March 29, 2013

சுங்கம் - 3



அந்தத் துரைச்சாணி ஒரு வழியாக அனுமதி கொடுத்திருந்தாலும் அவருக்குக் கீழே பணி புரியும் 'நிலப்பிரபு' அனுமதி மறுத்து விட்டார். வரும் போது ‘சரக்குப்’ பிரிவில் வந்திருந்தால் தான் அவர் அனுமதி கொடுப்பாராம்.

சார், வரும் போது பயணியுடன் சேர்ந்தே வரும் பொருளாக ( Accompanied Baggage) ஆக இருந்தாலும் திரும்ப அனுப்பும் போது கார்கோ மோடில் அனுப்பலாம் என பாலிசி சொல்கின்றதே, அதுவும் இல்லாமல் ATA CARNET என்பதே இந்த மாதிரி பிரச்சினைகளால் தாமதமாகி விடக் கூடாது என்பதற்காகத் தானே! இதில் போய் இவ்வளவு பிரச்சினையா என்று சொன்னவுடன் அவருக்கு ஈகோ தலை தூக்கி விட்டது. வாப்பா ஒக்காந்து எனக்குச் சொல்லிக் கொடு, உங்கிட்ட இருந்து வேலைய எப்படி செய்றதுன்னு கத்துக்கிடுறேன் என்று சொல்லி விட்டார். ஏனென்றால் 'சரிங்க சார்' என்பதையே மறுமொழியாகக் கேட்டுப் பழகி விட்ட அவர் நான் எதிர்த்துப் பேசுவதை ஜீரணிக்க முடியவில்லை. இது தெரிந்து தான் சென்னை கஸ்டம்ஸ் வெப்சைட்டில் இருந்து பிரிண்ட் எடுத்துச் சென்றிருந்தேன். அதனை காட்டியவுடன் பேச்சு கொஞ்சம் மெதுவாக மாறியது. APPRAISING GROUP வழியாக அனுப்பலாம் என்றாலும் இது PREVENTIVE DEPARTMENT வழியாகத் தான்பா அனுப்ப வேண்டும் என்றும், நேற்று 'XYZ' என்று ஒரு ஏஜென்ட் பைக் ஒன்றை இதே மாதிரி அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார். நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன்.

இந்தத் துறையில் எனக்கு இருக்கும் பிளஸ் பாயிண்ட், பெரும்பாலான கம்பனிகளில்  ஒரு நண்பன் அல்லது நண்பனுக்கு நண்பன் என எப்படியும் ஒருவராவது வேலையில் இருப்பது தான். அதுவும் இந்த XYZ கம்பெனியில்  என் அண்ணனே வேலை பார்ப்பது  இன்னும் வசதியாக இருந்தது. முதல் நாள் அனுப்பிய பைக் டாகுமெண்ட் நகலைப்  பெற முடிந்தது.

நான் வேலை பார்ப்பது ஒரு பன்னாட்டு நிறுவனம். லெட்டர் பேடில் உள்ள மூன்று எழுத்துக்களை எடுத்து விட்டி அசோக சக்கரத்தை, சிங்க முத்திரையைப்  போட்டு விடலாம். அப்படியே ஒரு அரசு அலுவலகத்தில் உள்ள நடைமுறை வழக்கங்கள் என்னவோ அதில் ஒரு குறையும் இல்லாமல் அப்படியே எனது அலுவலகத்தில்  இருக்கும். இந்த மாதிரி வித்தியாசமான டாகுமென்ட் வந்தால் ஒன்று பண்ண முடியாது என்று திருப்பிக் கொடுத்து விடுவார்கள் அல்லது அப்படியே ஊறப் போட்டு விடுவார்கள். இதே மாதிரி தான் ஒரு RE- EXPORT டாகுமென்ட்டுக்கும் நேர்ந்தது. ஆறு மாதம் விடா முயற்சியில் அந்த ஷிப்மேன்ட்டுக்கு DBK வாங்கிக் கொடுத்தேன்.

திரும்பவும் வேறு ஒரு லெட்டர் புதிதாக வாங்கி அனுமதிக்கு அனுப்பினால் PREVENTIVE D/C சொன்னார். தம்பி இது நான் பண்ணக் கூடாதுப்பா. பக்கத்துக்குல மேடம் இருக்காங்க பாரு, அவங்க கிட்ட வாங்கிக்கிங்க என்று. ஆகா.. .திரும்ப மொதல்ல இருந்தா என ஜெர்க் ஆனாலும் விக்ரமாதித்யன் வேதாளம் கதை மாதிரி இந்த முறை நான் விடுவதாக இல்லை.

சார் தப்பா நெனைக்கக்கூடாது.. (இவர் ரொம்ப வயசானவர்ங்க.. பாவம் இன்னும் ஆறு மாசத்துல ரிட்டைர் ஆகப் போறாரு) நீங்க தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி இன்னொரு கம்பெனிக்கு பெர்மிஷன் கொடுத்திருக்கீங்க..இதோ பாருங்க அந்தக் காப்பி என காமித்தவுடன் சிரித்து விட்டார். காப்பிய கையோட கொண்டு வந்திட்டுயா.. சரி லெட்டெர கொடு என வாங்கி பெர்மிஷன் கொடுத்து அவருக்கு கீழே பணியாற்றும் மற்றொரு அதிகாரியின் பெயரைச் சொல்லி அவரிடம் Open Order வாங்கிக் கொள்ளச் சொன்னார்.

அங்கே சென்றால் ரூம் பூட்டி இருந்தது. மறு நாள் அங்கு சென்றால் அவரும் இதையே சொன்னார். எதை.. இது Group Appraiser பண்ண வேண்டிய வேலை என்றும் அவரின் வேலை அல்ல என்றும். வந்தவர் எப்பப் போனார்? போகும் போது ஏன் எடுத்துப் போகவில்லை? இந்த மாதிரி மிக முக்கியமான கேள்விகளை கேட்டார். நம்மிடம் தான் பதில் ரெடியாக இருக்கின்றதே. சார்.. இந்தியாவுக்கு வரும் போது கையோடு எடுத்து வரலாம், ஆனால் திரும்பப் போகும் போது கார்கோ மோடில் தான் போக வேண்டும் என்று சொன்னது அவருக்கு திருப்தி அளித்திருக்க வேண்டும்.

சரிப்பா, அப்படியே இருந்தாலும் நாங்க பைக்குக்கு மட்டும் தான் தம்பி பெர்மிஷன் கொடுக்க முடியும் என்றார். சார், அவர் டூரிஸ்ட், அதனால பைக்ல வந்தார், இவர் சைண்டிஸ்ட் அதனால விமானத்துல வந்தார். பைக்ல வந்தவர் பைக்க விட்டுட்டு விமானத்துல போயிட்டார். விமானத்துல வந்த சைண்டிஸ்ட் திரும்பவும் விமானத்துலயே போயிட்டார். ஆக மொத்ததுல ரெண்டு பேருமே அவர்கள் கொண்டுட்டு வந்தத விட்டுட்டு போயிட்டாங்க. நாம திரும்ப அனுப்புறோம், இதில என்ன சார் பிரச்சினை ( அப்பா எவ்ளோ லென்த்தி டயலாக்...) என்று சொன்னவுடன் அதைக் கேட்டுச்  சிரித்தவர் அவரின் ஆட்டோக்ராப்பை போட்டுக் கொடுத்தார்.

இனியாவது இத அனுப்பி விட்டுறுங்கப்பா என அந்த Department ஆட்களிடம் கொடுத்தேன். சிரிப்போடு கை கொடுத்து தேங்க்ஸ் சொல்லி வாங்கிக் கொண்டு சனிக்கிழமை முடித்து விடுவதாகச் சொன்னார்கள்.

இன்று முடித்து விடுவார்கள் என நினைக்கிறேன்.. இத்தோடு ‘இந்த சுங்கம் என் தங்கம்’ முடிவுக்கு வருகின்றது.

March 24, 2013

சுங்கம் - 2


பள்ளியில் படித்த பருவத்தில் இருந்து கல்லூரி முடிக்கும் வரை நிறைய கட்டுரைப் போட்டிகளிலும் பேச்சுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு நாட்டின் முன்னேற்றம் பற்றிப் பேசிய ஒருவனுக்கு லஞ்சம் கொடுப்பதே ஒரு வேலையாகக் கொடுத்தால் என்ன செய்வான். முதலில் இந்த வேலை பிடிக்காமல் போனதற்கு இதுவே முக்கியக் காரணம். லஞ்சம் என்பது ஒரு சட்ட விரோதம் என்பதை மறந்து ஒவ்வொரு கஸ்டம்ஸ்  அலுவலரும் அவரின் தகுதிக்கேற்ப அவரின் மேஜை டிராயரில் பணம் வைத்திருப்பார்கள். முகவர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று ட்ராயரை திறந்து பணத்தை போட வேண்டும். என்னதான் 'ஆன்லைன் பைலிங்' என முன்னேறினாலும் ‘சுக்கான்’ இவர்களின் கைகளில் தான் இருக்கின்றது. உங்களுக்குத் தெரியுமா? அரசு பல்வேறு நலப் பணிகளுக்காக பணம் ஒதுக்கீடு செய்யும் போதே இருபது சதவிகிதம் கமிஷன் என்று வைத்து திட்டமிடுவது. உதாரணமாக ஒரு பாலம் கட்டுவதற்கு ஆகும் தொகை இருநூறு கோடி என்றால் இருநூற்றி இருபது கோடிக்கு திட்டமிடுவார்கள். அதைப் போலவே சாப்ட்வேர் தயாரிக்கும் போதே ஒவ்வொரு அலுவலரும் தங்களைத் தேடி முகவர்கள் வருமாறே தயாரித்திருக்கிறார்கள்.

தொண்ணூற்று ஐந்து சதவிகிதம் அலுவலர்கள் லஞ்சம் வாங்குகின்றார்கள். சுங்க முகவர்களைப் பொறுத்தவரை பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்பவர்கள் ‘நல்ல ஆபீசர்கள்’. ஆபீசர்கலீல் பல பேர் பணமும் வாங்கிக் கொண்டு முகவர்களை மரியாதை இல்லாமல் பேசுபவர்கள்.

தினந்தோறும் கஸ்டம்ஸ் செல்லும் ‘கஸ்டம்ஸ் கிளார்க்’ என்று அழைக்கப் படும் பையன்களுக்கு தனியான ‘உடல் மொழி’ இருக்கும். அப்ரைசர் என்று அழைக்கப்படும் மதிப்பீட்டாளர்க்கு முன் குனிந்து கை கட்டி, இலேசாக வாயைப் பொத்தி மூச்சுக்கு முன்னூறு ‘சார்’ போடுவார்கள். அப்ரைசர்களை வேறு எங்காவது பார்த்தால் கூட ரயில்வே ஸ்டேஷன், தியேட்டர் இது போன்ற இடங்களில் பார்த்தால் கூட சாதாரண மனிதர்களாகப் பார்க்காமல் 'அப்ரைசர்' ஆகவே பார்த்து ஒரு ராயல் சல்யூட் வைப்பார்கள். சார் வர்றார் வழி விடுங்க.. சார் வர்றார் வழி விடுங்க’ என்று கத்தும் சில அல்லக்கைகளும் இதில் உண்டு. கஸ்டம்ஸ் ஆபீசர்களுக்கு  தட்கல் டிக்கெட் புக் செயவதற்கு, வேறு பல சொந்த வேலைகளுக்கு மற்றும் அவர்களுக்கு வரும் அல்லது  வர வேண்டிய லஞ்சப் பணத்தை வைத்துக் கொள்வதற்கு என முகவர்களில் ஒருவரை தேர்வு செய்து வைத்திருப்பார்கள். இந்த மாதிரி ‘மாமா’ வேலை செய்யும் முகவர்களில் சில பேர் இதனை முழு நேர வேலையாகவே செய்வதுண்டு. ஒரு சிலர் பகுதி நேரமாக.  

கஸ்டம்சில் லஞ்சம், பொருட்களை மதிப்பீடு செய்வதில் ஆரம்பிக்கின்றது. அப்ரைசர் நாம் சமர்ப்பித்திருக்கும் விலையை சரி என்று அமோதித்து வரி கட்டுவதற்காக சிஸ்டத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும். நாம் என்ன தான் தகுந்த ஆதாரங்களோடு பேசினாலும் அப்ரைசரின் மூடு பார்த்தே பேச வேண்டும். ஏனென்றால் இப்போ முடியாது ரெண்டு நாள் கழிச்சு வா’ என்று சொல்லி விடும் அபாயமும் அந்த அளவு அதிகாரமும் அவரிடம் உண்டு. ஒரு விலையை சரி என்று சொல்லவும், அதே விலையை-  இல்லை குறைவாக இருக்கின்றது எனச் சொல்லவும் அவர்களிடம் ஆதாரங்கள் உண்டு. இதனைத் தீர்மானிப்பது முகவர்கள் கொடுக்கும் லஞ்சம் மற்றும் சில விஷயங்கள்.      

GROUP FOUR தேர்வு எழுதி கஸ்டம்ஸ் கடை நிலை எழுத்தர் பதவிக்கு வரும் ஒருவர் படிப் படியாக தகுதி நிலை உயர்த்தப்பட்டு அப்ரைசர் ஆக வருகின்றார்கள். சிலர் நேரடியாக இந்தப் பதவிக்கு வருவதும் உண்டு.   சரி.. இவர்கள் ஏன் கஸ்டம்ஸ் முகவர்களை மதிக்காமல் நடக்க வேண்டும். இதற்கான காரணங்கள் என எனக்குத் தோன்றுவது இரண்டு முக்கிய காரணங்கள்.

எங்கள் ஊரில் பத்தாவது படிப்பதற்குள் பெயில் ஆகி படிப்பு வரவில்லை என்றால் அவர்கள் முன் இரண்டு சாய்ஸ்கள் இருந்தன. ஒன்று ஊரில் மாடு மேய்ப்பது அல்லது கஸ்டம்ஸ் கிளார்க் ஆக சென்னைக்கு வேலைக்கு வருவது. மாடு மேய்ப்பதை விட இந்த வேலை செய்வதில் கஷ்டம் இல்லாததாலும் நல்ல வருமானம் வருவதாலும் இந்த வேலைக்கு நிறைய பேர் வந்தனர். ( நான் இரண்டு வருடம் மாடு மேய்த்தது இந்த நேரத்தில் ஞாபகம் வருகின்றது!) இப்படி கிளார்க் ஆக வேலை செய்து படிப் படியாக உயர்ந்த பல படிக்காதவர்கள் தான் இப்போதும் நிறைய கம்பெனிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதும் சில ஓனர்கள் ‘அப்ரைசர்களிடம்’ கெஞ்சுவதையும், ‘சார், பாத்து மனசு வச்சா செய்யலாம்’ என்று கொஞ்சுவதையும் சாதாரணமாகப் பார்க்கலாம். இவர்கள் கஸ்டம்ஸ் அலுவர்களுக்காக – அவர்கள் செய்யும் சலுகைகளுக்காக அவர்களுக்கு குட்டி, புட்டி எனக் கவனிப்பார்கள். இப்போதும் சில ஓனர்கள் வரும் போது அப்ரைசர் கடைவாய் பல் தெரியும் வரை சிரித்து வாங்க சார் என்று வரவேற்றால் அந்த அளவு அவருக்கு ‘அரேஞ்’ செய்திருக்கிறார் என்று அர்த்தம். இப்படி சப்ஜெக்ட் அறிவு எதுவும் இல்லாமல், என்ன கேக்குறார், பார்த்து பேசு.. என்று சொல்லி இந்த வரையறைக்குள் முடித்து விடு என்று சொல்லும் ஓனர்கள் அதிகம்.

இந்த மாதிரி ஆட்களுக்கு எப்படி மரியாதையை இருக்கும்? எல்லோரையும் அப்படியே பார்க்கின்றார்கள். அவர்களிடம் வாதம் செய்வதை அவர்கள் விரும்புவதில்லை. சார் பாத்து மனசு வச்சா முடியும்.. என்பதை எங்களிடமும் எதிர் பார்க்கிறார்கள்.

இன்னொன்று. கஸ்டம்ஸ் ஆக்ட் 1962. THE CUSTOMS ACT 1962 என்பது கஸ்டம்ஸின் வேதப் புத்தகம். நேரம் இருக்கும் போது முடிந்தால் படித்துப் பாருங்கள். இதில் சொல்லப் பட்டிருக்கும்  விதிகள் அவர்களுக்கு சாதகமாக இருகின்றது.  முக்கால் வாசி இடங்களில் ‘ IF SATISFIED BY THE PROPER OFFICER’ என்று இருப்பது. கஸ்டம்ஸ் அதிகாரி திருப்தி அடையும் பட்சத்தில்.. என்று வருவதால் அவர்கள் இஷ்டம் போல் ஆடுகிறார்கள். அவர்களை திருப்தி படுத்த முகவர்கள் படாதபாடு படுகின்றார்கள். 

எடுத்துக் காட்டாக,

SECTION 22. Abatement of duty on damaged or deteriorated goods. – (1) Where it is shown to the satisfaction of the Assistant Commissioner of Customs or Deputy Commissioner of Customs -

சிரித்தபடி வேலை செய்யும் எந்த அதிகாரியையும் நீங்கள் பார்த்து விட முடியாது. கோபமும், ஆற்றாமையும் கஸ்டம் ஹவுஸ் முழுவதும் நிரம்பி வழிகிறது.
எனக்குத் தெரிந்த ஒரு ஓனர் பார்ட்டிக்குச் செல்லும் போது தனது அழகான மனைவியையும் அழைத்துச் செல்வார். யாரிடம் காரியம் ஆக வேண்டுமோ அவரிடம் அறிமுகப்படுத்துவார். போதும்... இதற்கு மேல் சொல்ல வேண்டியதில்லை. இப்போது சிங்கப்பூரில் செட்டில் ஆகி விட்டார்.

நான் கஸ்டம்ஸ் கிளார்க் ஆக இருந்த போது பத்மினி மேடம் என்று ஒரு எக்ஸாமினேசன் ஆபீசர் இருந்தார். மேடம் என நாங்கள் கூப்பிட மாட்டோம். ஆனால் அவரே ‘என்னையா, மேடத்த கவனிக்காம போற’ என்று சொல்வார். எங்களை பொறுத்தவரை அவர் ஒரு ‘நல்ல ஆபீசர்’.

என்ன பொருள் செக் செய்தாலும் ‘மேடத்துக்கு ஒன்னு’ சாம்பிள் குடுய்யா என்பார். எங்களுக்கும் வேலை ஆக வேண்டும் என்பதால் அவர் கேட்குமுன்னே ஒரு சேலையோ சுடிதாரோ வந்தால், ‘இந்தாங்க அம்மா’ என்று கொடுத்து விடுவோம். டி-ஷர்ட் அல்லது ஷர்ட் இருந்தால் இரண்டு அல்லது மூன்றை எடுத்துக் கொடுத்து ‘ஒங்களுக்கு ஒன்னு’, மீதி ரெண்டு வெளிய வந்து எங்ககிட்ட கொடுங்க என்று கொடுத்து வைப்போம். செக்யூரிட்டி செக்கிங் அவர்களுக்கு மட்டும் கிடையாது.

இப்படியான ஒரு நாளில் ஒரு பில்லுக்கு ரிப்போர்ட் கேட்கும் போது 'மேடத்துக்கு எங்கயா' என்று கேட்டார்கள்.

அம்மா , இது ஒங்களுக்கு தேவைப்படாது.. ரிப்போர்ட் குடுங்க, என்ன எதுன்னு பாக்காமயே கேக்குறது’ என்று சொன்னோம். யோவ்.. பாத்துட்டு தான்யா கேக்குறேன் ரெண்டு பாக்கெட் எடுத்துட்டு வா என்று சொன்னார்கள். முடியாதும்மா... இந்த வயசுல போய்.. போங்கம்மா அங்கங்கே பெட்ரோல் பங்கல ப்ரீயா குடுக்குறாங்க, வாங்கிக்கிங்க என்று சொன்னோம்.  எனக்கு இல்லைய்யா, ஏம் பொண்ணுக்கு என்று சொன்னார்கள் . ‘என்னமோ பண்ணித் தொலைங்க’ என்று ரெண்டு பாக்கெட் எடுத்துக் கொடுத்தோம்.

சனிக்கிழமை பீர் குடிப்பதற்கு பணம் இல்லை என்றால் அன்றைய ‘ஸ்பான்சர்’ பத்மினி அம்மா தான். பாத்து குடிச்சுட்டு வீட்டுக்கு போங்கய்யா என்று அட்வைஸ் பண்ணி அனுப்புவார்கள்.

சாந்த குமாரி என்று ஒரு மேடம் இருந்தார்கள். காலையில் ஒன்பதரைக்கெல்லாம் வேலைக்கு வந்து விடுவார்கள். ஒரு பைசா லஞ்சம் வாங்கியது இல்லை. லஞ்சம் வாங்காத ஆபீசர் என்றால் நெருங்கவே அஞ்சும் அளவிற்கு சிடு மூஞ்சியாக இருந்தவர்களில் பிரென்ட்லியாக இருந்தவர். தெரியாத விசயங்களை பொறுமையாக சொல்லிக் கொடுத்தவர்.

எப்போதும் சரக்கு அடித்துக் கொண்டு இருந்த ஒரு ‘அப்ரைசர்’ மிகச் சரியாக வேலை செய்வார். ஒய்வு நேரங்களில் பாரதியார் கவிதை படித்துக் கொண்டிருப்பார்.

ஒரு அப்ரைசர் எப்போது சென்றாலும் ஒரு குரள் சொல்லு என்று கேட்டு சரியாக சொல்பவர்களுக்கு பணமும் கொடுப்பார்.

ஒரு லேடி ‘அப்ரைசரின்’ போன் நம்பர் பெரும்பாலான முகவர்களிடம் இருக்கும். அவரின் பேக்கேஜ் இரண்டாயிரம் ரூபாய். பல்லாவரத்தில் ‘எல்லாமும்’ அவரின் வீட்டிலேயே.

இன்னமும் சொல்ல நிறைய இருக்கின்றன. ஆனால் இந்தப் பதிவின் நோக்கம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அலசுவது அல்ல. சாக்கடையை கிளற கிளற நாற்றத்தை தவிர என்ன வரும்.

மொத்தத்தில் சுங்க வரித்துறை தூர் வார வேண்டிய, ஊழலும் அதிகார அகந்தையும் ‘வீசும்’ துறை. யார் இந்தப் பூனைகளுக்கு மணி கட்டப் போகிறார்களோ? கடைசியாக முடிக்கும் முன் இதோ கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்யும் ஒரு இளைஞனின் வாக்குமூலம்.


I visiting Customs House, chennai everyday, working as a driver on a contract basis. I shocked to see officers carrying so much money evryday which nobody can imagine. Some officers in posts called GROUP carry more than 50000 everyday for which they have employed some agents for collection. These agents get 10% and in the evening handover this money in bundles to officers sometimes inside Custom House at 6-6.30 PM rt sometimes near Beach station.


There is no control over some officers who talk ruffly and are silent killers of our country. Some CHA also ganging up with some officers. I can tell this is true as I have taken such officers in my car and some of these officers visit some wrong places where sex is going on. I know one officer who is Doctor working in this Customs House going there many times. his name Ajeeth and he has lots of wrong money.

I want that such officers should be booked for corrupting. Persons like me struggle hard for 2 time meals and get just 8000 rupees salary, working for more than 12 hours in a day sometime , paying high rent and food cost but these officers think they have licence to take more than 50000 or 60000 every day without any investment. I don't know where is rules in this country. Poor people are dying but corruption people enjoying.


March 20, 2013

சுங்கம்


ஐந்து மாடிக் கட்டிடத்தை அழகாக கட்டி முடித்த பின்புதான் அதற்கு பேர் என்ன வைப்பது என்று யோசித்தார்கள். ஆளுக்கு ஒரு பெயர் சொன்னார்கள். எதுவுமே ஆங்கிலேயனுக்கு உகந்ததாக இல்லை. வரி வசூலிப்பு மையம், டாக்ஸ் கலெக்சன் ஹவுஸ் என்று சொன்னவற்றை எல்லாம் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. பெயர் சின்னதாக இருக்க வேண்டும். அர்த்தமுள்ளதாகவும் அது அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.

அந்த வழியாக வந்த ஒரு ரிக்சாகாரனை நிப்பாட்டினான். இந்தக் கால ஆட்டோ ஓட்டுனர்களைப் போலவே அந்தக் காலத்திலும் ரிக்சா ஓட்டுனர்கள் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அவனிடம் வெள்ளைக்காரன் கேட்டான். ‘ஹவ் யு வில் கால் எ வொர்க் விச் இஸ் வெரி வெரி டிபிகல்ட்’ என்றவுடன் ரிக்சா ஓட்டும் மாரி சொன்னார். ரொம்ப கஷ்டமா இருக்குன்னு சொல்லுவோம் எஜமான் என்று.

அன்று வைத்தான் அந்தக் கட்டிடத்திற்கு ‘கஸ்டம் ஹவுஸ்’ (CUSTOM HOUSE) என்று. வெள்ளையன் போன பின்பும் இன்னும் ‘கஸ்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம்.

தமிழ்ப்படுத்தினால் சுங்கவரித் துறை என்று வரும் இத்துறையில் வேலை செய்பவர்கள் எல்லாம் மானிடர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி அல்ல இவர்கள் எல்லாம் வானத்தில் இருந்து ‘மங்’கென்று குதித்த தேவ தூதர்கள். நாட்டைக் கட்டிக் காப்பாற்றும் பொறுப்பு ராஜாக்களிடம் இருந்து வெள்ளையர்களுக்கு வந்து இப்போது சுங்கத் துறையில் உள்ள இந்தத் துரைமார்களிடம் தான் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இந்தத் துரைமார்கள் பேருக்குதான் பப்ளிக் சர்வன்ட். ஆனால் மற்ற எல்லோரையும் செர்வன்ட் ஆக மாற்றும் அளவற்ற அதிகாரம் இந்த துரைமார்களிடம் இருக்கின்றது.

துரைமார்களாவது பரவாயில்லை இந்தத் துரைச்சானிகள் இருக்கின்றார்களே அவர்கள் இன்னமும் அதிகாரம் மிக்கவர்களாய் வலம் வருகின்றார்கள். அப்படி ஒரு துரைச்சாணியை போன வாரம் சந்திக்க வேண்டிய அவசியம் வந்தது.

இந்தத் துரைச்சாணியின் பெயர் விஜயா கிருஷ்ணன். நண்பர்கள் சொன்னார்கள். பொம்பளையா மாப்ள அது. யாரையும் மதிக்காது. நெறைய எக்ஸ்போர்ட்டர், இம்போர்ட்டர் வந்து விசிட்டிங் கார்டு குடுத்து காத்திருந்து திரும்பிச் சென்று விட்டார்கள். அப்படியும் ஒருத்தர் உள்ளே போய் பார்க்க முயற்சிக்க செம்ம டோஸ் விழுந்தது. ‘ நீ கார்டு குடுத்தா ஒன்னைய கூப்பிட்டு பாக்கனும்னு கட்டாயமா.. போயா என்று பேசி விட்டது. டைரக்ட் ஐ. ஆர். எஸ் மாப்ள.. அது தான் இந்த திமிரு என்று..

ஆனால் எ.டி.ஏ கார்னெட் எக்ஸ்போர்ட் அனுப்புவதற்கு இந்த துரைச்சாணி தான் அனுமதி தர வேண்டும் என்பதால் என் விசிட்டிங் கார்டை ‘சிபாயிடம்’ (SEPOY) கொடுத்து அனுப்பினேன். சரி யார் இந்த சிபாய்?. Sepoy என்பவர்கள் துரைசானியின் சேவகர். கடவுளுக்கு பூசாரி மாதிரி. சிப்பாய்களில் சிலர் கலகம் செய்தாலும் இவர்களுக்கும் வேலூரில் நடை பெற்ற முதல் சுதந்திர போராட்டமான ‘சிப்பாய் கலகத்திற்கும்’ ஒரு சம்பந்தமும் இல்லை. எப்படி ஒரு சம்பந்தமும் இல்லாமல் தமிழினத் தலைவர் என்று மு. கருணாநிதி அழைக்கப் படுகிறாரோ அதைப் போல.

சில நேரம் கடவுள் அருள் கொடுத்தாலும் பூசாரி தடுப்பதுண்டு அல்லவா? அதைப் போல சில நல்ல துரைகள் ஒழுங்காக வேலை செய்தாலும் இந்த பூசாரிகள் விட மாட்டார்கள்.

இந்தப் பூசாரி சொல்லியது.. கார்டுல என்ன விஷயமா பாக்கனும்னு எழுதி குடுங்க.. மேடம் பாத்துட்டு கூப்புடுவாங்க என்று. கார்டின் பின்னால் எழுதிக் கொடுத்து விட்டு காத்திருந்தேன்.

[பூசாரி வந்து கேட்டது.. பைல் எங்கேன்னு கேக்குறாங்க என்று. பைல் இல்லம்மா ( ஆமாம் இது பெண் பூசாரி..) இது வரும் போது ‘By Hand’ ஆ எடுத்துட்டு வந்தது. அதனால பைல் இல்ல என்று சொல்லி அனுப்பினேன்.

பைல் இல்லைனா பண்ண முடியாதுன்னு சொல்லிடு என்று துரைச்சாணி சொல்லி அனுப்பினார்கள். திரும்பவும் ஒரு பேப்பரில் ‘என்ன விஷயமாக பார்க்க விரும்புகின்றேன் என்பதை’ எழுதி உள்ளே கொடுக்குமாறு சொன்னேன்.

சிறிது நேரம் கழித்து ‘உள்ள கூபிடுறாங்க’ என்றவுடன் பய பக்தியுடன் உள்ளே சென்றேன். பசங்க சொல்லியதில் கொஞ்சமும் குறைவில்லாத தரிசனம். இரண்டு காதிலும் ‘ஹெட்போன்’ சம்மனக் கால் போட்டு, சிஸ்டத்தில் ஏதோ படம் பார்த்துக் கொண்டிருந்தார் துரைச்சாணி.

உள்ளே நுழைந்தவுடன் ‘குறு குறு வென’ என் முகத்தையே பார்க்க எனக்கு சங்கோஜமாகி, மேடம் என்று ஆரம்பித்தேன்.

டிகிரி முடிச்சு சென்னைக்கு வந்தவுடன் குரூப் ஒன் எக்ஸாம் எல்லாம் எழுதினேன். ஆனால் அரசு அதிகாரி ஆகி ஒரு ‘துரை’ யாக மாறும் தலை எழுத்து எனக்கு இல்லை போல. கொஞ்ச நாளில் நெருப்பும் அணைந்து விட்டது.

துரைச்சாணி கேட்டார்கள். பைல் இல்லாம பெர்மிஷன் எதுல குடுக்குறது. ‘ஒந் தலையிலையா’ என்று.

இது எனக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஒருவரைப் பார்த்து இப்படி மரியாதையை இல்லாமல் பேசத் தான் டைரக்ட் ஐ. ஆர். எஸ் சிஸ்டம் சொல்லித் தருகின்றதா.

நேர்மையாக இருந்தால் அந்த அதிகாரிகள் பெரும்பாலும் கோபக்காரர்களாக, சிடு மூஞ்சிகளாக மரியாதையை இல்லாமல் பேசுபவர்களாக இருக்கின்றார்கள்.

தாமதமாக வேலைக்கு வருவது, அலுவலக நேரத்தில் அரட்டை அடிப்பது, சீக்கிரமே வீட்டிற்கு போய் விடுவது என சுங்கத் துரை சோம்பேறிகளின் சங்கமாகவே இருக்கின்றது.

இவர்களில் நல்லவர்களே இல்லையா? சுவாரஸ்யமான நிகழ்வுகளே இல்லையா?

இருக்கின்றன.. அவை பற்றி அடுத்த ப்ளாக்கில்...

March 11, 2013

போகையில..


‘சரவணா.. யாருக்கும் சொல்லாம மெதுவா வந்து கதவ தொறயேன்’ என்று சுரேஷ் அண்ணன் மொபைலில் சொன்ன போது அதிகாலை இரண்டு மணி. பொதுவாக அதிகாலை நேரத்தில் அல்லது அகால நேரத்தில் வரும் மொபைல் அழைப்புக்கள்  நம் இதயத்தின் துடிப்பை எகிற வைக்க வல்லவை.

மொபைலில் பெயரைப் பார்த்தவுடன் அலைப்பவரின் பிரச்சினை என்னவாக இருக்கக் கூடும் என மனது ‘பாசிபிளிட்டீஸ்’ நோக்கி பயணம் செய்து விடுவது தவிர்க்க முடியாதது. இப்படியான ஒரு அதிகாலை வேளையில் தான் மானாமதுரை மாமா பையன் மாயாண்டி ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த போது ஸ்லாப் பெயர்ந்து மண்டையில் விழுந்து இறந்து போனதாக கால் வந்தது. அதில் இருந்து அதிகாலை ‘கால்கள்’ ஏதோ ஒரு மரணத்தை எதிர் நோக்குவதாக அமைந்து போனது துரதிருஷ்டவசமானது.

என்னாச்சுன்னே? இந்த நேரத்துல என்று அதிர்ச்சியுடன் கேட்டதற்கு ‘வெளில தாண்டா இருக்கேன்’ கதவ தொற என்று சொல்லவும் நான் கதவை திறப்பதற்கும் சரியாக இருந்தது. ரத்தம் வழியும் கோலத்துடன் இருந்த சுரேஷ் அண்ணனை பார்த்தவுடன் பதறியபடி கேட்டேன். என்னாச்சுன்னே? ஆக்சிடென்ட்டா’ என்று..

ஆமாடா.. பைக்ல வரும் போது... மதுர வயல் பை பாஸ்ல.. உள்ளே வந்த அண்ணன் அழுதது.. எனக்கு பரவால்லடா.. ஆனா.. ஆனா.. கலைஞர் மாப்ள தான்... ரொம்ப அடி பட்டுடுச்சுடா.. ரொம்ப கஷ்டம் பொழைக்கிறது.. என்னோட நேரத்த பார்த்தியா ‘ என்றது. அதெல்லாம் ஒன்னும் கவலைப் படாதன்னே.. சரியாயிடும் என்று சமாதானத்திற்காக சொன்னேன். இல்லடா தம்பி.. தலயில நல்ல அடி.. கை வச்சு தூக்கும் போது ஏங்கையே ‘உள்ள’ போயிடுச்சு. பின் மண்டையில நல்ல அடி.. ரொம்ப கஷ்டம்டா என்று அழுத அண்ணனை சாமாதானப்படுத்தி கை கால் எல்லாம் கழுவி விட்டு வேறு டிரஸ் போடச் சொல்லி வீட்டில் விட்டு வந்தேன்.

‘கலைஞர் மாமா’ என்று செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்படும் மாமாவின் ஒரிஜினல் பெயர் மா. கருணாநிதி. செவப்புன்னா செவப்பு அப்படி ஒரு செவப்பு. எங்க ஏரியாவுல அப்படி ஒரு கலர பாக்கவே முடியாது. சின்னப் புள்ளயா இருக்கும் போது அவர தூக்கி வச்சுக்க பொம்பளைகளுக்குள்ள போட்டி போடுவாகளாம்.

வேஷ்டி கட்டுனார்னா அவ்வளவு அழகா இருக்கும். ‘என்னங்கப்பு மருமகனே’ என்று எங்களை அழைக்கும் மாமாவும் சுரேஷ் அண்ணனும் ஒரே ஆபீஸில் வேலை செய்தார்கள். சம்பவத்தன்று நும்பல் சி.எப்.எஸ் இல் வேலை முடிந்தவுடன் ஒரே பைக்கில் வீட்டிற்கு கிளம்பி இருக்கிறார்கள். நல்ல இருட்டு. பைபாஸ் ரோட்டில் வரும் போது, ரோட்டில் அடி பட்டு இறந்து கிடந்த எருமை மாட்டின் மீது வண்டி ஏறி பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்ததில் இருவருக்கும் அடி. வண்டி ஒட்டியது சுரேஷ் அண்ணன். நல்ல ஸ்பீட்.. தப்பு தப்பு.. கெட்ட ஸ்பீட். பின்னால் அமர்ந்திருந்த மாமாவுக்கு தலையில் நல்ல அடி அங்கிருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து  தீபம் ஹாஸ்பிடலில்  பர்ஸ்ட் எய்டு செய்து அப்பல்லோவில் அட்மிட் செய்திருந்தார்கள். ‘கோல்டன் ஹவர்’ எனச் சொல்லப்படும் ஒரு மணி நேரத்திற்குள் அட்மிட் செய்ததால் அவர் உயிரை காப்பாற்றி விட்டார்கள்.. ஆனால்.. ஆனால் எங்கோ கொஞ்சமே கொஞ்சமாக ‘டிஸ்டர்பன்ஸ்’ இன்னமும் இருக்கின்றது. நன்றாக பேசிக் கொண்டிருக்கும் மாமா திடீரென கோபப்படுகின்றார் அல்லது சிரிக்கின்றார். இப்போது சரியாகி விடும் .. ஆறு மாதத்தில் சரியாகி விடும் என்ற காலக் கெடுவெல்லாம் பொய்யாகி விட்டது.

கணவர் எப்படி இருந்தாலும் அவருடன் வாழ்க்கை நடத்த நாம் ஒன்றும் நளாயினி காலத்தில் இல்லை என்றாலும் கட்டிய கணவனுக்கு ‘ஒன்னு’ என்றால் பார்த்துக் கொள்ளக் கூட தயாராக இன்றைய மனைவிமார்கள் இல்லை போல. அத்தைக்கு இவருடன் வாழப் பிடிக்கவில்லை. பிரிந்து அம்மா வீட்டிற்குச் சென்று விட்டார்கள்.  மாமாவும்  இப்போது இங்கே இல்லை. சொந்தக் கிராமத்திற்கு சென்று விட்டார்.

வாழ்வின் நிலையாமை பற்றி எவ்வளவோ உதாரணங்களை நமக்கு காலம் போட்டுக் காட்டிக் கொண்டே இருந்தாலும் என்னால் கலைஞர் மாமாவிற்கு நடந்ததை இன்னமும் நம்பவே  முடியவில்லை. ஒரு மல்டி நேசனல் கம்பெனியின் இம்போர்ட் செக்சன் இவரின் தலைமையில் தான் இயங்கிக் கொண்டிருந்தது. சென்னையில் சொந்த வீடு.. மற்றும் சொந்த ஊரில் வாங்கிய சொத்துக்கள், அழகான மனைவி, இல்வாழ்க்கையில் நல் வாழ்க்கை வாழ்ந்ததன் அடையாளமாய் ஒரு ஆண் குழந்தை என ஒரே சீராக போய்க் கொண்டிருந்த வாழ்கையில் இப்படி ஒரு புயல் அடிக்குமா. ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். எனக்கு என்னவோ அவர்கள் சொல்லும் காரணம் எல்லாம் ஒவ்வொருவரும் விரும்பிய காரணங்கள் என்றே தோன்றுகிறது.

‘ஊர்ல  குல தெய்வம் கோவில் கட்டுனான். பூசாரி, சாமி எறங்கி கட்டக் கூடாதுன்னு சொல்லுச்சு.. ஆனா பெரியவங்க சொல்றத கேக்காம ஆடுனா.. அது தான் அடிச்சுடுச்சு’

‘எல்லாக் காசையும் தானே சாப்பிடனும்னு நெனச்சா.. மத்தவங்க பாவம் சும்மா விடுமா.. அதுக்கு தான் சரவணா சொல்றது.. நாம எப்போதும் அடுத்தவன் வாயில இருக்க கூடாது.. அய்யோ நமக்கு கொடுக்காம இவனே சாப்பிடுறான்னே’.. அப்படின்னு ஒருத்தன் வயிறு எரிஞ்சுச்சுன்னு வச்சுக்க இப்படித்தான் ஆகும்’

அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா.. விதி.. இப்படித் தான் நடக்கும்னு இருந்தா அத மாத்த யாரால முடியும்’. அவ்வளவு தான்..

இப்படி ஆளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். எது எப்படியோ சுரேஷ் அண்ணன் மேல் வந்த பழியும் பாவமும் இன்னமும் போக வில்லை. கூட்டிட்டு போயி இப்படி பண்ணிட்டான் என்றுதான் இன்னமும் பேசுகின்றார்கள்.

ஏன் இப்படி நடக்கின்றது. நீ கார்ல தான மாமா சி.எப்.எஸ் வந்த. வீட்டுக்கு கார்லயே போ என்று அண்ணன் சொல்லியும் ‘ஏன் நான் ஒங்கூட வரக் கூடாதா என்று சொல்லி மாமாவை பைக்கில் ஏற வைத்தது எது. ‘ ஊழ் வினை உருத்து வந்து ஊட்டியதா’ ஏன் வாழ்க்கை சில நேரம் சிலரை இப்படி படுகுப்புறத் தள்ளி விடுகின்றது. நிலையாமை பற்றிய பாடமாக மற்றவர்க்கு காட்டவா..

ஆனந்தின் அப்பா நேற்று முன் தினம் இறந்து விட்டார். உடல்நிலை சரி இல்லாமல்  ரொம்ப நாள் அவதிப்பட்டார். இனி பார்த்து பிரயோசனமில்லை வீட்டுக்கு கொண்டு போய் விடுங்கள் என்று டாக்டர் சொல்வதை கேட்பதை விட ஒரு மகனுக்கோ அல்லது மகளுக்கோ துக்கம் தருவது வேறு என்னவாக இருக்க முடியும்.

இப்போதெல்லாம் பெரும்பாலும் நள்ளிரவு நேரங்களில் இறப்பவர்களின் சொந்தக்காரர்களை நடுத் தூக்கத்தில் எழுப்பி கேதம் சொல்வதில்லை. ( போன மனுஷன் போயிட்டார். இப்ப போன் பண்ணி என்ன பண்ணப் போறோம்.. பாவம் எல்லாம் தூங்குங்க.. காலையில சொல்லிக்கலாம்.) ஆனந்தின் அப்பாவும் இன்றைய காலத்தின் கட்டாயத்திர்கேற்ப வெள்ளிக் கிழமை காலை ஆறு மணிக்கு (மறு நாள் பிரதி சனி மற்றும் ஞாயிறு விடுமுறை) இறந்து போனார்.

சடங்கு முறைகள் நடந்து கொண்டிருந்தன. ஆனந்தின் அம்மா மட்டும் அழுது கொண்டே எல்லாச் சடங்குகளையும் செய்தார்கள். கடைசியாக அவர்கள் குடும்ப வழக்குப்படி தாலியை கழற்றி இறந்தவரின் வலது  கையில் கட்ட வேண்டுமாம். இதைச் சொன்ன வெட்டியானை எல்லோரும் முறைத்தனர். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று ஒரு சிலரும் அதெப்படி மொறைன்னா செய்யத் தானே வேணும் என்று பலரும் சொன்னார்கள். ஒரு பெரியவர் சொன்னார். கடைசி நேரத்துல நாம் மறந்துருவோம்பா.. அதுதேன் வேணாங்கிறேன் என்று. அதற்கு இன்னொருவர் நான் கரெக்டா ஞாபகம் வச்சு வாங்கிடுறேன் என்றார். இப்படியான போட்டிக்கிடையே கேட்டது அரிசி அரிசி என்ற சத்தம்.

இந்த வேலை செய்யும் ஆள்களுக்கு என்றே பொதுப்படையான ஒரு குரல் அமைந்து விடுகின்றது. எல்லா ஊரிலும் அரிசி போடு  அரிசி போடு சத்தம் ஒரே மாதிரியாகவே கேட்கின்றது.

துக்க வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் ‘ என்னத்த கொண்டு வந்தோம்.. போகும் போது என்னத்த கொண்டு போகப் போறோம்’ என்ற ஞானம் வந்து ‘போவதுண்டு’. அதாவது இறந்தவரை சுடுகாட்டுக்குச் சென்று அடக்கம் செய்யும் வரை வரும். பின்பு போய் விடும். அது தான் வந்து போவதுண்டு என்பதன் அர்த்தம்.

அவர்கள் குல வழக்கப்படி ஆனந்த் (இரண்டாவது பையன்) தாடி, மீசை எடுத்து, ஈர வேட்டியுடன், கொள்ளி வைக்க எல்லோரும் வீடு திரும்பினோம். அந்தக் கோலத்துடன் வீடு திரும்பிய ஆனந்தை பார்த்து அம்மா கட்டிப் பிடித்து கதறி அழுது காதோடு காதாக கேட்டார்கள்.

‘தாலிய பத்திரமா எடுத்து வந்தியா’ என

March 7, 2013

இளமையில் 'கல்'


ஒரு ரூபாய் கொடுத்து கடையில போயி பீடி வாங்கிட்டு வா என்று அனுப்புவது அப்பாவாக இருந்தால், ஒரு பீடியைக் கொடுத்து, அடுப்புல கங்கு இருக்கும், இத புடிச்சுட்டு வாடா என்று அனுப்புவது பெரியப்பாவாக இருக்கும். ‘சும்மா கங்கு மேல வச்சு எடுத்தா சரியா புடிக்காதுடா. அதனால லேசா வாயில வச்சு ஒரு இழு இழுத்துட்டு வாடா என்று திரும்பவும் அனுப்புவார்கள். பீடி இவ்வாறு என்னை எட்டு வயதிலேயே பிடித்துக் கொண்டதின் பின்னணி இது தான்.

பொதுவாக எங்கள் ஊரின் அப்பாக்களுக்கு விடிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து ‘டீ’ குடிக்கும் வேலை. திரும்ப ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள். டீ குடித்து விட்டு ஏதோ வேலைக்குப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டு விடப் போகின்றீர்கள். டீ குடிப்பது தான் வேலை. டீக் கடையில் பேசிக் கொண்டே மூன்று அல்லது நான்கு டீ குடிப்பார்கள். காசு கொஞ்சம் அதிகமாக இருந்தால் அப்படியே மொச்சை, வடை என்று பத்து மணி வரை டீக் கடையிலேயே வாசம் செய்வார்கள். ஆறு மணிக்கு வரும் தினத் தந்தியை வைத்துக் கொண்டு ‘அன்றைய செய்தி’ அலசப்படும்.

டீக்கடை எல்லாம் நாங்கள் வரக் கூடாத இடங்களாக பெரியவர்களால் அறிவுறுத்தப்பட்டோம். அப்படியே ஏதாவது ஒரு நாள் தெரியாமல் போய் விட்டால் இதென்ன 'வள குட்டி’ மாதிரி கூடவே சுத்திக்கிட்டிருக்கு என கிண்டல் செய்வார்கள். வளகுட்டி என்பது யாதெனில் வீட்டில் செல்லமாக வளர்க்கும் ஆட்டுக் குட்டி. அதற்குக் கொடுக்கும் செல்லத்தைக் கூட பிள்ளைகளுக்கு கொடுக்க முன்வராத அப்பாக்கள்.

சீட்டு விளையாடும் இடம், சாராயக் கடை சந்து இப்படி சில வரக் கூடாத இடங்கள் எங்கள் ஊரில் இருந்தன. நாங்கள் வரக் கூடாத இடங்கள் எல்லாம் அவர்கள் போகக் கூடாத இடங்கள் என இந்த அப்பாக்களுக்கு புரியவே இல்லை.

எங்கள் ஊரில் பல பேர் ‘பெற்றுக் கொண்டது’ தங்கள் மீதான நம்பிக்கையின் பேரில் என்று தோன்றவில்லை. ‘மரத்த வச்சவன் தண்ணீ ஊத்துவான்’ என்ற பழமொழி மீதான நம்பிக்கை மட்டுமே பல பேரின் பிறப்புக்கு காரணமாக இருக்கக் கூடும். பழமொழி சொன்னவன் மட்டும் கையில் கிடைத்தால் நாலு அடி குழி தோண்டி கைகளை கட்டி மண்ணில் நட்டு விடுவேன். வாயில் ஒரு சின்ன டியூப் வைத்து சொட்டு சொட்டாக தண்ணீர் விட்டு (சொட்டு நீர் பாசனம்!) இப்போ வளந்து பாருடா’ என்று சொல்வேன். எங்களுக்கு கடவுள் சரியாக நீரூற்றவில்லை.

வீட்டில் எப்போதும் சில்லறை தட்டுப்பாடு இருந்து கொண்டே இருந்தது. நீங்கள் சொல்லும் ‘சில்லறை இல்லை’க்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. சில்லறை கூட இல்லை என்றும் வைத்துக் கொள்ளலாம். பணத் தட்டுப்பாடு என்று தான் எழுத நினைத்தேன். பொதுவாக பணத் தட்டுபாடு என்பது வாங்க நினைக்கும் பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாது போனால் நடுத்தர வர்க்கம் சொல்வது. உதாரணமாக வீடு, நகை, வாகனம் ஆகியவை. ஆனால் அத்தியாவசியத் தேவையான அரிசி பருப்புக்கே தட்டுப்பாடு என்றால் அதற்கு சில்லறைத் தட்டுப்பாடு என்றால் தானே பொருத்தமாக இருக்கும். அம்மாவிற்கு காசு சேமித்து வைக்க என இருந்தவை அஞ்சரை பெட்டி மற்றும் இதர டப்பாக்கள்.

எங்கள் வீட்டில் இரண்டு தகரப் பெட்டிகள் இருந்தன. ஒன்று உடைந்து இருக்கும். கீழே இருக்கும் பெட்டியில் மடித்து வைக்கப்பட்ட அம்மாவின் சேலைகள் இருக்கும். மேலே இருக்கும் பெட்டியில் அப்பாவின் அயர்ன் செய்த கரை வேட்டிகள் மற்றும் சட்டைகள்.

அப்பாவிற்கு அம்மா காசை எங்கெங்கு வைப்பார்கள் என்பது தெரியும். காசு அப்பப்போ காணாமல் போகும். அப்பா தான் எடுக்கவே இல்லை என்று சத்தியம் செய்வார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை ஆரம்பிக்கும். பொதுவாக இரவில் ஆரம்பிக்கும் சண்டைக்கு முடிவு தெரியாமல் பயந்தபடியே தூங்கிப் போயிருக்கிறோம். அப்பாவுக்கு தெரியக் கூடாது என்று அம்மா ஒரு சேலைக்குள் வைக்கும் பணத்தை அப்பா வேறு எந்த சேலையையும் கலைக்காமல் சரியாக அந்த சேலையை மட்டும் பிரித்து பணத்தை எடுத்து விடுவார். எனக்குத் தெரிந்து இந்த ஒரு விசயத்தில் அப்பா அம்மா இருவரும் மனமொத்த தம்பதிகள்.

சண்டையின் போது ‘உடையக் கூடிய பொருட்களான’ டிவி ரிமோட், செல்போன் என எதுவும் இல்லாத காலமது. சண்டை போட்டு விட்டு அப்பா வெளியே சென்று விட அம்மாவிடம் நாங்கள் எதை கேட்டாலும் அம்மாவிடம் இருந்து அடி கிடைக்கும். கொஞ்ச நாட்களில் எங்களுக்கு புரிந்து விட்டது. சண்டை முடிந்த நேரம் அல்லது அப்படி நம்பப்படும் நேரங்களில் அம்மாவிடமோ அப்பாவிடமோ எதுவும் பேசக் கூடாது என்று. ஆனால் இந்த சண்டை விஞ்ஞானம் புரியாமல் ‘பண்ணிரண்டு வயதில் வீட்டுக்கு வந்த அண்ணன்’ அடி வாங்கும்.

சாதாரணமாக அடிக்கும் அம்மா சாமி வந்தும் அடிப்பார்கள். அம்மாவிற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் விசேச நாட்களில் எல்லாம் ‘அருள்’ வந்து விடும். ஆனால் அப்பத்தா மட்டும் ‘ஆமா இவளுக்கு சாமி வருது..இது பேய்டா.. மொளக்கமாத்த கொண்டு ரெண்டு சாத்து சாத்துடா சரவணா’ என்று சொல்லும். அம்மாவிற்கு வருவது ‘மொட்டை கோபுரம்‘ என்று அம்மாவே நம்பினார்கள். சோறு போட்டு விட்டு கொழம்பு ஊத்தாமல் இருக்கும் அம்மாவை அண்ணன் நிமிர்ந்து பார்க்கும். விழும் தலையில் நச் என்று ஒரு அடி.. எங்கடா வந்த... யார் வீட்டுக்கு வந்துருக்க என்று.. அண்ணன் அலறி அடிச்சு வெளியில் ஓடும். இப்படி ஓரிரு முறை நடந்திருக்கு.

இப்படியான ஒரு நாளில் அண்ணன் ஒரு நாள் ‘நிமிர்ந்து பார்க்க’ அம்மா ஏதோ ஒரு ஞாபகத்தில் அண்ணனை ஒரு ரெண்டு செகண்டு பார்த்தார்கள். ‘ஆத்தாடி.. சாமிடோய் என்று அலறியபடி அண்ணன் தெருவில் ஓட ஆரம்பித்தது. டேய் சும்மாதாண்டா பார்த்தேன் வாடா என்று அம்மா கூப்பிட்டார்கள். இல்ல வேணாம்.. கொழம்ப ஊத்தி திண்ணையில் வச்சுடுங்க, நான் சாப்பிடுகிறேன் என்று சொல்லியதை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகின்றது. அம்மாவிடம் அடி வாங்குவது பத்தாவது படித்த வரை தொடர்ந்தது.

நான் செய்யாத ஒரு தவறுக்கு அம்மா விசிறிக் கம்பால் அடித்தார்கள். அழாமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். அடிப்பதை நிறுத்தி விட்டு என்னைப் பார்க்கும் போது சொன்னேன். முடிஞ்சுடுச்சா.. இப்பவும் சொல்ல்றேன்மா. நான் காச எடுக்கல.. இன்னொரு தடவ எதுக்காவது அடிச்சீங்கன்னா வீட்ட விட்டு எங்காவது ஓடிப் போயிடுவேன் என்றேன். இப்படியாக முட்டை ரவி, மணல்மேடு சங்கர், ஆசைத் தம்பி இவர்களில் ஒருவனாக – ‘சங்கு சரவணணாக’ வர வேண்டிய அணைத்து வாய்ப்பும் வசதிகளும் எனக்கு சிறு வயதில் கிடைத்தது. ( சரவணன் கொல பண்ணான்னா அதே ஸ்பாட்ல நின்னு சங்க வாயில வச்சு ஊதிட்டு தானாம்ல போவான்??) ஆனால் அது நகரமாக இல்லாமல் கிராமமாகப் போனதால் அப்படி ஒருவனாக ‘வளர’ முடியாமல் போனது.

வீடுன்னா அப்படி இப்படித்தான்டா இருக்கும்.. இதெல்லாம் நெனைச்சு கவலைப்படாம படிக்கிற வேலைய மட்டும் பாரு என்று சொன்ன உறவுகள் கிராமத்தில் நிறைய இருந்தார்கள். நான் கொஞ்சம் நன்றாக படித்ததற்கு இது மட்டுமே காரணமாக இருக்கும். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை முதல் ரேங்க் அல்லது இரண்டாவது ரேங்கில் இருப்பேன். பெரும்பாலும் எல்லா வகுப்புகளிலும் நானே வகுப்புத் தலைவனாக இருந்திருக்கிறேன். நல்லா படிச்சு டாக்டர் ஆகனும்னோ அல்லது வக்கீல் ஆகனும்னோ படிக்கவில்லை. மற்றவர்கள் நம்மைப் பற்றி பெருமையாக பேச வேண்டும் என்பதே காரணமாக இருந்தது. இங்க பாருங்கடா.. கஞ்சி குடிக்க வழி இல்லாத புள்ள நல்லா படிச்சு முதல் ரேங்க் வாங்குது.. நம்ம புள்ள நல்லா தின்னுபுட்டு திமிரு புடிச்சு அலையுது என்பது என் கூட படித்த மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் சொல்லும் மொழி.

‘நான்’ என்ற அகந்தை அழிந்தவன் ஞானி என்கிறது வேதம். படி அரிசி கடன் கேட்டு அடுத்தவர் வாசலில் நின்றதில் பாதி ‘நான்’ போய் விட்டது. படிப்பிற்காக அடுத்தவரிடம் கை ஏந்தியதில் மீதி ‘நானும்’ போய் விட்டது. யானெல்லாம் எப்போதோ ஞானி ஆகி விட்டவன்.

‘கற்கை நன்றே கற்கை நன்றே, ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என நீங்கள் படித்திருக்கலாம். ஆனால் அதன் படி வாழும் வாய்ப்பை கடவுள் எனக்குக் கொடுத்திருந்தான். எட்டாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை கிடைத்த அரசின் கல்வி உதவிப் தொகை எனக்குப் பேருதவி செய்தது. ஹாஸ்டல் மெஸ் பீஸ் கட்டாதவர்களின் ஹால் டிக்கெட் ஹாஸ்டல் வார்டனிடம் வந்து விடும். பீஸ் கட்டிய பின்பே ஹால் டிக்கெட் வாங்கி செமஸ்டர் எழுத முடியும். பெரும்பாலும் நான் ஹால் டிக்கெட்டை வார்டனிடம் தான் வாங்கி இருக்கிறேன். அப்போதெல்லாம் பணம் அனுப்புமாறு அண்ணனுக்கு கடிதம் எழுதுவேன். அண்ணன் இப்போது ஒரு நாளில் சொல்லியது. நான் எழுதிய கடிதங்களை மிகவும் பத்திரமாக வைத்திருப்பதாகவும் அவை அவ்வளவு அழகாக எழுதப்பட்டிருக்கும் எனவும்.

அப்பா சண்டையின் போது அடிக்கடி சொல்லும் வார்த்தை.. இப்படியே பண்ணிக்கிட்டு இருந்த ‘பட்வன’ குடிச்சு செத்து போயிடுவேன் என்பதாக இருக்கும். ‘பட்வன்’ என்பது ஏதாவது பூச்சி கொல்லி மருந்தாக இருக்கலாம். அந்த நேரங்களில் எல்லாம் அப்பா திடீர்னு செத்து போயிடுவாரோ.. அப்படி செத்துப் போயிட்டா நாம என்ன செய்றது’ என்று கவலைப்பட்டிருக்கிறேன். அம்மாவை மிரட்டுவதற்காக சொன்ன வார்த்தைகள் எங்களை அதிகம் பயமுறுத்தின. நீ எதுவாக விரும்புகிறாயோ அதுவாகவே ஆகிறாய்.. என்று சொல்லியது விவேகானந்தர் என்று நினைக்கிறேன். அப்பாவின் சாவு இயற்கையாக இருக்கவில்லை. பாம்பு கடித்து விஷம் உடல் முழுதும் பரவி செத்துப் போனார்.

மேலே சொன்ன எவையும் கூட்டியோ குறைத்தோ சொல்லப்பட்டதில்லை. இப்படித்தான் இருந்தார்கள். என் வாழ்க்கை இப்படியாகத் தான் இருந்தது. இதில் எவரையும் குறையோ குற்றமோ சொல்லத் தோணவில்லை. சொல்லப் போனால் எவர் மீதும் குறையில்லை, யார் மீதும் குற்றமில்லை. என் தாத்தா என் அப்பாவிற்கு தராததை, என் அப்பா எங்களுக்கு தராததை நான் எல்லோர்க்கும் தரவே ஆசைப்படுகின்றேன். அது அந்நியோன்யம் கலந்த அன்பு, நேசம் கலந்த பாசம்.

இவ்வாறான எனது கடந்த கால வாழ்க்கையில் நான் பட்ட அனுபவம் என்னை நல்லவனாக வாழும்படி செதுக்கியது என்று சொன்னேன் என்றால் அதை விட பெரிய பொய் வேறொன்றும் இருக்க முடியாது. எனக்கும் கோபம் வருகின்றது. சண்டை போடுகின்றேன்.. ஆனால்.... ஆனால் .. இந்த பிளாக் எழுத ஆரம்பித்த கடந்த மூன்று நாட்களாக எவர் மீதும் கோபப்படவில்லை.. பார்க்கும் யாவர் மீதும் பாசமே வருகின்றது. இப்படியே வாழ்ந்து விட்டுப் போனால் இதை விட பெரும் வரம் ஒன்று இருந்து விட முடியாது.

வழக்கமாக கதையின் முடிவில் வரும் ‘ இதுல இருந்து என்ன தெரியுது.. உண்மையா கடவுள்கிட்ட வேண்டிகிட்டா அவர் நம்ம கேட்குறத தருவார்’ என்று முடிக்கின்றேன். பாலா கேட்கின்றது.. அப்பா.. அப்புறம் ஏம்பா கடவுள் எனக்கு எதுவுமே தரல’ என. இல்லையே.. நீ கேட்டா கடவுள் தந்திருப்பாரே என்று சொல்லி விட்டு ‘நீ என்னடா கேட்ட’ என்றேன். அச்சச்சோ கேக்குறதுக்கு மறந்துட்டேன்பா’ என்று சிரிக்கின்றது.

பாலா.. கடவுள் சில பேர் கேட்டத கொடுக்காம இருந்திருக்கலாம்.. பல பேர் கேட்டத கொடுத்திருக்கலாம் ஆனால் ஒனக்கெல்லாம் அவர் நீ கேக்காமலேயே கொடுத்துடுவார்.. என்று சொல்கின்றேன். சரிப்பா.. என்று முத்தமிட்டு தூங்குகிறது.

காலையில் தூங்கிக் கொண்டிருந்த பாலாவை எழுப்ப மனமில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தூக்கத்தில் கனவு கண்டு சிரிக்கின்றது. கடவுள் ஏதேனும் கொடுத்திருக்கலாம்.

March 3, 2013

வீட்டில் வாழும் தேவதை


இன்னமும் பாலாவிற்கு பெட்டில் உச்சா போகும் பழக்கம் போகவில்லை. அத்தோடு மேலே தூங்கும் பழக்கமும். ஏன்டா இப்படி செய்ற, சீமக் கதை எல்லாம் பேசுற, இப்படி பெட்ல உச்சா போகலாமா என்றால், அப்பா அது உச்சா இல்லப்பா, நான் தூங்கும் போது யாரோ தண்ணிய ஊத்தி ஊத்தி விடுறாங்கப்பா! யார்னு கண்டு பிடிக்கணும் என்று அழகாக சமாளிக்கிறது . மற்றும் ஒரு நாளில் நீங்க நல்லா தூங்குனீங்க, அதனால எழுப்பலப்பா என்று சொல்லும். தூங்காமல் அழும் போது மேலே போட்டு பாட்டு பாடி தூங்க வைத்த பழக்கம் நிறுத்த முடியாமல் இன்னமும் தொடர்கின்றது. சஞ்சய் சொல்கின்றான் ‘நீ இனி பெரிய புள்ள பாலா, அப்பா மேல எல்லாம் தூங்கக் கூடாது என்று. எங்கப்பா... நான் தூங்குவேன் போடா என்கிறது. தூங்கியவுடன் பெட்டில் போட்டு விட்டு கீழே பாயில் படுத்திருந்தாலும் இரவில் எப்போதாவது எழுந்து தேடி வந்து படுத்துக் கொள்கின்றது. தலை முதல் கால் வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கும் பாலா என்னை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.

ஆபீசில் இருக்கும் போது ஒரு நாள் பாலா கேட்டது. அப்பா நீங்க காலையிலயே வருவீங்களா இல்ல நைட்டு வருவீங்களா என்று. நான் சொன்னேன் நைட்டே வந்துருவேன் பாலா என்று. நைட்டு தான் வருவியா காலையில வர மாட்டயா என்று கேட்டு விட்டு ஒரே அழுகையாக அழ ஆரம்பித்தது. மீனா போனை வாங்கிப் பேசியது ‘ என்னங்க சொன்னீங்க புள்ள இப்படி அழுகுது.... இல்ல மீனா பாலா நைட்டு வருவீங்களா இல்ல காலையில வருவீங்களான்னு கேட்டது. நான் நைட்டே வந்துருவேன்னு சொன்னேன் அதுக்கு அழுகுது என்றேன்..

ஒங்களுக்குத் தெரியாதா, அதுக்கு வெளிச்சத்தோட வீட்டுக்கு வந்தா காலையிலனு அர்த்தம். இருட்டுன பின்னாடி வீட்டுக்கு வந்தா நைட் என்று அர்த்தம். நீங்க லெட்டா வர்றேன்னு சொன்னதால புள்ள அழுகுது என்று. அப்போது தான் எனக்குப் புரிந்தது. பாலாவின் காலக் கணக்கு. நம் மாதிரி சாதாரண மனிதர்க்குத் தான் காலை, மதியம், சாயந்தரம், இரவு என்ற காலப் பாகுபாடு எல்லாம். பாலாவிற்கு வெளிச்சம் இருந்தால் காலை இல்லாவிட்டால் இரவு என இரண்டே காலம் தான். யோசிச்சுப் பார்க்கையில் பாலாவின் கேள்வியை நான் தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அது காலையிலேயே வந்துடுவியா, இல்ல நைட்டுத் தான் வருவியா என கேட்டது.

இப்போது பாலா போன் செய்தால் ‘ சமத்தா அம்மா சொல்றத கேட்டுட்டு இரு பாலா , அப்பா காலையிலேயே வந்துடுவேன்.. என்கின்றேன்.

இப்பவும் சஞ்சய், அப்பா ‘அரிச்சு விடுங்கப்பா’ என்கிறான். பாலா ‘கூசுங்கப்பா’ என்கிறது’. அரிக்குது சொரிஞ்சு விடுங்க என்பதை ‘ அரிச்சு விடுங்க என்றும் கிச்சு கிச்சு மூட்டினால் ஏற்படும் கூச்சத்தை, கூசி விடுங்கள் என்றும் அகராதியில் புதிதாகச் சேர்க்க வேண்டிய சொற்களை அறிமுகப் படுத்துகிறார்கள். இன்னமும் வங்கித் தாங்க என்று சொல்லத் தெரியவில்லை. ஆங்கித் தாங்கப்பா’ என்றே கேட்கிறது.

அப்பா கதை சொல்லுங்க என்று தான் பாலா ஆரம்பிக்கும். ஆனால் நான் சொல்வதை விட பாலா கேள்வி கேட்பதே அதிகமாக இருக்கும். ஒரு ஊர்ல ஒரு ராஜா என்று தான் ஆரம்பித்திருப்பேன். பாலா கேட்கும், அந்த ராஜா என்ன கலர் ட்ரெஸ் போட்டிருந்தார். அவருக்கு எத்தன பசங்க! அவங்க வீடு குட்டி வீடா இல்ல பெருசா என்று. கதையை முடித்தவுடன் இதுலருந்து என்ன தெரியுது என்று கேட்கும் கேள்விக்கு சஞ்சய் பதிலும் பாலா பதிலும் என்றுமே ஒன்றாக இருந்ததில்லை.

அடுத்து பாலா கதை சொல்ல ஆரம்பிக்கும். ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அந்த ராஜா... ‘அப்பா, இது நீங்க சொன்ன ராஜா இல்ல வேற ராஜா’ என்று ஆரம்பித்து, நான் கதையில் சொன்ன கேரக்டர்களைச் சொல்லி ஆனால் அவர்கள் இல்லை என்பதிலேயே கதை தொடரும். பின்பு எங்கெங்கோ கதை இலக்கின்றி அலையும். ராஜாவை பேய் பிடித்துக் கொள்ளும். அவர் சிங்கத்திடம் மாட்டிக் கொள்வார். மாட்டிக் கொண்ட ராஜாவை ஒரு பறவை காப்பாற்றும் என நான் லீனியர் முறையில் கதை செல்லும்.

செருப்பு அல்லது செப்பல் என எத்தனை தடவை சொன்னாலும் இன்னமும் அப்பா என்னோட ‘செருப்பலை’ பார்த்தீங்களா என்றே கேட்கும் பாலாவின் போட்டி சில சமயம் மீனாவிடமும் நீளும். ( நீ மட்டும் புது நெக்லஸ் போட்ருக்க, எனக்கும் ஆங்கிக் கொடுப்பா, இதே மாதிரி)

ஹாஸ்பிடல் கிளம்பும் போது கூட பெளடர் போட்டு பொட்டு வைத்துக் கொண்டு அப்பா நல்லா இருக்கேனா எனக் கேட்கும் பாலா தானே சோப்பு போட்டுக் கொள்வேன் என பாத் ரூமில் அடம் பிடிக்கும். அப்பா வெள்ளை சோப்பு (டவ் சோப்) வாங்கிட்டு வாப்பா.. அப்ப தானே நான் வெள்ளை ஆவேன் என்று இரண்டு தடவை மூஞ்சிக்கு சோப்பு போடுகிறது. சோப்பு போட்டு விட்டு கண்களை மூடியபடி தண்ணீர் மோக்க ஜக்கைத் தேடித் தடவும் காட்சியை விட மகிழ்ச்சியான தருணம் ‘அப்பா’ கேரக்டருக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. வீட்டுக்கு வாடா கத்திய வச்சி குத்தி கொல்லிடுறேன் என்று சாக்லேட் வாங்கித்தராததற்காக கோபப் படும் பாலா. ஒன்னோட வயித்துல நான் ஏறி நின்னேன்ல அதே மாதிரி என்னோட வயித்ல ஏறி நில்லு.. ம் ஏறி நில்லுடா என அதட்டும் பாலா. ஒனக்கு புது சட்ட, வீடு ஆங்கித் தர்றேன் என கண்கள் மின்ன சொல்லும் பாலா என எங்கள் வீடு முழுதும் பால சந்தியாவின் ஆட்சி தொடர்கின்றது.

இது எங்கள்  வாழ்க்கையின் பொற்காலமாக இருக்கக் கூடும்.