Showing posts with label உறவுகள். Show all posts
Showing posts with label உறவுகள். Show all posts

September 28, 2012

தாத்தா


இன்று தாத்தா ஹாஸ்பிடலிருந்து வீட்டுக்கு திரும்பினார். தாத்தாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம். பத்து வருடங்களுக்கு முன்பு பை பாஸ் சர்ஜரி செய்திருந்தார். சும்மா காய்ச்சல் என்று இப்போது டெஸ்டுக்கு சென்றவர்க்கு பல்ஸ் ரேட் மிகவும் குறைவாக இருக்கவே அட்மிட் செய்து இரண்டு நாட்களாக அவரும், அவருக்காக நாங்களும் தூக்கம் தொலைத்தோம்.


மூப்பு, பிணியிலிருந்து மீள வேண்டும் என்ற சித்தார்த்தனின் கனவு தான் எவ்வளவு பெரிய கட்டடங்களாக வளர்ந்திருக்கின்றது என்று இந்திரா பார்த்தசாரதி ஒரு நாவலில் ஹாஸ்பிடல் பற்றி எழுதிருப்பார். ஒரு சிறிய இடத்தில் ஆரம்பிக்கும் ஒரு நர்சிங் ஹோம் ஒரு வருடத்தில் பக்கத்தில் இருக்கும் இடங்களில் எல்லாம் விரவிப் பரவுவது எதனைக் காட்டுகிறது. உண்மையில் ஹாஸ்பிடல்களின் வளர்ச்சியும், டாஸ்மாக் விற்பனை வளர்ச்சியும் எதனைக் காட்டுகிறது. ஒரு ஆரோக்யமான சமுதாயத்தையா?
இன்னமும் புரியாத புதிராக இருப்பது ஹாஸ்பிடல் பில்லும் டாக்டர்களின் கையெழுத்தும் தான்.. ஐந்தரை மணிக்கு அல்லது ஆறு மணிக்கு ஒரு துண்டுப் பேப்பர் கொடுக்கின்றார்கள். அது மறு நாள் எடுக்க வேண்டிய  லேப் டெஸ்ட்டுக்கான சீட்.. வேறு வேறு நோய்களுக்காக வந்திருக்கும் எல்லா நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான ப்ளட் டெஸ்ட் அல்லது யூரின் டெஸ்ட்.. எல்லாம் கூட்டமாக கவுண்டரில் பணம் கட்டி கீழே லேப்பில் கொடுப்போம். அது எப்படி எல்லா நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியான ரிசல்ட் வருகின்றது?



அறியாமையே வரம் என்பது எவ்வளவு பெரிய உண்மை! எங்கள் கிராமத்தில் சாவு என்பது திடீர் என்று தான் வரும்.  ஹாஸ்பிடல் சென்று அங்கு ‘உனக்கு இந்த வியாதி!  இவ்வளவு நாள் தான் இருப்பாய்’ என்பதற்கோ அல்லது இவ்வளவு செலவானால் காப்பற்றலாம் என்பதற்கோ அவ்வளவு வாய்ப்பு இருக்காது... 

வயக்காட்ல இருந்து வந்த மனுஷன் பொஞ்சாதிக்கிட்ட நெஞ்சக் கரிக்கிற மாதிரி இருக்கும்மா’ கொஞ்சம் தண்ணி கொடுன்னு கேட்டுருக்காரு... அந்தப் புள்ள தண்ணிய எடுத்துட்டு வரதக்குள்ள அப்படியே கல்தூன்ல சாஞ்சிட்டாரு’. கொடுத்து வச்ச மனுஷன், ஒரு நோய் நொடின்னு படுக்கைல விழுந்து கெடக்காம’ படக்குன்னு போய்ட்டாரு... என்ன ஒரு வருத்தம்னா, இந்தக் கடைசிப் புள்ளய ஒருத்தன் கைல புடிச்சு கொடுத்துட்டு போயிர்க்கலாம்’, சரி நம்ம கைல என்ன இருக்கு எல்லாம் அவங் கைல.. மரத்த வச்சவன் தண்ணிய ஊத்துவான்’  என்று பெரும்பாலானவர்களின் சாவுகளுக்கு வந்திருந்தவர்களின் பேச்சு இப்படியாகத் தான் இருக்கும்.

சுகர், ரத்த அழுத்தம், கிட்னி என எந்தப் பிரச்சினைக்கும் டெஸ்ட்டுக்கு சென்றது கிடையாது.. அவன் மேல் பாரத்தைப் பொட்டு விபூதியை எடுத்துப் பூசி விட்டு படுத்துக் கொண்டே பிழைத்துக் கிடக்கும் பெருசுகள் இன்னும் நிறையப் பேர் இருக்கின்றார்கள். இன்னும் அம்மாவுக்கு ஹாஸ்பிடல் வருவதற்குப் பிடிக்காது. காய்ச்சலோ, கால் வலியோ, அப்பனே முருகா காப்பாத்து என்று நேரடியாக கடவுளிடம் தான் ட்ரீட்மென்ட் எடுப்பது...

தாத்தாவிற்கு கோபம் என்பது நாமெல்லாம் சாப்பிடுவது, தூங்குவது போல ஒன்று.. சப்பாத்தி நல்லா இல்லை என்று தட்டை தெருவில் எறிந்திருக்கிறார்.. அத்தை எங்கோ விஷேசத்திற்கு சென்று விட்டு தாமதமாக வந்ததற்காக வீட்டைத் திறக்காமல் இரவு முழுதும் வெளியில் நிற்க வைத்திருக்கிறார்.. இப்போதும் எதற்காக கோபப்படுவார் என்று யாராலும் ஊகிக்க முடியாது..

முதலில் செய்த ஆபரேசனின் போது உடனிருந்து கவனித்துக் கொண்டது நான் தான். அதுவரை அவர் பார்த்து வந்த பைனான்ஸ் கம்பெனி எனது பொறுப்பில் வந்தது.. இது தான் சென்னைக்கு வந்த எனக்கு முதல் வேலை. ஒரு நாள் ஆபிஸ் லேட்டாகத் திறந்ததற்கு, நாளையிலிர்ந்து நீ போக வேண்டாம் என்று சொல்லி விட்டார்..
தாத்தா ரொம்பவும் ப்ராக்டிகல்.. ‘சரவணா.. தங்கச்சி வீடு தான் இருக்கே.. இங்கேயே சாப்பிட்டுக்கிடலாம்னு நினைக்கக் கூடாது.. நீயும் அண்ணனும் சமைச்சுத் தான் சாப்பிடனும்னு’ வேற ஏரியாவிலிருந்து இங்கே குடி வரும் போது சொன்னார். இன்றும் அவர் இருக்கும் என் தங்கை வீட்டில் தண்ணீர் கூடக் குடிக்காமல் தவிர்த்து வருகின்றேன்.
ஆனால் சித்தி ‘ இங்க இவ்வளவு பேர் இருக்கோம்... நீங்க தனியா சமைச்சு சாப்பிடனுமாடா? ஒழுங்கா இங்க வந்து சாப்பிடுங்க என்று அன்பாக மிரட்டினார்.. இல்ல சித்தி நாங்க வர லேட்டா ஆகும். அதனால சமையல் பண்ணியே சாப்பிடுறோம்  என்று மறுத்து விட்டோம்.
சரிடா அப்படின்னா ஞாயித்துக் கிழமை மட்டுமாவது இங்க சாப்பிடுங்கடா என்று சொல்லி ஒவ்வொரு ஞாயிறும் தங்கைகளை அனுப்பி சாப்பிட வரச் சொல்வார்கள்..

இந்த சித்தி தாத்தாவின் முதல் பெண். தாத்தா எவ்வளவு ப்ராக்டிகலோ அதற்கு நேர் மாறாக என் சித்தி அவ்வளவு செண்டிமெண்ட்.. ( சித்தியைப் பற்றி எழுத வேண்டுமானால் அது தனியாக இரண்டு பிளாக் வரும்... அதனால் இப்போது வேண்டாம் )


ப்ராக்டிகல் ஆக இருக்கின்றேன் எனச் சொல்லும் தாத்தா மாதிரி ஆட்களுக்கு பெரும்பாலும் எந்தக் கெட்ட பழக்கங்களும் இருக்காது.. தாத்தா மட்டுமல்ல அவரின் இரண்டு பையன்களுக்கும் எந்தக் கெட்ட பழக்கங்களும் ஏற்பட்டு விடாதவாறு வளர்த்தது அவரின் சாதனை.

சில விசயங்களில் கறார் காட்டினாலும் பல நேரங்களில் பாசக்காரர் தான். என்னையா வேலைக்கு ஆர்டர் வந்திருக்காமே... செருப்பு போட்டுக் கிட்டா போறது.. வாயா என்று கடைக்குக் கூட்டிட்டுப் போய் ஷூ வும், டை யும் வாங்கிக் கொடுத்தவர். ஒரு இடம் வருதுய்யா.. வீடு கட்ட வாங்கிப் போடுய்யா என்று அவர் சொன்ன போது, என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது.. அங்கெ இங்கே பொரட்டி தயார் செய்தபோதும் ஐம்பது ஆயிரம் குறைந்தது.. வேலைக்குப் போன புதிதில் தான் வாங்கி, இது வரை கழட்டாமல் இருந்த செயினை அடகு வைத்து எனக்குக் கொடுத்தவர். உங்கப்பா கஷ்டப்பட்டத்துக்கு நீங்களெல்லாம் நல்லா வரணும்யா என்று எங்கள் வளர்ச்சியில் பெருமிதம் கொள்பவர்.

அறுபதாம் கல்யாணத்திற்கு நான் வாங்கிக் கொடுத்த பட்டு வேட்டியைக் கட்டிக் கொண்டு, பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு, என்னையா, நல்லா இருக்கனா என்று குழந்தையாய் கேட்டார். ஈஸி சேரில் படுத்துக் கொண்டு இதத் தான்யா வாங்கனும்னு நினச்சேன். கரெக்டா வாங்கிக் கொடுத்துட்ட.. ரொம்ப தேங்க்ஸ் என்று கை குலுக்கினார்.     

குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து படிப் படியாக முன்னேறி இரண்டு பெண்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து, இரண்டு பையன்களுக்கும் வீடு கட்டி, பேரன் பேத்திகளுக்கும் திருமணம் செய்து பார்க்கப் போகும் எங்கள் தாத்தா எங்களுக்கு எல்லாம் ரோல் மாடல்.

வேண்டிக் கொள்கிறேன் இத்தருணத்தில்.. அவர் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ வேண்டுமாய்...           

September 20, 2012

அப்பா - II


                     அப்பாவின் வலப்புறம் இருப்பது சஞ்சய் , இடப்புறம் ஹேமந்த் (அண்ணன் மகன்)

ஆனால் வாழ்க்கை நாம் நினைப்பது போல மட்டுமே நடப்பதில்லையே.. அப்பாவிற்கு விவசாயத்தின் மீது இருந்த ஆர்வம், சித்தப்பா கிணறு வெட்டித் தந்தவுடன் மிகவும் அதிகமானது.

ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் ஏதாவது ஒரு புதிய மரச் செடியை நட்டு வைத்திருப்பதை பார்க்கலாம். சின்ன வயதில் இப்போது சஞ்சய் கேட்கும் கேள்விகள் போலவே நானும் தொனத்தொன வென கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பேன். மிகவும் பொறுமையாக பதில் சொல்வார். எதற்கெடுத்தாலும் பிள்ளைகளை அடித்து வளர்க்கும் கிராம வழக்கத்தில் எங்களை ஒரு முறை கூட அப்பா  அடித்ததே இல்லை.

வாழ்க்கை நடத்த பணம் வேண்டும். அந்தப் பணத்தை சம்பாதிக்க வேலைக்கு வந்த நாம், ஒரு கட்டத்தில் வேலை பார்ப்பதையே வாழ்க்கையாக்கிக் கொள்கின்றோம். இந்த மாற்றம் நம்மை அறியாமலேயே நமக்குள் நடந்து விடுகின்றது. அதனால் தான் மனைவி உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கும்போது, இன்னைக்கு முக்கியமான வேலை இருக்கு, ராத்திரி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் என்று சொல்ல வைக்கின்றது.

ஆனால் விவசாயம் சார்ந்த தொழிலில் இப்படி நடப்பதில்லை. நாங்கள் சிறு வயதிலேயே விவசாய வேலைகளைப் பார்த்தோம். குடும்பமே சேர்ந்து வேலை பார்க்கும் குலத் தொழில் விவசாயம். எங்களின் பொழுதுபோக்கு எல்லாமே காடுகளிலோ அல்லது வயல்களிலோ தான். அதனால் விவசாய வேலை செய்வது இங்கே நாம் வேலைக்குச் செல்வது போல அல்ல.    

ஊரிலிருந்து ஒரு நாள் அம்மா போன் செய்தார்கள். அப்பாவுக்கு பூச்சி கடிச்சுருச்சுப்பா. சின்னக்குட்டி மருந்து கொடுத்திருக்கார் என்று. சின்னக் குட்டி எங்கள் ஊரின் பாம்புக்கடிக்குக் கூட  மருந்து கொடுத்து காப்பாற்றும் பச்சிலை மருத்துவர். அப்பாவிடம் பேசிய போது தான் மருந்து சாப்பிட்டு வருவதாகவும் ஒன்னும் பயப்படவேண்டாம் என்றும் சொல்லி விட்டார்கள்.

ஆனாலும் ஹாஸ்பிடலுக்கு போகுமாறு சொன்னோம்.  நல்ல பாம்பு கடித்தவர்களையே காப்பாற்றிய சின்னக்குட்டி என்னைக் காப்பாற்ற மாட்டானாப்பா’ என்று சொல்லி மருந்து சாப்பிட்டு,  பத்தியம் இருந்து வந்தார்.

அதற்கு அடுத்த நாள் எனக்கு ஏதோ விபரீதம் நடக்கப் போவதாக உள்ளுணர்வு சொல்லியது. மதுரையில் ட்ராவல்ஸ் வைத்துள்ள மாமாவிற்கு போன் செய்து, கார் எடுத்துக் கொண்டு ஊருக்குப் போய் அப்பாவை உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணுமாறு சொல்லிவிட்டு அன்று இரவே மதுரை செல்ல முடிவு செய்தேன். நான் வருவதை அம்மாவுக்குச் சொல்லி விடலாம் என்று போன் செய்யும் போது தான், அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தான் அப்பா இறந்து போனார்.

ஞானமூர்த்தி சித்தப்பா அம்மாவிடம் இருந்து போனை வாங்கி அப்பா நம்மள விட்டுட்டு போயிட்டார் என்றார். நம்பவே முடியவில்லை. ஒரு மனிதனுக்கு சாவு இப்படித் திடீர் என்று வருமா? கூட இருக்கும் எல்லோரையும் விட்டு விட்டு எப்படி திடீர்னு.... இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே கண்களில் கண்ணீர் வர,  வாய் விட்டு அழுது விட்டேன். ட்ரெயினில் பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர், ஆம்புள புள்ள அழக் கூடாதுப்பா.. அடுத்து நடக்க வேண்டியத யோசி. கஷ்டம் தான்.. என்ன செய்றது என்று ஆறுதல் படுத்தினார்.

ஆனால் அன்று தோன்றிய உள்ளுணர்வு முதல் நாள் வந்திருந்தால் நான் என் அப்பாவைக் காப்பாற்றி இருப்பேன். ஏன் வரவில்லை?

வீட்டுக்குப் போய் பார்த்தால், ‘நான் என் கடமையை முடித்து விட்டேன்.. உங்களிடம் வந்து தங்கி சாப்பிடும் பலன் எதுவும் எனக்கு  வேண்டாம் என்று தீர்மானித்தவராக, வாழ்க்கையில் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்து ஆளாக்கிய என் அப்பா அந்த அன்புக்கடனை திரும்ப அடைக்கவே முடியாதபடி எங்களைத் தவிக்க விட்டுச் சென்று விட்டார்.

காரணங்கள் ஆயிரம் சொன்னார்கள். மருந்து சாப்பிடும் போது பத்தியம் இருக்க வேண்டும்.  ஆனால் இரண்டு நாளுக்கு முன்பு கருவாட்டுக் குழம்பு வைக்கச் சொல்லி சாப்பிட்டார். அது தான் அவரின் உயிரைப் பறித்தது என்றும், அவருக்கு தெரிந்து விட்டது, தான் சாகப் போகிறோம் என்று அதனால் தான் கடைசி விருப்பமாக கருவாட்டுக் குழம்பை வைக்கச் சொல்லி சாப்பிட்டார் என்றும் ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். கூடி அழுது, கொண்டு போய் கொளுத்தி விட்டோம்.

ஒரு மனிதன் எல்லோர்க்கும் நல்லவனாக வாழ்ந்து மறைய முடியுமா? ஆனால் அப்பா அப்படித்தான் வாழ்ந்து மறைந்தார்.

பையில் காசு இருந்தால் எல்லோர்க்கும் செலவழித்து, இல்லை என்றால் கூச்சப் படாமல் கேட்டு,  என அவர் மட்டும் குழந்தையாகவே வாழ்ந்து விட்டார். நம் உலகில் பார்த்தோம் என்றால் அவர் பொழைக்கத் தெரியாதவராக இருந்திருக்கலாம்.. ஆனால் அவர் வாழ்ந்த உலகத்திற்கு  நம்மால் போகவே முடியாதபடி நாம் நம் வாழ்க்கைப் பயணத்தைத் தேர்ந்து எடுத்திருக்கிறோம்.

ஊரில் இருந்து அவர் இங்கு வந்து தங்கியிருக்கும் போது தினமும் செலவுக்கு என்று கொடுக்கும் பணத்தை ஒரே நாளில் செலவழித்து விடுவார். எல்லாப் பேரன்களுக்கும், மருமகள்களுக்கும் சாக்லெட் வாங்கிக் கொடுப்பார்.

மறு நாள் ஆபீஸ் கிளம்பும் போது ஒரு சின்னப் பையன் போல என் முகத்தையே பார்ப்பார். என்னப்பா என்று கேட்டால் ‘செலவுக்கு காசு குடுப்பா’ என்பார். நேத்து குடுத்த இருநூறு ரூபாய் அதுக்குள்ள செலவு பண்ணிட்டீங்களா? என்று கேட்டால், எவ்வளவு சாக்லேட் வாங்க வேண்டியிருக்கு.. காலி ஆயிடுசுப்பா என்று சிரித்தபடி சொல்லும் போது நிசமாகவே ஒரு குழந்தையின் அழகு இருக்கும்..

ஊரில் பாம்பை, பாம்பு என்று சொல்ல மாட்டார்கள். பூச்சி என்று தான் சொல்வார்கள். நல்ல பாம்பைக் கூட நல்ல பூச்சி என்று தான் சொல்வார்கள்.


ஆனால் அப்பாவை பூச்சி ஏதோ கடிச்சிடுச்சுப்பா என்று அம்மா சொன்ன போது, ஏதோ பூச்சி தான் கடிச்சிருக்கும் போல என்று என்னை நினைக்க வைத்தது இந்த வேலையின், இயந்திரமயமான நகரத்தின், மனிதாபிமானம், அன்பு எல்லாம் பார்க்காமல் ரேஸ் குதிரை போல நம்மை ஓட வைக்கும் இந்த வாழ்க்கை முறையின் வெற்றி..  
சொர்க்கம் என்பதும் கடவுள் என்பதும் உண்மையாக இருந்தால், அப்பா சொர்க்கத்தில் இருப்பார். கடவுளின் பக்கத்தில் இருப்பார். கடவுளிடம் காசு வாங்கி அவரின் பிள்ளைகளுக்கும் பேரன்களுக்கும் சாக்லெட் வாங்கிக் கொடுத்துக் கொண்டு...    

September 18, 2012

அப்பா



அப்பா எங்கள் தாத்தா குடும்பத்தின் மூத்த ஆண் வாரிசு. அவருக்கு முன்னால் என் அத்தை ஒருவர் இருக்கின்றார். அப்பாவுக்குச் சின்ன வயதாக இருக்கும் போதே அவரின் அம்மா இறந்து விட்டார்கள். தாத்தா எங்கள் ஊரின் கணக்கப்பிள்ளை ஆக வேலை பார்த்தார்கள். எங்கள் குடும்பத்தை ‘கணக்க வீடு’ என்று தான் அழைப்பார்கள். தாத்தாவிற்கு இரண்டாவது திருமணம் நடந்து அப்புறம் எனக்கு நான்கு சித்தப்பாக்களையும், மூன்று அத்தைகளையும் தாத்தா உற்பத்தி செய்தார்.

இரண்டாம் தாய்க்கே உரிய சினிமாத்தனமான கொடுமைகள் அத்தைக்கும் அப்பாவிற்கும் நடக்கவில்லை, என்றாலும் எங்கள் சித்தப்பாக்களுக்கும் மற்ற அத்தைகளுக்கும் கிடைத்த அன்பும் அரவணைப்பும் கிடைத்திருக்கும் என்று தோன்றவில்லை. முதல் இரண்டு பிள்ளைகளை அதுவும் ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் பெற்று விட்டு அடுத்து வந்த பெண்டாட்டியுடன் ஏழு பிள்ளைகளைப் பெற்ற எங்கள் தாத்தா எவ்வளவு கொடுமைக்காரராக இருந்திருக்கக்கூடும். அவர் எப்படி என் அத்தைக்கும் அப்பாவுக்கும் பாசத்தைக் காட்டி வளர்த்திருப்பார். எல்லாப் பசங்களுக்கும் கூழும், வெங்காயமும் கொடுத்து விட்டு நெல்லுச் சோறு சாப்பிட்ட புண்ணியவான் எங்கள் தாத்தா.    

இப்படியாக யோசிக்கும் நான் தான் அவருக்குப் பிடிக்காத பேரன்.  என்னை எப்போதும் ‘இவன் மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்பார். (உண்மையில் இது வரை நான் பார்த்த வேலைகளிலேயே எனக்குப் பிடித்த வேலை ஒரு வருட காலம் மாடு மேய்த்தது தான் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது)

ஆனால் அவரின் மகன் வழிப் பேரன்களாக பத்துப் பேர் இருந்தாலும் அவரின் பெயரை எனக்கு மட்டும் வைத்தது என்னே ஒரு நகை முரண். (இப்போது தெரிந்திருக்கும் உங்களுக்கு!  எனது பெயர் எனக்குப் பிடிக்காமல் போனதன் காரணம். சரவணன் என்ற பெயர் என் அம்மா எனக்கு வைத்தது)

ஆனால் அப்பா அவர் இருக்கும் வரை அப்பத்தாவை அம்மா என்று தான் அழைத்தாரே தவிர சின்னம்மா என்று கூப்பிட்டதே இல்லை. மேலும்  எங்களுக்கு அவர் இளம் வயதில் அப்பத்தாவிடம் கஷ்டப்பட்ட கதைகளை, வாழ்ந்த  வரலாற்றை சொன்னதே இல்லை.            

அப்பா அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி. அப்பாவிற்கு திருமணம் நடந்து சொத்து பிரிக்கும் போது எல்லோர்க்கும் சம பங்காக பிரித்து வைத்தார்கள்.  பெரிய வீட்டை ஐந்தாகப் பிரித்ததில் எங்கள் வீடு என்று சொல்லி ஒரு சிறிய அறையைக் கொடுத்தார்கள்.

அப்பா எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அ.தி.மு.கா காரர். (சஞ்சய் பிறந்திருக்கும் போது, ஹாஸ்பிடலில் பார்க்க வந்தவர்,  ஒரு சிறிய அ.தி.மு.கா துண்டை அவன் மேலே போட்டு,  என் கட்சிக்கு ஒரு ஆள் கிடைச்சுட்டாண்டா’ என்று எல்லோரையும் சிரிக்க வைத்தார்). லோக்கல் எம்.எல்.ஏ, மாவட்டச் செயலாளர் இவர்களிடத்தில் எல்லாம் நல்ல அறிமுகம் இருந்தது. அதனை வைத்து தன்னிடம் வருபவர்களுக்கு தேவையான செர்டிபிகேட் வாங்கிக் கொடுப்பது மற்றும் காண்ட்ராக்ட் எடுத்து கண்மாயை ஆழப்படுத்தும் வேலை, ரோடு போடும் வேலை என சிறு சிறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். எங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட விவசாய நிலத்தில், விவசாய வேலைகளை அம்மா பார்த்துக் கொண்டார். அப்பாவிற்கு அப்போது விவசாயத்தில் விருப்பம் இல்லை.

இது வரை நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. குடும்பத்தில் ஓரளவு வருமானம் இருந்து கொண்டு தானிருந்தது. நன்றாக நினைவு இருக்கின்றது.   நான் அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவிற்கு குடிப் பழக்கம் ஆரம்பித்தது அப்போது தான். வரும் வருமானத்தில் முக்கால் வாசியை குடித்தே அழித்தார். கடன் வாங்கி காண்ட்ராக்ட் வேலை பார்த்து, பேமென்ட் வாங்கும் போது திருப்பி கடனை  அடைக்காமல் முழுவதுமாக குடிப்பதற்கே செலவழித்தார். அப்போதுதான் எங்கள் வூருக்கு வந்திருந்த எங்கள் அத்தை (அப்பாவின் அக்கா) அண்ணனை சென்னைக்கு அழைத்துச் சென்று படிக்க வைத்துக் கொள்வதாகச் சொன்னார்கள். அப்பாவும் சரி என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். என் அண்ணனோடு மிகத் தோழமையோடு இப்போதும் இருப்பதற்கு அந்தப் பிரிவே காரணமாகவும் இருக்கலாம். சுமார் பத்து வருடங்கள் என் அண்ணனைப் பார்த்ததே இல்லை. சிறு வயதில் பேனாவிற்கோ, புது நோட்டிற்கோ, மிட்டாய்க்காகவோ அண்ணனோடு சண்டை போடும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அண்ணன் பிளஸ் டூ முடித்து விட்டது. மேலே படிக்க ஆசைதான் என்றாலும் குடும்ப சூழ்நிலை அவ்வளவாக சரியில்லாத காரணத்தால் வேலைக்குப் போக ஆரம்பித்தது. எனக்கு கல்லூரி பீஸ் கட்டியது, ஹாஸ்டல் பீஸ் கட்டியது, என் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தது என எல்லாமே என் அண்ணன் தான் செய்தது. பேஸ் புக்கில் நான் எழுதி இருந்தால் இப்படித்தான் எழுதி இருப்பேன்.  குடும்பத்தின் முதல் பிள்ளை ஆண் என்றால் அதற்குப் பின் வரும் குழந்தைகளுக்கு ரெண்டு அப்பா. பெற்றவர் முதல் அப்பா என்றால் வளர்த்தவர் அண்ணன்அப்பா என்று.

ஆனாலும் அப்பாவால் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்ற ஒரே குறையைத் தவிர சொந்தங்களில், பாசத்தில், குழந்தைகளை கொண்டாடுவதில் எவரும் போட்டி போட முடியாது.

சஞ்சய் அப்போது தான் ‘ஆபுட்டயா’ என்று கேட்க ஆரம்பித்திருந்தான். அந்த ஒரு வார்த்தையைக் கேட்பதற்கு தினமும் போன் பண்ணுவார். போன சஞ்சய்கிட்ட குடுப்பா என்று சொல்வார். அவனும் ‘தாத்தா ஆபுட்டயா’ என்று கேட்பான். அவரின் சிரிப்புச் சத்தம் ஸ்பீக்கர் போன் இல்லாமலேயே எல்லோர்க்கும் கேட்கும்.

அவர் எப்போது போன் செய்து பணம் அனுப்புமாறு கேட்டாலும் நான் எதற்குப்பா பணம் என்று கேட்டதே இல்லை. நான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தபோதிலும் காண்ட்ராக்ட் எடுத்துக் கடன் வைத்தார். பணம் எதுவும் கேட்க மாட்டார். ஆனால் கழுத்தில் சித்தப்பா வாங்கிக் கொடுத்திருந்த செயின் காணாமல் போயிருக்கும். இரண்டு மூன்று தடவை நாங்கள் அவர் அடகு வைத்ததை திருப்பிக் கொடுத்திருக்கிறோம். ஒரு முறை விளையாட்டாய் கேட்டிருக்கிறோம். ஏம்பா, தங்கச்சியக் கட்டிக் கொடுத்தாச்சு. எங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்க.. இப்போ யாருக்காகப்பா காண்ட்ராக்ட் வேலை செஞ்சு சம்பாதிக்கிறீங்க... இன்னும் வேற தங்கச்சி, தம்பின்னு யாராவது இருக்காங்கலாப்பா’ என்று . 'போடா வெட்டிப் பயலே'.. ன்னு சிரிச்சுக் கிட்டே சொன்னார்.

முக்கியமா எங்கள் குடுபத்தின் எல்லா மருமகள்களுக்கும் பிடிச்ச மாமா எங்க அப்பா. எல்லாத் தங்கச்சிகளுக்கும் பிடித்த அண்ணன் , மற்றும் என் அத்தை பெண்களான ‘இரண்டு சித்தி’ களுக்கும் பிடித்த தாய் மாமன்.

சஞ்சய் இப்போது சிரிப்பது எப்படி இருக்கின்றதோ.. அப்பா சிரிப்பதும் அப்படியே இருக்கும்.. வளர்ந்த குழந்தை மாதிரி கள்ளம் கபடமில்லாமல் சிரிப்பார்.

எதனையும் ‘பாசிடிவ்’ ஆகவே பார்த்துப் பழக்கப்பட்டவர். ஏதோ ஒரு விசயத்தில் நடந்த சிறு சண்டையிலிருந்து நான் அதில் சம்மந்தப்பட்ட சித்தப்பா வீட்டுக்கு போகாமல் தவிர்த்து வந்தேன். ஆனால் ஊரில் இருந்து வந்த அப்பா நேராக அந்தத் தம்பி வீட்டுக்குத் தான் சென்றார். அண்ணன் தம்பி நாங்க அடிச்சுகிடுவோம், நீ ஏன்டா போக மாட்டேங்குற.. தம்பி வருத்தப்படுறான் என்று நல்ல விசயத்தை ஞாபகம் வைத்துக்கொண்டும், கெட்ட விசயத்தை அப்போதே மறந்து விடுவதும் அப்பாவின் குணம்.

அண்ணனின் திருமணம் வரை அண்ணனும் நானும் மூன்று வருடங்கள் ஒரு வீட்டில் இருந்தோம். கூட வேறு யாரும் இல்லை.

அப்பா ஊரில் இருந்து வருகிறார் என்ற தகவல் கேட்டதும் கடைக்குப் போய் தேங்காய் எண்னையும் பாண்ட்ஸ் பவுடரும் வாங்கி வைப்போம். நிறைய எண்னை தேய்த்து இடது ஓரம் உச்சி எடுத்து படிய வாரிக்கொள்வார். முகத்தில் பவுடர் போடாமல் வெளியே செல்ல மாட்டார். நானும் அண்ணனும் எண்னையும் பவுடரும் பயன்படுத்துவதில்லை.

எதுக்குப்பா இந்த வயசுல ஊர்ல கஷ்டப்படுறீங்க.. எங்களோட வந்து இருங்கப்பா என்று ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் வற்புறுத்துவோம்.. ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு வேறு காரணத்தைச் சொல்லி மறுத்து விடுவார். அதுவும் இல்லாமல் அவருக்கு இங்கே சும்மா இருப்பது பிடிக்கவில்லை. ஊரில் இருந்தால் அவருக்கு ஏதாவது ஒரு வேலை அல்லது யாராவது பெண் பார்க்க அல்லது பஞ்சாயத்து என அழைத்துச் செல்வார்கள். இங்கே இருப்பது அவரின் உடல் நிலைக்கும் ஒத்துவரவில்லை. இங்கே வந்தால் தான் கைவலி, கால் வலி வருவதாகவும். ஊரில் இருக்கும் போது தான் நன்றாக இருப்பதாகவும் சொல்லுவார்.

குடிப்பதை பத்து வருடங்களுக்கு முன்பே நிறுத்தி விட்டார். வருடந்தோறும் விரதம் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வந்தார்.

ஆனால் சிறு வயதில் பண்ணிய சிறு சிறு  தவறுகளுக்கும் வருந்துபவராய் நல்லவராக திருந்தி, திரும்பவும் விவசாயத்தில் அக்கறை செலுத்தினார். சஞ்சய்க்கும், ஹேமந்த்க்கும் ( அண்ணன் மகன்) ஊரில் சொத்து வாங்கனும்பா என்று சொல்லி அந்த வருடம் கிடைத்த வருமானத்தில் அரைக்காணி நிலமும் வாங்கினார். ஆனால்......                            
   

August 1, 2012

பாலா


போட்டோவில் பார்ப்பதற்கு ரொம்ப நல்ல பிள்ளையாகத் தெரியும் பாலா, செய்யும் சேட்டைகள் யார்க்கும் தெரியாது.

டிவி பார்த்துக் கொண்டிருக்கும் நம் பக்கத்தில் மெதுவாக அமர்ந்து, அப்பாவியாக நம் முகத்தைப் பார்த்தால், அடப்பாவியாக பெட் ரூமில் ஏதோ வேலை செஞ்சு வச்சுருக்குனு அர்த்தம்.

கண்டு பிடிப்பது ரொம்ப ஈஸி. நாம் உள்ளே சென்றவுடன் அது தப்பு பண்ணி வைத்த இடத்தில் போய் நின்று அந்த இடத்தை மறைத்து நிற்கும். அது நெய்ல் பாலிஷ் ஆகவோ, அல்லது ஏதாவது கிரீம் ஆகவோ இருக்கலாம்.

ஆனால் நான் செய்யலப்பா, சஞ்சய் தான் கொட்டினான் என்று அவனை மாட்டி விடும்.

அவன் அலறிப் பதறி அப்பா பொய் சொல்றாப்பா, என்று சொல்வதற்குள் அவனுக்கு ரெண்டு அடி விழுந்திருக்கும். சும்மா இருப்பவனை டேய், வாடா சண்ட போட்டு விளையாடலாம் என்று அழைத்து கொஞ்ச நேரத்தில், அம்மா அடிச்சுட்டான்மா என்று மாட்டி விடும்.

ஆனாலும் சில நேரங்களில், காலு வலிக்குதாடா, வா...அமுக்கி விடுறேன் என்று அவன் காலை அமுக்குவதும், ஏதாவது வேலை சொன்னால் செய்வதுமாக சில நேரங்களில் உண்மையிலேயே நல்ல பிள்ளையாக இருக்கும்.

சேட்ட, சேட்ட என்று ஆரம்பித்தால் ‘ஊரு பட்ட சேட்ட’ என்று முடித்து வைக்கும். நீ எல்லாம் ஒரு அப்பாவாடா? என்று கோவம் காட்டுவதாகட்டும், நான் மதுரைக்கு ஆச்சி வீட்டுக்குப் போறேன் என்று டிரெஸ் பேக் பண்னுவதாகட்டும், பாலாவுக்கு நிகர் பாலா தான்.

எத்தன தடவ சொல்லிருக்கேன், சோறு காய்க்குள்ள போகாம சாப்பிடனும்னு, இப்படி தனியா ஒதுக்கித் தான் சாப்பிடனும், சரியாடா, கைய எடு, நா ஊட்டி விடுறேன் என்று சில நேரங்களில் என் தாயாக சோறு ஊட்டும்.

நான் தான் குளிப்பேன், நான் தான் சோப்பு போடுவேன், நான் தான் பைக் ஓட்டுவேன் என்று எல்லாவற்றையும் தான் தான் செய்வேன் என்று அடம் பிடிக்கிறது.

இன்னைக்கு லீவாப்பா என்று கேட்டு தினமும் எழுந்திருக்கும் பாலாவுக்கு தினமும் லீவாவே இருந்து விடக் கூடாதா என நானும் ஆசைப் படுகிறேன்.

ஒரு ஊர்ல ஒரு குட்டிப் பாப்பா, அவ பேரு ஜானகி. அவளுக்கு அண்ணன் எல்லாம் இல்ல? அவ அப்பா பேரு சோமசுந்தரம் இல்ல, இவங்க அப்பா பேரு வேற, என கதை சொல்லும் பாலாவின் கதைகளில் நிறைய இடம் பெறுவது, இல்ல.... தான்.

நாம் சொல்லும் கதைகளை அப்படியே சிறிது மாற்றி, நமக்கு திரும்ப சொல்லும்.

இப்படித் தான் நேற்று சஞ்சயைக் கன்னத்தில் நன்றாக கிள்ளி விட்டு அவனை அலற வைத்தது. அப்பா.. என்ற அலறல் கேட்டு, ஏன்டா பாப்பா அண்ணன அடிச்ச? என்று சற்று கோபமாகக் கேட்டேன்.

அதற்கு சஞ்சய் சொன்னான் அடிக்கலப்பா, கிள்ளிட்டா என்று

ஏன்டா பாப்பா கிள்ளுன என்று கேட்டால்,

நான் அடிச்சேனா? என்று என்னிடமே திரும்பக் கேட்டது, சரி அடிக்கல, ஏன் கிள்ளுன?

நான் அடிச்சேனா? ஏன் அடிச்சேன்னு சொன்னீங்க என்று திரும்பவும் கேட்டது.

சரி, அடிக்கல ஏன் கிள்ளுன என்று கேட்டால், நீங்க ஏன் அடிச்சேன்னு சொன்னீங்க?

சரி ஏன் கிள்ளுன?
ஏன் அடிச்சன்னு ஏன் கேட்டீங்க, அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க என்கிறது

மீனாவிடம், எப்படி சமாளிக்குது பாரேன்’ என்றால், அவங்க அப்பாவ விடவா? என்று பதில் வருகின்றது.
எனக்கு ஒரு உண்மை தெரிந்து விட்டது

ஆக 2032 ம் வருடம், பெங்களூரில்  நடைபெற்று வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில், அம்மாவிற்காக வாதாடும் வக்கீல் எங்கள் வீட்டில் தான் வளர்ந்து கொண்டிருக்கிறார்
      

தகப்பன்





........அப்புறம் ஏன் என்னைய பெத்தீங்க?

இந்தக் கேள்வியை நீங்கள் உங்கள் அப்பாவிடம் கேட்டிருக்க மாட்டீர்கள் . ஆனால் நான் கேட்டிருக்கிறேன். புது டிரெஸ் வாங்கித் தராத பொங்கல், தீபாவளிப் பண்டிகை நாட்களில், ஹாஸ்டல் பீஸ் கட்டாத நாட்களில் என நிறைய தடவை.

இந்த உலகத்தின் எந்த ஒரு தகப்பனையும் கூனிக் குருக வைக்கும் கேள்வி இது. செய்வதறியாது உள்ளுக்குள் உடைந்து, குடும்பத் தலைவன் என்ற பிம்பம் உடையும் தருணம் அது. இந்தக் கேள்விக்கான பதிலை எந்த ஒரு தகப்பனாலும் தர இயலாது.

பிடிவாதமாகக் கேட்டு அழும் போது, இயலாமை தந்த கோபத்தால் அடிக்கும் அப்பா, இந்தக் கேள்விக்கு நிலை குலைந்து அடிக்காததாலும், எங்கயோ, என்னவோ கஷ்டப் பட்டு, உருட்டிப் பொரட்டி பணம் தந்ததும், இந்தக் கேள்வியை அடிக்கடி கேட்க வைத்தது.

நமது வீடு மட்டும் ஏன் கஷ்டத்தில் இருக்கின்றது, நம்ம அப்பாகிட்ட மட்டும் ஏன் பணம் இல்லை என்று யோசிக்கும் வயசு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், அப்பா எங்கயோ பணம் வைத்திருக்கிறார், ஆனால் நமக்குத் தர மாட்டேங்கிறார் என்று கேனத் தனமாக யோசிக்கும் வயசு. ஆனால் இல்லாமை தந்த வெறுப்பிலும், இயலாமையின் விரக்தியிலும் அப்பா குடிக்க ஆரம்பித்தார். சோறு சமைக்காத, சமைக்க அரிசியும் இல்லாத வீட்டில், பொருள் தேடிச் சென்ற தலைவன், போதையுடன் வீடு திரும்பினால், அந்த வீடு தான் வாழும் நரகம். இந்த நரகத்தில் தான் நான் வாழ்ந்தேன்.

எதற்கும் சண்டை போடும் அம்மா, குடித்து விட்டு வந்தால் கேட்கவா வேண்டும். கண்ணீர் வழிய வழிய அழுது கொண்டே பசியுடன் தூங்கிய நாட்கள் அவை.

அப்பாவிற்கு விவசாயம் ஒத்து வரவில்லை, அம்மாவின் வற்புறுத்தலுக்காக கொஞ்சம் வேலை செய்வார். மிச்சம் இருக்கும் வேலைகளை அம்மா தான் பார்ப்பார்கள். என்னை வளர்த்தது என் வீடு மட்டுமில்லை. ஊரே சேர்ந்து ஊட்டி வளர்த்த பிள்ளை நான். என் முகம் பார்த்தே சாப்பிட்டேனா? சாப்பிடவில்லையா என்று கண்டு பிடிக்கும் பெரியப்பா, இந்தா, இதப் பிள்ளைகளுக்குக் கொடு’ என்று கடைக்குக் காய்கறி வாங்கச் செல்லும் போதெல்லாம், ஏதாவது தின்பண்டம் கொடுத்து அனுப்பும் ‘சொக்கநேந்தல்’ பெரியம்மா என நன்றி சொல்ல வேண்டிய நல்லவர்கள் நிரம்பிய என் ஊர் மட்டும் இல்லை என்றால்........................

நான் கல்லூரியில் படிப்பதற்காக, தன் படிப்பை விட்டு விட்டு வேலைக்குச் சென்ற அண்ணன், தங்கச்சியின் திருமணத்திற்கான செலவுக்காக வாயைக்கட்டி, வயுத்தக்கட்டி சீட்டு போட்டு கடனையும் கட்டியது. அடிமட்டத்தில் இருந்து முன்னுக்கு வந்தோம் என்று பிளாஷ் பேக் சொல்லும் போது சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றது.

ஆனால் அடி வயிற்றில் ஆறு முதல் பத்து வயது வரை வந்த தீ, அந்த பசித் தீ இப்போதும் திகிலூட்டுகின்றது. ஆடி மாதத்தில் அடிக்கும், ஊழிக் காற்றும், எங்கும் பஞ்சப் புயல் வீசிய அந்த இளமைப் பருவமும் தான் இன்னமும் என் மனத்தில் சொல்கின்றது, அதை விடவா இனி நமக்குக் கஷ்டம் வந்து விடப் போகின்றது என்று.

கடவுளிடம் நான் வைக்கும் வேண்டுகோள் இது தான். இந்த உலகத்தின் எந்தப் பிள்ளையும், எந்தத் தகப்பனிடமும், ‘வாங்கித் தர முடியலன்னா அப்புறம் ஏன் என்னப் பெத்தீங்க’.... என்று கேட்கக் கூடாது. மேலும் தகப்பனால் வாங்கித் தர முடியாதது எது ஒன்றும் இருக்கவே கூடாது......

     
 

July 19, 2012

அன்பெனும் பெருமழை




ஏங் கூட பேசாதடா சரவணா? நீ இப்போ பெரிய மனுஷன் ஆயிட்ட. அது எப்புடிடா அவ்வளவு தைரியம் வந்துச்சு.
இல்ல சித்தி, சித்தப்பா தான் சொன்னார், இங்க எல்லோரும் ஒண்ணுதான், ஜாலியா இருங்க’ என்று நான் சொன்னது எனக்கே கேட்கவில்லை.
சொன்னா, குடிப்பியாடா நீ. அப்பா, சித்தப்பா எல்லோரும் குடிக்கிறாங்கன்னா, அவங்க வளப்பு சரி இல்ல. உங்க அப்பத்தா வதவதன்னு பிள்ளைகளைப் பெத்து போட்டதே தவிர ஒன்னையும் ஒழுக்கமா வளக்கல.
ஆனா நீ ஏங்கிட்ட வளந்தவன்டா, நீயாடா இப்படி பண்ண, இனிமே ஏம்மூஞ்சியில முழிக்காதடா’ என்று சொன்ன போது கதறி அழுது காலில் விழுந்திருந்தேன்.
சித்தி என்னைய மன்னிச்சிருங்க, இனிமே தப்பு பண்ண மாட்டேன். இது தான் கடைசி. ஆனா ஏங்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லாதீங்க சித்தி என்ற போது சித்தியும் அழுது விட்டார்கள்.
அண்ணா, நீங்க எங்களுக்கு எவ்வளவு ‘அட்வைஸ்’ பண்ணி இருக்கீங்க, டிவி பாத்துக்கிட்டே இருக்கக் கூடாது, நல்லாப் படிக்கணும்னு. அப்போவெல்லாம் எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும், நம்மளுக்கும் அட்வைஸ் பண்ண அண்ணா இருக்காங்கன்னு, ஆனா நீங்க எப்படின்னா அப்படி நடந்துகிட்டிங்க? என் கையில் இருந்த கேமராவ வாங்கி போட்டோ எடுக்குறேன்னு சொல்லி, கேமராவ தலகீழா புடிச்சு போட்டோ எடுத்தீங்க என்று அழுகையோடு சொன்ன கார்த்திகா எனது பிரியமான தங்கச்சி.
சித்தி கூடப் பேசிக் கொண்டிருப்பது, காலையில் எழுந்தவுடன் பால் காய்ச்சுவது, சில வேளைகளில் காபி கலந்து கொடுப்பது, காய் நறுக்கிக் கொடுப்பது என எனது விடுமுறை நாட்களில் முக்கால்வாசி நேரம் சித்தியுடனே கழியும். அப்போது சித்தி வீட்டில் இரண்டு பசு மாடும், இரண்டு கண்ணுக் குட்டிகளுமாக, தோட்டம் இருந்தது. எனக்குப் பிடித்த வேலை, மாடு மேய்ப்பதும், தோட்டத்தைப் பராமரிப்பதும் ஆகும்.  மாட்டுக்கு சன் சில்க் ஷாம்பூ போட்டுக் குளிப்பாட்டுவேன். மிச்சம் இருக்கும் நேரங்களில், ரைஸ் மில் போய் மாவு அரைப்பது, வாக்குவம் கிளீனர் கொண்டு வீட்டைப் பெருக்குவது என சித்திக்கு உதவியாக இருப்பேன்.
அவ்வாறு என்னைப் பார்த்தவர்களுக்கு ‘பார்ட்டி’ யில் முழுவதுமாகக் குடித்து விட்டு, என்ன செய்கின்றோம் என்றே தெரியாமல் நடந்து கொண்ட நான் எவ்வளவு அதிர்ச்சியைக் கொடுத்திருப்பேன்.
ஆனால், ‘சரிடா இனிமே இப்படி பண்ணாத’ என்று ஜஸ்ட லைக் தட் ஆக திரும்பவும் அதே பாசத்துடன் பார்த்துக் கொண்ட என் சித்தி.
அவன் ஏன் இப்படி கெரங்கிப்போய் இருக்கான், நல்லாச் சாப்பிடச் சொல்லு என என்னிடம் எதையும் நேரடியாகச் சொல்லாமல் ‘சித்தி’ மூலமாகச் சொல்லும் சித்தப்பா.
முதல் முறை எழுதிய ‘கஸ்டம்ஸ்’ தேர்வில் பெயில் ஆன போது, பரவால்ல விடுறா, அடுத்த தடவை பார்த்துக்கலாம், இதுக்குப் போய் ஏன்டா சாப்பிடாம இருக்க என அன்புடன் அதட்டிய சித்தப்பா.    
****
அழகான பொருட்கள் எல்லாம்
உன்னை ஞாபகப் படுத்துகின்றன   
உன்னை ஞாபகப்படுத்தும்
பொருட்கள் எல்லாம்
அழகாகவே இருக்கின்றன
என்று முதல் பக்கத்துடன் ஆரம்பிக்கும் டைரி ‘மஞ்சுவுக்கானது’. எங்க வீட்ல பார்த்தாங்கன்னா அடி பிண்ணிடுவாங்க, நான் தினமும் படிச்சுட்டு கொடுத்துடுறேன், நீயே வச்சிரு’ என்று சொன்ன மஞ்சுவுக்காக நான் எழுதிய கவிதைகள் திடீரென ஒரு நாள் காணோம்.
அடுத்த வாரம் ஊரிலிருந்து அப்பா வந்திருந்தார். ஏன்டா, மூணு வருசத்துக்கு ஒரு தடவை ‘கிறுக்குத்தனம்’ பண்ணனும்னு ஏதாவது வேண்டுதலா? என்று மட்டும் சொல்லிவிட்டு, அன்றே ஊர் திரும்பி விட்டார்.
ஆம், அப்பாவிற்கு ஊரிலிருந்த லவ் தெரியும். திடீரென ஒரு நாளில், சென்னைக்கான டிக்கெட்டுடன் வீட்டிற்கு வந்தார். இன்றே நீ சென்னைக்கு கிளம்பு, அண்ணன் கூட ரூமில் இருந்துக்கோ, அப்படியே வேலை தேடிக்கோ’ என்று யோசிக்கக் கூட அவகாசம் கொடுக்கவில்லை. அப்படி சென்னை வந்து மூன்று வருடம் முடியப் போகிறது.  
ஊரில் இருந்த போது ஒருநாள் ‘சரவணா இங்க வாடா? பாக்கெட்ல என்ன  என்றவர் கைகளில் கிடைத்தது ‘சிகரட் மற்றும் தீப்பெட்டி’. அப்போது தான் கல்லூரியை முடித்திருந்தேன்.
அதிர்ச்சியுடன் பார்த்தவர் ‘ சரி போ என்று சொல்லிவிட்டார். ஆனால் அன்று முதல் எனது பாக்கெட்டில், காலை எழுந்தவுடன் பத்து ரூபாயை வைத்து விடுவார். டீ மற்றும் சிகரட் செலவுக்கு.

என் பையன் ‘மஞ்சு’ன்னு ஒரு பெண்ணை லவ் பண்றான், ஆனா எங்களுக்கு பிடிக்கல, பையனுக்கு நம்ம சொந்தத்துல பாக்கனும்னு தான் ஒங்க வீட்டுக்கு வந்திருக்கோம், நீங்க என்ன சொல்றீங்க என்று எனக்குப் பெண் பார்த்த ‘நேர்மையான’ என் அப்பா.
****
யார் சொல்லித் தெரிந்ததோ? இல்லை மீனாவின் அப்பாவே சொல்லி விட்டாரோ? தெரியவில்லை. ஆனால் என்னிடம் கேட்காமல், எனக்குத் தெரியாமல் என் மொபைல் போனில் ‘ மஞ்சு’ என்ற பெயர் இருக்கிறதா என ‘ஆராயும்’ மீனா.       
****
எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லடா, ஆனா உன்னைய நினச்சா தான் கவலையா இருக்கு, எப்பபோ தான் உனக்கு பொறுப்பு வரப் போகுதோ? இதை என் அண்ணன் ரமேஷ் சொல்லும் போது மதுரையில் ஒரூ விடுதியில் தங்கி இருந்தோம். சரிண்ணே, நான் ஒழுங்கா இருக்கேன், இனிமே வேலைக்குப் போறேன் என்று சொன்னது, ஒவ்வொரு முறை மதுரை செல்லும் போதும் ஞாபகம் வருகின்றது.
ஒரு முறை நாங்கள் இருவரும் ஒரு தனியார் பஸ்சில்சென்னையிலிருந்து  மதுரைக்குச் சென்றோம். இருவரும் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை, அதற்குள் ‘மதுரையே வந்து விட்டிருந்தது.
ஆம், நானும் என் அண்ணனும் பேசும் போது, பார்க்கிறவர்களுக்கு நண்பர்கள் மாதிரியே தெரியும். எனக்காக ஒரு காலத்தில் தினமும் யோசித்தவர், இதுவரை எதற்காகவும் என்னிடம் கோபப்பட்டதில்லை.
****
இன்று வரை வெறும் அண்ணன் என்று நான் சொன்னால் அது முதலில் சுரேஷ் அண்ணனாகத் தான் இருக்கும். ஊரில் இருக்கும் போது எங்களது பேச்சு அப்போது நள்ளிரவைத் தாண்டியும் தொடரும். அப்படி எண்ணத்த தான் பேசுவீங்கடா? இந்தக் கேள்வியை பல பேர் பல சந்தர்ப்பங்களில் கேட்டிருப்பார்கள். அண்ணன் சின்ன வயசிலிருந்தே ஏதாவது புதுசாகச் செய்து கொண்டே இருக்கும். நொங்கு வண்டி, பம்பரம், கேரம் போர்ட் காய்ன்ஸ், நீராவியில் ஓடும் படகு என நாங்கள் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருப்போம். எனது எல்லாச் சந்தேகங்களையும் தீர்த்து வைத்த எனது குரு. ( ஆம், ஊரில் எங்களை குரு, சிஷ்யன் என்றே கூபிடுவார்கள்)    
இப்போதும் மனக் கஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ள எனக்கு உற்ற தோழன் என் அண்ணன்.
****
திரும்ப ஒருமுறை நான் படிக்க, எனக்கே அருவருப்பாக இருக்கும் ப்ளாக்கைப் படித்து, 'கொஞ்சம் பாராட்டினா இவனுக்கு எவ்வளவு திமிர்னு பாரேன், பெரிய சாரு நிவேதிதானு மனசுல நினைப்பு, இவன் ப்ளாக் எல்லாம் படிச்சோம் பாரு, நம்ம மேல தான் தப்பு இனிமே இந்தப் பக்கமே தல வச்சுப் படுக்கக் கூடாது’ என்று நினைக்காமல்  ‘ படிக்க சங்கடமா இருக்கு என்று மட்டும் சொன்ன என் பிரியமான தோழி என நான் பார்த்த, பார்க்கும் எல்லோருமே எப்படி நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.
****
இனிமே இப்படிப் பண்ணாத, பண்ணாதடா என்று அப்படியே கடந்து போய் விடக் கூடிய மனசு எல்லோர்க்கும் எப்படி வாய்த்தது.
நான் பார்த்த எல்லோருமே நல்லவர்களாகவே இருக்கிறார்களா அல்லது நல்லவர்களை மட்டுமே நான் பார்க்ககிறேனா?
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழையாக, வெளியே பெருமழை பெய்கிறது. அன்பெனும் மழையில் நனைய நனைய நடக்கின்றேன் நான்.