உயிரைத்தேடி
மேற்கண்ட வார்த்தை உங்களில் ஒரு அதிர்வை ஏற்படுத்தினால்,
நீங்கள் சிறுவர் மலர் வாசகராக 80 களில் இருந்திருப்பீர்கள். அப்போதெல்லாம் எங்கள் ஊருக்கு
காலை ஆறு மணிக்கு வரும் கண்ணபிரான் பஸ் பேப்பரையும் கொண்டு வரும். கண்டக்டரிடம்
பேப்பர் வாங்க ஒரு போட்டியே நடக்கும்.
சிறுவர் மலரை மட்டும் எடுத்துக்கொண்டு சாயாக்கடை
தாத்தாவிடம் சொல்லி விட்டு கடையின் பின்புறம் உள்ள இடத்தில் அமர்ந்து படிப்போம். அப்போது
சிறுகதைகள் நிறையவே இருந்தாலும் முதலில் படிப்பது உயிரைத்தேடி காமிக்ஸ் கதை.
மிகவும் விறுவிறுப்பாகவும் நிறைய சஸ்பென்ஸ் வைத்தும் கதை செல்லும்.
ஏதோ ஒரு உயிர்கொல்லி நோய் தாக்கி, மனித இனமே
அழியத்தொடங்கும். அப்போது ஒரு சிறுவன் மட்டும் தப்பிப் பிழைப்பதும், அவன் சந்திக்கும் பிரச்சினைகளுமே
கதை.
சிறுவர் மலரிலிருந்து வாரமலர்க்கு வளர்ந்தேன்.
அப்போது டீ கடை வைத்திருந்த அய்யர் வீட்டில் ராணி, தேவி, ராணி முத்து
வாங்குவார்கள். அங்கேயே படிக்க வேண்டும்.
குடும்பம் ஒரு கதம்பம் என்ற பெயரில் ‘சொந்த
அனுபவ கதைகள்’ வரும்.
‘உன்னை உன் சொந்த மாமனே சீரழித்தது பற்றி எழுதி
இருந்தாய். இந்த உலகமே கயவர்களால் ஆனது அம்மா. நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க
வேண்டும், ஏனென்றால் முள்ளின் மீது சேலை பட்டாலும்.... என்ற ரீதியில் அனுராதா
ரமணன் ‘அறிவுரை’ வழங்கி இருப்பார். கொஞ்ச நாளிலேயே தெரிந்தது இது எவரின் உண்மை
அனுபவமும் அல்ல, அவர்களே எழுதிக் கொள்கிறார்கள் என்று.
இன்று ஹிட்டாக இருக்கும் ரியாலிட்டி ஷோவை
அப்போதே அறிமுகப்படுத்தியது ராணி வார இதழ். வாசிப்பு வளர்ச்சியின்(!) அடுத்த
கட்டமாக ராஜேஷ் குமார் அப்போது அறிமுகமானார். நாலு ராஜேஷ் குமார் நாவல்களும், ஒரு
பாட்டில் தண்ணீரும் எடுத்துக்கொண்டு துவரங்காட்டுக்குள் மாடு மேய்த்தது இன்னும்
பசும்புல் வாசமாய் ஞாபகம் இருக்கிறது.
ராஜேஷ்
குமாரின் தங்க கொலுசு நாவல் படித்திருகீர்களா? செம லவ் ஸ்டோரி. பதின்ம
வயதில் படித்து அழுத நாவல். ஒரு கட்டத்தில் க்ரைம் கதைகள் போரடிக்க
(கல்லூரிப்பருவம்), கண்மணிக்கு மாறினேன்.
உமா மகேஸ்வரி, சுதா, மணிமேகலை என அணைத்து கண்மணி
எழுத்ததார்களையும் படிக்க பிடித்தது. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது ‘ பாலகுமாரன்’
அறிமுகமானார். முதல் கதை ‘பயணிகள் கவனிக்கவும்’
நான் படித்த புத்தகங்களில் அதிக முறை படித்த நாவல்
இது. நான் ஏர்போர்ட்டில் வேலை செய்யும் போது ‘ இந்த தண்ணீர் தொட்டியில் தானே
சத்திய நாராயணன் என்ற சத்தி பாம் வெடித்த போது உட்கார்ந்து இருந்தது’ என்று
நினைக்கும் அளவுக்கு நாவலில் ஒன்றி விட்டேன். இப்போது கூட சத்தி, ஜார்ஜிணா, செக்யூரிட்டி
ஆபீசர் எல்லோரும் விமான நிலையத்தில் வேலை பார்க்கிறார்கள் என்றே நம்புகின்றேன்.
அப்புறம் பாலாவின் நாவல்களை தேடித் தேடி படிக்க
ஆரம்பித்தேன். இரும்பு குதிரைகள் முதல் உடையார் வரை பாலாவின் நாவல்களால்
பாதிக்கப்பட்டேன்.
பாலா நாவல் படிக்கிறாயா, பார்த்துப்பா பைத்தியம்
ஆகிடாத என்ற மணி மாலா அக்கா, பாலா புத்தகம் இருந்தா கொடேன் என்று கேட்டது அழகிய
முரண்.
(தொடரும் .....)

wowwwwww.... the way you travelled in reading is similar to that of mine.... it has given a feeling that I have wrote this.. this is the secret behind the raju sundaram's writing.. each and everything of raju's writing will awake our inner thinking.. you hv that magic.. carry on.. all the very best....
ReplyDeletethanks 'thozhi'
ReplyDeleteதோழர் சரவணன் அவர்களே... உங்களது இந்த வலைப்பக்கத்தை படிக்கும்போது, என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. கால எந்திரம் என ஒன்று இருந்தால், அதில் ஏறி 80களுக்குச் சென்று, மீண்டும், வீட்டில் என் சகோதரன் சகோதரியோடு வெள்ளிக்கிழமை தோறும் அப்பா வாங்கி வரும் தினமலர் சிறுவர் மலருக்காக காத்திருந்து, 'உயிரைத்தேடி' காமிக்ஸ் தொடரை படிக்க விரும்புகிறேன். வாட்ஸ்அப், முகநூல், இணையம் போன்றவை படிக்கும் பழக்கத்தை மழுங்கடித்துவிட்ட இந்த கால கட்டத்தினூடே, அந்த இனிமையான பள்ளிப் பருவ காலங்களை நினைக்கும்போது, மனம் கனத்துப்போகிறது. என் நினைவலைகளை, 80களை நோக்கி மோதவிட்ட உங்களுக்கு, என் உளமார்ந்த நன்றிகள்!
ReplyDelete