எனக்கென்னவோ சென்னை மாநகரம் ஒரு மிதக்கும் கப்பலைப் போன்றே தெரிகின்றது. விமானம் தாங்கிக் கப்பலான ‘விக்ராந்த்’தில் ஆயிரம் மாலுமிகளுக்கு மேல் இருப்பதாக ‘கடலோடி(யில்) நரசய்யா’ சொல்கின்றார். அந்தக் கப்பல் ஒரு மிதக்கும் நகரம் போலவே இருந்ததாம். கப்பல் மிதக்கும் நகரம் என்றால் நகரம் என்பது மிதக்கும் கப்பல் தானே. மெதுவாக நடக்கும் வயதான மாலுமி, ஹெல்ப் பண்ணுப்பா என்று கன்னத்தில் கிள்ளி காசு கேட்கும் அரவாணி மாலுமி, தோள் பட்டை வலிக்குமாறு இடித்து விட்டு டிரெயின் பிடிக்க ஓடும் அவசரச் சகோதரி மாலுமி என பல வகை மாலுமிகளால் இயக்கப்படும் இப்பூமியும் வேறு கிரகத்தில் இருந்து பார்க்கும் போது ‘கப்பலாகிப் போக’ வாய்ப்புண்டு.
இந்த வருடமும் கடந்த மூன்று நாட்களாக ‘சரவணா ஸ்டோர்ஸ்’ காய்கறிக் கடை திறக்கப் படவில்லை. வருடத்திற்கு இரண்டு முறை இப்படித் தொடர்ச்சியாக விடுமுறை விடுகின்றனர். நாகர் கோவில் பக்கமிருந்து இங்கு வந்து கடை வைத்திருக்கும் அண்ணன் தம்பி மூன்று பேரும் கடையை மூடி விட்டு ஊருக்குச் சென்று விடுகின்றனர். ஆனால் கடை மூடப்பதுவதற்கு முதல் நாள் கூட எல்லா காய்கறிகளும் நிறையவே இருக்கும். ஆச்சர்யம் தாங்காது ஒரு முறை கேட்டு விட்டேன். அதெப்படி திடீர் என மூடி விட்டு ஊருக்குச் சென்று விடுகின்றீர்கள். அவ்வளவு காய்கறிகளும் வேஸ்ட் ஆகிப் போகாதா என.
மூத்தவர் சொன்னார். சார், நமக்கு ஊர்ல தான் சார் திருவிழா, கொண்டாட்டம் எல்லாம். இது பொழைக்க வந்த ஊரு. அவ்வளவு தான். ஊருக்கு போனா மச்சான், மாமன், சொந்த பந்தம் என கூட்டமா கொண்டாடிட்டு வருவோம். ஆனா ஊருக்குப் போறோம்னு இன்னைக்கு காய்கறிய கம்மியா வச்சிருந்தோம்னு வச்சுக்குங்க. புதுசா வர கஷ்டமரோ, இல்ல ரெகுலரா வர்ற கஸ்டமர்னே வச்சுக்குங்களேன், இந்த கடையில வர வர காய்கறி ரொம்ப கம்மியா வச்சுருக்கான்பா, இனி இங்க வரக் கூடாதுன்னு முடிவு பண்ணிருவாங்க. அதனால காய்கறிய கொறைக்க மாட்டோம். என்ன பண்றது வேஸ்ட் ஆகத்தேஞ் செய்யும். அதப் பாத்தா முடியுமா? தூக்கிப் போட்டுட்டு போயிடுவோம் சார், என்றார்.
இதைத்தான் நான் இதுவரை செய்ய முடியவில்லை. ஊருக்கு போவதற்காக ரிசெர்வ் செய்யப்படும் டிரெயின் டிக்கெட்டுகளில் முக்கால் வாசி கேன்சல் செய்யப்படும். காரணம் ஷிப்மெண்ட்ஸ், கிளையண்ட்ஸ், லொட்டு, லொசுக்கு என அன்றைக்கு பார்த்து வரும் ப்ராப்ளம்ஸ். ( சாரி சோமு, நீங்க ஊருக்கு போறத பத்தி எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல? பட் என்சூர் தட் தி ஷிப்மெண்ட் சுட் கிளியர் விதௌட் எனி ப்ராப்ளம்’ என குண்டு வைக்கும் மேனேஜர். அப்புறம் எங்க போறது..)
காரைக்குடிக்கு ஒரு திருமணத்திற்காக சென்ற போது ஒரு பழைய கால வீட்டில் தங்கி இருந்தேன். வீடு என்பது கூட சரி அல்ல, அது கண்டிப்பாக மாளிகை. வீட்டின் தலை வாசல் ஒரு வீதியில் ஆரம்பித்து பின் வாசல் வேறு ஒரு வீதியில் முடிகின்றது. வீடு என்பது எவ்வளவு ரசனைக்குரிய இடமாக ஆக்கியிருக்கின்றார்கள். பெரிய ஹால். நிறைய தூண்கள், நிறைய அறைகள். முற்றம் மட்டுமே ‘ஷட்டில் கார்க்’ கிரௌண்ட் சைசில். மர வேலைப்பாடு மிகுந்த குளிர்ச்சியான வீடு.
அது மாதிரி ஒரு வீட்டில், மழை பெய்யும் ஒரு மாலைப் பொழுதில் முற்றத்தில் நீர் விழ, கையில் வறுத்த வேர்க்கடலையும், ஒரு சுக்கு மல்லி காபியும், வைரமுத்துவின் கவிதைத் தொகுதியுமாக வாழ்க்கை இருக்க முடியுமாயின் சொர்க்கம் என்பது வேறு ஒன்றுமாக இருக்க முடியாது.
நீங்கள் வானம் பார்த்து எத்தனை நாட்கள் ஆகின்றது. வானம் பார்ப்பது என்பது அப்படியே அண்ணாந்து பார்ப்பது கிடையாது. எந்த தடுப்பும் இன்றி வானத்தை சுற்றிலுமாக 360 டிகிரி கோணத்தில் பார்ப்பது. சிறு வயதில் கடலைச் செடிக்கு காவல் இருக்கும் பொது அந்தி மஞ்சள் வானம் பார்ப்போம். அப்போது சிங்கம், யானைகள், முயல், சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கடவுள் என மேகம் வரையும் ஓவியங்கள் பார்த்து ரசிப்போம். புத்தகப் பையை சைக்கிளில் செல்லும் அண்ணன்களிடம் கொடுத்து விட்டு பள்ளியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரமும் மழையில் நனைந்தபடியே விளையாடிக்கொண்டு வந்த நாட்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட நாட்களாகவே இருக்க வேண்டும். குளிருக்கு இதமாக கருப்பட்டியில் போடப்பட்ட வரக் காப்பியும், சுட்ட கடலையும் சாப்பிட்ட நாட்கள். வேலை என்பதை ரசித்து செய்து, ஒய்வு என்பதையும் ரசிக்க வைத்த நாட்கள்.
ஆனால் இயந்திரமயமாகிப் போன இந்த நகர வாழ்க்கையில் அதுவும் சம்பள நாள் என்ற ஒரு நாளுக்காக முப்பது நாட்களையும் முதலாளியிடம் அடகு வைக்கும் அலுவலக வாழ்க்கையில் அலுப்பே மிஞ்சுகிறது.
திடீரெனத் தான் அப்படித் தோன்றியது. அதுவும் சஞ்சயையும், பாலாவையும் பஸ் ஏற்றி விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது. அப்படியே பைக்கை எடுத்துக் கொண்டு எங்காவது பெட்ரோல் தீரும் வரை ஒட்டி விட்டு, தீர்ந்தவுடன் ஓரமாகப் போட்டு விட்டு அடையாளம் தொலைத்து நடந்து விடலாமா என. ‘ என் இடம் இதுவல்ல’ என்று ரமணருக்கு பன்னிரண்டு வயதில் தோன்றியதாம். அப்படியே மாடுகளை விட்டு விட்டு திருவண்ணாமலை புறப்பட்டாராம்.
நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியாமல் வாழும் வாழ்க்கை என்ன வாழ்க்கையோ? அப்படி என்ன முடியவில்லை என்று கேக்கத் தோன்றுகிறதா? இதோ சில.. மிட் நைட் ஷோ சினிமா, குடும்பத்தில் யாருக்காவது உடல் நலமில்லை என்றால் உடனே ஹாஸ்பிடல் அழைத்துச் செல்ல, ஒரு சில மணி நேரமாவது செல்போன் அழைப்பில்லாமல் இருக்க, புத்தகத் திறப்பு விழா மற்றும் வெளி ஊர்களில் நடை பெரும் கூட்டங்களுக்குச் சென்று வர, உறவினர் வீடுகளில் நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்ள இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
என் அதிகப்பட்ச ஆசை கனவு எல்லாம் கனவில்லாமல் நிம்மதியாக ஒரு நாளாவது தூங்க வேண்டும் என்பதே. ஆனால் பகல் பொழுதில் பேசினவை மறுநாள் தள்ளிப் போடப்பட்ட வேலைகள் என எதாவது ஒன்று நினைவில் இருந்து கொண்டு கனவாக வந்து தொலைக்கின்றது.
டீ சாப்பிட பஸ் நிப்பாட்டி இருந்தார்கள் ஒரு மோட்டலில். நாங்கள் பஸ்ஸில் இருந்து இறங்கி பக்கத்தில் இருந்த காபி கடைக்குச் சென்றோம். திரும்ப வரும்போது தான் கவனித்தேன். ஆம்னி பஸ்ஸின் எஞ்சின் ஓடிக் கொண்டே இருந்ததை.
சுரேஷ் அண்ணனிடம் சொன்னேன். பாருண்ணே, எங்க பாத்தாலும் எரிபொருள சேமியுங்கன்னு விளம்பரம் செய்றாங்க, ஆனா இந்த வண்டி இங்க அர மணி நேரமா நிக்குது. ஆனா எஞ்சின் ஆப் செய்யல’ என்று. அப்போது சுரேஷ் அண்ணன் சொல்லியது. எஞ்சின் ஆப் செஞ்சா பிக் அப் கெடைக்காதுடா, அதனால தான் ஓடிக்கிட்டே இருக்கு என. அணைக்கப் படாமல் ஓடுவது ஆம்னி பஸ்சின் எஞ்சின் மட்டுமல்ல.
ஊரில் இருந்து முருகன் மச்சான் போன் செய்தார். எப்ப சரவணா வர்றீங்க, சாயந்தரம் எடுக்குறாங்க, சீக்கிரமா வந்திருங்க என. நீங்க எப்படி மச்சான் இருக்கீங்க என கேட்டதற்கு அவர் சொன்னார். ஏதோ ஓடுதுப்பா, அது சரி நீ எப்படி இருக்க என்று அவர் திரும்ப என்னைக் கேட்க நான் சொன்னேன்.
‘ஏதோ ஓட்டுறேன் மச்சான்’





