December 26, 2012

அப்பு தாத்தா



‘அங்கே இடி முழங்குது, கருப்பசாமி தங்க கலசம் மிண்ணுது’, என்ற பாடலும் ‘மொச்சக்கொட்ட பல்லழகி’ பாடலும் ‘எட்மன்’ தாத்தாவை ஞாபகப் படுத்தும். எங்களுக்கு எல்லாம் எட்மன் தாத்தா.. அப்பா பெரியப்பாவுக்கு எல்லாம் ‘அப்பு’, ஊருக்கு அவர் ‘முனுசு’. சுருக்கமாகச் சொன்னால் அழகாபுரியின் அடையாளங்களில் ‘ஹெட்மென்’ தாத்தா என்ற முனுசு முக்கியமானவர்.   

தாத்தா வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்ந்தவர். எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாத, என்ன சரவணா எப்ப வந்த... நல்லா இருக்கல்ல என்று ஒரு சிரிப்போடு கேட்கும் எட்மன் தாத்தாவின் சிரிப்பு அவருக்கு மட்டுமே உரிய தனி அடையாளம். என் அப்பாவிற்கும் தாத்தாவிற்கும் நிறைய ஒற்றுமைகள். இருவரும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை தவிற வேறு உடை அணியாதவர்கள். நிறைய எண்ணை தேய்த்து படிய வாரிய தலை. கருப்பு முகத்தில் வெளுப்பாக தெரியுமாறு பூசிய பவுடர் பூச்சு என நிறைய விசயங்கள் இருவருக்கும் பொதுவானவை.

ஒட்டு வீடு என ஊர்க்காரர்களால் அடையாளப்படுத்தப்படும் எட்மன் தாத்தாவின் சொந்தப் பெயர்  கோட்டைச்சாமி. டேப் ரெகார்டரில் பாட்டுப் போட்டு  ஏகாந்தமாய் தனிமையில் ஒரு கை விரல்களை மடக்கி இன்னொரு கையினில் தாளம் போட்டு ஜாலியாக இருந்த அப்பு தாத்தாவை எனக்கு மட்டுமே தெரியும். தாத்தா வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் இளையராஜா இருப்பார். அதுவும் சவுண்ட் அதிகமாக வைத்து அலற விட்டு பாட்டு கேட்பதில் அவருக்கு அலாதி சுகம்.

வாழ்க்கையை அதன் போக்கில் வாழத் தெரிந்தவர்கள் ஹெட்மேன் தாத்தா. ஹெட்மேன் தாத்தாவிற்கு இரண்டு மனைவிகள். இருவருமே ஏதோ ஒரு சீக்கு வந்தவர்கள் போலவே இருந்தார்கள். அதிலும் இரண்டாவதாக வந்த அப்பத்தா சிரித்தே பார்த்ததில்லை. காறிக்காறி துப்பிக் கொண்டே இருப்பார்கள். தாத்தாவிற்கு சொந்தமாக மதுரை வண்டியூரில் நாலைந்து வீடுகள் இருந்தன. அந்த வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார்.  அதில் ஒரு வீட்டில் தாத்தாவிற்கு ஒரு சின்ன வீடும் இருந்தது. வண்டியூர் வீட்டிற்கு தாத்தா அடிக்கடி போவதனால் அப்பத்தா சீக்காளி ஆனார்களா அல்லது சீக்காளி ஆனதால் தாத்தா வண்டியூருக்கு போனாரா என்று தெரியவில்லை.

முதல் பெண்டாட்டி இருக்கும் போதே தாத்தா இரண்டாவதாக ஒரு பெண்ணை மதுரையிலிருந்து கூட்டி வந்தார் எனவும் பெரிய தாத்தா (தாத்தாவின் அப்பா) சண்டை போட, எனக்கு சாப்பாடு போடுவீங்க தானே? அத போடுங்க நாங்க ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிட்டுகிறோம் என்று சொல்லி காதல் புரட்சி செய்தார் எனவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.  மாடியில் கொஞ்ச நாள் ‘வைத்திருந்து’ பின்னர் பஞ்சாயத்து பண்ணி அனுப்பி வைத்தார்கள் எனவும் அதற்கு பின்பு தான் இரண்டாவதாக ஒரு அப்பத்தாவை திருமணம் செய்து வைத்தார்கள் எனவும் செவிவழிக் கதை உண்டு.

ஊரில் வியாபாரத்திற்கு வரும் ஆட்களுக்கு எல்லாம் தாத்தாவின் திண்ணை தான் அடைக்கலம். திருவிழா நேரங்களில் ரேடியோ செட் கட்டுவதும், ‘தவலாம் பிள்ளை’ வைப்பதும் அவர் வீட்டில் தான். நாடகம் போடும் போது நடிகர்களுக்கு சாப்பாடு கூட தாத்தா வீட்டில் தான்.   

எங்களின் உறவுகளின் இல்லங்களில் நடக்கும் எல்லா விஷேசங்களிலும் தாத்தாவின் பெயர் இருக்கும். மாரியப்ப பிள்ளை, சோலைமலையா பிள்ளை என்று வரும் தத்தாமார்கள் வரிசையில் கோட்டைச்சாமித் தேவர் என்று வரும் அவர் பெயர் எங்களின் எங்கள் குடும்பங்களில் அவரின் பாசத்தை காண்பிக்கும். பெரும்பாலும் எல்லா விஷேசங்களிலும் அவர் தலை இருக்கும். என்ன சரவணா எப்படி இருக்க? என்னப்பா ஊரப் பக்கமே ஆளக் காணோம்! செவ்வாய்க்கு கூட வரல? என்று கேட்பார். (செவ்வாய் சாட்டுதல் என்பது எங்கள் ஊரில் நடக்கும் ஒரு வாரத் திருவிழா. ஒவ்வொரு வீட்டிலும் எல்லா சொந்தங்களும் வந்து கலந்து கொள்ளும் கலர்புல் திருவிழா)

எங்க தாத்தா வர்றது , நம்ம வேல அப்புடி,  என்ன பண்ணச் சொல்றீங்க என்று கேட்டதற்குத் தான் இப்படி சொன்னார். தாத்தாவெல்லாம் போய்ட்டேன்னு வச்சுக்க, வேல கீல அப்புடி இப்புடினு இருந்துராதீங்கப்பா! நம்ம செட்டு புல்லா வந்துடனும் என்ன? என்றார். நேற்று சொல்லியது போல இருக்கின்றது.

இந்தத் தாத்தா போலவே இன்னும் சில தாத்தாக்கள் மாமாக்கள் இருந்தார்கள். என்ன பேராண்டி இந்தப் பக்கம் என்று பார்க்கக் கூடாத இடத்தில் பார்த்தால் பதறிய படி கேட்கும் வீரணசாமி தாத்தா, பெட்டிக் கடை மாமா, இப்படியான வரிசையில் எல்லோரும் போய் சேர்ந்து விட கடைசியாக இருந்த தாத்தா ‘ஹெட்மென்’ தாத்தா மட்டுமே.

தாத்தாவின் வீடு தான் எங்கள் விடுமுறை நாட்களின் விளையாட்டுக் களம். அங்குதான் பல்லாங்குழி, ரம்மி, ஒளிஞ்சு விளையாடும் ‘கப் ஐஸ்’ விளையாட்டு என பகல் எல்லாம் தாத்தாவின் வீட்டிலும் மாடியிலும் கழியும்.  மேலே மாடியில் கூரை வேய்ந்த வீடு ஹெட் மேன் தாத்தா வீடு தான். இப்போது ஊருக்கு சாமி கும்பிட போன போது கூட சீட்டு விளையாண்டு, இரவு ரெண்டு கட்டிங் போட்டு தூங்கினோம். இந்த மாடியில் தான் முதன் முதலில் சீட்டு விளையாண்டோம். முதன் முதலில் திருட்டு தம் அடித்தோம். முதன் முதலில்...........

இப்படி நிறைய முதன் முதல்களை எங்களுக்கு கொடுத்தது தாத்தா வீடு தான். போதுமுப்பா, விட்டா எல்லாத்தியும் காலி பண்ணிடுவீங்க.. குடிக்க கொஞ்சம் மிச்சம் வைங்க! ஆளுங்க இருக்காங்க என்று ஒரு குடம் கள்ளை தனியாக ஒதுக்கி வைத்து எங்கள் சித்தப்பா, பெரியப்பாக்களை அப்புறப்படுத்தி, ‘ சரவணா தனியா ஒரு கொடம் துண்ட போட்டு மூடி வச்சுருக்கேன். இந்தா வடை, மொச்சை, நம்ம செட்டக் கூட்டிட்டு மேலே போங்க, ஆரும் வர மாட்டாங்க என்று எங்களுக்கு பாசத்தை காட்டுபவர். எப்பவாவது மெட்ராஸ் வந்தால் ஒரு சில நேரம் எங்கள் வீட்டில் தங்குவார். அப்போது நாங்களும் பேச்சுலர் ஆகத் தான் இருந்தோம். தாத்தா ஏதாவது வாங்கிட்டு வரவா? என்றால் சும்மா ஒரு குவார்ட்டர் போதும் சரவணா.. தாத்தா இப்போவெல்லாம் நெறையா குடிக்கிறது இல்ல என்பார். ஒரு ஆப் பாட்டிலை கொடுத்தால், நீயும் ஒரு கிளாஸ் எடுத்துட்டு வா சரவணா என்று சொல்லும் தாத்தா இரண்டு ரவுண்டு போனவுடன் சொல்லும் கதைகளெல்லாம் ‘ராஜு முருகன்’ கதைகள் தான்.  

தாத்தா என்று வாய் நிறைய கூப்பிட இனி அழகாபுரியில் அவர் இல்லை. எல்லாரையும் விட சம்திங் ஸ்பெஷல் ஆக வாழ்ந்து முடித்த தாத்தாவின் இறந்த நாள் கூட சம்திங் ஸ்பெஷல் தான். ஆம் தாத்தா இறந்த தேதி 12/12/12.

ஒரு பயிர் விளைந்து முடித்து தலை சாயாமல் தடக்கென போய் விட்டது. அடுத்த பயிர் முளைப்பதற்கு வழி விட்டு...

                           

2 comments:

  1. unga appu thathavai enaku r pidichiruku... unga flow r nalla set ayiruku... unga oorum r azhaga iruku.. this line really nice punch 'ஒரு பயிர் விளைந்து முடித்து தலை சாயாமல் தடக்கென போய் விட்டது. அடுத்த பயிர் முளைப்பதற்கு வழி விட்டு..'


    keep rocking....

    ReplyDelete