‘பனைய வச்சவன் பாத்துட்டு சாவான்,
தென்னைய வச்சவன் தின்னுட்டு சாவான்’
என்று ஊரில் சொலவடை சொல்வார்கள். பனை மரம் அதை வைத்தவனுக்கு, வளர்த்தவனுக்கு பலன் தராது, ஆனால் தென்னை மரம் அப்படி அல்ல, காய்த்து பலன் தரும் என்பதாக அர்த்தம்.
பாத்துட்டு சாவதற்கா பனையை வைத்திருப்பார்கள். பேரன் பேத்திகள் சாப்பிட்டுப் பார்க்கட்டும் என்பதற்காக இருக்கக் கூடும். பனை மரத்திற்கும் எனக்குமான உறவு மிக நெருக்கமானது. அதன் ஓலை மணம், அத்துவானக் காட்டில் வேறு சப்தம் எதுவும் இல்லாத நேரத்தில் பனை ஓலையில் பட்டு வெளிப்படும் இசை, மதிய நேரங்களில் இளைப்பாற நீண்டு கொண்டே செல்லும் நிழல் என பனை மரத்திற்கும் எனக்குமான சிநேகம் சிறு வயதில் தொடங்கியது.
காட்டில் விவசாய வேலைகளின் போது கஞ்சி குடிக்க பனை மரப் பட்டைகளை செய்வார்கள். ‘பட்டை’ என்பது பச்சை ஓலையை மடக்கி உள்புறம் குவியலாக இருக்குமாறு அமைத்து நுனிப் பக்கம் முடிச்சிடுவது. இதில் சோறு சாப்பிடுவதை விட கூழ் குடிப்பதற்கு வசதியாக இருக்கும். கூழ் குடிப்பதற்கு ஒரு பெரிய பட்டையும், ‘வெஞ்சனம்’ வைக்க ஒரு சிறு பட்டையும் செய்வார்கள். ‘வெஞ்சனம்’ என்பது முதல் நாள் இரவில் கத்தரி வத்தல், சீனி அவரைக்காய் (கொத்தவரங்காய்) வத்தல் மற்றும் மாவடு போட்டு, எண்ணெய் கொஞ்சமாகவும் புளி, காரம் அதிகமாகவும் போட்டு கொதிக்க விட்டு வைத்த கூட்டு. காலையில் பெரிய பானையில் சோறாக்கி, வடிக்காமல் அப்படியே தண்ணீரை ஊற்றி ஆற விடுவார்கள். தலையில் சும்மாடு வைத்து தூக்கி வயலுக்கு பன்னிரண்டரை ‘திருமலை’ போகும் போது எடுத்து வருவார்கள். திருமலை எங்கள் ஊருக்கு பன்னிரெண்டே முக்காலுக்கு வரும் பஸ்ஸின் பெயர். அப்போதெல்லாம் டைம் சொல்வது பஸ்கள் மட்டுமே.
இந்த சுடு கஞ்சியை பட்டையில் ஊற்றி சாப்பிடும் போது பச்சை ஒலையின் வாசமும் சேர்ந்து இன்னும் கொஞ்சம் கூடுதலாக சாப்பிட வைக்கும். வெட்டாமல் விடும் பனை மரத்தின் இலை மட்டையில் நீண்டு வளர்ந்து, காய்ந்து ஓலை ஆகின்றது. மரத்தில் இருந்து கொஞ்ச நாளில் உதிர்ந்து விழும் ஓலை எங்களுக்கு விளையாடும் வண்டியாக இருந்தது. இரண்டு பக்கமும் கவட்டை போல இருக்கும் மட்டையைப் பிடித்துக் கொண்டு டுர்....என ஓட்டிச் சென்றது பச்சை வாசனையாக இன்னமும் நினைவில் இருக்கிறது. காய்ந்த ஓலைகள் காற்றடிக்கும் போது ஏற்படுத்தும் சத்தம் இரவு நேரங்களில் அந்த வழியாகச் செல்லும் எவரையும் அஞ்ச வைப்பதாக இருக்கும். தளபதி அடிக்கடி சொல்லிச் செல்லும் ‘பணங்காட்டு நரி.. சல சலப்புக்கு அஞ்சாது’ என்னும் சுலவடை இதனால் தான் ஏற்பட்டிருக்கும். எத்தனையோ ஊழல் சத்தங்களை கேட்டு வளர்ந்த இயக்கம் என்பதாகவும் அது இருக்கலாம்.
பிரகாஷ்ராஜ் ஒரு படத்தில் அதிகமாகவும், மற்ற தமிழ் படங்களில் காமடியன்கள் சொல்லும் ‘பன்னாடை’ என்பதன் அர்த்தம் 'பனையின் ஆடை' என்பதே.
பனையின் பாதுகாப்பிற்கென சிறிய நாற்றாக இருக்கும் போதே அதன் தண்டுப் பகுதியைச் சுற்றி ‘பின்னப்பட்ட ஆடை’ போல ஒரு அமைப்பு தோன்றும். பனை மரம் வளர வளர இதன் தேவை தீர்ந்து காய்ந்து பின்பு மரத்திலிருந்து உதிர்ந்து விடும். இதுதான் 'பன்னாடை'. காட்டில் அடுப்பு பற்ற வைக்க இந்தப் பன்னாடை உதவும். எளிதில் தீ பற்றிக் கொள்ளும் காரணத்தால் விறகு அடுப்பு பற்ற வைக்க பெரும்பாலும் இதனைப் பயன்படுத்துவார்கள். இனியும் யாராவது பன்னாடை என்று யாரையாவது சொன்னால் பன்னாடையின் பயனைச் சொல்லுங்கள் அவர்களுக்கு.
இன்னமும் ‘அந்த ஒத்தைப் பனையோரம்’... என்று ராகம் போட்டு வருந்திப் பாடும் பாடல் ஒருவருக்குள் இருக்கும் சாமியையோ அல்லது பேயையோ வெளிக் கொண்டு வரும் சக்தி வாய்ந்தது. நாலூர் முக்கு ரோடு செல்லும் வழியில் அந்த வளைவில் கூட்டமாக இருக்கும் பனை மரங்களில் ஏதாவது ஒன்றில் ஆணி அடித்து மாலையோ அல்லது மல்லிகைச் சரமோ தொங்க விட்டிருக்கும் காட்சி அதன் பின்னணியில் நமக்கு ஏகப் பட்ட கதைகளை நினைவில் கொண்டு வர வல்லன.
இன்னும் சில பனைகளில் அதற்குச் சொந்தக்காரர் பிய்ந்து போன செருப்பையோ அல்லது விளக்குமாற்றையோ கட்டி வைத்திருப்பார்கள். அதற்கு அர்த்தம் இதில் யாராவது ஏறி நொங்கு வெட்டினால் இதாலேயே அடிப்பேன் என்ற குறிப்புணர்வாக இருக்க வேண்டும். ஆனால் ‘செங்கு’ இந்த அச்சுறுத்தும் பொருட்களுக்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் மரமேறி நுங்கு வெட்டுவதில் எக்ஸ்பர்ட். செங்கு எங்கள் கூட்டத்தின் பனையேறி. வாய்யா, தலையாரி காட்டுல செம்ம நொங்கு இருக்கு. அவர் நரிக்குடி போயிருக்கார். சீக்கிரம் போயிட்டு வந்திடலாம் என்று கூப்பிடும் செங்கை அணி வகுத்து நாங்கள் ஐந்து பேர் செல்வோம். திரும்பி வரும் தலையாரி தாத்தாவுக்குள் கெவுளி எதுவும் கத்துமோ என்னவோ. பஸ்ஸை விட்டு இறங்கி நேராக காட்டுக்கு வருவார். ஏதோ நிழல் அசைவது மாதிரி அவர் கண்களுக்கு நாங்கள் தெரிந்திருக்கக் கூடும். வக்காளி, வாத்தாளி .. என்று ஆரமித்து காட்டில் இருந்து வீட்டுக்கு திரும்பும் வரையில் திட்டிக் கொண்டிருப்பார். அவருக்கு முன்னதாக வீட்டிற்கு வந்திருக்கும் நாங்கள் என்னாச்சு தாத்தா என்று அவரிடம் கேட்டு வைப்போம். வாங்கப்பு.. என்ன அநியாயம் பண்றாய்ங்க .. பாருங்க என்று புலம்புவார்.
நீங்கள் அரிவாளுடன் வரும் ஹீரோக்களை படத்தில் பார்த்திருப்பீர்கள். அருவாளை முதுகில் சொருகித் திரியும் காட்சிகளுக்கான இன்ஸ்பிரேசன் நாங்கள் தான். கோடை விடுமுறைக் காலம் முழுவதும் நுங்கு வெட்டுவதிலும் அது சார்ந்த விளையாட்டுப் பொருட்களை செய்வதுமாகக் கழியும். பனை ஓலையில் ‘பீப்பி’ செய்வோம். குடித்த நுங்கை அழகாக சக்கரம் போல வெட்டி, டயர் மாதிரியே வரி வரியாக டிசைன் செய்து நடுவில் ஒரு குச்சியை ‘ஆக்சில்’ ஆக மாட்டி ஒரு கவட்டை கம்பு + ஸ்டீரிங் வசதிக்காக அதன் நுனியில் ஒரு நுங்கு என எங்கு சென்றாலும் ‘டுர்.......... என்று ’சொந்த வண்டியில் சென்றவர்கள் நாங்கள். இதில் முட்டுக்கு வர்றியா ஒன் வண்டிக்கும் ஏ வண்டிக்கும் முட்டு போடுவோமா என்று அலம்பல் வேறு. முட்டுக்கு வர்றியா என்றால் வண்டியோடு வண்டியை மோத விடுவது. ‘ஸ்ட்ராங்’ ஆக செய்யப்பட்ட வண்டி உடையாது.
கிட்டத் தட்ட நூறு பனை மரங்களுக்கு மேலே இருக்கும் தெக்கு வீட்டு காடு கோடையில் எங்களுக்கு பொழுதுபோக்கும் இடம். காலையில் எழுந்து பல் தேய்ப்பதற்கும் பதநீர் பானை வீட்டு வாசலுக்கு வருவதற்கும் சரியாக இருக்கும். பண்ணிரண்டு மணிக்கு அதே அக்கா சீவிய நொங்குகளை எடுத்து வருவார்கள். சாயந்தரம் படை படையாக பனையை நோக்கி பறப்போம். கள் கிடைக்கும் நேரம் நான்கு மணியிளலிந்து இரவு சுமார் ஒன்பது மணி வரை. அதுவும் கள் இரக்கும் போதே அந்த மரத்தின் கீழேயே குடிப்பது சுகஅனுபவம்.
அப்பு அந்தப் பக்கம் போகாதீங்க.. சித்தப்பு இருக்காங்க என்று எங்களையோ அல்லது அங்க எதுக்குப் போறீங்க என்று எங்கள் பக்கம் வர இருந்த சித்தப்புகளையோ தடுத்து விடுவார்கள். அவன் வந்திருக்கானாக்கும் என்று சித்தப்பு நாலு செம்புடன் நடையை கட்டுவார். இந்த வம்புக்காகவே நாங்கள் பெரும்பாலும் கொல்லைப் பக்கமாக உட்கார்ந்து கொள்வோம். வெறும் தரையில் உட்கார்ந்து மட்டையில் கள்ளும், அக்கா வைத்த முதல் நாள் குழம்பும் ஆஹா..ஆஹா.. வரம்.
ஆட்கள் நிறைய இருந்தால் பகிர்ந்து ஊற்றி எல்லோர்க்கும் சிறிதளவேனும் போதை ஏற்றி அனுப்புவார்கள். யாரும் ஏமாந்து போகக் கூடாது அல்லவா. பனம்பழம் சாப்பிட்டு இருக்கின்றீர்களா. சுவையும் மணமும் இரண்டு நாட்களுக்கு நாக்கை, நாசியை விட்டு நீங்காது.
சோம்பிப் படுத்து உறங்க நினைப்பவனுக்கு பனை மரம் சொல்கின்றது. நின்று கொண்டிருக்கும் நானே என் நிழலை நீட்டிக் கொண்டே இருக்கிறேன். ஓடிக் கொண்டே இருக்க வேண்டிய மனிதா, ஏன் இங்கே உட்கார்ந்து விட்டாய். கிளம்பு மைல்ஸ் டு கோ என்று.
ஆம், பனைமர நிழலில் நின்று இளைப்பாரலாமே தவிர படுத்து உறங்க முடியாது.
சென்னைக்கு வீடு பால் காய்ச்சும் விசேசத்திற்கு வந்த பாண்டி அண்ணன் சொன்னார். பரவால்ல சரவணா.. அப்பா கஷ்டப்பட்டதற்கு பலனாய் நீங்களாவது வளந்துட்டீங்க என்று.



wowww... oru leave ku gramathuka poitu vandha feel iruku... r enjoy panirunking...
ReplyDeleteraju murugan thodar mudinjidichu... neenga en try panna koodadhu... joke illa.. nejamma dhan solren!!! anupi parungalen..
keep rocking...