May 15, 2018

பாலா - ஒரு தலைமுறைப்பாடம்



எழுத்துச் சித்தர் எனது புத்தர் பாலகுமாரன் மறைந்த நாள். என்னமாச்சும் எழுதணும் பாலா மாதிரி ஒரு எழுத்தாளனா வரனும் என எழுத ஆசையை தூண்டியவர் பாலகுமாரன். எப்படி எனக்கு பாலா அறிமுகம் ஆனார்? காமிக்ஸ் புத்தகத்திலிருந்து முன்னேற்றம் அடைந்த நாளில் ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், ஆர்னிகா நாசர் என க்ரைம் கதை எழுத்தாளர்களைப படித்து சலிப்படைந்த நாட்களில் பாலா மெர்குரிப் பூக்களில் அறிமுகம் ஆனார்
என்ன கதைடா இது..எப்பிடி இந்த மனுஷன் வாழ்க்கைக்கு இவ்வளவு அருகில் சென்று பார்த்த மாதிரி எழுதிருக்கார் என வியந்த நாட்களில் அறிமுகமானது பயணிகள் கவனிக்கவும் நாவல்.
இன்னமும் திரிசூலம் ரயில் நிலையத்தில் ஜார்ஜினாவையோ சத்தி என்ற சத்ய நாராயனனையோ பார்த்து விட மாட்டோமா என ஏங்க வைக்கும் கதை மாந்தர்களை படைத்தது பாலாவின் சிறப்பு.

கண்களில் நீர் வழிய வழிய ஹாஸ்டலில் இரவு வெகு நேரம் உறங்காமல் யோசித்துக் கொண்டிருந்த அழகான நாட்கள் அவை. அதற்குப் பின் எங்கு சென்றாலும் நாவல், பதிப்பகம் என எதையும் பார்க்காமல் பாலாவின் படம் பார்த்து புத்தகங்களை வாங்கியும் நூலகத்திலும் படித்தது உண்டு.
நின்று போன திருமணத்தில் அதில் உபயோகிக்கப்பட்ட பாலிகை (நாற்று ) செடிகளை நீர் நிலையில் சென்று கரைக்கும் பெண் (அகல்யா என்று ஞாபகம் ) தலையணை பூக்களில் வரும் அந்த பெண் இஞ்சீனியர் என மாந்தர்கள் மனதினில் வாழ்கின்றார்கள்
விலகி நின்று உற்று கவனிக்க சொல்லிக் கொடுத்தவர் பாலா. சொல்லிக் கொடுத்தவன் தகப்பன் எனில் எனக்கு ஆயிரம் தகப்பன்கள்.. உணவை தேடி விரும்பி சாப்பிடுபவன் அற்பன் என வாழ்க்கை பாடம் படித்தது நிறைய.
முதன் முதலில் அலுவலகத்தில் எனது பேச்சு முறையை வைத்து நீ பாலகுமாரன் நாவல் படிப்பியா எனக் கேட்ட மணிமாலா அக்கா சொன்னது இன்னமும் நினைவில் இருக்கிறன்றது. ரொம்ப படிக்காத..உருப்படாம போயிருவ என்று..
சரி சரி....நானும் படிப்பேன் ...எனக்கும் கொடு என்று அவர்களும் படித்து விட்டு கொடுப்பார்கள்.
பெண்களை மதிக்க கற்றுக் கொடுத்தவர் பாலா..பாலகுமாரனை உள் வாங்கி படித்த எவரும் பெண்களை மரியாதை இல்லாமல் பேசவோ நடத்தவோ மாட்டார்கள். இனி எல்லாம் சுகமே சொல்லித் தரும்.

பின்னான நாட்களில் அவர் ஆன்மிகத்தில் பயணம் செய்து உடையார் எழுத ஆரம்பித்தார். யோகி ராம் சுரத் குமார் என்று எங்கயோ சென்று விட்டார்.
இடக்கை மணலை
வலக்கைக்கு மாற்றி
நகக்கண் வலிக்கின்றது
நாளையேனும் மறவாமல் வா
என்ற காதல் கவிதை
குதிரை கவிதைகள் என கவிதை உலகிலும் பாலா ஆளுமை செலுத்தினார்.
அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.