July 19, 2012

கதை விடுங்க ப்ளீஸ்



எனக்கு கதை சொல்லத் தெரியவில்லை. தெரிந்த நான்கு அல்லது ஐந்து கதைகளை சொல்லி விட்டேன். இப்போதெல்லாம் ‘காட்டுல ஒரு சிங்கம்’ என்று ஆரம்பித்தால், ஆமாம்பா, சிங்கத்த நரி ஏமாத்திக் கூட்டிட்டு போய் கிணத்துல தள்ளி விட்டுடுச்சு’ அந்த கதை தானே! வேற ஏதாவது புதுசா சொல்லுங்கப்பா' என்கின்றான் சஞ்சய்.

சரி, இப்படியே நைசா புத்திமதி சொல்ற மாதிரி கதை சொல்லலாம் என்று நினைத்து, ஒரு ஊர்ல ராஜான்னு ஒரு பையன் படிச்சானாம். அவன் ரொம்ப நல்லா படிப்பானாம்’ என்று ஆரம்பித்தால், நிறுத்துங்கப்பா, என்ன சொல்லப் போறீங்கன்னு தெரியும், அவன மாதிரியே நீயும் படிக்கணும்னு சொல்லப் போறீங்க அது தானே என்று நம்மையே மடக்கி, ஒரு ஊர்ல ஒரு அப்பா இருந்தாராம், அவர் சீக்கிரமே வீட்டுக்கு வந்து அவர் பசங்களுக்கு டெய்லி நிறைய ஸ்டோரிஸ் சொல்வாரராம்’ என்று முடிக்கின்றான்.

நம் சிறு வயதில் எவ்வளவு கதை கேட்டிருப்போம், சாப்பிட்டுவிட்டு, தூங்குவதற்கு முன்னால், கழுத்து வரை போர்த்திக் கொண்டு நாங்கள்  கதை கேட்போம்.  ‘அம்மாச்சி’ சொல்லும் கதைகள் பெரும்பாலும் புராணக் கதைகளாக இருக்கும். பிள்ளையார் உருவான கதை, பஞ்ச பாண்டவர் கதைகள், இராமாயணம் என அம்மாச்சிக்கு புராணக் கதைகள் நிறையத்    தெரியும்.

 பள்ளியில் மரகத மணி வாத்தியார் சொல்லிய பூதங்கள் கதைகள், ராஜா கதைகள், தொடர்கதைகளாக ஒவ்வொரு கதையும் ஒரு வாரம் தொடரும்.

பெரியம்மா, அப்பத்தா மற்றும் அத்தைமார்கள் சேர்ந்து பேசும், கனவுக் கதைகள் மற்றும் பேய்க் கதைகள் இரவுத் தூக்கத்தை தொலைக்க வல்லவை. ஒவ்வொருவரும் அவர்களுக்கு முதல் நாள் வந்த கனவை ஏதோ சினிமா பட ரேஞ்சுக்கு இரண்டு மணி, மூன்று மணி நேரம் எனச்  சொல்லிக் கொண்டிருப்பார்கள். இப்பிடித்தான்தா நேத்து ‘வடக்க தல வச்சு படுத்திருந்தேன்’ வெள்ள வெளேர்ன்னு அப்படியே ஒரு உருவம் தல மாட்ல நிக்கிது, கண்ண முழிச்சு பார்கிறேன் அப்படியே கிழக்கு பக்கமா நடந்து போகுது, என்று சொல்லி விட்டு ‘சரவணா வீட்டுக்குள்ள போய் தண்ணீ எடுத்து வாப்பா’ என்பார்கள். அன்று இரவெல்லாம் உச்சா போவதற்கு அப்பாவை எழுப்ப வேண்டி வரும்.

ஏழு கடல், ஏழு மலை என்பதெல்லாம் எந்த முப்பாட்டனின் கற்பனை! வழி வழியாக வரும் இந்த கதைகள் யாரிடம் இருந்து தோன்றியது. ‘கிளியிடம் தான் அந்த அரக்கனின் உயிர் இருந்தது’ என்பது எந்த ‘ஜெனிடிக் என்ஜினியர்’ கண்டு பிடிப்பு. அந்த வயதில் கதைகள் கேட்பது தான் எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது.

கதை சொல்வதற்கு கற்பனையில் பறக்கும் மனசு இருக்க வேண்டும். பணத்தைத் தவிரவும் வாழ்க்கையில் பல விஷயங்கள் இருக்கின்றன என்ற 'அறிதல்' வேண்டும்.

செய்யும் ஒவ்வொரு செயலையும் பணம் பண்ணும் வேலையாக மாற்றத்துடிக்குது நகர மனசு. மனைவியின் நல்ல சமையலைச் சாப்பிடும் போது கூட, ‘சமைத்தவளைப் பாராட்டத் தோன்றாமல்’, ‘ இவ்வளவு டேஸ்டா சமைக்கிறாளே, நம்ம ஏன் சின்னதா ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கக் கூடாது. கூட்டம் நிறைய வரும், வருமானத்த அள்ளிடலாம் எனத் தோன்றும் ஒருவனுக்கு கதை சொல்ல வரவே வராது.

என் குட்டிப் பொண்ணு எனக்குக் கதை சொல்லும். ஒரு ஊர்ல ஒரு குட்டி பூச்சாண்டியாம், அந்த குட்டி பூச்சாண்டிக்கு ஒரு குட்டி பொன்னாம்; என்று எல்லாமே குட்டி குட்டியாக இருக்கும்.

மறுநாள் ‘அப்பா இன்னைக்கு வேற கத சொல்றேன், ஒரு ஊர்ல ஒரு பெரிய பூச்சாண்டியாம்’ என்று எல்லாமே ‘பெரியதாக’ மாறி இருக்கும்.

கதை சொல்லும் பாலாவோ, கதை கேட்கும் நானோ இருவரில் ஒருவர் முதலில் தூங்கி இருப்போம்... முடிவுறாத கதை மட்டும் பெட்ரூமைச் சுற்றிக்  கொண்டிருக்கும்.             

1 comment:

  1. great father... munnadi edhu sonnalum aah nu keppom.. ellame karpanaila yosichu pappom.. indha media vandhadhulendhu.. imagination meerina katchigal kadhai solligalukku sema savala iruku....

    முடிவுறாத கதை மட்டும் பெட்ரூமைச் சுற்றிக் கொண்டிருக்கும். - idhu super...

    nan chinku manku nu rendu korangu character vechi dhan ella kadhaium solradhu vazhakam.. idhula chinku hero and manku villan... daily nadakardhey chinku manku seiyardha solven.. en podi innum aa... nu kekkudhu.. sanjay mari anadhum bore adikadhamma nu solva nu nenaikaren... ahhhh

    ReplyDelete