October 5, 2012

சீமைக்குப் போனேன் - II




எனக்கு முதல் அதிர்ச்சி ஹாங்காங்கில் காத்திருந்தது.

எங்களின் பிளான் படி நான் ஹாங்காங்கில் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். அதற்குள் மும்பையிலிருந்து ஹாங்காங் வரும் விமானம் வந்து விடும். நான், ரஹ்மான் மற்றும் எம்.டி மூவரும் ஹாங்காங்கிலிருந்து ஷாங்காய்க்கு ஒரே விமானத்தில் செல்ல வேண்டும். ஆனால் ஹாங்காங்கில் இறங்கி  ‘ப்ளாக்பெர்ரி’ ஆன் செய்தவுடன் வந்த ஈ-மெயில் சொல்லியது, ரெஹ்மானும் எம்.டி யும் விமானத்தை மிஸ் பண்ணி விட்டதாகவும்  மறுநாள் தான் வருவதாகவும்.     

அடுத்த விமானம் பிடிக்க ஷாங்காய் செல்லும் விமானம் இருக்கும் டெர்மினல் செல்ல வேண்டும். அங்கெ நின்று கொண்டிருந்த ஒரு ‘சைனீஸ் ‘பப்ளி’ யிடம் கேட்டதற்கு செவன்தீன் என்று சொன்னது. அதை அது சொன்ன விதத்தில் இருந்து எனக்குப் புரியவில்லை. நான் ‘இஸ் இட் செவென்ட்டீன்’ என்று கேட்டால் மண்டையை இல்லை என்று சொல்லும் விதமாக ஆட்டுகிறது. திரும்பவும் ‘செவேன்தீன்’ என்று ஒரு முறைக்கு இருமுறை சொன்னது. அப்போதும் புரியவில்லை.
ஹேய்.... என்று கைகள் இரண்டையும் நீட்டி பதினேழு என்று விரல் விட்டு எண்ணிக் காமித்த விதம் ‘ரியலி சோ  க்யூட்’.



தேங்க் யூ என்று சொன்னதற்கு யு ஆர் வெல்கம் என்று தலை குனிந்து சொன்னது ‘வெள்ளக்காரப் புள்ளையா இருந்தாலும் நம்ம ஊரு புள்ள மாதிரியே வளந்திருக்கு’ என்று பாராட்ட வைத்தது. ஹாங்காங்கில் இருந்து சைனா செல்லும் விமானம் நம்ம ஊரு டவுன் பஸ் போல கூட்டமாய் நிரம்பி வழிந்தது. ரொம்ப கஞ்சப் பயலுக.. தண்ணீர் கூட தரல.

ஷாங்காய் போய் இறங்கியவுடன் இம்மிக்ரேசன் கவுண்டரில் நின்றேன்.. அந்த ஆபீசருக்கு என்னைப் பார்த்தவுடன் என்ன தோன்றியதோ தெரியவில்லை. என் பாஸ்போர்ட்டை மேலும் கீழுமாகப் பார்த்தான். ஏதோ ஒரு மெசினில் ஸ்வைப் பண்ணிப் பார்த்தான். பக்கத்தில் இருந்த மற்றொரு யூனிபார்ம் அணிந்த வாட்ட சாட்டமாக இருந்த ஆளிடம் ஏதோ சொல்ல அவன் என்னை ஒரு தனி அறைக்குக் கூட்டிச் சென்றான்.

எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. எங்கே தப்பு நடந்தது.. நம்ம ஒண்ணுமே பண்ணலையே.. எதுவாக இருந்தாலும் கடவுளே காப்பாத்து என்று வேண்டிக் கொண்டே உள்ளே சென்றேன். அங்கெ நிறைய கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன.. ஆனால் ஆட்கள் யாரும் இல்லை. என்னை அழைத்துச் சென்றவன் ஒரு பிங்கர் பிரிண்ட் எடுக்கும் மெசினில் ஒவ்வொரு விரலாக வைத்து அதை கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்தான். இப்படி பத்து விரல்களையும் பிங்கர் பிரிண்ட் எடுத்து விட்டு அப்பவும் ஏதோ சந்தேகம் இருப்பது போல் பார்த்த விதம் பயத்தை ஏற்படுத்தியது.

ஒரு வழியாக இமிக்ரேஷன் முடிந்து வெளியில் வந்தவுடன் டாக்ஸியைப் பிடித்தேன். அங்கெ எல்லாம் இங்கிலீஷ் வேலைக்கே ஆகவில்லை. உடல் மொழியில் தான் பேச்சு, வியாபாரம் எல்லாமே. கையில் வைத்திருந்த ஹோட்டல் அட்ரஸ் உள்ள பேப்பரை காண்பித்து அங்கெ போக வேண்டும் என்றேன்.


டாக்ஸி வேகமெடுத்தது. சென்ட்ரல் ஸ்டார் ஹோட்டல் வந்து சேர்ந்தது. டாக்ஸி டிரைவர் டாக்ஸி பில்லை பிரிண்ட் எடுத்துக் கொடுத்தார். பாலன்ஸ் சில்லறையை கொடுத்து விட்டு தேங்க்ஸ் சார் என்று இறக்கி விட்டார்.

உள்ளே ரிசப்சன் லேடி ‘வேர் இஸ் அதர்ஸ்’ என்றாள். அவர்கள் மறு நாள் வருவார்கள் என்று சொல்லி ரூம் சாவியை வாங்கிக் கொண்டேன். சாவி என்பது ஓரு பிளாஸ்டிக் அட்டை மட்டுமே. அதை ரூமில் உள்ள கதவுக்கு முன்னால் ஸ்வைப் செய்தால் ரூம் திறக்கிறது. ( புக் செய்த நேரம் முதல் காலி செய்யும் நாள் நேரம் வரை மட்டுமே அந்த கீ யைப் பயன்படுத்த முடியுமாறு ப்ரோக்ராம் செட் செய்யப்பட்டுள்ளது )

நான் எடுத்துச் சென்ற பிஸ்கட், பழம், பிரட் ஜாம் இவற்றை வைத்து முதல் நாள் மேனேஜ் செய்தேன். ஹோட்டலில் இருந்து கிழக்காகவோ அல்லது மேற்காகவோ குறிப்பிட்ட தூரம் வரை, அதுவும் அடையாளமாக சிலவற்றை ஞாபகம் வைத்துக் கொண்டே நடக்க வேண்டியது. அங்கிருந்து மீண்டும் திரும்ப ஹோட்டலுக்கு வந்து விட வேண்டியது. இப்படியே மாலை வரை பொழுது போனது.

சீனாவில் ஆட்கள் எல்லாருமே ஒரே மாதிரி ‘மோல்ட்’ வைத்துச் செய்த மாதிரியே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு ரிசப்சனில் நின்ற பெண் தினமும் ஒரே மாதிரியாகவே இருந்தது. பேரை ஞாபகம் வைத்து நீ தானே நேற்றும் இருந்தது என்று கேட்டால் நோ என்று வெட்கத்துடன் சிரிக்கின்றது.
 
மறுநாள் காலையில் ரஹ்மான் வந்து சேர்ந்தான். அவனிற்கு நான் செம அதிர்ச்சி வைத்திருந்தேன்.  ஆம் ஒரு கையில் சீனா வின் அரசு மது பானமான சுண்டாய் பீருடனும், மறு கையில் சிகரெட் பிடித்துக் கொண்டே ஹாய் ரஹ்மான், ஹவ் வாஸ் த ஜர்னி? என்று நான் கேட்க, அவன் அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை.

இதற்கும் ஒரு அரசியல் காரணம் இருந்தது. முதல் நாளே வந்து ரூமில் தங்கியதால் இந்த ரூம் ஆனது எனக்கு உரிமையானது. ( நம்ம ஊரு ட்ரெயின்ல கர்சீப் போட்டு வைக்கிற மாதிரி..)  நீ என்னுடன் தங்க வந்திருக்கும் கெஸ்ட் மாதிரி என்று அவனுக்கு உணர்த்துவது அவசியம் என்று நினைத்தேன். ( இது அதற்குப் பின்னான சிங்கப்பூர் பயணத்தில் ரொம்பவே உதவி செய்தது ) இதனால் அவன் வரும்போதே ஒரு வாரம் நான் செய்யப் போகும் சேட்டைகளுக்கு மனதளவில் தன்னை  தயார் படுத்திக் கொள்ள முடியும்.

சோமு, நீ ரெகுலரா குடிப்பியா? இப்படி உன்னப் பாப்பேன்னு சத்தியமா எதிர்பார்க்கல என்று ஒரு ஓரமாக பெட்டியை வைத்தான். அன்றும் எங்களுக்கு ப்ரோக்ராம் எதுவும் இல்லை. சரி சாப்பிடலாம் வா என்று அங்கிருந்த ரெஸ்டாரன்ட் போனோம். பிரெட் மற்றும் ஜாம் இதனைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் பன்றிக் கறி சேர்க்கப் பட்டிருந்தது. அதனால் வெறும் ப்ரெட், அவித்த முட்டை, தர்பூஸ் பழம் ஆகியவற்றை மட்டும் சாப்பிட்டோம். ரஹ்மான் நிறைய பழங்கள் வாங்கி வைத்திருந்ததாகவும் ஆனால் குவாரண்டைன் செக்கிங் போது அவற்றை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டார்கள் என்றும் தெரிவித்தான்.

இங்கே பக்கத்தில் சென்று கொஞ்சம் பழங்களை வாங்கி வருவோம் என்று நானும் அவனும் வெளியில் வந்தோம். எனக்கான மது பானங்களைத் தேர்வு செய்து வாங்கிக் கொண்டோம். ரஹ்மான் குடிக்க மாட்டான் என்பதோடு அந்த மாதம் நோன்பு வேறு இருந்தான். நான் பாட்டில் ஓபன் பண்ணி இரண்டு பெக் சாப்பிடும் போது ஏதோ சத்தம் கேட்கவே திரும்பி பார்த்தேன். ரஹ்மான் தரையில் அமர்ந்து தொழுது கொண்டிருந்தான். எனக்கு மிகவும் சங்கடமாகத் தோன்றியது. ரஹ்மான், சாரி, பிரேயர் பண்ணும் இந்த நேரத்தில் நான் குடித்திருக்கக் கூடாது. நாளையிலிருந்து இப்படிச் செய்ய மாட்டேன் என்று சொன்னேன். அதற்கு ரஹ்மான் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல என்றான். திரும்ப ஒரு முறை சாரி சொல்லும்போது ஹேய்.. டோன்ட் டேக் இட் சீரியஸ் என்று நிலைமையை சகஜமாக்கினான். எனக்கும் சேர்த்து ப்ரெட் ஜாம் தயார் செய்தான்.  ஆப்பிள் தோல் நீக்கி  கட் பண்ணி, சைட் டிஷ் கொடுத்தான்.


வெளியில் சென்று ஏதாவது சாப்பிடலாம் என்று நடந்து சென்று கொண்டே நல்ல ஹோட்டல்... அதுவும் சோறு கிடைக்கும் ஹோட்டலைத் தேடினோம். எங்கும் நூடுல்ஸ் மயம் தான். அதுவும் பக்கத்தில் ஒரு பீர் வைத்துக் கொண்டு இரண்டு ஸ்டிக் வைத்து மிகச் சுலபமாக சாப்பிடுகிறார்கள். நாமும் ட்ரை பண்ணலாம் என்று இருவரும் ஆளுக்கு ஒரு பௌல் வாங்கினோம். ஆனால் ஒரு சின்ன பீஸ் கூட அதை வைத்து எடுக்க முடியவில்லை.. நாங்கள் சாப்பிட படும் கஷ்டம் அங்கிருந்த சைனீஸ் மக்களுக்கு வேடிக்கை ஆக இருந்தது. ( இந்தப் பக்கம் எப்பவாவது வாங்கடி... எலையப் போட்டு அதுல சோறு போட்டு ரசத்த ஊத்தி சாப்பிடச் சொல்றோம் அப்போ தெரியும்...)

அப்போது தான் ஹோட்டலில் சோறு கொஞ்சம் இருந்ததைப் பார்த்தோம். அதில் எதை ஊற்றி சாபிடுவது என்று தெரியவில்லை.. எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வகையில் பன்றியின் இறைச்சி சேர்க்கப் பட்டிருந்தது. நேரே கிச்சனுக்குள் சென்று தக்காளியை வாங்கி சட்டியை காய வைத்து எண்ணெய் கொஞ்சம் விட்டு தக்காளியை பிதுக்கினால் சாறு நிறைய வந்து விட்டது. அதை அப்படியே சோற்றில் ஊற்றி ‘தக்காளி சாதமாக சாப்பிட்டோம்    

அந்த ஒருவாரம் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே இருந்தோம். ஷாப்பிங் செய்யும் போது எனக்கு அவனும் அவனுக்கு நானும் செலக்ட் செய்தோம். மொத்தத்தில் எங்களிடையே இருந்த இடைவெளி குறைந்து விட்டது.

பதினெட்டு வயதில் இருந்து இந்தக் கம்பனியில் இருப்பதாகவும், நான் சேர்வதற்கு முன்பு வரை எம்.டி அவனிடம் தான் அப்ரூவல் பவர் கொடுத்திருந்ததாகவும் சொன்னான். அப்போது தான் எனக்குப் புரிந்தது. ஏன் என்னை எதிரியாக நினைக்கிறான் என்று  

‘ப்ரசண்டேசன்’ நல்ல படியாக முடிந்தது. அந்த நாளில் தான் இந்தியாவில் தீபாவளி என்றும் இந்துக்களின் பெரிய பண்டிகை அதுவென்றும் எங்கள் எம்.டி விளக்கிச் சொன்னார். நான் ‘இந்த மீட்டிங் அதை விட முக்கியம் என்று நாங்கள் நினைத்ததால் தான் நாங்கள் இப்போது இங்கிருக்கிறோம்’ என்று சொன்னது அங்கிருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தது. கிரேட் என்று எல்லோரும் கை தட்டினார்கள். கடைசி நாளின் விருந்தாக ஒரு ஹோட்டலுக்குச் சென்றோம். பழைய சைனீஸ் படங்களில் வருவதைப் போன்ற ‘தீம்’ ஹோட்டல் அது. விருந்து முடிந்து ஷாப்பிங் சென்றோம். சொந்தக்காரர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒன்று வாங்கிச் செல்வது என்ற முடிவில் யோசித்து யோசித்து ஷாப்பிங் முடித்தோம்.

எல்லாக் கடைகளிலும் கால்குலேட்டர் வைத்திருகின்றார்கள். இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை தான். ஆனால்  அவர்கள் அதைப் பயன்படுத்தும் விதத்தில் தான் மாறுதல். நீங்கள் எந்தப் பொருளை எடுத்தாலும் அதற்கான விலையை அந்தக் கால்குலேட்டரில் போட்டுக் காண்பிப்பார்கள். நாம் தாரளமாக பேரம் பேசலாம். நம் விலையை நாம் டைப் செய்ய வேண்டும். சிரித்துக் கொண்டே நோ.. நோ.. என்று திரும்பவும் ஒரு விலையை அவர்கள் டைப் செய்வார்கள்.  ஆனால் எப்படியாவது நம்மளை வாங்க வைத்து விடுகிறார்கள். அந்த அளவுக்கு விலையில் இறங்கி வருகிறார்கள்.

அங்கிருந்த ரிசப்சனில் ஒரு நாள் கோபமாகக் கேட்டோம். இங்க யாருக்குமே இங்கிலீஷ் தெரிய மாட்டேங்குதே.. இது தான் பைவ் ஸ்டார் ஹோட்டல் லட்சணமா என்று.. அப்போது அந்தப் பெண் சொன்னது.. நீங்கள் எங்கள் நாட்டிற்கு வரும்போது எங்கள் ஊர் பாஷை தெரிந்து கொண்டு வாருங்கள். நாங்கள் ஏன் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று.. எங்களுக்கு சுருக் என்றது. மொழிப் பற்று என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும். ( ஆனால் இப்போதைய சைனீஸ் தலைமுறை இங்கிலீஷ் கற்றுக் கொண்டு வருகின்றது)





செலவுக்கு வைத்துக்கொள்ளச் சொல்லி எம்.டி ஆயிரம் டாலர் தனியாகக் கொடுத்தார். அதற்கும் சேர்த்து கிப்ட் வாங்கிக் கொண்டோம். மறு நாள் பேக்கிங் முடித்து ஏர்போர்ட் வந்து சேர்ந்தோம். இருவருக்கும் ஹாங்காங் வரை ஒரே விமானம். அங்கிருந்து இருவருக்கும் தனித் தனி பயணம். மும்பை செல்லும் விமானம் முதலில். அதற்கு அடுத்து ஒரு மணி நேரம் கழித்து சென்னை விமானம். சென்னை விமானம் ஏறியவுடன் ஆரம்பித்த ரெட் வைன். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பணிப்பெண் அருகில் வந்து யு வான்ட் ஒன் மோர் சார் என்று சொல்லிச் சொல்லி நன்றாக கவனித்தது. ( ஒனக்கு நல்ல இடத்துல கல்யாணம் முடிஞ்சு புள்ள குட்டிகளோட நல்லா இருக்கணும் தாயி...)


எம்.டி க்கு சென்னை ஆபீஸ் ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் இன்டர்நேஷனல் பில்லிங் முதல், ஆபீஸ் அக்கௌன்ட்ஸ் எல்லாம் பார்த்துக் கொள்வது சென்னை பிராஞ்ச் தான். இருந்தாலும் சம்பளம் தர முதலாளிக்கு மனம் வராது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தான் சம்பளம் வர ஆரம்பித்தது. பிராஞ்ச் மேனேஜர் ஆக இருந்து கொண்டு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தேதிக்குள் சம்பளம் வாங்கித் தர முடியவில்லை. காரணம் கேட்டால் எம்.டி, கம்பெனி லாசில் போவதாகச் சொன்னார். அதுவும் யாரிடம்? ஒவ்வொரு மாதமும் கமபனியின் ஒட்டு மொத்த வருமானத்தை அவருக்குச் சொல்லும் சென்னை பிராஞ்ச் மேனேஜரிடம்.

இது சரி வராது என்று ஒரு நாளில் தோன்றியது. பேப்பர் போட்டு விட்டேன். நான் சொல்றது உனக்கு ஓங்க அப்பா சொல்ற மாதிரி.. இங்கயே இரு.. என்ன சேலரி வேணுமோ கேளு என்று ஆசை வார்த்தைகள் கூறி அங்கேயே இருக்க வைக்க முயற்சி செய்தார். இல்ல சார்.. குட் பை என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். ஆனால் அப்போதும் இரண்டு மாத சம்பளம் தரப்படவில்லை.

ஒரு வருடம் கழித்து எம்.டி யிடம் இருந்து ஒரு மெயில் வந்தது. நான் அங்கெ அளவில்லா சுதந்திரம் அனுபவித்ததாகவும் அந்த சூழல் வேறு எங்கும் கிடைக்காது எனவும் திரும்ப வந்தால் நான் இப்போது வாங்கும் சம்பளத்தை விட இருபது சதவீகிதம் அதிகமாகத் தரத் தயாராக இருப்பதாகவும் சொல்லப் பட்டிருந்தது.

நான் ‘அவர் சொன்னதெல்லாம் சரிதான் என்றும்’, நானும் அங்கெ வேலை செய்ய விரும்புவதாகவும் ஆனால் மீதம் இருக்கும் இரண்டு மாத சம்பளத்தை முதலில் கொடுக்குமாறும், அப்படிக் கொடுக்கும் நாளில் இருந்து மீண்டும் வேலைக்கு வருவதாகவும் ரிப்ளை அனுப்பினேன். திரும்ப அவர் கூப்பிடவில்லை...      
             

2 comments:

  1. Hi.. konjam late.. sorry...


    First hats off for this new look.. r professional a iruku... decent avum... very nice...

    part II.. narration semathiya irundhadhu.. but.. adhirchi nu mudichi arambikum podhu indha adhirchi pathala.. ahhhhh


    all photos nice.. nangale oru trip China poitu vandha mari iruku.... really really nice....

    unga boss woww.. sema character.. avar vida kondar na neenga koda kandar a sema reply anupirunkinga... enna madhiri interesting experience unga life la... wowww


    keep rocking...

    ReplyDelete
  2. konjam late illanga... rommmmmmmmmmmmba lateeeeee

    இப்போவெல்லாம் நீங்க கொஞ்சமாதான் குறை சொல்கிறீர்கள். விமர்சனத்தின் மீது ஓவரா ரியாக்சன் காமிச்சுடேனா...

    அதுவா! இப்போவெல்லாம் நீங்க நல்லா எழுத ஆரம்பிச்சுடீங்கன்னு மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்..

    ReplyDelete