~Hello!
~Ya, tell me Somu!
~What are the Destination charges applicable for
Flex shipments?
~I think USD 0.08 per KG somu!
~Any other charges like customs clearance or
something?
~No idea..
~Why your voice is dull today? Are you not well?
~Somu, I am Tania, Whom you thought ?
~Sorry Tania, I tried Yamini’s no but I don’t know
how I saved your mobile no in the name of Yamini..
~No issue somu, please note down Yamini’s no.
9677………
மேற்கண்ட உரையாடல்
நடந்தது நேற்று. ‘தானியா’ எங்கள் அலுவலகத்தில்
ஆறு மாதங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதத்திற்கு முன்பு
ராஜினாமா செய்த பெண்.
‘தானியா’ மாடர்ன் டிரெஸ் அணிந்து வரும் மங்கைப் பருவப்
பெண். அழகு சாதனப் பொருட்களை சரியாக உபயோகிக்கத் தெரிந்ததனால் அழகாகத் தெரியும் ஆங்கிலோ இந்தியப்
பெண். சினிமாப் படங்களின் பாடல் காட்சிகளில் ஹீரோயின் அணியும் உடைகளை சாதாரணமாக அலுவலகத்திற்கு
அணிந்து வரும் . கஸ்டமர் சர்வீஸ் டிபார்ட்மென்ட்டில் அசிஸ்டன்ட் மேனேஜர்
ஆக வேலை பார்த்தது.
அது என்ன காரணமோ
தெரியவில்லை. சில பேரை பார்த்தவுடனேயே பிடிக்காமல் போய் விடுகிறது. எந்தக்
காரணமும் இன்றி வெறுக்க ஆரம்பிக்கின்றேன். இப்படித்தான்... தானியாவையும்
பிடிக்கவில்லை. இத்தனைக்கும் அது வேலை செய்தது வேறு டிபார்ட்மென்ட், இருந்தாலும்
சமயம் கிடைக்கும் போதெல்லாம் மெயிலில் வெறுப்பை உமிழ ஆரம்பித்திருந்தேன்.
உதாரணமாக 'ஷிப்மென்ட்
டெர்ம்ஸ்' எதுவும் தெரியவில்லை? ஏன் ப்ரீ அலெர்ட் டாகுமென்ட்ஸ் தாமதமாக
அனுப்புகின்றாய் என.
ஒரு நாள்
இன்டர்காமில் அழைத்து தனக்கு வேலை அவ்வளவாகத் தெரியாது, ஆனால் நிறைய கற்றுக் கொள்ள
வேண்டும் என்று நினைத்து தான் இந்த கம்பெனிக்கு வேலைக்கு வந்திருப்பதாகவும்,
இப்படி எல்லோரையும் காப்பியில் வைத்து மெயில் அனுப்புவது தனக்கு சங்கடமாக
இருப்பதாகவும், தேவைப்பட்டால் நேரில் வந்து விளக்கம் அளிக்கத் தயாராக
இருப்பதாகவும் சொன்னது. அதற்குப் பின்பு நான் எதுவும் கம்ப்ளைன்ட் செய்யவில்லை.
இதற்குப் பின்னான
உளவியல் காரணம் என்னவாக இருக்கக் கூடும். எதற்கு நான் தானியாவை விட அல்லது
மற்றவர்களை விட அதிக விஷயம் தெரிந்ததாக
காட்டிக்கொள்ள வேண்டும். உண்மையில் ஒருவரை விட ‘விஷயம்’ அதிகம் தெரிந்திருக்க
வேண்டியது அவசியம் தானா? அப்படியே தெரிந்திருந்தாலும் அன்பாக சொல்லிக்
கொடுத்திருக்க வேண்டியதை எதற்கு அலட்டலாக சொல்லிக் கொடுக்கின்றேன். உண்மையில் மற்றவர்க்கு
தெரியாததை சொல்லிக் கொடுக்கிறோமா அல்லது எனக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது என்று
பார்! என்று வியக்க வைப்பது மட்டுமே அதன் நோக்கமா.
தெரியாதவனுக்கு
தெரியாததை சொல்லித்தருவதெல்லாம் ‘தெரிந்ததை சொல்லி திகைக்க வைப்பதாகவே முடிகிறது’
பண்டிகை நாட்களில்
தவறாமல் தானியாவின் வாழ்த்து மெசேஜ் வந்து விடுகின்றது. ஒரு நாள் மொபைலில் அழைத்து
வாழ்த்து சொன்ன போது உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் சோமு என்றது. எதுக்கு
என்று கேட்டதற்கு ‘என்னை யாரும் ஒன்னும்
தெரியாதவள் என்று இதற்கு முன்பு வேலை பார்த்த கம்பனிகளில் சொன்னதில்லை. ஆனால்
உங்களின் மெயில்கள் நிறைய கற்றுக் கொள்ள வைத்தன. அவை இந்த புது கம்பெனியில்
நிறையவே உதவுகின்றது என்று நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தது.
ஏன் எனக்குள் இப்படி
ஒரு வெறுப்பு காரணமில்லாமல் வளர்கின்றது. தானியாவிற்கு முன் ஆறுமுகம், வித்யா என
எனக்குள் ஒரு லிஸ்டே இருக்கின்றது.
பிராஞ்ச் மேனேஜர் என்னை காரணமில்லாமல்
திட்டுவதற்கும் இதே போல் ஏதோ ஒன்று தானே காரணமாக இருக்கக் கூடும்.
பாலாவின் முள்
முடிச்சு படித்துக் கொண்டிருக்கிறேன். பாலாவின் நாவல்களில் பல விதமான
கதாபாத்திரங்கள் நாவலின் தொடக்கத்தில் வந்து நாவல் முடியும் போது அவர்கள் அனைவரும்
ஏதோ ஒரு புள்ளியில் சந்திப்பார்கள். இனி எல்லாம் சுகமே, பயணிகள் கவனிக்கவும்,
தாயுமானவன், இரும்புக் குதிரைகள், மெர்க்குரி பூக்கள் இன்னும் பல நாவல்கள்
இப்படித் தான் இருக்கும்.
முள் முடிச்சு
நாவலின் கதைக்களம் கொடைக்கானல். விமலா, வின்சென்ட், சூசை, சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் என
பலர் கதை மாந்தர்கள்.
மையக்கருத்து மனிதர்கள்
ஒருவொருக்கொருவர் போட்டு வைத்துக் கொள்ளும் பாதுகாப்பு வளையம் (முள் முடிச்சு)
எப்படி எல்லாம் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே..
மனிதன் இன்னொரு
மனிதன் உள்ளே வர முடியாதபடி முள் வேலி போடுகின்றான். அப்படி மீறி நுழைந்தால் காயம்
ஏற்படுத்த போடப்படும் கம்பி முடிச்சே முள்
முடிச்சு.
எத்தனை முடிச்சை நான்
போடுகின்றேனோ அதே அளவுக்கு அடுத்த மனிதர்கள் போடும் முடிச்சால் காயம் அடைகின்றேன்.
நாவல் படித்து முடித்த
போது சில முடிச்சுகள் அவிழ்ந்திருந்தன. இதை எழுதி முடிக்கும் போது மீதி முடிச்சுக்களும்.....