பாண்டி கோவில் வந்து
விட்டது என்பதை ‘டேய்ய்ய்...... என்று ஆங்காரத்துடன் சத்தம் போட்டபடி சாமியாடும்
பெண்களின் சத்தமும் காற்றில் கலந்து வந்த கறி வாசமும் உணர வைக்கின்றது.
பாண்டி சாமி, துடியான
சாமி. ஒழுக்கமாக இருந்தால் அள்ளிக் கொடுக்கும் சாமி, சுத்தபத்தமாக இல்லை என்றால்
ஆளையே அடித்து விடும். சங்கிலியால் கட்டி வைத்த நிலையில் ஆக்ரோஷமாகக் காட்சி தரும்
சாமியை வழிபட தினம் தோறும் கூட்டம் கூட்டமாக சுற்று வட்டார கிராம மக்கள்
வருகின்றார்கள். பாண்டி சாமி ஆடும் பெண்களுக்கு பஸ்ஸை விட்டு இறங்கும் முன்பே அருள்
வந்து விடுகின்றது. ( ஆம், பாண்டி சாமி ஆண் சாமியாக இருந்தாலும் அது பெண்களுக்கு
மட்டுமே அருள் வந்து ஆட வைக்கின்றது) சாமி வந்து ஆடும் பெண்கள் சுதந்திரமானவர்கள்.
கணவன் மற்றும் கூட வந்த உறவினர்கள் என எவ்வளவு பேர் தடுத்தாலும் டேய்.... என்ற
ஒத்தை வார்த்தையில் அவர்களை அடக்கும் பாண்டி சாமிகள், ‘கவலப்படாம போடா.... தலைமாடு
காக்குறேன்’ என்ற அருள் வாக்கில் ஏழை மக்களின் கவலை தீர்க்கிறார்கள்.
இந்தக் குதிரைக்
கிட்ட சுத்தம் இல்லடா.... ஏய்....ஏன்கிட்டயே விளையடுறையா... போட்டுப்
பாக்கவாடா.... பாக்குறயா... பாக்குறயாடா.. என்ற அதட்டலுக்கு கண்ணீருடன் காலில்
விழும் ஆளுக்கு ஏதோ ‘தொடுப்பு’ இருக்கக் கூடும்.
மன்னிச்சிக்க சாமி...
விட்டுர்றேன்... இனிமே பண்ண மாட்டேன்... ஒன்னைய விட்டா எங்களப் பாக்குறது யாரு
என்று பதில் பேசும் ஆளுக்கு திருநீறு அவ்வளவு சுலபமாகக் கிடைக்காது. பக்கத்தில் இருக்கும்
உறவுகள் ரேக்கமன்டேசன் செய்யும்.
சரி சாமீ, பண்ண
தப்புக்கு மன்னிப்பு கேட்டு புள்ள மருகுது பாரு... மன்னிச்சு துன்னூறு கொடுப்பா...
உன்னைய விட்டா யாருப்பா எங்களுக்கு இருக்கா என்று சாமியுடன் நேரடியான தொடர்பில்
இருக்கும் மக்கள், தண்டனையா இன்னும் ரெண்டு ஆடு வெட்டச் சொல்றோம், மன்னிச்சு குலம்
காக்கனும் என்று அடுத்த வருடத் திருவிழாவுக்கு அப்போதே அடி போடுகிறார்கள்.
நேர்த்திக் கடன்
தீர்க்கவோ அல்லது காது குத்தும் வைபவமோ ரெட்டைக் கிடாய்* வெட்டி சாமி கடன்
தீர்க்கிறார்கள். ஆட்டுத் தலை மட்டும் பாண்டிக்குச் சொந்தம்.
தனது சொந்தங்களுடன்
கிடா விருந்து சமைத்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். ‘குடி’
மக்களின் குறை தீர்க்க கோவிலின் நுழைவு வாயில் எதிர்புறமாக டாஸ்மாக் இருக்கின்றது.
எலும்ப எப்படிப்பா
சும்மா கடிக்கிறது? கொஞ்சம் கவனிப்பா என்ற மச்சினன் மாமன் கூட்டம் அங்கங்கே
அமர்ந்து ‘கட்டிங்’ போடுகின்றது. குடித்து விட்டு கோவிலுக்கு உள்ளே வரக் கூடாது
என்ற போர்டை நுழைவு வாயிலில் வைத்திருக்கின்றார்கள்.
முன்னெல்லாம் வெறும்
கருவேல் மரங்கள் மட்டுமே இருக்கும் அந்த இடம் இப்போது மண்டபங்களால் நிரம்பி
வழிகின்றது. இருந்தாலும் இன்னும் ஏழை மக்களின் பந்தி பரிமாறும் இடமாக மரங்களை
விட்டு வைத்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கின்றது. முன் பின் தெரியாதவர்கள் கூட
எந்த பந்தியிலும் அமர்ந்து கறிச்சோறு சாப்பிடலாம். ஏனெனில் பாண்டிக்கு வெட்டிய
கிடாக் கறியை வீட்டுக்கு எடுத்துப் போகக் கூடாது என்ற பழக்கமும். எவர்
அமர்ந்தாலும் சாப்பாடு போட வேண்டும் என்ற நம்ம்பிக்கையும் இன்னும் இருக்கின்றது.
பெரிய பெரிய ப்ளெக்ஸ்
பேனர்களில் அஜித், விஜய், ரஜினி, கமல் நின்று காது குத்திக் கொள்ளும் பொடிகளை, பூப்புனித
நீராடும் சிறுமிகளை வாழ்த்துகிறார்கள்.
அப்பத்தாக்கள்,
ஆச்சிகள் தங்களது பேரன்களுக்கு விளையாட்டுச் சாமான்களோ, பேத்திகளுக்கு வளையல்களோ
வாங்கித் தருகின்றார்கள். காலையில் மினி லாரிகளிலோ, குட்டி யானையிலோ வந்த கூட்டம்
ஆற அமர வழிபட்டு, விருந்துண்டு பகை மறந்து வெற்றிலை பாக்கு மென்று சாயந்தரம் ஊர்
திரும்புகின்றது.
காலையில் ஆக்ரோஷமாக
காட்சி அளித்த பாண்டி சாமி சாயந்தரம் நான்
பார்க்கும் பொது சற்று புன்னகை செய்த மாதிரி தெரிந்தது....
