ஏதோ ஒரு கோபத்தில் ஒரு சொல் சொல்லி விடலாம்
அல்லது ஒரு அடி அடித்து விடலாம், ஆனால் திட்டமிட்டு ஒரு கூலிப் படை போல கட்டிய
மனைவியைக் கொலை செய்ய முடியுமா?
செய்திருக்கானே ஒரு கல்லூரிப் பேராசிரியர். சொல்லிக்
கொடுப்பதில் ஏதாவது தவறு இருக்கலாம். ஆனால் சொல்லிக் கொடுப்பவனே தவறு என்றால்?
பள்ளியில் படிக்கும் பையனை
காதலன் என்று உடன் போகின்றாள் ஆசிரியை ஒருத்தி, ஒரு ஆசிரியை கொலை செய்கின்றான் மாணவன். கல்வித்
துறை எப்போது கலவித்துறையாக மாறிப் போனது. ஆசிரியர் மாணவர் என்ற புனிதமான
பந்தத்தில் நஞ்சைக் கலந்தது யார் குற்றம்.
நாமக்கல் மாவட்ட பள்ளி ஆசிரியர் சொல்கின்றார், இரண்டு வருடம் கஷ்டப்பட்டால் வாழ்நாள் முழுவதும்
சந்தோசமாக இருக்கப் போகின்றார்கள், எனவே பதினெட்டு மணி நேரம் படிப்பதில் என்ன தவறு
என்று. இப்படிப்பட்ட வியாபாரிகளும், சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில்
உள்ள பள்ளியில் இரண்டு லட்சம் டொனேஷன் கொடுத்து பிளஸ் ஒன் சீட் வாங்கும் ‘நுகர்வோர்களுமாகச்’
சேர்ந்த கூட்டணி தான் பையனின் கையில் கத்தியைக் கொடுத்தது.
அமெரிக்காவில் ஐந்து வருடம் வேலை பார்த்தவன்,
பிங்க் சிலிப் கொடுக்கப் பட்ட நாளில், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து
கொண்டான். உண்மையில் கல்வி எனபது தன்னம்பிக்கையும், எதையும் எதிர் கொள்ளும்
துணிவையும் அல்லவா கொடுத்திருக்க வேண்டும்.
செடியில் பூ மலர்வது போல, கல்வியும் இயல்பாக
இருக்க வேண்டும். இப்படியான சூழலில் நான் கல்வி கற்ற காலத்தை நினைத்துப்
பார்க்கிறேன்.
எனக்கு எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு
வரை தமிழ் பாடம் எடுத்தவர் ‘தமிழய்யா ‘ சடாச்சரம் அவர்கள். ஒரு ஆசிரியர் என்பவர்
எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவரே எடுத்துக் காட்டு.
அவர் தேவாரம் பாடும் போது ‘கண்களை’ மூடிக்
கேட்டால் ஓதுவார் கோயிலில் ஓதுவது போலவே இருக்கும்.
சிரித்த முகமும் அந்த உயரமும் அவருக்கு ஒரு
கம்பீரத்தைத் தரும். நெற்றியில் திருநீறு நெடுங்காலமாய் இடுவதால், அது சிறு கோடு
போன்ற தழும்பாக அவரது சிவந்த மேனிக்கு தனி அழகைக் கொடுக்கும். வானாகி மண்ணாகி....
என்று அன்றைய நாள் தொடங்கும் போது, முதல் வகுப்பு முழுவதும் ஒரு தெய்வீக அதிர்வு
இருக்கும். தினமும் தமிழ் வகுப்பே முதல் வகுப்பாக அமைந்தது தற்செயலா, கடவுள் அருளா
என்று தெரியவில்லை.
எட்டாம் வகுப்பு மன்றத் தேர்வில் மாவட்ட அளவில்
முதலாவதாக வந்திருந்தேன். இதற்காக ஒரு பாராட்டு விழாவும், பரிசும் ஏற்பாடு பண்ண
வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் தமிழய்யா வேண்டுகோள் வைக்க அவர் அதை நிராகரித்து
விட்டார்.
மறுநாள் அய்யா, ‘இங்க வாலே, நீ முதல் மதிப்பெண்
பெற்றதற்காக என்னால் முடிந்த ஒரு பரிசுப் பொருள். புதுசா வாங்கி உனக்கு இன்ப
அதிர்ச்சி கொடுப்பதற்காக இதை பேப்பர் சுற்றி
எடுத்து வரவில்லை. இந்த போட்டோ என் வீட்டில் சாமி அறையில் இருந்த பழைய
போட்டோ. அதனால தான் யாருக்கும் தெரிய வேண்டாம்னு பேப்பர் சுற்றி இருக்கு. என்னலே,
வாங்கிக்கிடுவல்ல? என்று தயக்கத்துடன் கொடுத்தார். இங்க பிரிக்க வேண்டாம்லே, வீட்ல
போய் பார்த்துக்க என்று கொடுத்த குழலூதும் கண்ணன் போட்டோ, இன்னமும் அப்படியே
இருக்கிறது.
அந்த போட்டோவுக்கு மட்டும் அப்பா பூ வாங்கிப்
போட்டு சாமி கும்பிட்டது, பெருமாளுக்காக மட்டும் என்று தோன்றவில்லை.
அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் மின்சார வசதி
கிடையாது, தெரு விளக்கிலோ அல்லது மண்ணெண்ணெய் தீபத்திலோ படிக்க வேண்டும். அது
தெரிந்து, நீ பள்ளிக் கூடத்திலேயே இரவு தங்கிப் படிலே, நான் சாவி வங்கித் தர்றேன்’
என்று சொல்லி தலைமை ஆசிரியரிடம் பேசி, சாவி வாங்கிக் கொடுத்தார்.
எங்கள் வீட்டு முருங்கக்கீரை, ரேஷன் கார்டில் வாங்கும் மண்ணெண்ணெய், காட்டில் விளையும் வேர்க்கடலை என எங்களுக்குத் தோன்றுவதைக் கொடுப்போம். அவர் வீட்டிற்குச் செல்லும் நாட்களிலெல்லாம், இருங்கடா எல்லோரும்
சாப்பிட்டுப் போங்க என்று அன்புடன் உபசரித்தவர்.
மூன்றாம் வகுப்பில் கதை சொன்ன ‘ மரகத மணி’
ஆசிரியர் இவரின் இரண்டாவது பையன். கடைசிப் பையன் ‘பால சுப்பிரமணி’ என் வகுப்புத்
தோழன்.
ஏலேய், ஸ்கூல்ல தங்கிப் படிக்கிறோம்னு
சொல்லிட்டு படம் பார்க்க தியேட்டர்க்கு போய்டாதீங்கலே, அப்படி படம் பாக்கணும்னா
ஏங்கிட்ட சொல்லிட்டுப் போகணும் என்ன? என்பார்.
அப்படியும் ஓரிரண்டு தடவை அவரிடம் சொல்லி விட்டு, படம் பார்க்கச்
சென்றிருக்கிறோம். இந்தாங்கடா, முறுக்கு வங்கிச் சாப்பிடுங்க என்று காசு கொடுத்து
அனுப்புவார்.
கட்டுரை எழுதச் சொல்லி ‘சொந்தமாக எழுதினால் அதிக
மதிப்பெண் போட்டு, சுய சிந்தனையை ஊக்குவித்தவர். எந்தத் தவறை செய்திருந்தாலும்
‘அய்யா, செஞ்சது தப்புன்னு உணர்ந்துட்டேன் அய்யா, இனிமே செய்ய மாட்டேன்’ என்றால்
உடனே முகமலர்ந்து, இனிமே செய்ய மாட்ட இல்ல, சரி போ, என்று உடனடி மன்னிப்பை
அளிப்பவர்.
தமிழ் எனக்குப் பிடித்த பாடமானதற்கும்,
கல்லூரியிலும் தமிழில் முதல் மதிப்பெண் பெற்று வெள்ளிப் பதக்கம் வாங்கியதற்கும்
அய்யா அவர்களையே காரணம். (நான்
வாங்கியுள்ள முதலும் கடைசியுமான ஒரே ஒரு பதக்கம் இது மட்டும் தான்)
எப்போதும் கலகலப்பாக இருக்கும் நான் சில
வேளைகளில் ஏதாவது கவலையில் வகுப்பறையில் அமர்ந்திருக்கக் கூடும். என்னாச்சுடா இவனுக்கு, ஒரு மாதிரி
இருக்கான், சொல்லு என்ன பிரச்சினை எனக் கேட்டு, உதவி செய்த ஆசிரியர்கள் எவ்வளவு பேர்.
இந்தா பணம், பீஸ் கட்டிக்க, உங்க அப்பா பணம் அனுப்பும் போது குடுத்தா போதும் என்று
சொன்ன ஜெயக்குமார் சார். இன்னும் சொல்லாமல் விட்டவர்கள் நிறையப் பேர்.
ஆனால் இன்று ஆசிரியர் மாணவர் உறவு சீரானதாக
இல்லை, எந்த மாணவனும் சொல்லிக் கொடுக்கும் குருவை, மதிப்பதும் இல்லை.
எந்தக் குருவும் மாணவனை, சீடனாகப் பார்ப்பதும் இல்லை.
காசு கொடுத்து கல்வி வாங்கலாம், ஆனால் படிப்பு
வாங்க முடியாதே! சொல்லித் தருவதற்கு தமிழய்யா
மாதிரி ஆட்கள் இல்லாததே இத்தலைமுறை மாணவர்களின் சாபம்.
