத்தவன் சிரிக்காமல் என்ன செய்வான். கருப்பாய் இருக்கும் ஒருவனுக்கு வெள்ளைச்சாமி என்று பெயர் வைப்பதைப் போல இது ஒரு முரண்.
பல் வலி வந்த ஒரு நாள் இப்படியெல்லாம் சிந்திக்க வைத்தது. எந்த பொய் சொன்னதால் இந்த வலி வந்திருக்கும் என பல வித யோசனைகள். உடம்பிற்கு எது வந்தாலும் அதனை பாவ புண்ணிய காரியங்களோடு சம்பந்தப்படுத்தும் இந்த நடுத்தர வர்க்க மனசு இப்படித் தான் யோசிக்க வைத்தது. அது சரி. பொய் சொன்னதெற்கெல்லாம் பல் வலி வந்தால் இந்நேரம் மொத்தப் பல்லும் விழுந்திருக்க வேண்டும் என இன்னொரு மனசு அதனை ஆறுதல் படுத்தியது.
எதனால பாப்பா இப்பிடி இன்பெக்ஷன் ஆச்சு என்றதற்கு மகள் சொன்னது.. வயசாகுதுல சித்தப்பா. இந்த ஒற்றை வார்த்தை இனி பெறுவன வற்றிலிருந்த்து விடுவன வற்றை நோக்கி செல்ல வேண்டியதன் பொருளுணர்த்தியது. அன்பும் ஆதரவுமான வார்த்தைகளைச் சொல்லும் மகள் கையால் பல் பிடுங்க பாக்கியம் செய்திருக்க வேண்டும். என்ன ஒரு வலி! உடலில் இருந்து உயிர் பிரிந்தால் இப்படித் தான் வலிக்கும் போல அப்பிடி ஒரு வலி. பார்த்துப் பார்த்து மகள் பிடுங்கியதே இப்படி வலிக்கும் என்றால் மற்றவர் கையால் பிடுங்கியிருந்தால் பெருங்குரலில் அழுத்திருப்பேன். என்ன சித்தப்பா ரொம்ப வலிச்சிருச்சா என்ற மகளிடம் சொன்னேன். சித்தப்பாவால வலி தாங்க முடியாதுடா என..
என் ஏகலைவன் சித்தப்பா புண்ணியத்தில் சென்னை வந்த நாள் முதல் இந்நாள் வரை வாழ்க்கை பெரும் வலி ஏதுமின்றி ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த பல் வலியும் இனி வராமல் பார்த்திட இறைவன் உதவுவாராக. இறுதியாக, நோய் நாடி நோய் முதல் நாடி மருத்துவம் பார்க்கும் என் மகளுக்கு எந்தக் குறையும் இல்லாத வாழ்க்கை வளமாக அமையட்டும்.


