July 22, 2018


கண்ணாடி வீடுகள் : 







முகம் பார்க்கும் கண்ணாடி எப்போது யாரால் கண்டு பிடிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால் நம் வீட்டில் நான் பார்த்த முதல் கண்ணாடி,  அட்டைக்கு நடுவே பொதிக்கப்பட்ட கண்ணாடியும் அதனை மூடித் திறக்கும் ஒரு அட்டையும் கொண்டது. அந்த அட்டையை பின் பக்கமாக மடக்கி வைத்தால் அதை ‘ஸ்டான்ட்’ ஆக உபயோகிக்கலாம்.. முகத்தை மட்டும் பார்க்க அருகே அமர்ந்தும் கொஞ்சம் முழுதும் பார்க்க தள்ளியும் நின்று தலை சீவி ‘பௌடர் திருநீறு’ வைத்து அதன் நடுவில் பெண்கள் வைக்கும் செந்தூர் பொட்டு கொண்டு ஒரு கோடிட்டு பள்ளிக்கு கிளம்பியது பசுமையாக ஞாபகம் இருக்கின்றது..கொஞ்ச நாளில் அந்த மூடி பிய்ந்து விடும். பின் அட்டையும் கழண்டு பின்பு வெறும் கண்ணாடியை சுவற்றில் சாய்த்து அடுத்த கண்ணாடி வாங்கும் வரை சின்ன சில்களில் தலை கண்ணம் என தனித் தனியாக பார்த்து அட்ஜஸ்ட் செய்து கொண்டது என் இளமைப் பருவம்.
சரி இப்போது ஏன் இந்தக் கதை.காரணம் எதிர் வீடு.. அந்த குடும்பத்தின் தலைவர் தன் நரைத்த முடி எதுவும் வெளியே தெரிகின்றதா என கவனமாக (அரை மணி நேரம்) பார்த்துவிட்டு வேலைக்குச் செல்ல அதன் பின்பு அக்கண்ணாடி தலைவியின் கைகளுக்குச் செல்கின்றது. அவர்களும் நரைத்த முடி செக் செய்து பேன் பார்த்து தலை சீவி கொண்டை போட்ட பின்பு மகள்.
தன் கூந்தலை ஆய்ந்து முடித்து சீவிச்சிங்காரித்த பின்பு அக்கண்ணாடியின் அன்றைய வேலை முடிவடைகின்றது. ஏன் இது என் கவனத்தை ஈர்க்கின்றது என்றால் இது நிறைய பழைய நினைவுகளைக் கொண்டு வருகின்றது.
ஊரில் கண்ணாடி என்பது எல்லோர் வீட்டிலும் இருந்து விடுவதில்லை..அதற்கு தேவையும் ஏற்படுவதில்லை எனவும் சொல்லலாம். தலைசீவி பவுடர் பொட்டு வைக்க எப்பவும் அடுத்த வீட்டு அக்காக்களை கொண்ட அழகான ஊர் அது..பேன் சீப்பு, ஈர்வளி என சில இன்ஸ்ட்ருமென்ட் வீடு வீடாக செல்லும். பெண்களின் பொழுது போக்காக பேன் பார்ப்பதும் ஈர் இழுப்பதும் இதை செய்து கொண்டிருக்கும் போதே பிக்பாஸின் பாலாஜி  போல புறம் பேசுவதும் உண்டு.
மறுநாளில் என்ன பத்தி எப்பிடி சொல்லலாம் என ஒரு சண்டை வரும்..அந்த அய்யனார் சாமி சத்தியமா நான் அப்டி சொல்லவே இல்ல என்று முடியும்.
கண்ணாடி எல்லோருக்கும் உவப்பானதாக இருந்து விட முடியாது. அழகான முகம் கொண்டவர்கள் பார்க்கும் அளவுக்கு கறுப்பானவர்கள் பார்ப்பதில்லை. ஏதோ ஒரு காரணத்தால் தோலின் நிறம் மாறி வெள்ளை திட்டுக்கள் இருப்பவர்கள் தீ விபத்தில் காயம்பட்டவர்கள், சரும நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு கண்ணாடியை விட துன்பம் தரும் ஒரு பொருள் இருந்து விட முடியாது. லிப்டில், அடுக்கு மாடி வணிக வளாகத்தில், சலூன் கடைகளில் நம்மை முழுமையாக காட்டும் கண்ணாடிகள் சட் என ஒரு வெட்க உணர்வை கொண்டு வர வல்லன. மொபைலின் முன் பக்க கேமரா கொண்டு முகத்தை அழகு படுத்திக் கொள்ளும் பெண்கள் அதிகமாக வாழும் ஊரான இங்கு பர்சில் வைத்துக் கொண்டு அழகு படுத்திக் கொள்ளும் அவசியம் ஏற்படுவதில்லை.     
ஊர் தலைவரின் குடும்பம் இப்படியான ஒரு கண்ணாடியை வெளியில் இருப்பவர்கள் பார்க்கும் மாதிரியாக வைத்து அழகு செய்து கொள்ளும். அவரின் பெண்கள் பிறர் பார்க்க தங்களை அழகு செய்து கொண்டதும் பின் வேறு வேறு பாதைகளில் சென்று இன்று காலமாற்றத்தில் அவர்களா இவர்கள் என வியப்படைய வைப்பதும் கண்ணாடியின் மீது ஒரு பயத்தை உண்டாக்கி உள்ளது. கால ஓட்டத்தின் தோற்ற மாறுதலை இவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. மீண்டும் தன் தோற்றத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கொண்டு செல்லவே முயற்சி செய்கின்றார்கள்.   
அதிகமாக கண்ணாடி முன் நேரத்தை செலவு செய்யும் குடும்பம் விளங்காமல் போகும் என ஒரு ஆழமான கருத்தை இந்நிகழ்வு என்னுள் விதைத்திருக்கின்றது.

 
கண்ணாடியில் காணும் பிம்பத்திற்கு தனியாக இயங்கும் திறன் இருந்தால் என்னாகும். இப்படி ஒரு கருவைக் கொண்டு எடுக்கப்பட்ட படம் மிர்ரர்ஸ். கதையின் படி நாயகன் பணி நீக்கம் செய்யப்பட்ட துப்பறியும் அதிகாரி. தீ விபத்தினால பாதிக்கப் பட்ட ஒரு அடுக்கு மாடி வணிக வளாகத்தில் இரவு நேரக் காவலராக பணி செய்ய ஆரம்பிக்கிறார். இவருக்கு முன்னால் அங்கு வேலை செய்த தொழிலாளி ஒரு கண்ணாடி முன்பு இறந்து கிடக்கின்றார். இறப்பின் காரணம் கண்டு பிடிக்க முயற்சி செய்யும் போது அங்கிருக்கும் கண்ணாடியில் ஒரு பெயர் தெரிகின்றது.

அந்த வளாகத்தில் இருக்கும் கண்ணாடிகளில் தெரியும் பிம்பங்கள் தனியாக இயங்குகின்றன. நாயகனின் தங்கை கண்ணாடியில் பார்க்கும்போது தெரியும் பிம்பம் அதன் வாயை கிழித்து தற்கொலை செய்து கொள்கின்றது. அந்த பிம்பம் செய்வது எதிரே இருப்பவர்க்கு உண்மையில் நடக்கின்றது. இதை கண்டு பிடிக்கும் நாயகன் தன் வீட்டில் இருக்கும் கண்ணாடிகளை பெயிண்ட் அடித்து மறைக்கின்றார். அந்த வளாகத்தில் உள்ள கண்ணாடிகளை அடித்து உடைக்க முயற்சிக்கும் போது அந்த கண்ணாடி ஒரு பெயரை கீறல்கள் மூலமாக காட்டுகின்றது. அந்த பெயர் செத்துப் போன அந்த காவலாளியின் பர்சில் இருந்த அதே பெயர் .. ‘எஸ்ஸேக்கர்’
     
இதன் பின்னால் இருக்கும் மர்மத்தை அறிய கீழ் தளத்தில் இருக்கும் ஒரு அறைக்கு செல்கின்றார். அங்கு ஒரு மனோ வியாதிக்கான மருத்துவமனை இயங்கியதையும் அதில் இருந்த நோயாளிகள் கூட்டாக தற்கொலை செய்து கொண்டதையும் கண்டு பிடிக்கிறார். அந்த கூட்டத்தில் இருந்து ஒரே ஒரு நோயாளி மட்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு டிசார்ஸ் செய்யப் பட்டதையும் கண்டு பிடிக்கிறார். அவர் ‘எஸ்ஸேக்கர்’ 

அவரின் முகவரி அறிந்து அங்கு செல்லும் பொது,  தன்னை கெட்ட ஆவிகள் பிடித்து வைத்துள்ளதாகவும் கண்ணாடிகள் தன்னை ஒரு கருவியாக பயன்படுத்தி பலரைக் கொன்று அவர்களின் ஆத்மாக்களை சேர்த்து வைத்துள்ளதாகவும் திரும்பவும் வந்தால் அவை எல்லாம் சேர்ந்து தன்னை கொன்று விடும் என்று கூறி வர மறுக்கிறார். அவரை துப்பாக்கி முனையில் அழைத்து வரும் நாயகன் அந்த அடுக்கு மாடி வளாகத்தில் நுழைகின்றார். அந்த கண்ணாடிகளில் உள்ள ஆவிகள் அனைத்தும் வெளியே வருகின்றன. அவருக்குள் நுழைந்து நாயகனை கொல்ல முயற்சிக்கின்றன. எல்லா கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கி கட்டடம் இடிந்து விழுகின்றது. நாயகனின் வீட்டில் அவரின் பையன் ஆபத்திலிருந்து தப்புகிறான். கட்டடத்தில் இருந்து வெளியே வரும் நாயகனுக்கு எல்லாமே கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல தெரிகின்றது.. இத்துடன் கதை முடிகின்றது. கட்டடத்தின் இடிபாடுகளின் இடையே சிக்கியதில் இறந்து விடும் நாயகன் கண்ணாடியில் தெரியும் ஆத்மாவாக மாறி விடுகிறான் என படம் பார்க்கும் நாம் புரிந்து கொள்ள வைக்கின்றார் இயக்குனர். 

கற்பனை என்றாலும் கண்ணாடியில் பார்க்கும் பிம்பங்களுக்கு தனியாக இயங்கும் சக்தி இருந்தால் என்ன ஆகும் என்ற கருக்கொண்ட இப்படம் என்னுள் நிறைய கேள்விகளை எழுப்பியிருந்தது.  

கண்ணாடிகள் எல்லா நேரமும் உண்மையை மட்டுமே காட்டுவதில்லை. எல்லாவற்றையும் மாற்றிச் செல்லும் காலக் கண்ணாடி முன் நாம் எல்லோரும் பிம்பங்களே.                                                             


No comments:

Post a Comment