April 8, 2013

பாலாவின் A B C D


மேலே உள்ள படத்தைப் பார்க்கும் போது திடீரென எனக்குப் பத்து வயது கூடியது போலத் தோன்றுகிறது. பெண்களின் வளர்ச்சி மாயாஜாலம் காட்டுகின்றது. நம் கூடவே பத்தாவது படித்த பெண் மறுவருடம் மாமனுக்கு வாக்கப்பட்டு கையில் ஒரு புள்ளையுடன் திருவிழாவுக்கு வரும். நாம் அப்போது தான் டவுசரில் இருந்து பேன்ட் போடுவதற்கு புரோமோஷன் ஆயிருப்போம்.


நாம் கல்லூரி முடிப்பதற்குள் அந்தப் பெண்கள் வாழ்க்கையின் அனைத்து நல்லது கெட்டதுகளைப் பார்த்து விடுவது கடவுளின் படைப்பு வித்தை. போன வருடம் திருவிழாவுக்கு போயிருந்த போது தான் ரங்கராஜனைப் பார்த்தேன். என்னுடன் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவன். ஜோல்னா பை என்று இப்பவும் தபால் பை என்று அப்போதும் அழைக்கப்பட்ட பையை தலையில் மாட்டிக் கொண்டு கைகளை கிராசாக ஆட்டிக் கொண்டு விக்கு விக்கென நடந்து வரும் ரங்கராஜன் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள குண்டுகுலம். திருநீறு பூசி அதன் நடுவில் சாந்து பொட்டு வைத்து வருவது அவன் பழக்கம் அப்படியே எனக்கும்.

மாப்ள, என்னோட பொண்ணுக்கு அடுத்த தையில கல்யாணம்டா என்றான். என் மௌனம் அவனுக்கு ஏதோ உணர்த்தியிருக்கக் கூடும். என்னடா அப்பிடி பாக்குற என்றான். அதில்லடா என்னோட பொண்ணு இப்போதான் எல்.கே.ஜி போகுது. நீ என்னடான்னா ஓம் பொண்ணுக்கு கல்யாணம்ங்கற. நாம ரெண்டு பேரும் ஒன்னாத்தானடா படிச்சோம் என்றேன்.. கரெக்ட்டு.. ஆனா எனக்கு ‘பதினேட்டுல’ கல்யாணம் ஆயிருச்சுரா. சொந்த மாமா பொண்ணு தான். இப்பவும் அவளோட தம்பிக்கு தான் குடுக்குறேன்.. கடமைய முடிச்சுடலாம்ல பாரு என்றவனை இப்போதும் பார்ப்பதற்கு பள்ளி மாணவன் போலவே இருக்கின்றான். எவ்வளவு பேருக்கு இப்படி வாழ்க்கை அமைதியாக அமைந்து விடுகின்றது. அப்பாவின் வாரிசு வேலையாக போஸ்ட் மாஸ்டர் உத்தியோகம், கிராமத்து வாழ்க்கை என நன்றாக இருக்குறேன் என்று சொல்வதைக் கேட்க சந்தோசமாக இருக்கின்றது.

சார் உங்க பொண்ணு டான்ஸ் கிளாஸ்ல சேர்ந்திருக்கு, நாளைக்கு அறுநூறு ரூபாய் கொடுத்து அனுப்புங்க’ என்று டீச்சர் போன் பண்ணிய பின்பு தான் தெரிந்தது, பாலா பள்ளி ஆண்டு விழாவில் டான்ஸ் ஆடப் போகின்றது என.

ப்ராக்டிஸ் செய்வதற்கு தினமும் இரண்டு மணி நேரம் ஆகும் எனவும் அதனால் ஸ்கூல் வண்டி வராது என்றும் தனியாக வாகன வசதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டோம். ரெண்டே முக்கால் மணிக்கு ப்ராக்டிஸ் முடிந்தவுடன் அழைத்து வருவதற்கு தனியாக ஆட்டோ ஏற்பாடு செய்தாலும் அப்பா, நீயே வந்து கூட்டிட்டு போப்பா என கெ(கொ)ஞ்சுவதால் இரண்டு நாட்கள் அதையும் செய்தேன். நீ திரும்பவும் ஆபீஸ் போகனுமா.. அப்படின்னா வேணாம்பா, நாளையிலிருந்து நான் ஆட்டோவிலேயே வந்துடுறேன் எனச் சொல்லும் பாலா.




தூங்குவதற்காக கதை சொல்லி, தூங்கி விட்டான் என வேலை பார்க்க எந்திரிக்கும் போது, ‘படுங்கப்பா’ என்னைய மட்டும் தூங்க வச்சுட்டு நீங்க என்ன வேலை பார்க்கப் போறீங்களா.. சும்மா படுங்க என்று சொல்லும் சஞ்சய் தூங்குவதற்காக தட்டிக் கொடுக்கும் என் கை மேலே அவன் கையை வைத்து தட்டிக் கொடுக்கிறான்.

இதோ, வயிற்றில் சின்னதாக கட்டி வந்து அறுவை சிகிச்சை செய்த மாமா பையன் பாண்டியை ஒரு வாரம் கழித்து பார்க்கச் செல்கின்றேன் சின்னதாக ஒரு குற்ற உணர்வோடு. மாமா எதுவும் சொல்லவில்லை என்றாலும் சாரி, மாமா கொஞ்சம் வேலை அதிகம், அதனால ஹாஸ்பிடல் வர முடியவில்லை என்கின்றேன்.

பரவால்ல சரவணா, என்ன ஒன்னு, மாமா நீ இதெல்லாம் வாங்கிட்டு வந்து பாக்கணும்னு எல்லாம் எதிர் பார்க்கிறவன் இல்லனு ஒனக்கே தெரியும், நமக்கு இவங்க எல்லாம் இருக்காங்க என்ற நம்பிக்கை நீ ஹாஸ்பிடல் வந்து பார்த்திருந்தால் எனக்கு அதிகரித்திருக்கும். அதுக்கு என்ன பண்றது சரவணா, வேலையும் முக்கியம் தான. என்னாலேயே இவன் பக்கத்துல இருக்க முடியல்ல. வேலைக்கு போயிட்டு தான் வந்தேன். பொழைக்க தானப்பா வந்திருக்கோம் என்கின்றார்.

தங்கச்சி வித்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்த ஐந்து நாட்களுக்குப் பின் தான் பார்க்க முடிந்தது. ஏன்டா இங்க இருக்குற நீ இப்ப தான் வர்ற என்று கோபிக்கும் சித்தப்பாவிற்கு என்ன சொல்லி சமாதானப்படுத்த முடியும்.

வருத்தங்களும் அது தரும் வலிகளும் ஆழமானவை. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு வகுப்பில் கூட பிரியாமல் இருந்த கணேஷ் குமாரின் நட்பு அவன் அண்ணன் இறந்ததற்கு போக முடியாததால் உடைந்து விட்டது.

ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்கின்றேன் இனிமேல் இந்த மாதிரி விசயங்களை தள்ளிப் போடக் கூடாது என.. ஆனால் முடியவில்லை.

பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல.. உறவுகளும் நண்பர்களும் தான் என்பதை திரும்ப திரும்ப அழுத்திச் சொல்லிக் கொள்கின்றேன்.

4 comments:

  1. wowww... unga blog i vida Bala kalakkal.. sari cute.....

    correct... idhu mari thalli pottu potte nanum neraiya fship rship i ezhandhiruken... idhai padichadhum second saturday veetu kuppaiya kelarama en cousin veetuku poganum nu nenaikaren.. mudiyumanu therila...


    keep rocking...

    ReplyDelete
  2. முடியும்னா முடியும்.. ஆனால் நம் மனம் முடியாமல் போவதற்கான காரணங்களை முன்னாலேயே யோசித்து வைத்துக் கொண்டு தான் 'போக வேண்டும்' என்றே நினைக்கிறது.

    நான் என்னைய சொன்னேன்.. தங்களுக்கு எப்படியோ..

    குப்பைய கிளற நீங்க என்ன கோழியா? போய் பார்த்துட்டு வாங்க.. வீட்டுக் குப்பை வீட்லயே தான் இருக்கும்.. யாரும் தூக்கிட்டுப் போய்ட மாட்டாங்க..

    ReplyDelete
  3. குப்பைய கிளற நீங்க என்ன கோழியா?.... idhu pidichiruku.. ahhhhhh

    ReplyDelete
  4. இப்போதும் பார்ப்பதற்கு பள்ளி மாணவன் போலவே இருக்கின்றான். எவ்வளவு பேருக்கு இப்படி வாழ்க்கை அமைதியாக அமைந்து விடுகின்றது. அப்பாவின் வாரிசு வேலையாக போஸ்ட் மாஸ்டர் உத்தியோகம், கிராமத்து வாழ்க்கை என நன்றாக இருக்குறேன் என்று சொல்வதைக் கேட்க சந்தோசமாக இருக்கின்றது.
    # nice

    ReplyDelete