April 11, 2013

காப்பு


இன்று தான் ‘காப்பு’ கட்டிய சாமிகள் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்பினர். இன்றிலிருந்து அனுசரிக்கப்படும் விரதம் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வரை தொடரும். எல்லோரும் ‘சுத்த பத்தமாக’ இருக்க வேண்டும்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா எங்கள் பங்காளிகளால் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா. எங்கள் குல தெய்வங்கள் கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பு, மச்சப்புள்ளி கருப்பணசாமி மற்றும் வீட்டின் பெண் தெய்வமான உடையணாச்சி அம்மன். வெளியே செல்லும் போது அம்மனை நினைத்து திருநீறு பூசிச் சென்றால் கூடவே வந்து ‘தலமாடு’ காப்பாள் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. சித்திரை மாதத்திற்கு முன்னால் வரும் அம்மாவாசை அன்று அழகர் கோவிலில் உள்ள தீர்த்தத் தொட்டியில் தீர்த்தக்கரை ராக்கச்சி அம்மன் முன்பாக கையில் கட்டிக் கொள்ளப்படும் ‘காப்பு’, திருவிழா முடிந்து வீட்டுக்கு திரும்பி உடையணாச்சி அம்மன் முன்பாக அவிழ்க்கப்படும்.



திரி எடுத்து ஆடி ‘ஊர் விளையாடி’ கொண்டாடப்படும் இத்திருவிழாவின் ‘ஹை லைட்’ சாமி ஆடுவது மற்றும் குறி கேட்பவர்களுக்கு அவர்கள் நினைத்த காரியம் நடக்குமா நடக்காதா என்று குறி சொல்வது. கொட்டு மேளத்தின் தாள நயத்துக்கேற்ப ஆடும் ஒவ்வொரு சாமிக்கும் தனித் தனியான ‘அடி’ அடிக்க வேண்டும். இல்லை என்றால் கொட்டடிக்கும் கொட்டுக்காரனை சாமி சாட்டையால் அடிக்கும். ‘கச்சை’ கட்டியவுடன் கையில் அரிவாள், சாட்டை ஆயுதங்கள் தாங்கி ஆசாமியிலிருந்து சாமியாக அவதாரம் எடுப்பார்கள். ஒவ்வொரு சாமிக்கும் தனியான ‘ஆடும் ஸ்டைல்’ உண்டு. அரிவாளை கையில் வைத்திருக்கும் தோரணையும், ஆடும் போது அவர்களின் உடல்மொழியும் பார்க்கும் யாவர்க்கும் ‘இன்ன சாமி’ இது என்று அடையாளம் காட்டும். உதாரணமாக தரையில் இருந்து மூன்று அடிக்கும் மேலாக குதித்து குதித்து, தலையை இடதும் வலதுமாக ஆட்டி, கண்களை விரித்து, நாக்கை துருத்தி ஆடினால் அது பதினெட்டாம் படி கருப்பு. குறி கேட்பவர்களுக்கு குறி சொல்வதும், பேய் பிடித்து ஆடும் பெண்களுக்கு ஏய்ய்... என்று அதட்டி திருநீறு பூசி விரட்டுவதும் பதினெட்டாம் படி கருப்பு தான்.

பெரிய சாமி மலையான் என்று அழைக்கப்படும் கள்ளழகர். கையில் ‘வளர்க்கப்பட்ட திரி’ யுடன் ஆடும் இந்தச் சாமி தான் ‘டீம் லீடர். இவர் திருநீறு இட்டு ‘போதும் நிறுத்திக்கோ’ என்று கட்டளை இட்டால் எல்லாச் சாமிகளும் கேட்க வேண்டும். வயதான சாமிகள் தங்கள் வாரிசாக இனி மேல் இவர் ஆடுவார் என்று சாமி யாருக்கு வர வேண்டும் என்பதை பொதுக்குழு, செயற்குழு கூட்டாமல் முடிவெடுக்கிறார்கள். தி.மு.க தலைவர் போல எனக்கு திருநீறு வைக்கும் வாய்ப்பு கிடைத்தால் ‘இன்னாருக்கு தான்’ வைப்பேன் என்று சொல்வதும் உண்டு.

பெரிய பணக்காரர்கள் எல்லாம் ஏதாவது வேண்டிக் கொண்டு அது நிறைவேறினால் சாமிக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். ஆனால் எங்களின் கள்ளழகர் திருவிழா எங்களை நன்றாக வைத்திருக்கும் சாமிக்கு நன்றி செலுத்தி சாமியின் குறை கேட்கும் திருவிழா.

என்னப்பா.. எல்லாம் திருப்தியா, ஏத்துக்கிடுறையா.. என்று சாமியிடம் கேட்கிறார்கள்.

மக்கள் எல்லாம் வந்திருக்கீங்க.. ரொம்ப சந்தோசம்டா.. ஆனா ஒரு குதிரைய காணோமேப்பா.. என்று சாமி அழுகின்றது. குதிரை என்பது ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் சாமி கும்பிட சேர்ந்து வராத பங்காளியாக இருக்கக் கூடும் . நாங்க என்ன பண்றது சாமி. அந்தக் குதிரைய கூப்புட்டு பார்த்தோம். வரல. நீதே அவம் மனச மாத்தி வர வைக்கணும்’ என்று சாமிக்கு வேண்டுகோள் வைக்கின்றார்கள்.

எனக்கு இவ்வளவு காசு பணம் செலவு பண்ணிக் கும்பிடுறது முக்கியம் இல்லப்பா. எல்லாப் பங்காளிகளும் சேந்து வந்து காலணா சூடம் வாங்கிக் கொளுத்தினாலே போதும். ஒன்னும் கவலைப் படாதப்பா.. அடுத்த களரிக்கு அந்தக் குதிரைய வர வைக்கிறேன் என்று சாமி சத்தியம் செய்கின்றது. சொன்னது போலவே அடுத்த வருடத் திருவிழாவுக்கு ‘அந்தக் குதிரை’ தனது குடும்பத்தோடு கலந்து கொள்வது சாமியின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றது.

படித்த அறிவினால் வந்த பகுத்தறிவு சொல்கின்றது, சாமி வந்து ஆடுவதெல்லாம் சும்மா.. இது மனப் பிறழ்வின் ஒரு வகை என்று. ஆனால் இப்படி எழுத நினைத்த நேரத்தில் தான் எனது மொபைலை காணவில்லை. கால் பண்ணிப் பார்க்கலாம் என்றால் நாட் ரீச்சபிள் என்று வருகின்றது. சாமி... தப்பு தான் இப்படி எழுத நெனச்சது. ப்ளீஸ் மொபைல குடுத்துடு’ விளையாடாத என்று வேண்டிக் கொள்கின்றேன். தற்செயலாக பீரோவை திறந்து பார்க்கலாம் என்று மனதிற்குத் தோன்றுகிறது. உள்ளே மடித்து வைக்கப் பட்ட சட்டைகளின் மேலே மொபைல் இருக்கின்றது. சிக்னல் இல்லாமல்.

வெளியே எடுத்து வந்தவுடன் மீண்டும் சிக்னல் வருகின்றது. இதுவும் தற்செயலான நிகழ்வாகவே இருக்கலாம்.

பங்காளிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது மனிதனுக்குள் இருக்கும் சாமியாக இருந்தால் என்ன இல்லை சாமிக்குள் இருக்கும் மனிதனாக இருந்தால் என்ன. நல்லது சொன்னால் சாமியும் மனிதன் தான்.. சொல்லும் மனிதனும் சாமி தான்.

குறி சொல்வதின் சூட்சுமங்களும், சாமியாடிகளின் அடுத்த முகங்களும்
வ(ள)ரும்........ .



1 comment:

  1. wowwww...... bharathiraja padam effect irundhadhu...


    yosikave yosikadhinga... onnu sekkara ellame unnadham dhan... சாமி... தப்பு தான் இப்படி எழுத நெனச்சது. ப்ளீஸ் மொபைல குடுத்துடு’ விளையாடா.. idhu dhan nammala 'manushangala' mathavangala vida vidhyasamai iruka vekkudhu...


    keep rocking...

    ReplyDelete