Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

August 2, 2012

சுதந்திர தின விழா - பேச்சுப் போட்டி


பார்வதி நகர் நலச் சங்கத் தலைவர் அவர்களே, இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற வந்திருக்கும் பெரியோர்களே, சுதந்திர தின விழாவை, இது எங்கள் சொந்த விழா என்ற உணர்வுடன் கலந்து கொள்ள வந்துள்ள பார்வதி நகர் வாழ் மக்களே, மாணவ சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்சங்கம் எப்போதும் வளர்ந்து கொன்டே வருகின்றது, எங்கேயும் தேங்கி நிற்கவில்லை என்பதனை நிரூபிக்கும் வகையிலும், நாங்கள் வயதானவர்களாக இருந்தாலும், நவீன யுகத்தின் வளர்ச்சியையும், அது தரும் பக்க விளைவுகளையும் கண்காணித்துக் கொண்டேதான் இருக்கின்றோம் என்று மக்களுக்குச் சொல்லும் வகையுலுமாக பேச்சுப் போட்டியின் தலைப்பை தீர்மானித்துக் கொடுத்த வணங்கத்தக்க இச்சங்கத்திற்கு எனது இரண்டாவது வணக்கம்.

கவச குண்டலத்தோடு கர்ணன் பிறந்திருக்கலாம். அனால் நம்மில் வாழும் சில மனிதர்களும் அவ்வாறு ஒன்றுடன் தான் பிறந்தார்களோ என்று அதிசயிக்கும் வகையில் எப்போதும் கையிலோ அல்லது பையிலோ வைத்திருக்கும் ஒரு அறிவியல் கண்டு பிடிப்பான செல்போனைப் பற்றியும் அதன் நன்மை தீமைகளையும் பற்றியும் உங்களிடையே பேச வந்திருக்கிறேன்.

தகவல் தொடர்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியில் மிக முக்கியமானது கை பேசி என்றும் செல் பேசி என்றும் அழைக்கப் படும் செல்போன் ஆகும். உலகம் ஒரு சின்ன கிராமம் தான், எவரும் எவருடனும் சுலபமாகத் தொடர்பு கொள்ளலாம் என்ற உணர்வை செல்போன் தான் உருவாக்கியது. அது இன்று அதன் அடுத்த கட்ட வளர்ச்சியான காணொளியுடன் பேசும் வசதியையும் எட்டி விட்டது.

இப்போதெல்லாம் தனியாகப் பயணம் செய்யவோ, அல்லது அறிமுகம் இல்லாத இடங்களுக்குச் செல்லவோ யாரும் பயப்படுவதில்லை, ஒரு செல்போன் துணைக்கு இருந்தால் போதும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எப்படிப் போக வேண்டும், பஸ்ஸில் சென்றால் எந்த வழியாகச் செல்லலாம், ரயிலில் என்றால் எவ்வளவு நேரம் ஆகும், என்பதுடன் வழியில் எந்த எந்த இடங்களில் திரும்ப வேண்டும், உணவு விடுதிகள், எரிபொருள் நிரப்பும் இடங்கள் எங்கெங்கு உள்ளன  என்பததை அடையாளக் குறியீட்டோடு சொல்லும் வசதி உள்ள சேவைகளைக் கொண்ட செல்போன்கள் வந்து விட்டன.

பக்கத்தில் இருப்பவரிடம் கேட்கவோ, அல்லது டீக் கடையில் விசாரிக்கவோ அவசியம் இல்லை.

பக்தி, இலக்கியம், பிடித்த பாட்டு, குறுந்தகவல்கள் பரிமாற்றம் என அளப்பரிய சேவைகளை செல்போன் அளிக்கின்றது. கிராமத்தில் இருக்கும் பெற்றோருடன் சுலபமாகத் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்க முடிகிறது. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் கணவர்களுக்கு, என்னென்ன வாங்கி வர வேண்டும் என்று மனைவிகள் கட்டளை இட முடிகிறது.

போன் பாங்கிங் மூலம், வங்கிக்குச் சென்றுதான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் நினைத்த நேரத்தில், தேவையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. வாழ்வின் முக்கியமான தருணங்களை கேமரா போன் மூலம் பதிவு செய்து, அதனையும் விரும்பும் நபர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகின்றது.  பொருளாதாரத் தேவைக்காக எங்கோ வெளி நாட்டில் வேலை செய்யும் ஒரு தகப்பனுக்கு, தன் மகனோ மகளோ முதன் முதலாகப் பேசும் ‘அம்மா’ என்ற வார்த்தையைக் கேட்க முடிவதுடன் பார்க்கவும் வகை செய்கின்றதே. சமூக வலைத்தளங்களின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க முடிகின்றதே. இன்னும் ஏராளமான நன்மைகளைச் செய்யும் செல்போன் இன்று ஒரு அவசியமான, அத்தியாவசியப் பொருள் ஆகி விட்டது.

எந்த அறிவியல் சாதனமும் ஆக்கத்திற்குப் பயன்பட கண்டுபிடிக்கப் பட்டாலும், மனிதன் தனக்கே உரிய பேராசைக் குணத்தால் அதை அழிவுக்குப் பயன் படுத்தவும் யோசிக்கிறான்.

செல்போன் ஆனது அதனைப்  பயன் படுத்தும் விதத்தால் சற்று தீமைகளையும் விளைவிக்கின்றது.

விளையாட்டாய் படம் எடுத்து அது தற்கொலையில் முடிந்த சில விபரீதங்களையும் செல்போன் ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும் நாம் அன்றைய நாளில் எதாவது ஒரு கண்காணிப்புக் கேமராவிலோ, அல்லது எவர் செல்போனிலோ பதியப் படும் வாய்ப்பு இருக்கின்றது. இதில் நாம் தொலைப்பது நமது தனி மனித சுதந்திரத்தை.

செல்போன் வைத்திருப்பவர் சிறிது நேரம் யாரும் அழைக்க வில்லை என்றால் தனது சாதனம் பழுதாகி விட்டதோ என்று பயப்படும் அளவிற்கு செல்போன் நம்மை அடிமை ஆக்கி வைத்திருக்கிறது. கடவுச் சொற்கள், வங்கிக் கணக்கு எண்கள், சமையல் எரிவாயு எண் என எல்லாவற்றையும் செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பவனின் கை பேசி தொலைந்த நாளில் தெரிகிறது அவனின் ஞாபக சக்தி.

எழு மலை தாண்டி, எழு கடல் தாண்டி ஒரு கிளியிடம் இருக்கின்ற அரக்கனின் உயிர் என்று கதை கேட்டிருப்பேமே, அது போல இப்போது வாழும் மனிதர்களில் சில பேரின் உயிர் அவர்கள் பயன் படுத்தும் செல்போனில் தான் இருகின்றது எனபது போல வாழ்க்கை முறை அமைந்து இருக்கின்றது. மருத்துவமனையில் நோயாளியைப் பார்க்கச் செல்லும் பார்வையாளனின் கை பேசியில் இருந்து ஒலிக்கிறது, ஸ்டார்ட் த மியூசிக் என்று வரும் கவுண்டமணியின் காமெடி.

இடம், பொருள் தெரியாமல் மருத்துவமனை, வங்கி, பள்ளிக் கூடம், கோவில், திரைக் கூடம் என எங்கும் பலத்த சத்தத்துடன் பேசுகின்றார்கள். சாலையில் நடக்கும் போதும், இரயில் இருப்புப் பாதை கடக்கும் போதும் பயன்படுத்தும் செல்போனால் நடக்கும் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.  

நவீன கருவிகளில் மனிதர்கள் தொலைந்து விட்டதால் அவர்கள் இழந்த இழப்புகள் ஏராளம். வளமான வாழ்வு நல்ல நட்பு, குழந்தைகளின் பாசம், நல்லறிவு, நற்பண்புகள் இவ்வாறாக மனிதர்கள் தொலைத்த நன்மைகள் பல. இவற்றுள் மென்மையும் ஒன்று.

இக்காலத்தில் அதிகமானோர் மென்மை எனும் குணத்தை இழந்தவர்களாக, நளினத்தை தவறவிட்டவர்களாக இருக்கின்றார்கள். எப்போதும் பரபரவென்று இருப்பது, குழந்தைகள் உட்பட யாரைப்பார்த்தாலும் அவர்கள் மேல் எரிந்து விழுவது, சிறிய விஷயத்திற்கும் கடுமையாக நடந்து கொள்வது போன்ற அணுகுமுறைகளையே பெரும்பாலானோர் கடைபிடிக்கின்றனர். மொத்தத்தில் மென்மை எனும் பொன்னை, புதையலை,பொக்கிஷத்தை புறக்கணித்தவர்களாக தங்களுடைய வாழ்வை ஆக்கிக் கொண்டனர்.

செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள்.

"வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு, செல்போன் டவரின் பவரைக் கூட்டிக்கொண்டே போகின்றன. ஏற்கெனவே குப்பை, தூசு போன்றவற்றால், மாசு அடைந்துள்ள காற்று, தற்போது இந்த டவர்களின் கதிர்வீச்சுகளால் மேலும் மோசமாகிவிட்டது. "இந்த கதிர்வீச்சுகளால் கேன்சர் போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டுமே அவர்களின் டவர்களில் குறிப்பிட்ட அளவு சிக்னல்களை வெளியிடுகின்றனர். ஆனால், தனியார் நிறுவனங்களோ, 'இந்தப் பகுதியில் சிக்னல் குறைவாக உள்ளது' என்று வாடிக்கையாளர் புகார் அளித்தால், அடுத்த நாளே சிக்னல் பவரை உயர்த்துகின்றனர். செல்போன் டவரில் இருந்து வெளிப்படும் சிக்னலின் அளவு 600 மில்லி வாட்ஸ் என்று இருக்க வேண்டும். ஆனால், 4,000 மில்லி வாட்ஸ் வரைக்கும் இவர்கள் சிக்னல்களை அதிகப்படுத்தி விடுகிறார்கள்! - இது தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் எடுத்த சுற்றுச்சூழல் குறித்த சர்வேயின் சாராம்சம்!.

சிட்டுக் குருவிகள் அழிவுக்கு செல்போன் டவர் கோபுரத்தில் இருந்து வெளிவரும் அதிர்வுகளே காரணம் என்று ஒரு சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாக செல்போன் பயன் படுத்தும் விதத்தில் உண்டாகும் தீமைகள் இருந்தாலும் இதன் பயன்களைக் கணக்கில் கொண்டால், இவை எல்லாம் களையக் கூடியவை தான்.

கூடுமானவரை அருகில் இருக்கும் நபருக்கு தொந்தரவு செய்யாத வகையில் பேசுங்கள். காலர் ட்யூன் எனப்படும் அழைப்பு ஒலியை மிகச் சத்தமாக வைக்காதீர்கள். கூடுமானவரை மருத்துவமனைகள், வழிபாட்டுக் கூடங்கள், திரைப்பட அரங்குகளில் செல்போனில் பேசுவதைத் தவிருங்கள்.

அறிவியல் சாதனங்கள் கண்டு பிடிக்கப் பட்டதெல்லாம் மனிதனின் வசதிக்காகத் தான். அது நம்மை அடிமை ஆக்கி விடாமல் பார்த்துக் கொள்வது நமது கைகளில் தான் இருக்கின்றது.

எனவே கூப்பிடும் தொலைவில் இருப்பவரை செல்போனில் கூப்பிடாதீர்கள்.

நேரடியான சந்திப்பு மனிதம் வளர்க்கும், அன்பை அதிகரிக்கும், ஆயுளைப் பெருக்கும் என்று கூறி வாய்ப்பு தந்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

நன்றி .... வணக்கம்....