June 25, 2012

காவல்துறை கலந்தாய்வு கூட்டம்



உயர் அதிகாரி பேசிக்கொண்டு இருந்தார்,  இவ்வாறாக!

‘திருடனுக்கு ஏதுங்க வெட்கம், மானம். அவனுக்கு தேவை எல்லாம்  பணம். அதனால பொருள பாதுகாப்பா வச்சுக்கிறது நம்ம கைல தான் இருக்கு. வெளியூருக்கு போகும்போது போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டு போங்க. (உங்களுக்கு கொடுத்திருக்கிற நோட்டீஸ்ல ஸ்டேஷன் அட்ரஸ் போன் நம்பர் இருக்கு)

நகைய போட்டுக்கிட்டு வெளியே போகும் போது, கழுத்த சுத்தி முந்தானைய போட்டுக்கங்க. அப்போது அதிகாரியின் செல்போன் ரிங்க் ஒலிக்க, எடுத்து பேசியவர், இந்தா அரை மணி நேரத்துல வந்துடறேன் என்றார்.

அதனால என்ன சொல்ல வர்றேன்னா, உங்க பொருள பாதுகாப்பா வச்சுகிறது உங்க பொறுப்பு. காவல் துறைல ஆளுங்க கம்மி. உங்க பொருள் திருடு போயி, ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்தீங்கன்னா கண்டு புடிக்கிறது அவ்வளவு ஈஸி இல்ல. நாங்க கண்டு புடிச்சு கொடுக்கிற பொருள் எல்லாம் அவங்க அவங்க சொந்த பொருள் இல்ல. யார் வீட்லாயவது திருடும் போது (செல்போன் ரிங் குறுக்கிட, எடுத்து பேசியவர், இன்னும் பத்து நிமிடத்துதுல அங்க இருப்பேன் என்றார்) திருடன் மாட்டினான் என்றால் அவனிடம் மீதம் இருக்கும் பொருட்கள கைப்பற்றி, கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறவங்களுக்கு பாதிய பிரிச்சு கொடுத்து, எப் ஐ ஆர க்ளோஸ் பன்னிடுவம்.  அதனால தயவு செய்து போலீஸ்க்கு உதவி செய்யுங்கள். வீட்டிற்கு முன்னால் லைட் போடுங்க, வீட்ட பூட்டும் போது, உட்பக்கமாக பூட்டுங்க.

எதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்று அமர்ந்தார்.
கூட்டத்தில் ஒருவர் எழுந்து, அய்யா சந்தேகப்படும் படி யாரேனும் கண்ணில் பட்டால், உங்களுக்கு போன் செய்யலாமா. அவர் மீது தவறு எதுவும் இல்லை எனும் பட்சத்தில், எங்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேட்டு அமர்ந்தார்

அதிகாரி : நல்ல கேள்வி ! உங்கள் மீது எதுவும் நடவடிக்கை எடுக்க மாட்டோம். நீங்கள் தாராளமாக போன் செய்யலாம். எனது நம்பர் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ்ல இருக்கு என்று சொல்லி, எனக்கு இன்னரு மீட்டிங் இருக்கு, நீங்க இன்ஸ்பெக்டர் கிட்ட மத்த கேள்விகள கேளுங்க என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

உயர் அதிகாரியின் கார் கல்யாண மண்டபத்தினுள் நுழைந்தது.  அங்கும் ஒரு சங்கக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

என்னப்பா எல்லோரும் வந்துட்டாங்களா என்று கேட்ட படியே உள்ளே நுழைந்தார்.
வந்துட்டாங்க தலைவா என்று மாலையுடன் வந்து வரவேற்றது சங்கத்தலைவர் முனியாண்டி.

என்ன முனியா எப்படி இருக்க!
ஐயா புண்ணியத்துல நல்லா இருக்கேன் சாமி

எவ்வளவு வளந்தாலும் உன் கிட்ட அந்த பழைய பணிவு போகல முனியா! இப்ப இருக்க பசங்க உன்ன பார்த்து கத்துக்கிடணும்.

சரிப்பா, மீட்டிங் ஆரம்பிக்கலாம், எனக்கு நேரம் ஆச்சு!
சங்க தலைவர் முனியாண்டி பேச ஆரம்பித்தார்.

அய்யா, முன்ன மாதிரி நம்ம பசங்கள நோட்டம் விட அனுப்ப முடியல, ஏரியாவில பல பிரச்சினைக, அதுவும் இல்லாம இப்ப இருக்க பசங்க வேலைக்கு வர மாட்டேங்கிறாங்க. அதனால வீட்டோட ‘பொட்டேன்சியல்’ தெரிய மாட்டேன்கிறது.  ஒண்ணுமே இல்லாத வீட்ட நம்பி உடைச்சு, பாதி நாள் வேஸ்டா போறது.
அய்யா ஒரு ஐடியா கொடுத்தா நல்லா இருக்கும்.

முனியா, ஒன் பிரச்சினை புரியுது, அதனாலதான் வெளி ஊருக்கு போறவுங்க போலீஸ் ஸ்டேஷன்க்கு போன் பண்ணி சொல்லனும்னு ஆர்டர் போட்டிருக்கேன். நிறைய வசதி இருக்கிறவன் போன் பண்ணி சொல்லுவான். நீ என்ன செய்யுற, நம்ம ரைட்டர் நல்ல தம்பிக்ககிட்ட  டீடெயில் கலெக்ட் பண்ணிக்க, சரியா! அடுத்து என்னப்பா

முனியாண்டி : அய்யா, தெரு லைட் சரியா எரியிறது இல்ல. பூட்டு புதுசு புதுசா வருதா! நம்ம பயலுவ கஷ்டப்படுறாங்க,

அது சரி முனியா, கஷ்டப்படாம தொழில் பண்ண முடியுமா. இத நீ போன மீட்டிங்ல சொன்ன இல்ல. ஓகே எல்லோர் வீட்லயும் முன் பக்கமா லைட் போட சொல்லிருக்கேன்பா. இந்தா புடி, பூட்ட ஈஸியா உடைக்கிற புது மெசின். சீனாவுல இருந்து வந்திருக்கு. விலை 15000 ரூபாய். நம்ம டீம்ல ரெண்டு வாங்கி போடு.
அடுத்ததா சங்கிலி ரெண்டு வார்த்தை பேசுவார் என முனியன் அறிவித்தார்.

அய்யா திருடுறது தப்போனு படுதுங்க அய்யா. என்னைய மன்னிச்சுடுங்க அய்யா இப்படி பேசுறதுக்கு.

நீ பேசுனது தப்பு இல்ல சங்கி, ஆனா சங்கிலினு உனக்கு பேர் இருக்கே தவற நீ இந்த தொழிலுக்கு லாயக்கு இல்லனு அன்னைக்கே முனியன் கிட்ட சொன்னேன். அவன் தான் கேக்கல,
நீ இன்னைக்கு நாலு பேர் மத்தியில இப்படி கேட்டுபுட்ட, சரி விடு,

இங்க பாருங்கப்பா தெரிஞ்சோ தெரியாமலோ இந்த பய இப்படி கேட்டு புட்டான். உங்கள்ள சில பேருக்கு கூட இந்த டவுட்டு இருக்கும். அதனால சொல்றேன் கேட்டுங்க.

சங்கிலி, நீ சின்ன வயசுல என்ன என்ன விளையாட்டு விளையாண்டிருக்க.

அய்யா, கோலி விளையான்றுக்கேன்
அப்புறம்?

பம்பரம் விட்டுருக்கேன்

அப்படியா எங்கடா, பக்கத்துக்கு வீட்டு புள்ள தொப்புள்ளயா என்று அவர் சொன்ன ஜோக்கிற்கு அவரே சிரித்து கொண்டார்.
அப்புறம்டா?

திருடன் போலீஸ் விளையாண்டிருக்கென்யா.
இப்பதாண்டா நம்ம மேட்டர்க்கு வந்திருக்க, நம்ம உறவு சின்ன வயசுல இருந்தே வந்த உறவுடா.

சரி விடு, நகை இருக்குறவ வீட்ல வச்சுகிட்டு சும்மா இருக்க வேண்டியது தானடா,
அன்னைக்கெல்லாம் ஒருத்திய பார்க்குறேன், கழுத்தே தெரியலடா, புல்லா தங்கம் தான்.

ஒரு நிமிஷம் நானே அத்துடலாமானு யோசிச்சேன். அப்புறம் நம்ம ரெண்டு பேருக்குள்ள தொழில் தகராறு வந்துட கூடாதேனு கம்ம்னு வந்துட்டேன். அதனால செயின அறுக்கிறது தப்பே இல்லடா.

புதுசா ஜாயின் பண்ற சாப்ட்வேர் எஞ்சினியர் முப்பத்தசாயிரம் வாங்குறான்டா. நான் அந்த சம்பளம் வாங்குரதுக்குள்ள வயசு அம்பத்தஞ்சு ஆயிரும்டா. இதுல நான் குடும்பம் நடத்தி, புள்ளைய படிக்க வச்சு, எப்படா செட்டில் ஆகிறது.
முனியாண்டி எழுந்து, அய்யா அவன் கிடக்கான் வெங்கப்பய, அவன் ஒரு ஆள்னு நீங்க டீடெயில் கொடுக்கனுமா!

அய்யா இந்தாங்க, வழக்கம் போல வார மாமூல் இருபதாயிரம் இருக்கு. கீழ மத்த அயிட்டம் எல்லாம் இருக்கு. டேய், கனகு, அய்யாவ கூட்டிட்டு போய் கவனிடா.

அப்புறம் என்னங்க அய்யா , எல்லாம் ஓகே தான!
இல்ல முனியா, மேல இருக்க அய்யாவுக்கு இந்த மாசம் ரிடைர்மென்ட். அதனால எக்ஸ்ட்ராவா ஒரு ரெண்டு லட்சம் வேணும். கூட நாலு பசங்கள  போட சொல்லு.

மாசம் மாசம் கேசுக்காக புடிக்கிற பசங்கள இந்த மாசம் புடிக்க வேணாம்னு நம்ம தல சொல்லிருக்காரு. சோ அவனுகளையும் சேர்த்துகிட்டு டார்கெட்ட சீக்கிரம் முடிச்சுறு, வரட்டுமா.
அய்யா, ஒரே ஒரு சந்தேகம், ************நகர் சங்கத்துல பேசும் போது சொன்னீங்களாம், சந்தேகப்படும்படியா யாராவது கண்ல பட்டா ஸ்டேஷன்க்கு போன் பண்ணலாம்னு, நம்ம பசங்க பயப்புடுறாங்க.

ஹி ஹி ..... இதுவா உனக்கு பிரச்சன, போன் பண்ணி யார்கிட்டயா சொல்லப்போறாங்க, என்கிட்டதான,

நான் போய் தம்பிங்கள கூட்டிட்டு வந்துர்றேன். வர்ற வழியில தம்பி கிட்ட காசு இருந்தா எனக்கு பிரியாணி வாங்கி தரட்டும், எனக்கு பசி எடுத்தா தம்பி வாங்கி தரட்டும்.

அய்யா அப்பயும் நீங்க உங்க காசுல சாப்பிட மாட்டீங்க!
தப்பு முனியா. திருத்திக்க, அப்பயும் இல்ல, எப்பயும்.

சரி வா, எனக்கு கம்பெனி கொடு என்று கீழே இறங்கினார்கள்.

முனியா, நம்ம நோக்கம் எல்லாம் நம்ம பசங்க ஸ்டேஷன் பக்கம் ப்ரீயா வந்து போகணும், போது ஜனம் பார்த்தாலே பயப்படுனும். இது தான் நம்ம லட்சியம் கொள்கை என்று ஐந்தாவது ரவுண்டு முடிந்து அப்படியே கட்டிலில் படுத்தார்.
வெளியே நின்றிருந்த ஜீப்பில் காக்கை எச்சமிட்டது ‘ காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற போர்டின் மீது.

( சத்தியமாக காவல்துறையின் மீது களங்கம் விளைவிப்பது இந்த கதையின் நோக்கம் அன்று. சமீபத்திய திருட்டு வழக்குகளில் போலீஸ் எடுத்து வரும் நடவடிக்கைகள், இவை எல்லாம் உண்மையாக இருக்கலாமோ என உங்களை யோசிக்க வைத்தால் அதற்கு ஆசிரியர் (அது நான் தான்பா) பொறுப்பன்று)       

No comments:

Post a Comment