Showing posts with label அனுபவங்கள். Show all posts
Showing posts with label அனுபவங்கள். Show all posts

December 26, 2012

அப்பு தாத்தா



‘அங்கே இடி முழங்குது, கருப்பசாமி தங்க கலசம் மிண்ணுது’, என்ற பாடலும் ‘மொச்சக்கொட்ட பல்லழகி’ பாடலும் ‘எட்மன்’ தாத்தாவை ஞாபகப் படுத்தும். எங்களுக்கு எல்லாம் எட்மன் தாத்தா.. அப்பா பெரியப்பாவுக்கு எல்லாம் ‘அப்பு’, ஊருக்கு அவர் ‘முனுசு’. சுருக்கமாகச் சொன்னால் அழகாபுரியின் அடையாளங்களில் ‘ஹெட்மென்’ தாத்தா என்ற முனுசு முக்கியமானவர்.   

தாத்தா வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்ந்தவர். எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாத, என்ன சரவணா எப்ப வந்த... நல்லா இருக்கல்ல என்று ஒரு சிரிப்போடு கேட்கும் எட்மன் தாத்தாவின் சிரிப்பு அவருக்கு மட்டுமே உரிய தனி அடையாளம். என் அப்பாவிற்கும் தாத்தாவிற்கும் நிறைய ஒற்றுமைகள். இருவரும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை தவிற வேறு உடை அணியாதவர்கள். நிறைய எண்ணை தேய்த்து படிய வாரிய தலை. கருப்பு முகத்தில் வெளுப்பாக தெரியுமாறு பூசிய பவுடர் பூச்சு என நிறைய விசயங்கள் இருவருக்கும் பொதுவானவை.

ஒட்டு வீடு என ஊர்க்காரர்களால் அடையாளப்படுத்தப்படும் எட்மன் தாத்தாவின் சொந்தப் பெயர்  கோட்டைச்சாமி. டேப் ரெகார்டரில் பாட்டுப் போட்டு  ஏகாந்தமாய் தனிமையில் ஒரு கை விரல்களை மடக்கி இன்னொரு கையினில் தாளம் போட்டு ஜாலியாக இருந்த அப்பு தாத்தாவை எனக்கு மட்டுமே தெரியும். தாத்தா வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் இளையராஜா இருப்பார். அதுவும் சவுண்ட் அதிகமாக வைத்து அலற விட்டு பாட்டு கேட்பதில் அவருக்கு அலாதி சுகம்.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழத் தெரிந்தவர்கள் ஹெட்மேன் தாத்தா. ஹெட்மேன் தாத்தாவிற்கு இரண்டு மனைவிகள். இருவருமே ஏதோ ஒரு சீக்கு வந்தவர்கள் போலவே இருந்தார்கள். அதிலும் இரண்டாவதாக வந்த அப்பத்தா சிரித்தே பார்த்ததில்லை. காறிக்காறி துப்பிக் கொண்டே இருப்பார்கள். தாத்தாவிற்கு சொந்தமாக மதுரை வண்டியூரில் நாலைந்து வீடுகள் இருந்தன. அந்த வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார்.  அதில் ஒரு வீட்டில் தாத்தாவிற்கு ஒரு சின்ன வீடும் இருந்தது. வண்டியூர் வீட்டிற்கு தாத்தா அடிக்கடி போவதனால் அப்பத்தா சீக்காளி ஆனார்களா அல்லது சீக்காளி ஆனதால் தாத்தா வண்டியூருக்கு போனாரா என்று தெரியவில்லை.

முதல் பெண்டாட்டி இருக்கும் போதே தாத்தா இரண்டாவதாக ஒரு பெண்ணை மதுரையிலிருந்து கூட்டி வந்தார் எனவும் பெரிய தாத்தா (தாத்தாவின் அப்பா) சண்டை போட, எனக்கு சாப்பாடு போடுவீங்க தானே? அத போடுங்க நாங்க ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிட்டுகிறோம் என்று சொல்லி காதல் புரட்சி செய்தார் எனவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.  மாடியில் கொஞ்ச நாள் ‘வைத்திருந்து’ பின்னர் பஞ்சாயத்து பண்ணி அனுப்பி வைத்தார்கள் எனவும் அதற்கு பின்பு தான் இரண்டாவதாக ஒரு அப்பத்தாவை திருமணம் செய்து வைத்தார்கள் எனவும் செவிவழிக் கதை உண்டு.

ஊரில் வியாபாரத்திற்கு வரும் ஆட்களுக்கு எல்லாம் தாத்தாவின் திண்ணை தான் அடைக்கலம். திருவிழா நேரங்களில் ரேடியோ செட் கட்டுவதும், ‘தவலாம் பிள்ளை’ வைப்பதும் அவர் வீட்டில் தான். நாடகம் போடும் போது நடிகர்களுக்கு சாப்பாடு கூட தாத்தா வீட்டில் தான்.   

எங்களின் உறவுகளின் இல்லங்களில் நடக்கும் எல்லா விஷேசங்களிலும் தாத்தாவின் பெயர் இருக்கும். மாரியப்ப பிள்ளை, சோலைமலையா பிள்ளை என்று வரும் தத்தாமார்கள் வரிசையில் கோட்டைச்சாமித் தேவர் என்று வரும் அவர் பெயர் எங்களின் எங்கள் குடும்பங்களில் அவரின் பாசத்தை காண்பிக்கும். பெரும்பாலும் எல்லா விஷேசங்களிலும் அவர் தலை இருக்கும். என்ன சரவணா எப்படி இருக்க? என்னப்பா ஊரப் பக்கமே ஆளக் காணோம்! செவ்வாய்க்கு கூட வரல? என்று கேட்பார். (செவ்வாய் சாட்டுதல் என்பது எங்கள் ஊரில் நடக்கும் ஒரு வாரத் திருவிழா. ஒவ்வொரு வீட்டிலும் எல்லா சொந்தங்களும் வந்து கலந்து கொள்ளும் கலர்புல் திருவிழா)

எங்க தாத்தா வர்றது , நம்ம வேல அப்புடி,  என்ன பண்ணச் சொல்றீங்க என்று கேட்டதற்குத் தான் இப்படி சொன்னார். தாத்தாவெல்லாம் போய்ட்டேன்னு வச்சுக்க, வேல கீல அப்புடி இப்புடினு இருந்துராதீங்கப்பா! நம்ம செட்டு புல்லா வந்துடனும் என்ன? என்றார். நேற்று சொல்லியது போல இருக்கின்றது.

இந்தத் தாத்தா போலவே இன்னும் சில தாத்தாக்கள் மாமாக்கள் இருந்தார்கள். என்ன பேராண்டி இந்தப் பக்கம் என்று பார்க்கக் கூடாத இடத்தில் பார்த்தால் பதறிய படி கேட்கும் வீரணசாமி தாத்தா, பெட்டிக் கடை மாமா, இப்படியான வரிசையில் எல்லோரும் போய் சேர்ந்து விட கடைசியாக இருந்த தாத்தா ‘ஹெட்மென்’ தாத்தா மட்டுமே.

தாத்தாவின் வீடு தான் எங்கள் விடுமுறை நாட்களின் விளையாட்டுக் களம். அங்குதான் பல்லாங்குழி, ரம்மி, ஒளிஞ்சு விளையாடும் ‘கப் ஐஸ்’ விளையாட்டு என பகல் எல்லாம் தாத்தாவின் வீட்டிலும் மாடியிலும் கழியும்.  மேலே மாடியில் கூரை வேய்ந்த வீடு ஹெட் மேன் தாத்தா வீடு தான். இப்போது ஊருக்கு சாமி கும்பிட போன போது கூட சீட்டு விளையாண்டு, இரவு ரெண்டு கட்டிங் போட்டு தூங்கினோம். இந்த மாடியில் தான் முதன் முதலில் சீட்டு விளையாண்டோம். முதன் முதலில் திருட்டு தம் அடித்தோம். முதன் முதலில்...........

இப்படி நிறைய முதன் முதல்களை எங்களுக்கு கொடுத்தது தாத்தா வீடு தான். போதுமுப்பா, விட்டா எல்லாத்தியும் காலி பண்ணிடுவீங்க.. குடிக்க கொஞ்சம் மிச்சம் வைங்க! ஆளுங்க இருக்காங்க என்று ஒரு குடம் கள்ளை தனியாக ஒதுக்கி வைத்து எங்கள் சித்தப்பா, பெரியப்பாக்களை அப்புறப்படுத்தி, ‘ சரவணா தனியா ஒரு கொடம் துண்ட போட்டு மூடி வச்சுருக்கேன். இந்தா வடை, மொச்சை, நம்ம செட்டக் கூட்டிட்டு மேலே போங்க, ஆரும் வர மாட்டாங்க என்று எங்களுக்கு பாசத்தை காட்டுபவர். எப்பவாவது மெட்ராஸ் வந்தால் ஒரு சில நேரம் எங்கள் வீட்டில் தங்குவார். அப்போது நாங்களும் பேச்சுலர் ஆகத் தான் இருந்தோம். தாத்தா ஏதாவது வாங்கிட்டு வரவா? என்றால் சும்மா ஒரு குவார்ட்டர் போதும் சரவணா.. தாத்தா இப்போவெல்லாம் நெறையா குடிக்கிறது இல்ல என்பார். ஒரு ஆப் பாட்டிலை கொடுத்தால், நீயும் ஒரு கிளாஸ் எடுத்துட்டு வா சரவணா என்று சொல்லும் தாத்தா இரண்டு ரவுண்டு போனவுடன் சொல்லும் கதைகளெல்லாம் ‘ராஜு முருகன்’ கதைகள் தான்.  

தாத்தா என்று வாய் நிறைய கூப்பிட இனி அழகாபுரியில் அவர் இல்லை. எல்லாரையும் விட சம்திங் ஸ்பெஷல் ஆக வாழ்ந்து முடித்த தாத்தாவின் இறந்த நாள் கூட சம்திங் ஸ்பெஷல் தான். ஆம் தாத்தா இறந்த தேதி 12/12/12.

ஒரு பயிர் விளைந்து முடித்து தலை சாயாமல் தடக்கென போய் விட்டது. அடுத்த பயிர் முளைப்பதற்கு வழி விட்டு...

                           

November 23, 2012

முள் வேலி




~Hello!
~Ya, tell me Somu!
~What are the Destination charges applicable for Flex shipments?
~I think USD 0.08 per KG somu!
~Any other charges like customs clearance or something?
~No idea..
~Why your voice is dull today? Are you not well?
~Somu, I am Tania, Whom you thought ?
~Sorry Tania, I tried Yamini’s no but I don’t know how I saved your mobile no in the name of Yamini..
~No issue somu, please note down Yamini’s no. 9677………

மேற்கண்ட உரையாடல் நடந்தது நேற்று. ‘தானியா’ எங்கள் அலுவலகத்தில்  ஆறு மாதங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதத்திற்கு முன்பு ராஜினாமா செய்த பெண்.

‘தானியா’ மாடர்ன் டிரெஸ் அணிந்து வரும் மங்கைப் பருவப் பெண். அழகு சாதனப் பொருட்களை சரியாக உபயோகிக்கத் தெரிந்ததனால் அழகாகத் தெரியும் ஆங்கிலோ இந்தியப் பெண். சினிமாப் படங்களின் பாடல் காட்சிகளில் ஹீரோயின் அணியும் உடைகளை சாதாரணமாக அலுவலகத்திற்கு அணிந்து வரும் . கஸ்டமர் சர்வீஸ் டிபார்ட்மென்ட்டில் அசிஸ்டன்ட் மேனேஜர் ஆக வேலை பார்த்தது.

அது என்ன காரணமோ தெரியவில்லை. சில பேரை பார்த்தவுடனேயே பிடிக்காமல் போய் விடுகிறது. எந்தக் காரணமும் இன்றி வெறுக்க ஆரம்பிக்கின்றேன். இப்படித்தான்... தானியாவையும் பிடிக்கவில்லை. இத்தனைக்கும் அது வேலை செய்தது வேறு டிபார்ட்மென்ட், இருந்தாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் மெயிலில் வெறுப்பை உமிழ ஆரம்பித்திருந்தேன். 

உதாரணமாக 'ஷிப்மென்ட் டெர்ம்ஸ்' எதுவும் தெரியவில்லை? ஏன் ப்ரீ அலெர்ட் டாகுமென்ட்ஸ் தாமதமாக அனுப்புகின்றாய் என.

ஒரு நாள் இன்டர்காமில் அழைத்து தனக்கு வேலை அவ்வளவாகத் தெரியாது, ஆனால் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்து தான் இந்த கம்பெனிக்கு வேலைக்கு வந்திருப்பதாகவும், இப்படி எல்லோரையும் காப்பியில் வைத்து மெயில் அனுப்புவது தனக்கு சங்கடமாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் நேரில் வந்து விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் சொன்னது. அதற்குப் பின்பு நான் எதுவும் கம்ப்ளைன்ட் செய்யவில்லை.


இதற்குப் பின்னான உளவியல் காரணம் என்னவாக இருக்கக் கூடும். எதற்கு நான் தானியாவை விட அல்லது மற்றவர்களை விட  அதிக விஷயம் தெரிந்ததாக காட்டிக்கொள்ள வேண்டும். உண்மையில் ஒருவரை விட ‘விஷயம்’ அதிகம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் தானா? அப்படியே தெரிந்திருந்தாலும் அன்பாக சொல்லிக் கொடுத்திருக்க வேண்டியதை எதற்கு அலட்டலாக சொல்லிக் கொடுக்கின்றேன். உண்மையில் மற்றவர்க்கு தெரியாததை சொல்லிக் கொடுக்கிறோமா அல்லது எனக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது என்று பார்! என்று வியக்க வைப்பது மட்டுமே அதன் நோக்கமா.

தெரியாதவனுக்கு தெரியாததை சொல்லித்தருவதெல்லாம் ‘தெரிந்ததை சொல்லி திகைக்க வைப்பதாகவே முடிகிறது’   

பண்டிகை நாட்களில் தவறாமல் தானியாவின் வாழ்த்து மெசேஜ் வந்து விடுகின்றது. ஒரு நாள் மொபைலில் அழைத்து வாழ்த்து சொன்ன போது உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் சோமு என்றது. எதுக்கு என்று கேட்டதற்கு  ‘என்னை யாரும் ஒன்னும் தெரியாதவள் என்று இதற்கு முன்பு வேலை பார்த்த கம்பனிகளில் சொன்னதில்லை. ஆனால் உங்களின் மெயில்கள் நிறைய கற்றுக் கொள்ள வைத்தன. அவை இந்த புது கம்பெனியில் நிறையவே உதவுகின்றது என்று நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தது.

ஏன் எனக்குள் இப்படி ஒரு வெறுப்பு காரணமில்லாமல் வளர்கின்றது. தானியாவிற்கு முன் ஆறுமுகம், வித்யா என எனக்குள் ஒரு லிஸ்டே இருக்கின்றது.

 பிராஞ்ச் மேனேஜர் என்னை காரணமில்லாமல் திட்டுவதற்கும் இதே போல் ஏதோ ஒன்று தானே காரணமாக இருக்கக் கூடும்.

பாலாவின் முள் முடிச்சு படித்துக் கொண்டிருக்கிறேன். பாலாவின் நாவல்களில் பல விதமான கதாபாத்திரங்கள் நாவலின் தொடக்கத்தில் வந்து நாவல் முடியும் போது அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திப்பார்கள். இனி எல்லாம் சுகமே, பயணிகள் கவனிக்கவும், தாயுமானவன், இரும்புக் குதிரைகள், மெர்க்குரி பூக்கள் இன்னும் பல நாவல்கள் இப்படித் தான் இருக்கும்.

முள் முடிச்சு நாவலின் கதைக்களம் கொடைக்கானல். விமலா, வின்சென்ட், சூசை, சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் என பலர் கதை மாந்தர்கள்.
மையக்கருத்து மனிதர்கள் ஒருவொருக்கொருவர் போட்டு வைத்துக் கொள்ளும் பாதுகாப்பு வளையம் (முள் முடிச்சு) எப்படி எல்லாம் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே..

மனிதன் இன்னொரு மனிதன் உள்ளே வர முடியாதபடி முள் வேலி போடுகின்றான். அப்படி மீறி நுழைந்தால் காயம் ஏற்படுத்த போடப்படும் கம்பி முடிச்சே  முள் முடிச்சு.

எத்தனை முடிச்சை நான் போடுகின்றேனோ அதே அளவுக்கு அடுத்த மனிதர்கள் போடும் முடிச்சால் காயம் அடைகின்றேன்.

நாவல் படித்து முடித்த போது சில முடிச்சுகள் அவிழ்ந்திருந்தன. இதை எழுதி முடிக்கும் போது மீதி முடிச்சுக்களும்.....                    

November 18, 2012

இனிப்பு தண்ணீ




‘ஸ்நாக்ஸ் பாக்ஸ்’ கண்டுபிடிக்கப்படாத பள்ளிப் பருவக் காலமது. சாமான்ட்ரி பாக்ஸ் வாங்குவதற்கே சமர் செய்ய வேண்டி இருக்கும். எனவே எங்களுக்கான ஸ்நாக்ஸ் நாங்களே உருவாக்கிக் கொண்டது தான். 

பள்ளியில் சாப்பிடும் பீட்ரூட் கலந்த சாதம் சுப்பையா வாத்தியாரிடம் அடி வாங்கியதில் ஜீரணமாகி விடும். கடைசி பெல் அடித்து வீட்டுக்கு வந்தவுடன் அடுக்கு பானையை உருட்டுவோம். பெரும்பாலும் அரிசி மற்றும் அது சார்ந்த பொருட்களே எங்களுக்கான ‘நொறுக்குத் தீனி’. புழுங்கல் அரிசியை விட பச்சரிசி ‘அப்படியே’ சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.

கொஞ்சம் அரிசியை எடுத்து டம்ளரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைப்போம். அது ஊருவதற்குள் கொஞ்சம் அரிசியை வாயில் போட்டு ஊற வைப்பதும் உண்டு. வசதி இருந்தால் அதில் கொஞ்சம் சீனி அல்லது கருப்பட்டி போட்டுக் கொள்ளலாம். இதில் பிரபாகர் அண்ணன் மட்டும் தனி ஸ்டைல் ‘பாளோ’ பண்ணும். ஒரு டம்ளர் அரிசி எடுத்து அப்படியே டவுசர் பைக்குள் போட்டுக் கொண்டு, அப்படியே ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து டவுசர் பைக்குள்ளேயே ஊற்றிக்கொண்டு ரோட்டுக்கு கிழக்காகவோ, மேற்காகவோ நடக்க ஆரம்பிக்கும். அரிசி தின்பதற்காக நடக்குமா அல்லது நடக்கும் போது தின்பதற்காக அரிசி எடுத்துச் செல்கின்றதா என்று யாரும் அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்க முடியாத சூத்திரம் அது. அரிசி தின்று முடிப்பதற்குள் அதன் டவுசரும் காய்ந்து இருக்கும்.

அறுவடை காலத்தில் சாப்பிடுவதற்கு வேர்க்கடலைப்பருப்பு கிடைக்கும். மற்ற நேரங்களில் எல்லாம் வடிச்ச தண்ணீர் தான். சோறு சமைக்கும் போது வடிக்கும் நீர் எங்களின் ‘ஆல் டைம் பேவரைட்’  கொஞ்சம் தண்ணீர் கலந்து உப்பு போட்டு,  தொட்டுக் கொள்ள கொஞ்சம் பழைய குழம்பும் கிடைத்தால் ஆஹா ஆஹா அமிர்தம் என்பது அதே தான்.

இப்போது குக்கரில் இருந்து வருவது விசில் மட்டுமல்ல. வடி தண்ணீர்க்கு ஊதும் சங்கும் ஆகும்.

மஞ்சனத்திக்காயை பழுக்கக் வைக்கும் சூத்திரம் இந்தக் காலத் தலைமுறைக்கு தெரியாது. தரையில் குழி தோண்டி கொஞ்சம் அடுப்பு  சாம்பல் எடுத்து ஒரு பிளாட்பார்ம் செய்து அதில் கொஞ்சம் வைக்கோல் போட்டு அதன் மேல் மஞ்சனத்தி காய்களைப் போட்டு அதன் மேல் திரும்பவும் கொஞ்சம் சாம்பலைப் போட்டு மூடி வைக்க வேண்டும். அதன் மேல் மண்ணைப் போட்டு மூடி விட்டு இரண்டு நாட்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் எல்லாம் பழமாகி இருக்கும். ஆனால் அதன் கருப்பு கலர் மட்டும் நாக்கில் ஒட்டிக் கொண்டு இரண்டு நாட்களுக்கு இருக்கும்.. 

மழைக் காலம் ஆரம்பிக்கும் போது காடுகளில் முளைத்து வளரும் கீரை பறிப்பதற்காக காட்டுக்குச் செல்வோம். எத்தனை விதமான கீரைகள் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. பிரண்டை குழம்பு என்ற ஒன்றை இன்றைய இளம் தலைமுறையோ அல்லது நாளைய தலைமுறைக்கோ தெரியவே போவதில்லை. சரியாக புளி, மிளகாய்த் தூள் கலந்து செய்யப்பட்ட பிரண்டைக் குழம்பை விட ருசியான ஒரு குழம்பு எதுவுமே இருக்க முடியாது. இன்று எத்தனை பேருக்கு கொட்டிக் கிழங்கும், முட்டைக்காளானும் தெரியும்?.

மழை பெய்த மறுநாளில் தாத்தா கண்மாயிலிருந்து முட்டைக் காளான் எடுத்து வருவார். முட்டை வடிவத்தில் இருப்பதால் அதற்கு முட்டைக் காளான் என்று பெயர். மடியில் கட்டி எடுத்து வந்த காளானை அப்பத்தா வெங்காயம் சேர்த்து மஞ்சள் சீரகம் போட்டு செய்து தருவார்கள். ஊரில் வெங்காயம் என்பதே இங்கு சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சிறு வெங்காயம் தான். பெரிய வெங்காயம் என்ற ஒன்றை எனது பதினேழு வயது வரை சாப்பிட்டதில்லை.  காளானையும் கீரையையும் அது வளரும் இடத்தைப் பொறுத்தே சாப்பிடத் தகுந்ததா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும்.

பள்ளிக்கு செல்லும் போது புத்தகங்களை மஞ்சள் கலர் ஜவுளிக் கடை பையிலும் அதனுடன் தண்ணீர் கேன் ஒன்றும் எடுத்துச் செல்வோம். தண்ணீர் கேன் என்பது எஸ்.வி.எஸ் நல்லெண்ணெய் வாங்கியதோ அல்லது  தேங்காய் எண்ணை வாங்கிய பிளாஸ்டிக் கேன் ஆகவோ இருக்கும். அந்த எண்ணை வாடை போவதற்கே ஒரு மாதம் ஆகும். தண்ணீரில் ஏதாவது கலர் மிட்டாய் போட்டு இனிப்பு தண்ணீ என்று பேர் சொல்லி குடிப்போம். சூட மிட்டாய் என்று ஒரு மிட்டாய் வரும். நீங்களும் சாப்பிட்டு இருப்பீர்கள். எப்படி இருக்கும் என்றால் இப்போது சாப்பிடும் ஹால்ஸ் மிட்டாய் மாதிரி கொஞ்சம் காரமாக ஆனால் சளி மற்றும் காய்ச்சல் நேரத்தில் சாப்பிடும் போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கக் கூடிய மிட்டாய் அது. அதை தண்ணீரில் போட்டுக் குடிக்க நன்றாக இருக்கும். இது தவிர ஆரஞ்சு மிட்டாய் மற்றும் வேறு கலர் கலர் மிட்டாய்களை கலந்து கலர் கலராய்  மிட்டாய் தண்ணீ குடிப்போம். யே.. கொஞ்சம் இனிப்பு தண்ணீ குடுய்யா’ என்று ஒருவரிடம் இல்லாத போது அடுத்தவரிடம் வாங்கிக் குடிப்போம். சண்டை வரும் போது ‘நேத்து குடிச்ச மிட்டாய் தண்ணீய கக்குடா’  என்று ஆரம்பித்த சண்டை இப்போது நினைக்க சிரிப்பாக வருகின்றது. சில கலர் மிட்டாய் தண்ணீ கிடைக்கவே இல்லை..     

போன வாரத்தில் ஒரு நாள் பிரபாகர் அண்ணனை தாம்பரம் ரயில்வே ஸ்டேசனில் பார்த்தேன். பேன்ட் பாக்கெட்டில் விளையாட்டாய் கையை விட்டேன். என்னடா என்று கேட்ட அண்ணனிடம் ‘ இல்ல அரிசி இருக்கான்னு பார்த்தேன்’ என்று சொன்னேன்.

சில விநாடி அவரின் முகமே மாறி விட்டது. வீடு கட்டுவதற்காய் வாங்கிய கடன், பிள்ளைகளுக்கான மருத்துவச் செலவு என திண்டாடும் இந்த சூழ்நிலையில் அவருக்கு கவலை ஏதும் இல்லாத அன்றைய ‘அரிசிக் காலங்கள்’ ஞாபகம் வந்திருக்கக்கூடும்.             

கடந்த காலங்கள் எல்லோருக்கும் இனிமையானதா? அது  நிகழ் காலத்தை விட எப்போதும் மகிழ்ச்சி அளித்ததாக தோன்றும்படி இருப்பது எப்படி? வாங்கிய சொற்ப சம்பளத்தை அண்ணனிடம் கொடுத்து விட்டு செலவுக்கு அவ்வப்போது கேட்டு வாங்கி, ஜாலியாக வாழ்ந்த காலம் எனக்கும்  திரும்ப வாய்க்கவே போவதில்லை.

மிட்டாய் தண்ணீர் பருவம் சிறு வயதோடு முடிந்து விடக் கூடியதா?
காலம் என்ற தண்ணீர் காதல், நட்பு, துரோகம், நினைத்த வேலை, கிடைக்காத சம்பளம், இன்னும் வாய்க்காத சொந்த வீடு  என கலர் கலர் மிட்டாய்களை அதன் போக்கில் கரைத்துக் கொண்டே வருகின்றது.

October 17, 2012

விடுதி வாழ்க்கை - II




பிளஸ் டூ காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திரும்பிய போது பள்ளியின் நிர்வாகமே மாறி இருந்தது. ஏதோ பிரச்சினை காரணமாக  தலைமை ஆசிரியர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தார். புது தலைமை ஆசிரியராக பி.டி வாத்தியார் பொறுப்பேற்று இருந்தார். இந்த மாற்றம் எங்களையும் பாதித்தது. பள்ளியின் நுழைவு வாயில் ஆறு மணிக்கு பூட்டப்பட்டது. இரவில் பள்ளியில் தங்கிப் படிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இரவில் பேருக்குத் தான் பள்ளியில் படிக்கப் போனோமே தவிர தேர்வு அல்லாத நாட்களில் புத்தகம் என்பது  தலைக்கு வைத்துத் தூங்க மட்டுமே பயன்படும். ஹாஸ்டலில் மின்விசிறி வசதி இல்லை. பெரும்பாலான நாட்களில் லைட்டே எரியாது. இதனால் தூங்குவதற்கு இடம் இல்லாமல் திண்டாட்டம் ஆனது. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவர்களில் பாதிப்பேருக்கு அதே ஊர் அல்லது பக்கத்து ஊர் தான் சொந்த ஊர். எல்லாவற்றிலும் ஊழலில் ஊறித் திளைக்கும் இந்தியாவில் இருபது கிலோ மீட்டர் தொலைவில் வசித்து வருகிறார் என சர்டிபிகேட் வாங்குவதா கடினம்? உள்ளூர் மாணவர்களே பொய்யான சர்டிபிகேட் கொடுத்து ஹாஸ்டலில் தங்கி இருந்தார்கள். அவர்களில் நிறைய பேர் சாப்பிட்டவுடன் வீட்டுக்குச் சென்று விடுவார்கள். வார்டன், அவரின் ‘சின்ன வீட்டுக்குச்’ சென்று விடுவார். 'பேய் பங்களா' மாதிரி இருக்கும் ஹாஸ்டலில் நாங்கள் பத்து பேர்  மட்டும் பயத்துடன் தூங்குவோம்.

'ஸ்டடி ஹவர்' இருப்பதனால் ஸ்கூல் முடிந்து ஏழு மணிக்குத் தான் ஹாஸ்டலுக்கு வருவோம். ஆறு மணிக்கே தட்டில் சோறு போட்டு ரசத்தை ஊற்றி அதிலேயே துவையலையும் போட்டு மூடி வைத்திருப்பார்கள், சில நாள் மூடாமலும்.   வெறும் துவையலை வைத்துக் கொண்டு விரைத்துப் போன ரச சாதத்தை சாப்பிட முடியவில்லை. சமையல்காரரான ராஜு அண்ணன் சொன்னார். வார்டன் கொள்ளை அடிக்கிறான்பா.. ஓங்க காசு எல்லாம் சின்ன வீட்டுக்குத் தான் போகுது. ரூல்ஸ் படி அவன் ஓங்க கூடத் தான் தங்கணும்.. நீங்க சாப்பிடற சாப்பாட்ட தான் அவனும் சாப்பிடனும். ஆனா என்னைக்காவது இங்க தங்கி இருக்கானா.. இல்ல இந்த சாப்பாட சாப்பிட்டு இருக்கானா.. இவ்வளவு பேருக்கு சாம்பார் வைக்க அவன் கொடுக்குற பருப்ப பாருப்பா.. இதுல எப்படி ஒங்களுக்கு ருசியா சமைச்சு போடுறது என்று புலம்பினார். 

இந்த நேரத்தில் தான் 'சைடு டிஷ்' செய்யும் ஐடியாவும் எங்களுக்கு வந்தது. ஹாஸ்டலின் உள்ளேயே ஒரு முருங்கை மரம் இருந்தது. வார்டன் வீட்டுக்குச் சென்றவுடன் நாங்கள் கீரை பறித்து சமையல் செய்து சாப்பிட ஆரம்பித்தோம். இது சனி, ஞாயிறு விடுமுறையில் கண்மாயில்  தூண்டில் போட்டு மீன் பிடித்து சமையல் செய்து சாப்பிடும் வரை வளர்ந்தது.
ஒரு நாள் முன்னால் தலைமை ஆசிரியர் மயிலேறி சார் அவர்களின் வீட்டுக்குச் சென்றோம். எல்லோரும் வாங்கப்பா என்று வரவேற்று பேசினார். அவர் பேச்சில் விரக்தி இருந்தது. நீங்க எச்.எம் ஆ இருக்கும் போது ஸ்கூல் நல்லா இருந்தது சார். இப்போ ஸ்கூல் ஆறு மணிக்கே இழுத்து மூடிடுறாங்க சார்.. என்று சொன்னோம். என்னப்பா பண்றது, நல்லதுக்கே காலம் இல்ல.. என்னைய வேலையை விட்டு அனுப்பிட்டாங்களே.. என்றதற்கு, நீங்க திரும்பவும் வருவீங்க சார்.. எல்லோரும் ஒங்களப் பத்தி புரிஞ்சுகிட்டு திரும்பவும் கூப்பிடுவாங்க என்று சொன்னோம். படிப்பு மற்ற விசயங்களைப் பற்றி கொஞ்சம் பேசி விட்டு வந்தோம். நன்றி சொல்லிக் கிளம்பும் போது தான் சொன்னார். இது வரை ஆசிரியர்களோ அல்லது மாணவர்களோ யாருமே வந்து தன்னைப் பார்ரக்கவில்லை என்றும் நாங்கள் இப்பொது வந்து பேசியது உண்மையில் தனக்கு ஆறுதலாக இருக்கின்றது என்றும்.

கொஞ்ச நாளிலேயே அவருக்கு ஸ்கூல் மானேஜ்மென்ட் அழைப்பு விடுத்தது. திரும்பவும் ஹெட் மாஸ்டர் ஆனார். எங்கள் வகுப்புக்கு வரும் போதும்,  வேறு எங்காவது பார்க்கும் போதும் ஒரு சிரிப்புடன் எப்படி படிக்கிறீங்கப்பா என்று கேட்பார். 

ஒரு நாள் மணிமேகலை என்ற எங்கள் வகுப்புத் தோழி சாமன்ட்ரி பாக்ஸ்சை வகுப்பில் மறந்து வைத்து விட்டுச் சென்று விட்டது. அதை எடுத்த முத்து மாரி அதனை வீட்டில் கொண்டு போய் கொடுப்பதாகச் சொல்லி எடுத்துச் சென்றான். 

மறுநாள் ஹெட் மாஸ்டர் அவனை அடி பிண்ணி எடுத்தார். முத்து மாரி தான் சொன்னான் காரணத்தை. பாக்ஸ்சை கொடுக்கும் போது மணியின் அப்பா இருந்ததாகவும் அவர் எச்.எம் மிடம் போட்டுக் கொடுத்து விட்டதாகவும்.


எங்களுக்குப் பொழுது போகவில்லை என்றால் முத்துமாரிக்கு இதனை நினைவு படுத்துவோம். தினகரன் தான் ஆரம்பிப்பான். நல்லது தானேயா பண்ண.. அதுக்கு ஏன் அவர் அடிச்சார் என்று. முத்து மாரி ஹெட் மாஸ்டரை திட்ட ஆரம்பித்தால் அது அரை மணி நேரக் கச்சேரி தான். சரி.. விடு எப்படியோ மணிமேகலைக்கு ஒன்னப் புடிச்சு போச்சுல்ல என்று அடுத்த பிட்டை போடுவோம். என்ன சோமு சொல்ற.. என்று அதிர்ச்சியுடன் கேட்கும் போது நான் சொல்வேன். படத்துல எல்லாம் பாக்கலயா.. இப்படித்தான் லவ் ஸ்டார்ட் ஆகும்.. மணிமேகலைக்காக அடி வாங்குன இல்ல.. அடுத்த நாள்ள இருந்து அந்தப் புள்ள ஒன்ன ஒரு மாதிரியாத்தான்யா பாக்குது என்று நான் சொன்னதைக் கேட்டு முத்து மாரிக்கு ‘வெள்ளுடை தேவதைகளுடன்' கனவுப் பாட்டு ஒடியிருக்கும். ரொம்ப நாளா புள்ள நம்பினான். நாங்கள் ஒட்டுகின்றோம் என்று தெரியாமலேயே..          

ஹாஸ்டல் கட்டிடம் அந்தப் பருவத்தில் பெய்த மழைக்கு ஒழுக ஆரம்பித்தது. பள்ளிக்கு பஸ்சில் வரும் எங்கள் வகுப்புத் தோழிகள் ஜெயந்தியும், விஜயலட்சுமியும் எங்களுக்கு டாட்டா காட்டுவார்கள். வரும் போதும் ஸ்கூல் முடிந்து போகும் போதும்.

அப்படியான ஒரு 'டாட்டா' நேரத்தில் வேகமாக வீசிய காற்றுக்கு முன் பக்கமிருந்த ஒடுகளில் ஐந்து ஓடுகள் கீழே விழுந்து உடைந்தன. எங்கள் மனதில் ஒரு திட்டம் உருவாகியது. மீதமிருந்த ஓடுகளை உடைத்து விழ வைத்தோம். இலேசாக மழை பெய்து கொண்டிருந்தது. காலையில் லோக்கல் நிருபர் ஒருவரை வரவழைத்து மாலை மலரில் செய்தி வருமாறு செய்தோம். காலையில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஹாஸ்டலுக்கு வந்தனர். முதல் நாள் பெய்த மழையில் முன்னால் இருந்த ஓடுகள் அனைத்தும் நொறுங்கி விழுந்தன என்று சொன்னோம். வார்டன் பேந்த பேந்த முழிக்கிறார். நாங்கள் சொன்னதையே அவரும் சொன்னார். அவருக்கு வேறு வழியே இல்லையே.. ஏனென்றால் அவரும் இரவில் ஹாஸ்டலில் தங்கி இருக்க வேண்டும் என்றல்லவா ரூல்ஸ் சொல்கின்றது. அவர் இல்லை என்று மாற்றிச் சொல்லவே முடியாது. ஆனால் அன்று இரவு எங்களை தனியாக அழைத்து ‘என்ன நடந்தது.. ஏன் ஓடச்சீங்க’ என்று கேட்டார். காலையில் சொன்னதையே திரும்பவும் அவருக்கு சொன்னோம். ஆனால் மழைக்கு ஒடஞ்ச மாதிரி தெரியல.. நீங்க தான் ஓடச்சிருக்கீங்க.. இனிமே நான் ஒங்களோட பேச மாட்டேன். என் மூஞ்சில கூட முழிக்காதீங்க.. என்றவர் அதற்குப் பின் எங்களுடன் பேசவே இல்லை.

தற்காலிகமாகத் தங்குவதற்கு பள்ளியில் பயன் படுத்தாமல் இருந்த ஆடிட்டோரியத்தை கொடுத்தார்கள். ஹாஸ்டலுக்கு என புதிய கட்டிடம் கட்ட ஆரம்பித்தார்கள். முழு ஆண்டுத் தேர்வு தொடங்கும் போது புதிய ஹாஸ்டல் கட்டிடத்தின் தளம் போடப்பட்டிருந்தது.

கல் குவாரியில் ஆனந்தமாகக் குளித்தது, விநாயகா தியேட்டரில் படம் பார்த்தது, நைட் கடையில் சுடச்சுட இரவு ஒரு மணிக்கு, இரண்டு மணிக்கு என நேரங்காலம் இல்லாமல் பலகாரம் சாப்பிட்டது, சைக்கிளிலேயே அருப்புக்கோட்டைக்கு வந்து படம் பார்த்தது  என பல நினைவுகள் இன்னும் பசுமையாய் நெஞ்சுக்குள் இருக்கின்றது. டி.சி வாங்கும் போது மயிலேறி சார் 'வெரி வெரி குட்' என கான்டக்ட் சர்டிபிகேட் கொடுத்தார். அதுவரை அவர் 'குட்' என்று மட்டுமே டி.சி யில் எழுதுவார் என்றும் எங்கள் ஐந்து பேருக்கு மட்டுமே 'வெரி வெரி குட்' என்று எழுதி இருப்பதாகவும் பள்ளியில் சொன்னார்கள்.

மார்க் சீட் மற்றும் டி.சி வாங்கிக் கொண்டு கல்லூரணிக்கு டாட்டா காட்டினேன். 

எஸ்.என் கல்லூரியில் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் பார்த்த ப்ரின்சிபால் சுந்தரராஜன் சொன்னார். 'பி.எஸ்.சி பிசிக்ஸ்' கேக்குற.. ஆனா அப்படி ஒன்னும் அதிகமா மார்க் வாங்கலையே.. 'பாட்டனி' எடுத்துக்கோயேன் என்று.. 
                      

October 16, 2012

விடுதி வாழ்க்கை








அப்படி ஒன்னும் பெருசா மார்க் எடுக்கலேயேப்பா.. மேத்ஸ்ல கூட எழுபத்தி நாலு மார்க் தான் வாங்கியிருக்க... பர்ஸ்ட் குரூப் கேக்குற என்று கேட்ட ஹெட் மாஸ்டர் மயிலேறி சாரை கெஞ்சல் பார்வை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இல்ல சார்.. படிச்சுடுவேன்.. டென்த்ல டீச்சர் இல்ல சார்,  நானே நோட்ஸ் வாங்கிப் படிச்சுத்தே இந்த மார்க்கும் வாங்குனேன் என்று நான் சொன்ன பதிலுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தவராக அட்மிஷன் போட்டுக் கொடுத்தார். (ஆனால் கொஞ்ச நாளிலேயே இப்படி அடம் பிடிச்சு வாங்கிய மேத்ஸ்  குரூப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டு செகன்ட் குரூப்க்கு மாற்றச் சொல்லி கெஞ்சி மாறியது தனிக் கதை)

இப்படித்தான் எஸ்.பி.கே மேல் நிலைப்பள்ளி, கல்லூரணியில் இடம் கிடைத்தது. பள்ளி வளாகம் முழுதும் மரங்களால் சூழப்பட்ட, வெயிலையே பார்க்க முடியாத பள்ளி அது. தினமும் பெருக்கப்பட்டு  மிகவும் சுத்தமாக, அழகாகக் காட்சி அளிக்கும். பள்ளிக்குப் பின்புறமாக பெரிய கிரௌண்ட். அந்தப் பள்ளியில் இடம் கிடைப்பது கொஞ்சம் கடினம் தான்.   ஆனால் பிரைவேட் ஹாஸ்டலில் தங்கி  படிக்கும் அளவுக்கு வசதியில்லை. ஆமா எங்க தங்கப் போறீங்க என்று கேட்ட மயிலேறி சாரிடம் அரசு மாணவர் விடுதியில் என்று சொன்னோம். அதற்கு சிறிது காலம் ஆகும் என்றும் அது வரை  ‘ஒரு பாட்டி இருக்காங்க.. அவங்க வீட்ல தங்கிப் படிங்க’ என ஒரு அட்ரஸ் கொடுத்தார். எங்க சாப்பிடப் போறீங்க என்று கேட்டவர் ஒரு ஹோட்டல் பேர் சொல்லி அங்கேயே அக்கௌன்ட் வைத்துச் சாப்பிட்டுக் கொள்ளுமாறு சொன்னார்.

அந்தப் பாட்டியை நீங்களும் பார்த்திருக்கலாம். ஊமை விழிகள் படத்தில் ‘மாமரத்துப் பூ எடுத்து’... என்ற பாட்டுக்கு நடுவே ஒரு கிழவி வருமே.. அந்தக் கிழவியைப் போலவே அந்த வீட்டில் இருந்த பாட்டியும் ஒரு மாதிரியாகவே இருந்தது. குடிக்கத் தண்ணீர் தராது. மூன்று மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் உள்ள ஒரு ரூமிற்கு மாறி விட்டோம். மறுநாள் ஹெட் மாஸ்டர் எங்களை கூப்பிட்டு அனுப்பினார். ஏன் அங்கெ இருந்து மாறீட்டீங்க என்று கேட்ட போது தான் எங்களுக்கு புரிந்தது. அவரின் ஜாதிக்காரர்களுக்கு உதவி செய்யவே தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் ஏற்பாடு செய்தார் என்று. கிழவி எங்களுக்குச் செய்த கொடுமைகளை பட்டியலிட்டோம். இருந்தாலும் சமாதனமாகதவராக, ‘என்ன இருந்தாலும் நீங்க காலி பண்ணிருக்கக் கூடாது என்று சொன்னார்.’ சரி இனிமேயாவது ஒழுங்கா இருங்க என்றார்.
அவர் ரெகமண்ட் செய்த ‘ஆசைத் தம்பி ஹோட்டல்’ பேரில் மட்டும் தான் ‘ஆசை’ இருக்கும். ஒரு முறை சாப்பிட்டவர் திரும்பவும் அந்த ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட விரும்ப மாட்டார். அவரின் இரண்டு வயது மகன் அங்கு தான் ‘எல்லாம்’ செய்வான். கைகளைக் கூட கழுவாமல் அவரின் மனைவி இட்லி எடுத்து வைப்பார்கள். அப்படியே மூடி வைத்துவிட்டு ஸ்கூல் தண்ணீர் குடித்து உயிர் வாழ்ந்த நாட்கள் பல. ஒரு வழியாக ஹோட்டலையும் மாற்றி விட்டோம். அதற்கும் வழக்கம் போல ஹெட் மாஸ்டர் கத்தினார்.

எப்படியும் அரசு மாணவர் விடுதியில் இடம் கிடைத்து விடும்.. அது வரை இதெல்லாம் பொறுத்துக் கொள்வோம் என்று ஆறுதல் அடைவோம். ஆனால் முதல் வருடம் முழுதும் இடம் கிடைக்கவே இல்லை.

உண்டு உறைவிடப் பள்ளி என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் எஸ்.பி. கே ஸ்கூல் எங்களுக்கு உணமையிலேயே உண்டு உறைவிடப் பள்ளியாகவே இருந்தது. ஆம்.. நாங்கள் இரவு படிப்பதும் தூங்குவதும் பள்ளியில் தான். உள்ளூர் மாணவர்களில் பலர் துணைக்கு வருவார்கள். அதிக நேரம் அரட்டையும் கொஞ்ச நேரம் படிப்புமாக பள்ளியே கலகல என்றிருக்கும். நம்ம ஹெட் மாஸ்டர் அவ்வப்போது செக்கிங் வருவார்கள். பள்ளியில் தூங்கும் மாணவர்கள்  இரவு பத்து மணி வரை கண்டிப்பாக படிக்க வேண்டும். காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து படிக்க வேண்டும். ஹெட் மாஸ்டர் வந்து பார்க்கும் போது யாராவது தூங்கினால் பிரம்பால் அடிப்பார். அதனால் நண்பர்கள் யாராவது தூங்கினால், அவனை காப்பாற்ற ஹெட் மாஸ்டரிடம் ‘ அவனுக்கு காய்ச்சல் சார், இப்போது தான் மாத்திரை போட்டுட்டு தூங்கினான்’ என்று சொல்லி விடுவோம். நல்ல டாக்டரா பாருங்கப்பா என்று ஒரு சில நேரங்களில் பணமும் கொடுத்துச் செல்வார்.

பிரைவேட் ஹாஸ்டல் பள்ளி வளாகத்தை ஒட்டியே இருந்தது. அங்கு தினமும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து விட வேண்டும். பள்ளியில் இருக்கும் கிணற்று பம்ப் செட்டில் தினமும் காலையில்  மோட்டார் போடுவார்கள். நான்கு மணிக்கெல்லாம் குளித்து விட வேண்டும். அந்த மாணவர்கள் வரிசையாக கையில் ஈய வாளி எடுத்து வந்து குளிப்பார்கள். பிரைவேட் ஹாஸ்டலில் கண்டிப்பு அதிகம்.

எங்களுக்கு பிளஸ் டூ படிக்கும் போது அரசு மாணவர் விடுதியில் இடம் கிடைத்தது. அது ஆதி திராவிடர் மாணவர் விடுதி. இருந்தாலும் பி.சி மாணவர்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு உண்டு. எனவே நாங்கள் கொஞ்சம் பேர் தனியாக ஒரு மூலையில் இருந்தோம். விடுதியில் தனித் தனியாக ரூம் எல்லாம் கிடையாது. இரண்டு பெரிய ஹால் இருக்கும். சுவர் ஓரமாக பெட்டியை வைத்து விட்டு அருகே பாய் விரித்து உட்கார்ந்து கொள்வோம். விடுதிக் கட்டடமும் மிகப் பழையது.

காலையில் பெரும்பாலும் வெண் பொங்கல், மதியம் சாதம் மற்றும் காய்கறி கலந்த சாம்பார். சாம்பார் என்று மட்டும் சொல்லாமல் காய்கறி கலந்த சாம்பார் என்று சொல்லும் போதே உங்களுக்குப் புரிந்திருக்கும். ஆமாம் காய்கறி என்று தனியாக ஏதும் இல்லை. மிளகு இருந்தால் அது வெண் பொங்கல். இல்லை என்றால் அது தக்காளி சாதம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் எங்கள் எல்லோர் பெட்டியிலும் ஊறுகாய் இருக்கும். ஊருக்குப் போய் விட்டு வரும் போதெல்லாம் ஊறுகாய் கொண்டு வந்து விடுவோம். பல நேரங்களில் ஊறுகாய் குழம்பின் வேலையையும் சேர்த்தே செய்திருக்கிறது. ‘அம்மா வந்தாள்’ அப்பு சாப்பிட்ட சாப்பாட்டிற்கும் நான் சாப்பிட்ட ஹாஸ்டல் சாப்பாட்டிற்கும் வித்தியாசம் ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன்.  இரவு சாப்பாடு ஆறு மணிக்கே போட்டு விடுவார்கள். தினமும் ரசம் சாதமும் பொரிகடலை துவையலும் தான் இரவு மெனு. நானெல்லாம் ஒரு நாளைக்கு நாலு வேளை,  ஐந்து வேளை சாப்பிட்ட ஆள். விழித்திருந்து படிக்கும் இரவுகளில் பசி எடுக்கும். பள்ளியின் பின்புறம் பள்ளிக்குச் சொந்தமான தென்னை மரங்கள் இருந்தன.  முக்கால் வாசி நாட்கள் எங்களின் பசி போக்கியது அந்த மரங்களின் தேங்காய்கள் தான். முத்துமாரி தான் பெரும்பாலும் மரம் ஏறுவான். நாங்கள் போர்வையை கீழே பிடித்துக் கொள்வோம். அப்போதுதானே சத்தம் வராது.. ஒரு கல்லை எடுத்து கீழே விழுந்த தேங்காய் மீது போட்டு இரண்டாக உடைத்து, தண்ணீர் எல்லாம் கொட்டி விட தேங்காயை எடுத்து சாப்பிடுவோம். இதற்கும் இன்ஸ்பெக்சன் உண்டு. இரண்டு தடவை ஹெட் மாஸ்டரிடம் பிடிபட்டு  அடி வாங்கி இருக்கிறோம்.    

கோ-எட் தான் என்றாலும் நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. இரண்டு வருடம் சேர்ந்து படித்திருந்தும் எந்தப் பெண்ணுடனும் பேசியதில்லை என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். பிரேயர் தொடங்குவதற்கு முதலில் ஒரு பெல் அடிக்கும். அணைத்து வகுப்புகளில் இருக்கும் பெண்கள் மட்டும்   பிரேயருக்குச் செல்ல வேண்டும். அடுத்த பெல் அடிக்கும் போது தான் ஆண்கள் செல்ல வேண்டும். இதைப் போலவே பிரேயர் முடியும் போது, மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளி முடியும் போது என எல்லாவற்றிக்கும் இரண்டு பெல் அடிக்கும். ஒரே நேரத்தில் சென்றால் பேசிக் கொள்ளவும், தெரியாமலோ அல்லது தெரிந்தோ இடித்துக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு என்பதால் இந்த இரண்டு பெல் கண்டு பிடிப்பு. வகுப்பில் பென்சிலோ பேனாவோ வேண்டும் என்றால் நாம் ஆசிரியரிடம் தான் கேட்க வேண்டும். பெரும்பாலும் பெண்கள் மட்டுமே எக்ஸ்ட்ரா பேனா வைத்திருப்பார்கள் என்பதால் அவர்கள் ஆசிரியரிடம் கொடுப்பார்கள். அவர் நமக்குத் தருவார். திரும்பக் கொடுக்கும் போதும் இந்த ‘ஆபரேடிங் புரோசீசர்’ பாலோ பண்ண வேண்டும்.   ஆனாலும் இதனை தொடர்ந்து செய்ய முடியாது. அடி பிண்ணி எடுத்து விடுவார்கள்.

ஹாஸ்டலில் இடம் கிடைத்தவுடன் வார்டன் சொன்னார். அவர் தான் ரொம்ப ரெகமண்ட் செய்ததாகவும் இல்லை என்றால் இடம் கிடைத்திருக்காது எனவும்... ரொம்ப நன்றி சார் என்று சொன்னோம்.
நல்லா படிச்சு சேட்ட எதுவும் பண்ணாம தங்கி இருங்க.. அது போதும் என்று சொன்னவருக்கு எங்கள் ‘நன்றியை’ நன்றாக காண்பித்தோம். அது...