எப்போதாவது இப்படி
ஆவது உண்டு. இன்று காலையில் பார்த்த, கைகளை சாய்வாக ஆட்டி ஆட்டி நடந்த பெண் எனக்கு
கணேஷ் குமாரை ஞாபகப்படுத்தினாள். ஆனால் யோசித்துப் பார்த்தால் இரண்டு
சம்பவங்களுக்கும் ஒன்றோரொண்டு சம்பந்தம் இல்லை. எப்படி கணேஷ் குமார் ஞாபகம் வந்தது
எனக்கு.
கணேஷ் குமார் எனது
பள்ளிப் பருவ நண்பன். ஒரு வகுப்பு, இரண்டு
வகுப்பு அல்ல. எனது மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பக்கத்திலேயே
அமர்ந்து படித்த பள்ளித் தோழன். மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை
செக்சன் எதுவும் கிடையாது. எல்லோரும் ஒரே வகுப்பில் ஒரே ஆசிரியரால்
பயிற்றுவிக்கப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளி அது. மதியம் கோதுமை உப்புமாவும் சுண்ட வத்தலுமாக
காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு சாப்பிட்டு வளர்ந்தவர்கள் நாங்கள்.எங்கள் ஊர்
பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. ‘மேற்படிப்பு’
படிக்க ஆறு கிலோ மீட்டர் நடந்து பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும்.
ஆறாம் வகுப்பு முதல்
பத்தாம் வகுப்பு வரை ‘எ’ செக்சன், ‘பி’ செக்சன் என இரண்டு பிரிவுகள் உண்டு. பள்ளி
தொடங்கி ஒரு வாரம் வரை ஒரே வகுப்பில் அமர்ந்திருக்கும் நாங்கள் செக்சன் பிரிக்கும்
நாளில் கடவுளை வேண்டிக்கொள்வோம். நானும் கணேஷ் குமாரும் ஒரே செச்சனில் வர வேண்டும்
என்று. நண்பர்களில் எனக்கு நிறைய பேர் இருந்தாலும் கணேஷ் குமாரை மட்டும் அதிகமாகப்
பிடித்துப் போனதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. அதில் முக்கியக் காரணம் நானும்
கணேஷ் குமாரும் கிளாஸ்மேட் (Classmate) என்றால் எனது அப்பாவும் அவன் அப்பாவும் க்ளாஸ்மேட் (glassmate). ஆனால் கணேஷ் குமாரின் அப்பா ஆசிரியர், அம்மா டீச்சர்.
எங்களுக்கு மூன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை டீச்சர் தான் கிளாஸ்
எடுத்தார்கள். என்ன சோமு எப்படி இருக்க என்று ஒரு பக்கமாக தலையைச் சாய்த்து
கேட்கும் டீச்சரின் பிம்பம் அப்படியே மனத்தில் இருக்கின்றது.
அப்பாக்கள்
குடிக்கும் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளுக்கு எப்போது வீடு அமைதியாக இருக்கும், எப்போது
சண்டையாக இருக்கும் என்பதே தெரியாது. அதைத் தீர்மானிப்பது அன்று அப்பாக்கள் குடிக்கும் சாராயத்தின் அளவே என்பதால் ஒரு வித
குழப்ப மனநிலையிலேயே வளர்வார்கள். இந்த ஒரு காரணமே எங்கள் இருவருக்குமிடையேயான
நட்பில் இறுக்கத்தை உருவாக்கியது. என்னடா உம்முனு இருக்க.. வீட்ல பிரச்சினையா..
விடு மாப்ள எங்க வீட்லயும் நடக்குறது தானே என ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வோம்.
கணேஷ் குமார், அவர்கள் வீட்டில் இரண்டாவது ஆண் பிள்ளை.
டீச்சருக்கு பெண் குழந்தை பிறக்கும் என எதிர்பார்த்து பிறந்த ஆண் குழந்தை ஆதலால்
அவனிற்கு சிறு வயதில் பெண் குழந்தை உடை அணிவித்து பொட்டு வைத்து அழகு
பார்ப்பார்கள். அதனால் தானோ என்னவோ கணேஷ் மிக மென்மையான உணர்வுகளைக் கொண்டவனாக இருந்தான். நாங்கள்
எல்லாம் கடலை மிட்டாய், முறுக்கு என்று சாப்பிட்டால் அவன் மட்டும் ஆரஞ்சுப்பழம்
சாப்பிடுவான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
கிள்ளும் பழக்கம்
எனக்கு ஆரம்பித்தது அவனிடம் இருந்து தான். எது ஒன்று சொல்லும்போதும் கிள்ளாமல்
சொல்ல முடியாது அவனால். காலையில் ஸ்கூல் செல்லும் போது எனது வீட்டிற்கு வந்து
விடுவான். அவனும் நானும் சேர்ந்தே செல்வோம். வரும்போதும் அப்படித்தான். ஸ்கூல்
பேக்கை வீட்டில் வைத்த கையோடு விளையாட எனது வீட்டிற்கு வந்து விடுவான். புளிய மரத்தில்
ஏறி உட்கார்ந்து படிப்பது, கோ கோ விளையாடுவது என எந்நேரமும் இணை பிரியாமல்
சுற்றிக் கொண்டிருப்போம்.
சண்டையும் வந்திருக்கிறது
ஆனால் அவனாலும் என்னாலும் ஒரு நாள் முழுதும் பேசாமல் இருக்க முடிந்ததில்லை. டீச்சர்
என் கூட மட்டும் விளையாட அனுமதித்ததற்கு நான் எப்போதும் எடுக்கும் முதல் மதிப்பெண்கள்
காரணமாக இருந்திருக்கலாம். கணேஷ் சுமாராகத் தான் படிப்பான். ஏனென்றால் எங்கள்
வீட்டில் எப்போதாவது நடக்கும் சண்டை கணேஷ் வீட்டில் தினமும் நடக்கும். அந்தச்
சூழ்நிலையில் அவன் அவ்வளவு மதிப்பெண்கள் எடுத்ததே பெரிய விஷயம். ஏதோ ஒரு நாளில்
தலையில் காயத்தோடு பள்ளிக்கு வந்தான். எங்கடா அடி பட்டுச்சு.. நேத்து நல்லாத்தானே
இருந்த’ என்று கேட்டால், அதெல்லாம் ஒன்னும் இல்லடா என்று சொல்லி விட்டான். மறு
நாள் செல்வி அக்கா சொல்லித் தான் தெரிந்தது. டீச்சரை அடிக்குப் போது வேண்டாம்பா
அடிக்காதீங்க என்று இவன் குறுக்கே சென்றதாகவும் அவன் அப்பா இவனை கீழே தள்ளி விட்டதால்
மண்டை உடைந்து இருக்கின்றது என்றும். கணேஷ் அப்பாவிற்கு டீச்சர் மேலே சந்தேகம்.
அவன் அதிகமாகச் சிரித்து
சந்தோசமாக இருக்கும் நாட்கள் சபரி மலைக்கு பக்தர்கள் மாலை போடும் தை, மார்கழி
மாதங்களில் தான்.
கணேஷ் குமாரின் அப்பா
வருடா வருடம் மாலை பொட்டு விரதம் இருந்து மலைக்குச் செல்வார். அந்நாட்களில் டீச்சரும்
சந்தோசமாகவே இருப்பார்கள். நாங்கள் தினமும் நடக்கும் பஜனையில் சாமிகள் கூடச்
சேர்ந்து பாட்டுப் பாடுவதுண்டு. கணேஷ் சொல்வான், வருடம் பூரா மார்கழியாகவே
இருக்க்கலாம்டா என்று. அவன் அப்பாவிற்கு இது கடைசி வரை புரியவில்லை. குடி அதிகமாகி
வயிற்றில் ஏதோ பிரச்சினை வந்து நான் பிளஸ் டூ படிக்கும் போது இறந்து போனார்.
சோமு, கணேஷ பத்திரமா
பாத்துகோப்பா, இது வரை அவன் தனியா எங்கேயும் போனதில்ல என்று பத்தாம் வகுப்பு
பொதுத் தேர்வு எழுதும் போது சொல்லி அனுப்பினார்கள். அந்த தேர்வு நடந்த நாட்கள்தான்
நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்ட நாட்கள். டீச்சர், வேலைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு
திருச்சுழி சென்று விட்டார்கள். கணேஷ் திருச்சுழியில் உள்ள நாடார் மேல் நிலைப் பள்ளியில்
சேர்ந்து விட்டான். அங்கெ அரசு மாணவர் விடுதி இல்லாததால் நான் கல்லூரணி எஸ்.பி.கே
நாடார் மேல் நிலைப் பள்ளியில் சேர்ந்து விட்டேன். அப்புறம் இருவரும் பார்த்துக் கொள்ளும்
வாய்ப்பு கிடைக்கவில்லை
இன்று கதை சொல்லலி
தூங்க வைக்கும் நேரத்தில் சஞ்சய் கேட்டான்.. ஸ்கூல் படிக்கும் போது நீங்க எப்படி
இருந்தீங்கப்பா? அப்ப உங்க பெஸ்ட் பிரென்ட் யாருப்பா என்று.
நான் ‘கணேஷ் குமார்’
என்று சொன்னவுடன் இப்போ அவங்க எங்கேப்பா இருக்காங்க என்று கேட்டான்.
தெரியலப்பா என்றவுடன்
நெஞ்சில் தலை வைத்து படுத்திருந்த பாலா தலையை உயர்த்தி கேட்கிறது.. ‘பெஸ்ட்
பிரென்ட்னு சொன்னீங்க’ என்று.
அவ்வளவு தான் எனக்கு
தூக்கி வாரிப் போடுகின்றது. குழந்தைகள் சில நேரம் சொல்லும் வார்த்தைகள் நாம்
எவ்வளவு தூரம் இயல்பான வாழ்க்கையிலிருந்து விலகி விட்டோம் என்பதை படம் பிடித்துக்
காட்டி விடும். அப்படியான தருணங்களில் இதுவும் ஒன்று. எப்போதும் வாழ்வின் எந்த
நிலையிலும் நாம் பிரியவே கூடதுரா என்று எட்டாம் வகுப்பு படிக்கும் போது சொல்லிக் கொண்டோம்.
அது இப்போது ஞாபகம் வருகின்றது. .
கணேஷ் குமாருக்கு இந்நேரம்
திருமணம் நடந்திருக்குமா? நடந்திருந்தால் அவன்
மகனும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கலாம்...
wowww...... r azhaga solirukinga.. think you hv a deep thinking about your life (ipdi sollave bayamma iruku.. apdilam illa nan normal nu kamichikka udane edhadhu kindala soliduvingalonu!!!).... unga nesippu towards your family and friends r adhigama irundhiruku.. adhan you can remember those days...
ReplyDeletethat glassmate upayogam r pidichirundhadhu...
ungappa r kudipara.. avaroda unga rship epdi iruku saravanan... do you have any vengence with him that he has spoiled your childhood... adhai pathi ezhudhungalen....
yah.. sila samayangalil.. illa pala samayangalil.. kozhandhainga r thelive irukanga... namalum kozhandhaiya irukum podhu theliva irundhirupomo!!!... enga thappu nadakku.. en vazhakaiya vitu vilagi porom nu kandippa araichi pannanum.....
woww.. your kuties sema super... colour photos la indha azagu irukardhillai.. enakku ennamo karuppu vellai photo pakkum podhellam the true colour nu thonudhu.... r cute....
keep rocking...