July 16, 2012

காவல் தெய்வம்




ஏதாவது ஒரு நாளின் நள்ளிரவில், அப்பாவிடம் இருந்து போன் வரும் வணக்கம்ப்பா, என்னாச்சுப்பா இந்த நேரத்துல என்று கேட்டால், ஒண்ணுமில்லப்பா, புள்ள குட்டிகல்லாம் நல்லா இருக்காங்கல்ல.

அம்மா கெட்ட கனவு கண்டுருக்காப்பா, சஞ்சய பத்திரமா பாத்துக்க, உடைய நாச்சி அம்மன் திருநீறு எடுத்து பூசி விடு என்று சொல்லி விட்டு போனை வைக்கும் நாட்கள் அப்பாவைப் பற்றிய நினைவுகளை எழுப்பி விடுபவை.

அடுத்த நாள் விளையாடும் போது ‘சஞ்சய்’ வாசல் கேட்டில் முட்டி நெற்றியில் இரண்டு தையல் போட வேண்டி வந்தது.

நாந்தேன் சொன்னேன்லப்பா, புள்ளய பத்திரமா பாத்துக்கன்னு. சரி, ஒன்னும் கவலைப் படாதே.

இந்த வருடம் கருப்பனுக்கு ‘கிடா’ வெட்ரதா வேண்டிக்கிறேன். சரியாப் போய்டும் என்பார்.

ஒவ்வொரு முறை ஊருக்குப் போய் விட்டு சென்னைக்குத் திரும்பும் போதும், ‘ தாயே, உடையநாச்சி அம்மா, பொண்ணு முனியா, மச்சப்ப்புலியா, எல்லோரும் எம்புள்ள ‘தலமாடு’ காக்கணும் என்று சாமிகளுக்கு கட்டளையிட்டு திருநீறு பூசி விடுவார்கள். இந்தா, இதப்  படுக்கும் போது தலமாட்ல வச்சுப் படு, இத அண்ணன் வீட்டுக்குக் கொடு என்று நாலைந்து திருநீறு பொட்டலங்கள் தரும் அம்மாவிற்கு, பின்னே நடக்கப் போவதை ‘சாமி’ கனவில் வந்து சொல்லி விடும் என்பது நம்பிக்கை.

வேணாம்டா, அவன் ஒன்ன ஏமாத்திடுவான் என்று எனது பார்ட்னர் பற்றி சொல்லிய போது எனது ‘பகுத்தறிவுவை வைத்து மறுத்தேன், போம்மா, உனக்கு வேற வேலையே இல்ல. கனவு கண்டேன்னு நீயா சொல்ற என்று சொல்லி விட்டு ‘பார்ட்னர்ஷிப்’ ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டேன்.

ஆறு மாதங்களில் பிரிய வேண்டி வந்தது.

சரிப்பா, கவலப் படாதே ஒனக்கு நல்ல வேலை கெடச்சா ‘ முத்து மாரியம்மன்’ கோவிலுக்கு குடும்பத்தோட வந்து மொட்டை போடுறதா வேண்டி இருக்கேன் என்று அம்மாவின் கட்டளைகள், ஒப்பந்தங்கள் எல்லாம் கடவுளோடு தான்.

நேரங்காலம் நம்மளுக்குச் சரியில்லப்பா, கொஞ்ச நாளைக்கு வண்டி ஒட்டாதே, அதுவும் உனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கிற இந்த நேரத்துல நீ வண்டியில போவது நல்லது இல்ல’ என்ற அப்பாவின் பேச்சை மீறிச் சென்ற போது, மவுண்ட் ரோட்டில் ஆக்சிடென்ட் ஆனது.

ஹெல்மெட் போட்டிருந்திருக்கா விட்டால், முகத்தில் பெரிய கோடு விழுந்திருக்கும்.

எங்க போனாலும் நம்ம ‘உடைய நாச்சி அம்மன நினச்சு திருநீறு பூசிட்டு போப்பா, அவ உன் கூடவே வருவா’ என்பார் அப்பா.

கனவுகள், வேண்டுதல்கள், நேர்த்திக்கடன்கள் என்று சாமிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள் என் கிராமத்து எளிய மனிதர்கள்.

நாங்க யார் சொத்துக்கும் ஆசைப் படல, ஏம்மேல இப்படி பொல்லாப்பு சொல்றவங்கள, பொண்ணு முனியா, நீயே கேளுப்பா,  என்று அம்மாச்சி மண்ணை வாரித் தூத்தி விட்டு வந்த எட்டாம் நாளில் தான் சின்ன அம்மாச்சி இறந்து போனது.

இப்பவும் நடு இரவில் எழுப்பி மீனா சொல்லும் கனவுகள் எந்தத் திகில் படத்தையும் மிஞ்சக் கூடியவை.

‘அப்படியே சஞ்சய தூக்கி கிணத்துல போடுரேங்க’ என்று சொல்லும் போது, தூக்கம் களைந்த கடுப்போடு, ம் சொல்லு என்று அரைத்தூக்கத்தில் கேட்டுக் கொண்டிருப்பேன்.

காலையில் நான் கண்ட கனவை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன். நான் மாணவனாக ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன். ‘இனிமே இப்பிடி தப்பு தப்பா எழுதுவியா? என்று கையில் கம்பு வைத்துக் கொண்டு ‘இனிமே இப்படி எழுத மாட்டேன்னு நூறு தடவை இம்போசிஷன் எழுது’ என்று சொன்னது ‘பத்மா’ டீச்சர்.                

1 comment:

  1. wowww... so cute......... ipdi sadharana manushangalala mattum dhan kadavulidam pesa mudiyum.... really cute amma appa.... you are blessed...


    ennada morg lendhu comment illaiye edho carry forward pola nu kozhapikadhinga.. morg lendhu current illa... shut down.. ippa dhan vandhadhu...

    ahh..இனிமே இப்பிடி தப்பு தப்பா எழுதுவியா? என்று கையில் கம்பு வைத்துக் கொண்டு ‘இனிமே இப்படி எழுத மாட்டேன்னு நூறு தடவை இம்போசிஷன் எழுது’ .. really nice kanavu... thalaila dhane kottuvanga.. ahhhhhhhhhh

    ReplyDelete