December 26, 2012

அப்பு தாத்தா



‘அங்கே இடி முழங்குது, கருப்பசாமி தங்க கலசம் மிண்ணுது’, என்ற பாடலும் ‘மொச்சக்கொட்ட பல்லழகி’ பாடலும் ‘எட்மன்’ தாத்தாவை ஞாபகப் படுத்தும். எங்களுக்கு எல்லாம் எட்மன் தாத்தா.. அப்பா பெரியப்பாவுக்கு எல்லாம் ‘அப்பு’, ஊருக்கு அவர் ‘முனுசு’. சுருக்கமாகச் சொன்னால் அழகாபுரியின் அடையாளங்களில் ‘ஹெட்மென்’ தாத்தா என்ற முனுசு முக்கியமானவர்.   

தாத்தா வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்ந்தவர். எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாத, என்ன சரவணா எப்ப வந்த... நல்லா இருக்கல்ல என்று ஒரு சிரிப்போடு கேட்கும் எட்மன் தாத்தாவின் சிரிப்பு அவருக்கு மட்டுமே உரிய தனி அடையாளம். என் அப்பாவிற்கும் தாத்தாவிற்கும் நிறைய ஒற்றுமைகள். இருவரும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை தவிற வேறு உடை அணியாதவர்கள். நிறைய எண்ணை தேய்த்து படிய வாரிய தலை. கருப்பு முகத்தில் வெளுப்பாக தெரியுமாறு பூசிய பவுடர் பூச்சு என நிறைய விசயங்கள் இருவருக்கும் பொதுவானவை.

ஒட்டு வீடு என ஊர்க்காரர்களால் அடையாளப்படுத்தப்படும் எட்மன் தாத்தாவின் சொந்தப் பெயர்  கோட்டைச்சாமி. டேப் ரெகார்டரில் பாட்டுப் போட்டு  ஏகாந்தமாய் தனிமையில் ஒரு கை விரல்களை மடக்கி இன்னொரு கையினில் தாளம் போட்டு ஜாலியாக இருந்த அப்பு தாத்தாவை எனக்கு மட்டுமே தெரியும். தாத்தா வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் இளையராஜா இருப்பார். அதுவும் சவுண்ட் அதிகமாக வைத்து அலற விட்டு பாட்டு கேட்பதில் அவருக்கு அலாதி சுகம்.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழத் தெரிந்தவர்கள் ஹெட்மேன் தாத்தா. ஹெட்மேன் தாத்தாவிற்கு இரண்டு மனைவிகள். இருவருமே ஏதோ ஒரு சீக்கு வந்தவர்கள் போலவே இருந்தார்கள். அதிலும் இரண்டாவதாக வந்த அப்பத்தா சிரித்தே பார்த்ததில்லை. காறிக்காறி துப்பிக் கொண்டே இருப்பார்கள். தாத்தாவிற்கு சொந்தமாக மதுரை வண்டியூரில் நாலைந்து வீடுகள் இருந்தன. அந்த வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார்.  அதில் ஒரு வீட்டில் தாத்தாவிற்கு ஒரு சின்ன வீடும் இருந்தது. வண்டியூர் வீட்டிற்கு தாத்தா அடிக்கடி போவதனால் அப்பத்தா சீக்காளி ஆனார்களா அல்லது சீக்காளி ஆனதால் தாத்தா வண்டியூருக்கு போனாரா என்று தெரியவில்லை.

முதல் பெண்டாட்டி இருக்கும் போதே தாத்தா இரண்டாவதாக ஒரு பெண்ணை மதுரையிலிருந்து கூட்டி வந்தார் எனவும் பெரிய தாத்தா (தாத்தாவின் அப்பா) சண்டை போட, எனக்கு சாப்பாடு போடுவீங்க தானே? அத போடுங்க நாங்க ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிட்டுகிறோம் என்று சொல்லி காதல் புரட்சி செய்தார் எனவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.  மாடியில் கொஞ்ச நாள் ‘வைத்திருந்து’ பின்னர் பஞ்சாயத்து பண்ணி அனுப்பி வைத்தார்கள் எனவும் அதற்கு பின்பு தான் இரண்டாவதாக ஒரு அப்பத்தாவை திருமணம் செய்து வைத்தார்கள் எனவும் செவிவழிக் கதை உண்டு.

ஊரில் வியாபாரத்திற்கு வரும் ஆட்களுக்கு எல்லாம் தாத்தாவின் திண்ணை தான் அடைக்கலம். திருவிழா நேரங்களில் ரேடியோ செட் கட்டுவதும், ‘தவலாம் பிள்ளை’ வைப்பதும் அவர் வீட்டில் தான். நாடகம் போடும் போது நடிகர்களுக்கு சாப்பாடு கூட தாத்தா வீட்டில் தான்.   

எங்களின் உறவுகளின் இல்லங்களில் நடக்கும் எல்லா விஷேசங்களிலும் தாத்தாவின் பெயர் இருக்கும். மாரியப்ப பிள்ளை, சோலைமலையா பிள்ளை என்று வரும் தத்தாமார்கள் வரிசையில் கோட்டைச்சாமித் தேவர் என்று வரும் அவர் பெயர் எங்களின் எங்கள் குடும்பங்களில் அவரின் பாசத்தை காண்பிக்கும். பெரும்பாலும் எல்லா விஷேசங்களிலும் அவர் தலை இருக்கும். என்ன சரவணா எப்படி இருக்க? என்னப்பா ஊரப் பக்கமே ஆளக் காணோம்! செவ்வாய்க்கு கூட வரல? என்று கேட்பார். (செவ்வாய் சாட்டுதல் என்பது எங்கள் ஊரில் நடக்கும் ஒரு வாரத் திருவிழா. ஒவ்வொரு வீட்டிலும் எல்லா சொந்தங்களும் வந்து கலந்து கொள்ளும் கலர்புல் திருவிழா)

எங்க தாத்தா வர்றது , நம்ம வேல அப்புடி,  என்ன பண்ணச் சொல்றீங்க என்று கேட்டதற்குத் தான் இப்படி சொன்னார். தாத்தாவெல்லாம் போய்ட்டேன்னு வச்சுக்க, வேல கீல அப்புடி இப்புடினு இருந்துராதீங்கப்பா! நம்ம செட்டு புல்லா வந்துடனும் என்ன? என்றார். நேற்று சொல்லியது போல இருக்கின்றது.

இந்தத் தாத்தா போலவே இன்னும் சில தாத்தாக்கள் மாமாக்கள் இருந்தார்கள். என்ன பேராண்டி இந்தப் பக்கம் என்று பார்க்கக் கூடாத இடத்தில் பார்த்தால் பதறிய படி கேட்கும் வீரணசாமி தாத்தா, பெட்டிக் கடை மாமா, இப்படியான வரிசையில் எல்லோரும் போய் சேர்ந்து விட கடைசியாக இருந்த தாத்தா ‘ஹெட்மென்’ தாத்தா மட்டுமே.

தாத்தாவின் வீடு தான் எங்கள் விடுமுறை நாட்களின் விளையாட்டுக் களம். அங்குதான் பல்லாங்குழி, ரம்மி, ஒளிஞ்சு விளையாடும் ‘கப் ஐஸ்’ விளையாட்டு என பகல் எல்லாம் தாத்தாவின் வீட்டிலும் மாடியிலும் கழியும்.  மேலே மாடியில் கூரை வேய்ந்த வீடு ஹெட் மேன் தாத்தா வீடு தான். இப்போது ஊருக்கு சாமி கும்பிட போன போது கூட சீட்டு விளையாண்டு, இரவு ரெண்டு கட்டிங் போட்டு தூங்கினோம். இந்த மாடியில் தான் முதன் முதலில் சீட்டு விளையாண்டோம். முதன் முதலில் திருட்டு தம் அடித்தோம். முதன் முதலில்...........

இப்படி நிறைய முதன் முதல்களை எங்களுக்கு கொடுத்தது தாத்தா வீடு தான். போதுமுப்பா, விட்டா எல்லாத்தியும் காலி பண்ணிடுவீங்க.. குடிக்க கொஞ்சம் மிச்சம் வைங்க! ஆளுங்க இருக்காங்க என்று ஒரு குடம் கள்ளை தனியாக ஒதுக்கி வைத்து எங்கள் சித்தப்பா, பெரியப்பாக்களை அப்புறப்படுத்தி, ‘ சரவணா தனியா ஒரு கொடம் துண்ட போட்டு மூடி வச்சுருக்கேன். இந்தா வடை, மொச்சை, நம்ம செட்டக் கூட்டிட்டு மேலே போங்க, ஆரும் வர மாட்டாங்க என்று எங்களுக்கு பாசத்தை காட்டுபவர். எப்பவாவது மெட்ராஸ் வந்தால் ஒரு சில நேரம் எங்கள் வீட்டில் தங்குவார். அப்போது நாங்களும் பேச்சுலர் ஆகத் தான் இருந்தோம். தாத்தா ஏதாவது வாங்கிட்டு வரவா? என்றால் சும்மா ஒரு குவார்ட்டர் போதும் சரவணா.. தாத்தா இப்போவெல்லாம் நெறையா குடிக்கிறது இல்ல என்பார். ஒரு ஆப் பாட்டிலை கொடுத்தால், நீயும் ஒரு கிளாஸ் எடுத்துட்டு வா சரவணா என்று சொல்லும் தாத்தா இரண்டு ரவுண்டு போனவுடன் சொல்லும் கதைகளெல்லாம் ‘ராஜு முருகன்’ கதைகள் தான்.  

தாத்தா என்று வாய் நிறைய கூப்பிட இனி அழகாபுரியில் அவர் இல்லை. எல்லாரையும் விட சம்திங் ஸ்பெஷல் ஆக வாழ்ந்து முடித்த தாத்தாவின் இறந்த நாள் கூட சம்திங் ஸ்பெஷல் தான். ஆம் தாத்தா இறந்த தேதி 12/12/12.

ஒரு பயிர் விளைந்து முடித்து தலை சாயாமல் தடக்கென போய் விட்டது. அடுத்த பயிர் முளைப்பதற்கு வழி விட்டு...

                           

November 26, 2012

மழலை மழை


இது பாலாவின் கதை நேரம்

தேவதை கதை கேட்டு
தூங்கியதில்லை
தேவதையே கதை சொல்லி
 தூங்குகின்றேன்  இப்போது .

ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்
அரண்மனையில் இருக்கும் போது
அவரின் அம்மா வந்தார்களாம்
ஏ ராஜா சாக்லேட் சாப்பிட்டயா
எங்க ஆ... காட்டு என்றார்களாம்
எத்தன தடவ சொல்லி இருக்கேன்
சாக்லேட் சாப்பிட்டா சளி பிடிக்கும்னு.. என
பாலாவின் கதைகள்
படு சுவாரஸ்யமானவை.
தேவதை சொல்லும் போது
சிரிக்காமல் கேட்டு வர(ம்) வேண்டும்.

‘குட்டி’ பூச்சாண்டி
‘குட்டி பேய்’ என
பேய் பிசாசுகள் கூட
குட்டி குட்டியாய்
பாலாவின் கதைகளில்
அழகழகாய் மாறுகின்றன

இன்னைக்கு ஸ்கூலா லீவா
 கேட்ட படி துயில் எழும்
குட்டி தேவதைக்கு
எல்லா நாளுமே லீவா
இருந்து விடக் கூடாதா?
மழை பெய்யும் போதெல்லாம்
மனதிற்குள் வேண்டியபடி காத்திருக்கிறேன்
காஞ்சிபுரம்,  சென்னை பள்ளிகளுக்கு
விடுமுறை எதிர்பார்த்து
பாலாவை விட ஆவலாய்.

 இன்னைக்கும் லீவுடா
என்றவுடன்
அடித்துப் பெய்கிறது
மொத்த மழையும்
பாலாவின் முகத்தில்.

November 23, 2012

முள் வேலி




~Hello!
~Ya, tell me Somu!
~What are the Destination charges applicable for Flex shipments?
~I think USD 0.08 per KG somu!
~Any other charges like customs clearance or something?
~No idea..
~Why your voice is dull today? Are you not well?
~Somu, I am Tania, Whom you thought ?
~Sorry Tania, I tried Yamini’s no but I don’t know how I saved your mobile no in the name of Yamini..
~No issue somu, please note down Yamini’s no. 9677………

மேற்கண்ட உரையாடல் நடந்தது நேற்று. ‘தானியா’ எங்கள் அலுவலகத்தில்  ஆறு மாதங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதத்திற்கு முன்பு ராஜினாமா செய்த பெண்.

‘தானியா’ மாடர்ன் டிரெஸ் அணிந்து வரும் மங்கைப் பருவப் பெண். அழகு சாதனப் பொருட்களை சரியாக உபயோகிக்கத் தெரிந்ததனால் அழகாகத் தெரியும் ஆங்கிலோ இந்தியப் பெண். சினிமாப் படங்களின் பாடல் காட்சிகளில் ஹீரோயின் அணியும் உடைகளை சாதாரணமாக அலுவலகத்திற்கு அணிந்து வரும் . கஸ்டமர் சர்வீஸ் டிபார்ட்மென்ட்டில் அசிஸ்டன்ட் மேனேஜர் ஆக வேலை பார்த்தது.

அது என்ன காரணமோ தெரியவில்லை. சில பேரை பார்த்தவுடனேயே பிடிக்காமல் போய் விடுகிறது. எந்தக் காரணமும் இன்றி வெறுக்க ஆரம்பிக்கின்றேன். இப்படித்தான்... தானியாவையும் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் அது வேலை செய்தது வேறு டிபார்ட்மென்ட், இருந்தாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் மெயிலில் வெறுப்பை உமிழ ஆரம்பித்திருந்தேன். 

உதாரணமாக 'ஷிப்மென்ட் டெர்ம்ஸ்' எதுவும் தெரியவில்லை? ஏன் ப்ரீ அலெர்ட் டாகுமென்ட்ஸ் தாமதமாக அனுப்புகின்றாய் என.

ஒரு நாள் இன்டர்காமில் அழைத்து தனக்கு வேலை அவ்வளவாகத் தெரியாது, ஆனால் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்து தான் இந்த கம்பெனிக்கு வேலைக்கு வந்திருப்பதாகவும், இப்படி எல்லோரையும் காப்பியில் வைத்து மெயில் அனுப்புவது தனக்கு சங்கடமாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் நேரில் வந்து விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் சொன்னது. அதற்குப் பின்பு நான் எதுவும் கம்ப்ளைன்ட் செய்யவில்லை.


இதற்குப் பின்னான உளவியல் காரணம் என்னவாக இருக்கக் கூடும். எதற்கு நான் தானியாவை விட அல்லது மற்றவர்களை விட  அதிக விஷயம் தெரிந்ததாக காட்டிக்கொள்ள வேண்டும். உண்மையில் ஒருவரை விட ‘விஷயம்’ அதிகம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் தானா? அப்படியே தெரிந்திருந்தாலும் அன்பாக சொல்லிக் கொடுத்திருக்க வேண்டியதை எதற்கு அலட்டலாக சொல்லிக் கொடுக்கின்றேன். உண்மையில் மற்றவர்க்கு தெரியாததை சொல்லிக் கொடுக்கிறோமா அல்லது எனக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது என்று பார்! என்று வியக்க வைப்பது மட்டுமே அதன் நோக்கமா.

தெரியாதவனுக்கு தெரியாததை சொல்லித்தருவதெல்லாம் ‘தெரிந்ததை சொல்லி திகைக்க வைப்பதாகவே முடிகிறது’   

பண்டிகை நாட்களில் தவறாமல் தானியாவின் வாழ்த்து மெசேஜ் வந்து விடுகின்றது. ஒரு நாள் மொபைலில் அழைத்து வாழ்த்து சொன்ன போது உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் சோமு என்றது. எதுக்கு என்று கேட்டதற்கு  ‘என்னை யாரும் ஒன்னும் தெரியாதவள் என்று இதற்கு முன்பு வேலை பார்த்த கம்பனிகளில் சொன்னதில்லை. ஆனால் உங்களின் மெயில்கள் நிறைய கற்றுக் கொள்ள வைத்தன. அவை இந்த புது கம்பெனியில் நிறையவே உதவுகின்றது என்று நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தது.

ஏன் எனக்குள் இப்படி ஒரு வெறுப்பு காரணமில்லாமல் வளர்கின்றது. தானியாவிற்கு முன் ஆறுமுகம், வித்யா என எனக்குள் ஒரு லிஸ்டே இருக்கின்றது.

 பிராஞ்ச் மேனேஜர் என்னை காரணமில்லாமல் திட்டுவதற்கும் இதே போல் ஏதோ ஒன்று தானே காரணமாக இருக்கக் கூடும்.

பாலாவின் முள் முடிச்சு படித்துக் கொண்டிருக்கிறேன். பாலாவின் நாவல்களில் பல விதமான கதாபாத்திரங்கள் நாவலின் தொடக்கத்தில் வந்து நாவல் முடியும் போது அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திப்பார்கள். இனி எல்லாம் சுகமே, பயணிகள் கவனிக்கவும், தாயுமானவன், இரும்புக் குதிரைகள், மெர்க்குரி பூக்கள் இன்னும் பல நாவல்கள் இப்படித் தான் இருக்கும்.

முள் முடிச்சு நாவலின் கதைக்களம் கொடைக்கானல். விமலா, வின்சென்ட், சூசை, சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் என பலர் கதை மாந்தர்கள்.
மையக்கருத்து மனிதர்கள் ஒருவொருக்கொருவர் போட்டு வைத்துக் கொள்ளும் பாதுகாப்பு வளையம் (முள் முடிச்சு) எப்படி எல்லாம் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே..

மனிதன் இன்னொரு மனிதன் உள்ளே வர முடியாதபடி முள் வேலி போடுகின்றான். அப்படி மீறி நுழைந்தால் காயம் ஏற்படுத்த போடப்படும் கம்பி முடிச்சே  முள் முடிச்சு.

எத்தனை முடிச்சை நான் போடுகின்றேனோ அதே அளவுக்கு அடுத்த மனிதர்கள் போடும் முடிச்சால் காயம் அடைகின்றேன்.

நாவல் படித்து முடித்த போது சில முடிச்சுகள் அவிழ்ந்திருந்தன. இதை எழுதி முடிக்கும் போது மீதி முடிச்சுக்களும்.....                    

November 18, 2012

இனிப்பு தண்ணீ




‘ஸ்நாக்ஸ் பாக்ஸ்’ கண்டுபிடிக்கப்படாத பள்ளிப் பருவக் காலமது. சாமான்ட்ரி பாக்ஸ் வாங்குவதற்கே சமர் செய்ய வேண்டி இருக்கும். எனவே எங்களுக்கான ஸ்நாக்ஸ் நாங்களே உருவாக்கிக் கொண்டது தான். 

பள்ளியில் சாப்பிடும் பீட்ரூட் கலந்த சாதம் சுப்பையா வாத்தியாரிடம் அடி வாங்கியதில் ஜீரணமாகி விடும். கடைசி பெல் அடித்து வீட்டுக்கு வந்தவுடன் அடுக்கு பானையை உருட்டுவோம். பெரும்பாலும் அரிசி மற்றும் அது சார்ந்த பொருட்களே எங்களுக்கான ‘நொறுக்குத் தீனி’. புழுங்கல் அரிசியை விட பச்சரிசி ‘அப்படியே’ சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.

கொஞ்சம் அரிசியை எடுத்து டம்ளரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைப்போம். அது ஊருவதற்குள் கொஞ்சம் அரிசியை வாயில் போட்டு ஊற வைப்பதும் உண்டு. வசதி இருந்தால் அதில் கொஞ்சம் சீனி அல்லது கருப்பட்டி போட்டுக் கொள்ளலாம். இதில் பிரபாகர் அண்ணன் மட்டும் தனி ஸ்டைல் ‘பாளோ’ பண்ணும். ஒரு டம்ளர் அரிசி எடுத்து அப்படியே டவுசர் பைக்குள் போட்டுக் கொண்டு, அப்படியே ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து டவுசர் பைக்குள்ளேயே ஊற்றிக்கொண்டு ரோட்டுக்கு கிழக்காகவோ, மேற்காகவோ நடக்க ஆரம்பிக்கும். அரிசி தின்பதற்காக நடக்குமா அல்லது நடக்கும் போது தின்பதற்காக அரிசி எடுத்துச் செல்கின்றதா என்று யாரும் அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்க முடியாத சூத்திரம் அது. அரிசி தின்று முடிப்பதற்குள் அதன் டவுசரும் காய்ந்து இருக்கும்.

அறுவடை காலத்தில் சாப்பிடுவதற்கு வேர்க்கடலைப்பருப்பு கிடைக்கும். மற்ற நேரங்களில் எல்லாம் வடிச்ச தண்ணீர் தான். சோறு சமைக்கும் போது வடிக்கும் நீர் எங்களின் ‘ஆல் டைம் பேவரைட்’  கொஞ்சம் தண்ணீர் கலந்து உப்பு போட்டு,  தொட்டுக் கொள்ள கொஞ்சம் பழைய குழம்பும் கிடைத்தால் ஆஹா ஆஹா அமிர்தம் என்பது அதே தான்.

இப்போது குக்கரில் இருந்து வருவது விசில் மட்டுமல்ல. வடி தண்ணீர்க்கு ஊதும் சங்கும் ஆகும்.

மஞ்சனத்திக்காயை பழுக்கக் வைக்கும் சூத்திரம் இந்தக் காலத் தலைமுறைக்கு தெரியாது. தரையில் குழி தோண்டி கொஞ்சம் அடுப்பு  சாம்பல் எடுத்து ஒரு பிளாட்பார்ம் செய்து அதில் கொஞ்சம் வைக்கோல் போட்டு அதன் மேல் மஞ்சனத்தி காய்களைப் போட்டு அதன் மேல் திரும்பவும் கொஞ்சம் சாம்பலைப் போட்டு மூடி வைக்க வேண்டும். அதன் மேல் மண்ணைப் போட்டு மூடி விட்டு இரண்டு நாட்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் எல்லாம் பழமாகி இருக்கும். ஆனால் அதன் கருப்பு கலர் மட்டும் நாக்கில் ஒட்டிக் கொண்டு இரண்டு நாட்களுக்கு இருக்கும்.. 

மழைக் காலம் ஆரம்பிக்கும் போது காடுகளில் முளைத்து வளரும் கீரை பறிப்பதற்காக காட்டுக்குச் செல்வோம். எத்தனை விதமான கீரைகள் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. பிரண்டை குழம்பு என்ற ஒன்றை இன்றைய இளம் தலைமுறையோ அல்லது நாளைய தலைமுறைக்கோ தெரியவே போவதில்லை. சரியாக புளி, மிளகாய்த் தூள் கலந்து செய்யப்பட்ட பிரண்டைக் குழம்பை விட ருசியான ஒரு குழம்பு எதுவுமே இருக்க முடியாது. இன்று எத்தனை பேருக்கு கொட்டிக் கிழங்கும், முட்டைக்காளானும் தெரியும்?.

மழை பெய்த மறுநாளில் தாத்தா கண்மாயிலிருந்து முட்டைக் காளான் எடுத்து வருவார். முட்டை வடிவத்தில் இருப்பதால் அதற்கு முட்டைக் காளான் என்று பெயர். மடியில் கட்டி எடுத்து வந்த காளானை அப்பத்தா வெங்காயம் சேர்த்து மஞ்சள் சீரகம் போட்டு செய்து தருவார்கள். ஊரில் வெங்காயம் என்பதே இங்கு சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சிறு வெங்காயம் தான். பெரிய வெங்காயம் என்ற ஒன்றை எனது பதினேழு வயது வரை சாப்பிட்டதில்லை.  காளானையும் கீரையையும் அது வளரும் இடத்தைப் பொறுத்தே சாப்பிடத் தகுந்ததா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும்.

பள்ளிக்கு செல்லும் போது புத்தகங்களை மஞ்சள் கலர் ஜவுளிக் கடை பையிலும் அதனுடன் தண்ணீர் கேன் ஒன்றும் எடுத்துச் செல்வோம். தண்ணீர் கேன் என்பது எஸ்.வி.எஸ் நல்லெண்ணெய் வாங்கியதோ அல்லது  தேங்காய் எண்ணை வாங்கிய பிளாஸ்டிக் கேன் ஆகவோ இருக்கும். அந்த எண்ணை வாடை போவதற்கே ஒரு மாதம் ஆகும். தண்ணீரில் ஏதாவது கலர் மிட்டாய் போட்டு இனிப்பு தண்ணீ என்று பேர் சொல்லி குடிப்போம். சூட மிட்டாய் என்று ஒரு மிட்டாய் வரும். நீங்களும் சாப்பிட்டு இருப்பீர்கள். எப்படி இருக்கும் என்றால் இப்போது சாப்பிடும் ஹால்ஸ் மிட்டாய் மாதிரி கொஞ்சம் காரமாக ஆனால் சளி மற்றும் காய்ச்சல் நேரத்தில் சாப்பிடும் போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கக் கூடிய மிட்டாய் அது. அதை தண்ணீரில் போட்டுக் குடிக்க நன்றாக இருக்கும். இது தவிர ஆரஞ்சு மிட்டாய் மற்றும் வேறு கலர் கலர் மிட்டாய்களை கலந்து கலர் கலராய்  மிட்டாய் தண்ணீ குடிப்போம். யே.. கொஞ்சம் இனிப்பு தண்ணீ குடுய்யா’ என்று ஒருவரிடம் இல்லாத போது அடுத்தவரிடம் வாங்கிக் குடிப்போம். சண்டை வரும் போது ‘நேத்து குடிச்ச மிட்டாய் தண்ணீய கக்குடா’  என்று ஆரம்பித்த சண்டை இப்போது நினைக்க சிரிப்பாக வருகின்றது. சில கலர் மிட்டாய் தண்ணீ கிடைக்கவே இல்லை..     

போன வாரத்தில் ஒரு நாள் பிரபாகர் அண்ணனை தாம்பரம் ரயில்வே ஸ்டேசனில் பார்த்தேன். பேன்ட் பாக்கெட்டில் விளையாட்டாய் கையை விட்டேன். என்னடா என்று கேட்ட அண்ணனிடம் ‘ இல்ல அரிசி இருக்கான்னு பார்த்தேன்’ என்று சொன்னேன்.

சில விநாடி அவரின் முகமே மாறி விட்டது. வீடு கட்டுவதற்காய் வாங்கிய கடன், பிள்ளைகளுக்கான மருத்துவச் செலவு என திண்டாடும் இந்த சூழ்நிலையில் அவருக்கு கவலை ஏதும் இல்லாத அன்றைய ‘அரிசிக் காலங்கள்’ ஞாபகம் வந்திருக்கக்கூடும்.             

கடந்த காலங்கள் எல்லோருக்கும் இனிமையானதா? அது  நிகழ் காலத்தை விட எப்போதும் மகிழ்ச்சி அளித்ததாக தோன்றும்படி இருப்பது எப்படி? வாங்கிய சொற்ப சம்பளத்தை அண்ணனிடம் கொடுத்து விட்டு செலவுக்கு அவ்வப்போது கேட்டு வாங்கி, ஜாலியாக வாழ்ந்த காலம் எனக்கும்  திரும்ப வாய்க்கவே போவதில்லை.

மிட்டாய் தண்ணீர் பருவம் சிறு வயதோடு முடிந்து விடக் கூடியதா?
காலம் என்ற தண்ணீர் காதல், நட்பு, துரோகம், நினைத்த வேலை, கிடைக்காத சம்பளம், இன்னும் வாய்க்காத சொந்த வீடு  என கலர் கலர் மிட்டாய்களை அதன் போக்கில் கரைத்துக் கொண்டே வருகின்றது.

November 14, 2012

பிரார்த்தனை


எவரிடமும் கை ஏந்த கூடாது
எனபது உங்களின் பிரார்த்தனை.
பிரார்த்தனைப் பாடலே மேரியின்
பிச்சைப் பாத்திரம்.
கைகள் இல்லாமல்
கும்பிடுபவனின் மீது
கவனம் திரும்பாமல் பார்த்துக் கொள்கின்றீர்
கண்ணாடியின் வழியாக
ஊடுருவிப் பார்க்கின்றீர்
கண்கள் குருடா, ஏதும் தெரிகின்றதா என்று
உங்களின் ஆய்வுகள்
போலியோ சப்பிய கால்களையும்
சாட்டையால்
அடித்துக் கொள்பவனின் ரத்தத்தையும்
விட்டு வைப்பதில்லை.
கக்கத்தில் இருப்பது
குழந்தையா, பொம்மையா
என ஆய்ந்து
ஒரு ரூபாய் வர(ம்) வேண்டி
பாக்கெட்டை மேய்ந்து
தரும் ஒற்றை ரூபாயில்
தலைமுறைக்கு புண்ணியம்
சேர்க்கின்றீர்.
கைகளில் தரப்பட்ட
அல்லது திணிக்கப்பட்ட
நோட்டீஸ் தாமாக
விழுமாறு செய்ய
உங்களால் முடிகிறது.
தேடும் ஒரு ரூபாயை  
சீக்கிரம் தேடி முடியுங்கள்
இல்லையேல்  
கடவுள்கள் கடந்து விடக் கூடும்.