அந்த வார ஜூனியர் விகடனை
படித்து முடித்து விட்டேன். இன்னமும் தாம்பரம் வருவதற்கு அரை மணி நேரம் ஆகும் எனத் தோன்றியது. பக்கத்தில் அமர்ந்திருந்த பெரியவர் வார மலர் படித்துக் கொண்டிருந்தார்.
எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒன்று படித்துக் கொண்டு வரவேண்டும் அல்லது பார்த்துக்
கொண்டு வர வேண்டும். இதில் ‘பார்த்துக் கொண்டு வர வேண்டும்’ என்று ஸ்பெஷல் கேப்சன்
போட்டால் பெண்ணியவாதிகள் கோபித்துக் கொள்ளக் கூடும், ஏன் கோர்ட் கேஸ் கூட போடலாம்
ஆதலால் கேப்சன் போடவில்லை. ( களி எல்லாம் சின்ன வயசுல வீட்ல சாப்பிட்டது தான்..
திரும்பவும் வேறு இடத்தில் சாப்பிடும் ஐடியா எதுவும் இப்போது இல்லை...)
நம்ம தான் ‘பிச்சை
புகினும்’ கற்பது நன்று என்ற அவ்வையின் பேரன்கள் ஆயிற்றே.. சார்.. வார மலர்
கொஞ்சம் தர்றீங்களா.. என்றவுடன் அவரும் கொடுத்தார். இன்னமும் அந்து மணி தான் பதில்
சொல்லிக் கொண்டிருக்கிறார். ‘பட்டினியால் மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதை
தடுக்கும் பொறுப்பு ஆளும் அரசுக்கு உள்ளது தானே’ என்ற ஒரு பொறுப்பான கேள்விக்கு
நம்ம ‘மணி’ இப்படி பதில் சொல்லி இருக்கின்றார்.
நம்ம ஊர்ல இருக்குற
பிச்சைகாரர்களை பாருங்கள்.. எவ்வளவு திடகாத்திரமாக இருக்கின்றார்கள்..
எல்லாவற்றிக்கும் அரசு அரசு என்று அரசையே குற்றம் சொல்லக் கூடாது என திருவாய்
மலர்ந்திருக்கிறார். ஒருவேளை அந்து மணியின் வீட்டுக்கு அருகில் இருக்கும் பிச்சைக்
காரர்கள் அவர் போடும் சாப்பாட்டை சாப்பிட்டு திடகாத்திரமாக இருக்கிறார்கள் போலும்.
மேலும் இந்தப் பதில்
மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே நம் சிற்றறிவுக்கு புரியவில்லை.
சாப்பாட்டிற்கு கஷ்டப் படும் ஏழை மக்களை எல்லாம் பிச்சை எடுத்து சாப்பிட்டு ‘திடகாத்திரமாக’
வாழச் சொல்கின்றாரா..
நீங்கள் சமீப காலமாக ‘ம்மா
தாயே’ என்று சாப்பாடு கேட்டு வரும் ஏதாவது
பிச்சைக்காரரை பார்த்தது உண்டா.. அவர்கள் எல்லாம் வழக்கொழிந்து போய் விட்டார்கள்.
என்றைக்கு ‘பிரிட்ஷ்’ கண்டு பிடிக்கப் பட்டதோ, பழசை சேமித்து வைக்கப் பழகிக்
கொண்டோமோ அன்றே அவர்களும் ‘தாயே’ சோறு இருந்தா போடுங்க என்ற வாசகத்தை அவர்களின்
சொல் அகராதியில் இருந்து எடுத்து விட்டார்கள்.
இப்போது வரும் பிச்சைக்காரர்கள் தமக்கு காசு தரும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். இதற்காக அவர்கள் நிறைய கண்ணதாசன் பாடல்களை, இறைவணக்கப் பாடல்களை, மென் சோகப் பாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டியுள்ளது. இப்படி எல்லாரும் பாட ஆரம்பித்து விட்டதால் ஒரு சிலர் தங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்ட சின்னதாக ஒரு ஸ்பீக்கர், மைக், அதற்கான பேட்டரி என மினி சவுண்ட் சர்வீஸ் மற்றும் காசு கலெக்ட் செய்ய ஒரு எடுபிடி என ஹை டெக் ஆக வர வேண்டியிருக்கிறது. இவ்வளவு வசதிகள் செய்து கொள்ள முடியாத ஒரு சிலர் ‘மியூசிக்’ போட ஒருவர், பாட ஒருவர், காசு வாங்க ஒருவர் என்று ஒரு ‘டீம் வொர்க்குடன்’ வருகின்றார்கள். வெகு சிலர் மட்டும் ‘சோலோ’ வாக புல்லாங்குழலில் பாட்டுப் பாடி காசு கேட்கின்றார்கள்.
மேற்கண்ட இவை
அல்லாமல் ஒரு காந்தி குல்லா அணிந்த பெரியவர், பேரே கண்டு பிடிக்க முடியாத ஒரு
இசைக் கருவியில் ‘ ரகுபதி ராகவ ராஜாராம்‘ இசைக்கின்றார். இதில் ஒரு நீள கட்டையும்
அதில் இழுத்துக் கட்டப்பட்ட இரண்டு கம்பிகளும் மட்டுமே இருக்கின்றன. பத்து
வருடங்களுக்கு மேலாக இந்த ஒரே பாடலை பாடி வரும் இவரை நீங்கள் மின்சார ரயிலில்
பயணம் செய்பவராக இருந்தால் மிஸ் பண்ணியிருக்கவே முடியாது.
இங்கு தான் நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். மேற் சொன்ன
எவரும் உங்களிடம் ‘காசு’ என்று பிச்சை எதுவும் கேட்பதில்லை. அவர்கள் ‘பாட்டுக்கு’
பாடிக் கொண்டே நடக்கின்றார்கள். வாடிக்கையாளர்களான இரயில் பயணிகள் காசை எடுத்து
அவர்களில் யாரோ ஒருவரிடம் இருக்கும் தட்டிலோ அல்லது தூக்கு வாளியிலோ போடுகின்றார்கள்.
அது தங்களை மகிழ்வித்ததற்காக அவர்கள் கொடுக்கும் வெகுமதி என்றே எனக்குப்படுகின்றது.
கண் தெரியாதவர்கள்
பாட்டுப் பாடி நாம் மகிழ்ந்து விட்டோமே என்ற நவீன நகர மாந்தர்களின் குற்ற உணர்வாகாகக் கூட அது இருக்கலாம்.. ஏனெனில்
கண் தெரியாத, பாட்டுப் பாடத் தெரியாத வயதானவர்களுக்கு இந்த வாடிக்கையாளர்கள்
பிச்சை இடுவது இல்லை.. பாத்திரமறிந்து பிச்சை இடும் இந்த வாடிக்கையாளர்களுக்காக மைக்
செட், புல்லாங்குழல், வயலின் என பிச்சைப் பாத்திரங்களை நவீன மயமாக்கிக் கொண்டே
இருக்கின்றரர்கள்..
மொபைலில் ஏதோ முக்கியமான
விஷயமாக பேசிக்கொண்டு இருக்கும் போது தான் கை தட்டும் ஓசையும் அதனைத் தொடர்ந்து ‘ ஹெல்ப் பண்ணேப்பா’
என்ற குரலலும் கேட்டது.
சட்டைப் பைக்குள் கை
விட்டு இருந்த சில்லறைகளை எடுத்துக் கொடுத்தேன் அவரின் முகத்தை பார்க்காமலேயே..
ஒரு நிமிஷம் என்றவுடன் ‘ என்ன என்று நிமிர்ந்து பார்த்தேன்..’’ ராசா, பையில
இருக்குறத எவ்வளவு இருக்குன்னு எண்ணாமா அப்படியே அள்ளிக் கொடுக்குற பாரு.. நீ
நல்லா இருக்கனும்பா.. என்று முகம் தொட்டு நெட்டி முறித்து வாழ்த்திச் சென்ற
அரவாணிச் சகோதரி அந்த நாளை அழகாக்கிச் சென்றார்.. மிஞ்சி மிஞ்சிப் போனால் அது பத்து
ரூபாய்க்குள் தான் இருக்கும். ஆனால் முழுதாக ஒரு பத்து ரூபாய் தாளை பர்சில்
இருந்து எடுத்துக் கொடுத்திருந்தால் கூட அவருக்கு இப்படி ஒரு மகிழ்ச்சி
ஏற்பட்டிருக்காது. அங்கீகாரம் என்பது ஒருவரை பெரு மகிழ்ச்சிக்கு அருகில்
அழைத்துச் செல்கின்றது.
எனக்கு அறிமுகமான
முதல் பிச்சைக்காரி எங்கள் ஊர் ‘பூனைக் கண்ணி’. கண் கொஞ்சம் நீலக்கலரில்
இருப்பதால் இந்தப் பெயர் என்ற அறிமுகம் கூட அவசியம் அற்றது என்றே நினைக்கிறேன்.
ஏனெனில் ‘பூனைக் கண் புவனேஸ்வரி’ என்று தானே ஊடகங்கள் கூட எழுதுகின்றன. ‘ஐஸ்வர்யா
ராய்’க்கு இருக்கும் ‘பச்சைக் கண் தேவதை’ பட்டம் தான் சாமான்யர்களுக்கு என்று
வரும் போது ‘பூனைக் கண்’ ஆகி விடுகின்றது.
நானும் ஒரு நாள் ‘ஏ பூனைக் கண்ணி’, என்று கூப்பிட, ஏஞ்சாமி.. ஊரே இப்படித் தான் கூப்புடுது.. ஆனா பட்டணத்துல படிச்ச நீங்களுமா.. என்று கேட்டது.. ஓம் பெயர் தெரியாது எனக்கு, அதனால தான் அப்படிக் கூப்பிட்டேன் என்று சொல்லும் போது தான் தெரிந்தது, அதன் பெயர் முத்திருளாயி என்று.
‘பூனைக் கண்ணி’ என்று
கேலி செய்யும் மற்றவர்களை துரத்துவதும், கையில் சிக்கியவர்களை முடிந்தால் அடிப்பதும்
முடியா விட்டால் கடிப்பதும் அதனால் மற்றவர்களிடம் அடி வாங்குவதும் என அப்போதைய ஊரின்
புல் டைம் ‘என்டர்டைன்மென்ட்’ இருளாயி மட்டுமே.
கிண்டல் செய்பவர்களை ‘
எங்க நான் சொல்ற கணக்குக்கு விடை சொல்லுங்க பாப்போம்’ என்று அவர்களை விட தான் அறிவாளி
என் நிருபிக்க முயற்சி செய்யும். ‘பத்து பேர்கிட்ட பத்து பத்து பைசாவா வாங்குனா
எவ்வளவு’ அல்லது நூறு பேர்கிட்ட ‘காலணா காலணாவா வாங்குனா எவ்வளவு வரும்’ என பெரும்பாலான
கணக்குகள் இப்படித் தான் இருக்கும்..
பிச்சைக்காரர்கள் வட்டிக்கு
பணம் தருவதாக வரும் ஜோக்குகளுக்கு நான் சிரித்ததே இல்லை. ஏனென்றால் என்பதுகளிலேயே எங்கள்
ஊரில் பூனைக் கண்ணி வட்டிக்கு பணம் கொடுத்தது. ஆனால் அதனிடம் கடன் வாங்கியவர்களில்
பெரும்பாலோனோர் திரும்பக் கொடுத்தது இல்லை. சண்டை போட்டு மண்ணை வாரித் தூற்றும்.. ‘லூசு
முண்ட’ லூசுத் தனமா கத்திக்கிட்டு கெடக்கா என அதனை இலேசாக கடந்து சென்றனர். கடன்
வாங்கிவர்களிடம் வட்டிக் காசு வாங்கும் போது, அவர்களிடமே தனக்கு பிச்சைக் காசாக
ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ தனியாக கேட்டு வாங்குவது ‘பூனைக் கண்ணியின்’ தொழிற்சிறப்பு.
பூனைக் கண்ணி காசு கேட்கும்
போது, ஏதாவது காசு எடுத்துப் போட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்து விட ‘பெரிய
மனிதர்கள்’ பரபரப்பார்கள். காசு இல்லை என்று சொன்னால், அது தனது சுருக்குப் பையில்
இருந்து ரூபாய் தாள்களை எடுத்துக் காண்பித்து ‘கலாய்க்கும்’. என்னைய பிச்சைக்காரி,
லூசுன்னு சொல்றீங்க.. ஏங்கிட்ட இருக்குற பணம் ஓங்க கிட்ட இருக்கா என்று கேட்கும்.
இப்படிக் கேட்டதற்காக நிறைய பேரிடம் அடி வாங்கி இருக்கின்றது.
‘பூனைக் கண்ணிக்கு’
அடிக்கடி வலிப்பு நோய் வரும். அப்படி வரும் நேரங்களில் அது சேர்த்து
வைத்திருக்கும் காசை எல்லாம் உடன் இருக்கும் மற்ற பிச்சைக்காரர்களோ அல்லது மற்றவர்களோ எடுத்துக் கொள்வர்.
தெளிந்தவுடன் வாயிலும் வயிற்றுலும் அடித்துக் கொண்டு அழுவும்.. ஆண்டவனை
சபிக்கும்..
அந்து மணி சொல்வது
உண்மை தானா... ஆண்டவனுக்கும் வறுமைக்கும் கூட தொடர்பு இல்லாமல் போகலாம்.. ஆனால்
ஆள்பவற்கு இல்லையா.. சுதந்திரம் அடைந்து இவ்வளவு வருடங்கள் ஆகியும் இன்னமும் நம்மை
விட்டு நீங்காத வறுமை எதைக் காட்டுகிறது. கோடி கோடியாக ஊழல் பட்டியல் வெளிவரும் இந்த
நேரத்தில் வறுமைக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்ற அந்துமணியின் இந்தப்பதில் வேடிக்கை ஆக உள்ளது.
முடிந்தால் தவிருங்களேன் இந்த மாதிரி அரை வேக்காடுகளின் பதில்களை படிப்பதை...






