Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

November 26, 2012

மழலை மழை


இது பாலாவின் கதை நேரம்

தேவதை கதை கேட்டு
தூங்கியதில்லை
தேவதையே கதை சொல்லி
 தூங்குகின்றேன்  இப்போது .

ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்
அரண்மனையில் இருக்கும் போது
அவரின் அம்மா வந்தார்களாம்
ஏ ராஜா சாக்லேட் சாப்பிட்டயா
எங்க ஆ... காட்டு என்றார்களாம்
எத்தன தடவ சொல்லி இருக்கேன்
சாக்லேட் சாப்பிட்டா சளி பிடிக்கும்னு.. என
பாலாவின் கதைகள்
படு சுவாரஸ்யமானவை.
தேவதை சொல்லும் போது
சிரிக்காமல் கேட்டு வர(ம்) வேண்டும்.

‘குட்டி’ பூச்சாண்டி
‘குட்டி பேய்’ என
பேய் பிசாசுகள் கூட
குட்டி குட்டியாய்
பாலாவின் கதைகளில்
அழகழகாய் மாறுகின்றன

இன்னைக்கு ஸ்கூலா லீவா
 கேட்ட படி துயில் எழும்
குட்டி தேவதைக்கு
எல்லா நாளுமே லீவா
இருந்து விடக் கூடாதா?
மழை பெய்யும் போதெல்லாம்
மனதிற்குள் வேண்டியபடி காத்திருக்கிறேன்
காஞ்சிபுரம்,  சென்னை பள்ளிகளுக்கு
விடுமுறை எதிர்பார்த்து
பாலாவை விட ஆவலாய்.

 இன்னைக்கும் லீவுடா
என்றவுடன்
அடித்துப் பெய்கிறது
மொத்த மழையும்
பாலாவின் முகத்தில்.

November 14, 2012

பிரார்த்தனை


எவரிடமும் கை ஏந்த கூடாது
எனபது உங்களின் பிரார்த்தனை.
பிரார்த்தனைப் பாடலே மேரியின்
பிச்சைப் பாத்திரம்.
கைகள் இல்லாமல்
கும்பிடுபவனின் மீது
கவனம் திரும்பாமல் பார்த்துக் கொள்கின்றீர்
கண்ணாடியின் வழியாக
ஊடுருவிப் பார்க்கின்றீர்
கண்கள் குருடா, ஏதும் தெரிகின்றதா என்று
உங்களின் ஆய்வுகள்
போலியோ சப்பிய கால்களையும்
சாட்டையால்
அடித்துக் கொள்பவனின் ரத்தத்தையும்
விட்டு வைப்பதில்லை.
கக்கத்தில் இருப்பது
குழந்தையா, பொம்மையா
என ஆய்ந்து
ஒரு ரூபாய் வர(ம்) வேண்டி
பாக்கெட்டை மேய்ந்து
தரும் ஒற்றை ரூபாயில்
தலைமுறைக்கு புண்ணியம்
சேர்க்கின்றீர்.
கைகளில் தரப்பட்ட
அல்லது திணிக்கப்பட்ட
நோட்டீஸ் தாமாக
விழுமாறு செய்ய
உங்களால் முடிகிறது.
தேடும் ஒரு ரூபாயை  
சீக்கிரம் தேடி முடியுங்கள்
இல்லையேல்  
கடவுள்கள் கடந்து விடக் கூடும்.

June 27, 2012

             நகர விதி

நடந்து செல்லும்
உன் தலையில்
மழை மட்டுமல்ல,
பயணிகள் பேருந்து
பஸ்ஸில் செல்பவன் துப்பும்
பான்பராக் எச்சில்
ஹெலிகாப்டர்
என்கௌன்ட்டர் துப்பாக்கி குண்டு
பறவை எச்சம்
சாப்பிட்ட மிச்சம்
எதுவும் விழலாம்.
அல்லது
கேபிள் பள்ளம்
மூடி இல்லா
சாக்கடை கால்வாய்
செல்லில் பேசிச்
செல்லும் பெண்
சிக்னல் மதியா
மணல் லாரி
ஏதாவதொன்றில்
நீ விழலாம்.
கண் இரண்டிருப்பது
நகரத்தில்,
மேலே பார்க்க ஒன்றும்
கீழே பார்க்க ஒன்றும்
என்றறிக.