குறி சொல்வது ஒரு கலை. சொல்லும்போது எதிரில் இருப்பவர் கண்கள் ஆர்வமாக மின்ன வேண்டும். அவரின் முக மாற்றங்களுக்கு ஏற்ப வார்த்தை ஜாலம் செய்ய வேண்டும். ‘நீங்க ஒரு அப்புராணி.. வெளுத்ததெல்லாம் பால்னு நெனக்கிற ஆள். ஆனா ஒங்கள சுத்தி இருக்குற ஆட்கள் சரி இல்லை. அதனால சூதானமா இருக்கணும் தம்பி’ என்று சொல்லும் போது எதிரில் இருக்கும் ஆள் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி, ‘சாமி சொல்றதெல்லாம் சரி தான்’ என்று கேட்டுக் கொண்டிருப்பார். (அழகிரிக்கு ‘ஆல்டைம் குறி’ இதுவாகத் தான் இருக்க முடியும்)
சொல்லும் குறி முக்கியமாக பாசிடிவ் எனெர்ஜியைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். ஒனக்கு தலப்புள்ள ஆம்புளப் புள்ளதான்டா, தப்புனா பொம்புளப் புள்ள என்று சாமி சொல்லும்போது ‘ஆகட்டும் சாமி’ ரொம்ப சந்தோசம் என்று கேட்டுக் கொள்வார்கள். பின்னே ஆட்டுக் குட்டியா பொறக்கும்’ என்ற கேள்வி எழாமல் ‘சரி சாமி’ என்று கேட்க வைப்பது அதைச் சொல்லும் தோரணையில் இருக்கின்றது.
‘தலப்புள்ள ஆம்புளப் புள்ள’ என்பதை சத்தமாகவும், உறுதியுடனும் சொல்லும் சாமி, தப்புனா பொம்புளப் புள்ள என்பதை தனக்கே கேட்காத குரலில் சொல்வதில் இருக்கின்றது சூட்சுமம். ஆம்புளப் புள்ள பொறந்தால் சாமி அன்னைக்கே சொல்லுச்சே’ என்று அளவில்லா ஆனந்தம் அடையும் பக்தன், பொம்புளப்புள்ள பொறந்தாலும், சாமி தான் சொல்லுச்சே ‘தப்புனா பொம்பளப் புள்ளன்னு’ ஆறுதலும் அடைவான்.
பொதுவாக ‘மக்கள காப்பாத்துவேன்’ இது முக்காலும் சத்தியம் என்றோ, இந்த வருஷம் நல்ல மழை பேயும்டா’, நல்ல வெள்ளாமை, வெளச்சல குடுக்கிறேன்’ என்றோ சொல்வது எல்லாச் சாமிக்கும் எளிது தான். எளிய மக்கள் வேறு எதுவும் வேண்டாமல் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் புதுப் பணக்காரர்கள், வீம்புக்கு வேண்டுமென்றே கேட்பவர்கள் ‘நான் நெனச்சத சாமி சொல்லணும்’ என்று அடம் பிடிப்பர்.
இப்படித்தான் பக்கத்து ஊரான புல்வாய்க்கரையில் வீட்டின் திண்ணையில் நின்று கொண்டு சாமி ஏங் கையில என்ன இருக்குன்னு சொல்லணும். சொல்லாம இந்த எடத்த விட்டு போகக் கூடாது என்றார் ஒருவர் . கொட்டுக்காரன் கொலைவெறியாகி அடி அடி என்று அடிக்கின்றான். யாருக்கும் அருள் வரவில்லை. என்னங்கடி.. யார ஏமாத்துறீங்க? சாமியா ஆடுறீங்க சாமி, இப்பச் சொல்லுங்க என்று ஜெயித்த தோரணையில் சொல்கின்றார். அப்போது அருள் வந்தது மலையானுக்கு.
ஒங்கையில இப்ப ஒன்னும் இல்லடா.. அடுத்த வருடம் ‘எதுவும் இல்லாமலேயே போகட்டும்’ என்று அருள் வாக்கு சொல்லி அவர் தந்த காணிக்கையை திரும்பக் கொடுத்து விடச் சொல்கின்றது சாமி.
அதற்கு அடுத்த வருடம் சாமி ஆடிச் செல்லும் போது அவர் வீட்டின் அருகே சென்றவுடன் கண்ணில் நீர் வழிய குடும்பத்தோடு சாமிகளின் காலில் விழுந்து கதறி அழுகின்றார். சாமி மன்னிச்சுடுங்க.. திருநீறு குடுங்க என்று. அவரிடம் ‘எதுவும் இல்லாமல்’ போனது தற்செயலாகவும் இருக்கலாம்.
சாமிக்கு எல்லா நேரமும் அருள் வந்து உண்மை சொல்லக் கூடிய ‘ மந்திர தந்திர சக்தி’ எதுவும் இல்லை. இதனால் பக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டி அவர்களின் பிரச்சினைகளை ‘லோக்கல் சோர்ஸ்களின்’ மூலம் தெரிந்து கொண்டு ‘பாசிடிவாக’ குறி சொல்வதும் உண்டு.
இப்படித் தான் என்னுடைய பிரச்சினைக்கு வழி சொல்லாமல் எழுந்திரிக்க மாட்டேன் என்று ஒரு பெண் சாமியின் காலில் விழுந்து விட்டது. என்ன பிரச்சினை என்று யாருக்குத் தெரியும்? சாமிக்குச் சொல்ல.
அப்போது தான் ஒரு ‘சோர்ஸ்’ டீடைல் கலெக்ட் பண்ணி வந்தது. வீட்டுக்காரன் ஓடிப்போயிட்டான். திருப்பூர்ல வேலை செய்ற ஒரு பொண்ண சேத்துக்கிட்டான். அடிச்சு விடுங்க என்று.
ஒங் குதிரை வடக்குப் பக்கமா ஓடிப் போச்சு! இனி வராது ஓம் பொழப்ப நீ பாத்துக்க தாயீ, அந்தக் குதிரை பட்டுத் தெளிஞ்சு, கெட்டு அழிஞ்சு அஞ்சு வருஷம் கழிச்சு வந்து சேரும்’ என்று அருள் வாக்கு சொல்கின்றது சாமி. பக்தைக்கு ஆறுதல் கிடைக்கின்றது.
இரவு ஏழு மணிக்கு கச்சை அவிழ்க்கும் சாமி, டேய் சரவணா ‘தம்’ வச்சுருக்க... என்று கேட்கும். சாமி அதெல்லாம் தப்பு. காப்பு அவிழ்க்கும் வரை அதெல்லாம் புடிக்கக் கூடாது சாமி என்போம். நம்ம சாமியே சுருட்டு புடிக்கிற சாமி தான்டா. சாமிக்கு அது கேட்டத தராம இருக்குறது தான் தப்பு என்று தம்மடிக்கும் சாமி, மறுநாள் இந்தச் குதிரைகிட்ட சுத்தம் இல்லடா என்று திருநீறு வாங்கும் போது நம் தலையில் அடிக்கும்.
அன்று இரவில் தம் கேட்கும் சாமியிடம் நாங்கள் சொல்வோம். சாமி நாங்க இப்போ ‘சுத்தமா’ இருக்கோம். எங்க கிட்ட எதுவும் இல்ல என்று. டேய் வெளையாடாதீங்கடா’’ ஒன்னே ஒன்னு குடுங்கடா என்று கெஞ்சும் சாமி.
திருவிழா நடக்கும் ஒரு வார காலமும் பங்காளிகள் யார் வீட்டிலும் அடுப்பு பத்த வைக்க மாட்டார்கள். சாப்பாடு எல்லாம் பொதுவில் தான். குடிவரி வைத்து வசூலிக்கப்படும் பணத்தில் இருந்து செலவு செய்வோம். சின்னப் பசங்களான எங்களின் வாரிசுகள், ஒவ்வொரு சாமியும் எப்படி ஆடும் என சின்னக் குச்சியை கையில் வைத்துக் கொண்டு ஆடிக் காண்பிப்பது எங்களுக்கான பொழுது போக்கு. ஒரு வார காலம் கஸ்டம்ஸ், ட்ரான்ஸ்போர்ட், கஸ்டமர்கள் இவை எதுவும் இல்லாத எங்களுக்கே எங்களுக்கான நாட்கள்.
சண்டை சச்சரவு இல்லாத பங்காளிகள் எங்கேயும் இருக்க முடியாது. வரும் சின்ன சின்ன மனஸ்தாபங்கள், சச்சரவுகள் உடனுக்குடனே தீர்க்கப் படும். பெரும்பாலும் ‘சாமி கும்பிடும் முறையில்’ வரும் கருத்து வேறுபாடுகள் தான் முக்கிய காரணமாக இருக்கும்.
ஐந்தாம் நாளில் ஊரில் இருந்து மதுரை அழகர் கோவிலுக்கு கிளம்புவோம். மறு நாள் கிடா வெட்டு. மொத்த ஆடுகளும் வெட்டப் பட்டு குழம்பு வைத்து, சோறாக்கி பங்காளிகள், சம்பந்தகாரர்கள், நண்பர்கள் என எல்லோரோடும் சாப்பாடு பகிர்ந்து கொள்ளப்படும். ‘சரக்கு இல்லாத ஆட்டுக்கறி விருந்தா’ என்று கேட்கும் நண்பர்கள், உறவுகளுக்கு அதுவும் கவனிக்கப்படும்.
போன வருடம் விருந்து பரிமாறி சாப்பிடத் தயாராகும் போது தான் பாண்டி சித்தப்பா கூப்பிட்டார். டேய் சரவணா.. அருணுக்கு சாமி வந்துடுச்சுடா.. வாய் பேச முடியாம கட்டிக்கிச்சு. ரொம்ப ஆக்ரோசமா இருக்கு. யாரையும் கிட்ட நெருங்க விட மாட்டேங்குது.. கைய கைய காட்டி ஏதோ சொல்லுது.. ‘காப்பு’ அவுக்காம ‘கறி’ சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுது போல. அப்படின்னா சாமியாடிகள் யாரும் சாப்பிட முடியாது. இது வழி வழியா வர்ற பழக்கம் தானடா.. இப்ப ஏன்டா இந்தச் சாமி இப்படி சொல்லுது.. நீயே வந்து என்னன்னு கேளப்பா என்று.
கண் எல்லாம் ரத்தச் சிவப்பாக ஆவேசமாக இருந்தது சாமி. நீங்க எல்லாம் கொஞ்சம் வெளிய இருங்க.. நான் என்னனு கேக்குறேன் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றேன்.
என்ன சாமி. .ஏஞ் சாப்பிடக் கூடாதுன்னு சொல்ற.. காப்பு அவுக்காம தான போன வருஷம் கூட சாப்பிட்டோம் என்று கேட்டேன்’ அப்போது தான் சொன்னான்.
எங்கண்ணே சாபிடுறது.. சரக்கு புல்லா ஏறிடிச்சு.. அதனால எனக்கு சாப்பிட முடியல. சொன்னா யாரும் கேக்க மட்ட்டேங்கிராய்ங்க.
சரிடா அதுக்கு எதுக்கு கைய கைய ஆட்டி யாரும் சாப்பிடக் கூடாதுன்னு சொன்ன’ என்று கேட்டேன்.
என்ன பண்றதுன்னே.. சாப்பிடு சாப்பிடுன்னு சுத்தி நிக்கிறாங்க.. ஏதாவது காரணம் சொல்லனும்ல.. நீ ஒன்னு பண்ணு.. சித்தப்புவ (பதினெட்டாம் படி கருப்பு) கூப்பிட்டு எனக்கு திருநீறு வைக்கச் சொல்லி அவர விட்டு சொல்லச் சொல்லு.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்ல.. சாப்பிடுங்க மக்களா என்று.
ஆற்றில் இறங்கும் கள்ளழகரை தரிசித்து விட்டு வீடு திரும்பி பொங்கல் வைத்து உடையநாச்சி அம்மனுக்கு படைத்து வழிபடுவதுடன் திருவிழா இனிதே முடிவடைகிறது. அந்த நாளில் சாமியாடிகள் மற்றும் பெரியவர்கள் அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது காலம் காலமாக கடைப் பிடிக்கப்படும் நடைமுறை.
தாயே.. உடையணாச்சி அம்மா.. ஏம் புள்ளைகளுக்கு ஒரு குறையும் இல்லாம, கால் கை சுகத்தோட நல்லா வைக்கணும்’ என்று திருநீறு பூசுவதுடன், பொட்டலமாகவும் கட்டிக் கொடுத்து பக்தியை பார்சல் செய்கின்றார் எங்கள் குடும்பத்தின் தலைமகளான அப்பத்தா.
அடுத்த சித்திரை எப்போது வரும், இவர்களை எல்லாம் திரும்பவும் பார்ப்பது எப்போது என்ற ஏக்கத்துடன் கண்களில் நீர் கசிய கள்ளழகரும், மச்சப்புள்ளி கருப்பும், உடைய நாச்சி அம்மனும் வழி அனுப்பி வைக்க, ஆணி வேரிலிருந்து திரும்பவும் கிளைகளுக்கு எங்களை கொண்டு வந்து சேர்க்கிறது பாண்டியன் எக்ஸ்பிரஸ்.

idhai padichu annike review poten.. enga pochu.. hummmmmmm....
ReplyDeleteArun segment sema super...
keep rocking..