July 25, 2012

எங்க ஊரு ஹீரோக்கள்





நீங்கள் ‘விதி’ திரைப் படக் கதைவசனம் கேட்டுருக்கீர்களா, அந்தக் காலகட்டத்தில் திரைப் பட வசனத்தில் ஒரு புதிய பரிணாமத்தைக் கொண்டு வந்தது இந்தப் படம் தான்.

சுஜாதா, ‘யுவர் ஆனர்’ என்று ஆரம்பித்து, ‘இந்த அபலைக்கு வாழ்வு கொடுங்கள், வாழ்வு கொடுங்கள்’ என்று மூன்று முறை சொல்லி விட்டு மயக்கம் ஆகும் வரை, அத்தனை வசனமும் எங்களுக்கு மனப்பாடம் ஆகும்.

இந்த வசனத்தை, மாட்டு வண்டியில் படுத்துக் கொண்டு, கடலைக் காட்டில் காவல் காத்துக்கொண்டு, புளிய மரத்தில் பாடப் புத்தகம் படிக்கும் போது என பல்வேறு தருணங்களில் கேட்டு இருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதாவது விசேஷம் என்றால் ‘குலா’ ரேடியோ இல்லாமல் நடக்காது. விதி, கொம்பேறி மூக்கன், நான் சிவப்பு மனிதன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம் என ஏதாவது ஒரு வசனத்தைப் போட்டு விட்டு ஆபரேட்டர் ரெஸ்ட் எடுப்பார்.

நமது சிறு வயதுப் பருவத்தில் கலைஞர்கள் எல்லோரும் நமது ஹீரோக்களாக இருந்திருப்பார்கள். குலா ரேடியோவை உயரமான போஸ்ட் மரத்தில் கட்டும் மணி மாமா, ரெடியோ ரிப்பேர் செய்யும் கணேசன் மாமா, பெயிண்ட்டால் போர்டுகள் எழுதும் குணா அண்ணன், கரண்ட் போய் விட்டால், ட்ரான்ஸ்பார்மர் ஏறிப் பீஸ் போடும் செந்தில் என இவர்கள் தான் எங்கள் ஊர் ஹீரோக்கள்.

ரேடியோ கட்டும் போது, வயர் எடுத்துச் செல்வது, மண்டை (குழாயின் பின் பக்கமாக இருக்கும் உருண்டையான ஸ்பீக்கர்) மாட்டுவது என சிறு சிறு வேலைகளைச் செய்து கொண்டு, ‘ரெகார்ட் பிளையரில்’ அந்த ரெகார்ட் சுற்றுவதை சலிப்பே இல்லாமல் நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருப்போம்.

காடு அல்லது வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கேட்கும் ‘குழலூதும் கண்ணனுக்கு....  பாடல், அந்த ஈரக் காற்றில் தவழ்ந்து வந்து இன்னும் அருமையான இசையைக்க் கொடுக்கும்.

‘ஆம்பிளிபியர்’ என்பது நிறைய குண்டு பல்பு போன்ற அமைப்புகளுடன் பார்ப்பதற்கு ஏதோ மினி ட்ரான்ஸ்பார்மர் போல் இருக்கும். அப்போது தான் டெக் எனப்படும் வீடியோ பிளேயர் அறிமுகம் ஆகி இருந்தது. எங்கள் ஊரில் முதன் முதலில் வீடியோ படமாக நாங்கள் பார்த்தது ‘ராஜாதி ராஜா’. ‘மலையாளக் கரையோரம்’ என்று ஆரம்பிக்கும் போது போலீஸ் வந்து திருட்டு வீடியோ கேசில் லஞ்சம் வாங்கிச் சென்றார்கள்.

எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த ஊரில் வீடியோவில் படம் போட்டாலும், படம் பார்க்க ஒரு கூட்டமாகச் சென்று விடுவோம். அப்படிப் பார்த்த படங்கள் பெரும்பாலும் ராமராஜன் மற்றும் விஜயகாந்த் படங்களாக இருக்கும். போகும் போதும் வரும் போதும் திரைப் படங்களைப் பற்றிய விமர்சனங்களும், வெவ்வேறு கதைகளும் பேசிக் கொண்டிருப்போம்.    

விடிய விடிய தூங்காமல் நான்கு படங்களைப் பார்த்து விட்டு மறு நாள் யாரும் டிஸ்டர்ப் பண்ணாத இடமாகப் பார்த்து பகல் முழுவதும் தூங்கியது இன்று நினைக்கும் போது சிரிப்பாக வருகின்றது. டிவி மற்றும் டெக் ஆகியவற்றை இணைத்து படம் ஓட்டும் ஆபரேட்டர் எங்கள் ஹீரோக்களில் ஒருவர்  

ஆனால் இந்த வேலைகளைப் பார்க்கும் ‘கலைஞர்களுக்கு, அவர்களின் வீடுகளில் கொஞ்சமும் மாரியாதை இருக்காது என்பது தான் சோகம். மணி மாமாவை எங்க அம்மாச்சி, ‘ எங்கப்பா அவன் வீடு தங்குறான், ஊர் ஊரா சுத்திக்கிட்டு கண்டதையும் குடிச்சி கெட்டுப் போய்ட்டான் என்பார்கள்.

ஆம், இவர்களில் பெரும்பாலோனோர்க்கு குடிப் பழக்கம் இருந்தது, வருமானத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப் பட மாட்டார்கள். முக்கியமாக இவர்கள் அனைவருடனும் குழந்தைகள் எப்பொதும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

நாம் எல்லாம் கொண்டாடும் மகா கவி பாரதியைப் பற்றி, செல்லம்மா அவள் அம்மாவிடம் இப்படித் தான் சொல்லியிருக்கக் கூடும்.

எங்கம்மா சொல்றதக் கேட்குறாரு, நீ சொல்வியே, நம்ம பாபுவ, கண்ட கழுதைங்க கூட சேராதடா ன்னு. ஆனா, நீ எனக்குப் பாத்து வச்ச ஆம்படையான் உண்மையிலேயே கழுதைங்க கூடத் தான் சுத்துறாரு, அன்னைக்கு ஒரு நாள் இப்படித்தான் பக்கத்துக்கு வீட்ல அரிசி கடன் வாங்கி வச்சிட்டு வெளியே போய்ட்டேன். திரும்ப வந்து பார்த்தா, இவர் காக்கைக்கும், குருவிக்கும் அந்த அரிசியை எடுத்து போட்டுக்கிட்டு இருக்காரு. என்னங்கனு கேட்டா ‘காக்கை, குருவி எங்கள் சாதின்னு ஏதோ கிறுக்குத் தனமா உளறுகின்றார் என்று.

ஆனாலும் இந்தக் கலைஞர்கள் இதெற்கெல்லாம் கவலைப் படுவதில்லை. மணி மாமா ரேடியோ கட்டப் போன இடத்தில் லவ் வந்து, தேனியில் செட்டில் ஆகி விட்டார். ரேடியோ ரிப்பேர் பண்ணும் கணேசன் மாமா, அவர் வீட்டின் ஹவுஸ் ஓனர் மனைவியை இழுத்துக் கொண்டு எங்கோ ஒடி விட்டது.

இப்போதெல்லாம் குழாய் ரேடியோ யாரும் கட்டுவதில்லை. அப்படி கட்டினாலும் எந்தக் குழந்தைகளும் அவர்கள் பின்னால் செல்வதில்லை. கதை வசனமும் ஒளிபரப்பப் படுவதில்லை.

இன்று வீட்டுக்கு வீடு டிவி யும், டி.வி.டி பிளையரும் இருக்கின்றன. ஆனால் நாம் எத்தனை படங்களைப் பார்க்கின்றோம்.                   

1 comment:

  1. ippalam vasanam enga iruku... 'enna kodumai saravanan idhu' ahhh idhan adhiga patcha vasaname...

    yahhh.. this blog give me so much nostalgic feeling.. longing for old days.. edhu kadandhu poiducho edhu ini kedaikkave kedaikkadho adhukku dhan manasu ahdigama engum..

    keep going...

    ReplyDelete