April 14, 2013

துறை'முகம்'



நான் இந்த வேலைக்கு திரும்பவும் வருவேன் என நினைக்கவே இல்லை. இல்லை.. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் எந்த  வேலைக்கும்  போகவே பிடிக்கவில்லை. சித்திக்கு வீட்டு வேளையில் உதவி செய்து கொண்டும், சித்தி கோவிலுக்குச் செல்லும் போது பூஜைப் பொருட்களை வைத்துச் செல்லும் பித்தளைப் பாத்திரத்தை தூக்கிச் சென்றும், தோட்டத்தில் சித்தப்பா வளர்க்கும் இரண்டு பசு மாடுகளைப் பார்த்துக் கொண்டும் என் வாழ்நாளைக் கழித்து விட முடியும் என்றே நினைத்தேன்.

சித்தி வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாடிக் கொண்டே பூஜை சாமான்கள் துலக்குவார்கள். காலையில் பிள்ளையார் கோவில், மாலையில் செல்லி அம்மன் கோவில் எனவும் மதிய நேரங்களில் டிவியுமாக வாழ்க்கை நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. சித்தப்பா ஒருநாள் ‘என்னடா பண்ற’ என்று கேட்கும் வரை.

‘ஒமேகா பார்வர்டர்ஸ்’ போயி அங்க முருகேசனப் பாரு. போகும் போது செர்டிபிகேட் எல்லாம் எடுத்துட்டு போ என்றார். ஒமேகா பார்வர்டர்ஸ் அப்போது ஒரு சிறந்த எம். என். சி கம்பெனி. கிண்டியில் இருந்த அலுவலகத்திற்கு பயந்தபடியே சென்றேன். வேலை கிடைக்க வேண்டுமே என்று அல்ல, கிடைத்து விடுமோ என்று.

ஜி. எம் கேட்டார். உனக்கு டைப் ரைட்டிங்  தெரியுமா என்று. தெரியாது சார் என்று சொல்லும் போதே என்னை அறியாமல் மகிழ்ச்சியில் சிரித்து விட்டேன். இந்த வேலை கண்டிப்பாக கிடைக்கப் போவதில்லை என்ற மகிழ்ச்சியில் வந்த சிரிப்பு அது. ஆனால் அவருக்கு கடுப்பாக இருந்திருக்க வேண்டும். தெரியாதுன்னு சொல்றதுல அப்படி என்ன ஒனக்கு சந்தோஷம், மொதல்ல டைப் ரைட்டிங் கத்துக்கோ என்று சொல்லி அனுப்பி விட்டார்.

என்னடா, போனயா என்று கேட்ட சித்தப்பாவிற்கு, முகத்தை கொஞ்சம் வருத்தப்படுவது மாதிரி வைத்துக் கொண்டு ‘டைப் ரைட்டிங் தெரியுமான்னு  கேட்டாங்க சித்தப்பா , தெரியாதுன்னு சொன்னேன், இபோதைக்கு இங்க வேற வேலை இல்லைனு சொல்லி போகச் சொல்லிட்டாங்க  என்றேன்.

சரிப்பா.. அப்ப நாளையில் இருந்து டைப் ரைட்டிங் கத்துக்கோ என்று பக்கத்தில் இருந்த இன்ஸ்டியூட்டில் சேர்த்து விட்டார்கள். இங்கு தான் அரிச்சுவடி ஆரம்பித்தது. கிளாஸ் முடிஞ்ச நேரம் சும்மா தான இருக்க. ஏர்போர்ட்டுக்கு போடா.. நம்ம கம்பனில பாஸ் போட்டுத்தர சொல்றேன் என்றார். ( இதற்கு முன்பே இந்த வேலை பிடிக்காமல் ‘யுரேகா போர்ப்ஸில்’ சேல்ஸ் ரெப் ஆக வேலை பார்த்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்) வேண்டா வெறுப்பாக ஏர்போர்ட் போக ஆரம்பித்தேன். ஆனால் கொஞ்ச நாளில் கற்றுக் கொள்ளும் ஆர்வம் வந்தது. ஆனால் இறக்குமதிப் பிரிவில் வேலை செய்த என்னுடைய சீனியர் சொல்லித் தரத் தயாராக இல்லை. இதனால் எனக்காகவே கம்பெனியில் 'இம்போர்ட் ஓசியன் டிபார்ட்மென்ட்' ஆரம்பித்துக் கொடுத்தார் சித்தப்பா. டாகுமெண்டேசன் டைப் அடித்து, கஸ்டம்ஸ் வேலைகளை முடித்து  சரக்கை வெளியே எடுக்கும் டெலிவரி வரை எல்லாவற்றையும் நான் ஒருவனே செய்து கொள்ள வேண்டும். அப்போது கண்டைனர் பிரெய்ட் ஸ்டேஷன் எனப்படும் சி.எப்.எஸ் எதுவும் இல்லை. அனைத்து வகையான இறக்குமதிப் பொருட்களும் சென்னை போர்ட் ட்ரஸ்ட் என்று அழைக்கப்படும் போர்ட்க்கு உள்ளேயே தான் இருந்தது.

இறக்குமதி அனுமதிக்கான கஸ்டம்ஸ் டாகுமென்ட் (BILL OF ENTRY) பெரிய சைஸில்  இருக்கும். லாங் சைஸ் FACIT மெசினில் தான் டைப் அடிக்க முடியும். எல்லா விவரங்களையும் ஓவர் டைப் இல்லாமல் அடிக்க வேண்டும். டூட்டி கால்குலேசன் தெரிய வேண்டும். கிளாசிபிகேசன் என்று அழைக்கப்படும் எட்டு இலக்க எண்ணை அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும். இவற்றை எல்லாம் முடித்து கஸ்டம்ஸில் சமர்ப்பித்தால் அந்த டாகுமென்ட் கிட்டத்தட்ட  இருபது அலுவலர்களின் கை எழுத்துக்காக அந்த ஐந்து மாடிக் கட்டிடத்தில் அங்கங்கே எடுத்துச் செல்லப் பட வேண்டி இருக்கும். நமக்கு ஏற்கனவே ஞாபகமறதி உச்சத்தில் இருந்த காலம் அது. மஞ்சுவை நெஞ்சு முழுவதும் நினைத்திருந்த நேரம் அது. அப்போது தொடர்ச்சியாக டாகுமென்ட் வருவதுமில்லை.  ஒரு இடத்தில் கையெழுத்து  வாங்கி முடித்தவுடன் சரியாக அடுத்த அலுவலரிடம் வரிசை மாறாமல் கை எழுத்து வாங்க வேண்டும். வரிசை மாறினால் ‘என்ன புதுசா’ என்று கேட்டு நம்ம ஜனாதிபதி போல கருணையே காட்டாமல் சீனியர வரச் சொல்லு என்பார்கள். சார், சீனியர், ஜூனியர் எல்லாம் நான் தான் என்று சொன்னால் நம்பவும் மாட்டார்கள். இதனைத் தவிர்ப்பதற்காக அந்த ஐந்து மாடிக் கட்டிடத்தை வரைந்து  ஒரு சார்ட் மாதிரி  ரெடி பண்ணி வைத்திருந்தேன். ‘இதற்கு அடுத்து நாலாவது மாடியில் நடுவில் இருபத்தி மூணாம் நம்பர் ரூமில் உள்ள அலுவலரிடம் கையெழுத்து  வாங்க வேண்டும். அவர் புதுசா வர்ற ஆட்களைக் கண்டால் நூறு ரூபாய் கேட்பார்.. ஆனால் அவருக்கு ஐம்பது ரூபாய் தான் கொடுக்க வேண்டும்’ – இவ்வாறான குறிப்புகளும் அதில் இருக்கும். இதில் ஒரு சவால் என்னவென்றால் எங்கேயாவது தப்பு இருக்கின்றதா என அலுவலர் மிகக் கவனமாக சரி பார்ப்பார். ஏதாவது ஒரு சின்ன தவறு தெரிந்தாலும் அதை வைத்து அதிகக் காசு கேட்பதற்காக.. நானும் ஒரு தவறு கூட இருந்து விடக் கூடாது என மிகக் கவனமாக டைப் செய்வேன். இருந்தாலும் எப்போதும் அலுவலர்களே செயித்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த யுத்தம் முடிந்த பின்பு ‘கஸ்டோடியன்’ என அழைக்கப் படும் சென்னை போர்ட் ட்ரஸ்ட்ஸில் அடுத்த யுத்தம் ஆரம்பிக்கும். அங்கும் இதைப் போலவே ஐ.எ பார்ம் ( IMPORT APPLICAION FORM) டைப் செய்து சமர்ப்பிக்க வேண்டும். அங்கும் வரிசையாக மேஜை நாற்காலிகள். நாம் ஒரு முனையில் சமர்ப்பிக்கப்படும் டாகுமென்ட் கிட்டத் தட்ட பதினைந்து மேஜைகளைக் கடந்து வரும். ஏதாவது ஒரு இடத்தில சிறு தவறு கண்டுபிடிக்கப் பட்டால் அந்த டாகுமெண்ட்  அந்த அலுவலரிடமே இருக்கும். ஒரு நாளில் சமர்ப்பிக்கப்படும் இருநூறு டாகுமெண்டகளில் நாம் சமர்ப்பித்தது எந்த மேஜையில் இருக்கின்றது என தெரியாது. உள்ளே சென்று பார்க்கவும் முடியாது. கவுண்டரில் உள்ள சிறு ஓட்டை வழியாக ‘எப்படியாவது’ கண்டு பிடிக்க வேண்டும். கடவுள் அருளால் எல்லாம் சரியாக இருந்தால் அரை மணி நேரத்தில் வெளியே வந்து விடும். இல்லை என்றால் ரிஜெக்சன் முத்திரை குத்தப் பட்டு இரண்டு மணி நேரம் கழித்து வெளியே வரும். நான் சமர்ப்பித்த எந்த டாகுமென்ட்டும் அரை மணி நேரத்தில் வந்தது கிடையாது. எப்படியும் ஏதாவது ஒரு தவறை கண்டுபிடித்து திருப்பி அனுப்புவார்கள். திரும்ப கரெக்சன் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்து கஸ்டம்ஸ் அலுவலர் பொருட்களை சோதனை செய்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் அவுட் ஆப் சார்ஜ் ( OUT OF CHARGE) கை எழுத்தைப் போடுவார்கள். இதற்கு அடுத்து கம்பேரிசன். இதில் போர்ட் டிரஸ்ட்ஸில் சமர்ப்பிக்கப்பட்ட டாகுமென்ட் விவரங்களையும், கஸ்டம்ஸ் அவுட் ஆப் சார்ஜ் காப்பியையும் வைத்து கம்பேர் செய்வார் ஒரு அலுவலர்.

சுப்பையா என்று ஒரு கம்பாரிசன் அலுவலர் இருந்தார். அவர் டாகுமென்ட் கொடுத்தவுடன் ஏதேனும் தவறு இருந்தால் இருபது வினாடிகளில் சொல்லி விடுவார். அதுவும் இந்த இடத்தில தவறு என்று சொல்ல மாட்டார். எங்கே கண்டு பிடி பார்க்கலாம் என்று நம்மிடம் சவால் விடுவார். அப்போது கவனிக்கும் போது தான் ஏதாவது ஒரு இடத்தில் கை எழுத்து வாங்காதது ஞாபகம் வரும். சாரி சார் இதோ வந்துடுறேன் என்று திரும்பவும் அந்தக் கை எழுத்தை சரி செய்து கொண்டு வந்து கொடுத்தால் ‘இப்போ சரியாய் இருக்கு என்று சொல்லி’ கை எழுத்தைப் போடுவார்.

சார், நீங்க ஜீனியஸ் சார். அப்படி பாத்தவுடனே நொடியில கண்டு பிடிச்சுடுறீங்க என்று சொல்வேன். சும்மாவாப்பா.. முப்பது வருசமா இங்க தான குப்ப கொட்டுறேன் என்று சொல்வார். மிகச் சில நேரங்களில் மட்டுமே எல்லாம் சரியாக இருந்திருக்கிறது. ஒரு முறை ‘நீ கண்டு பிடி’ ஒரு தப்பு இருக்கு என்று டாகுமெண்டை திரும்பக் கொடுத்தார். அரை மணி நேரமாக நானும் பார்க்கின்றேன், எதுவும் புடிபடவில்லை. சாரி சார், நீங்களே சொல்லுங்க சார் எங்க தப்புன்னு, என்னால கண்டு பிடிக்கவே முடியல, அரை மணி நேரமா போராடுறேன் என்று கேட்டேன்.

தம்பி இப்ப நான் சொல்லிடுவேன். ஆனா அடுத்த தடவ இதே தப்ப பண்ணிட்டு வந்து நிப்ப. ஆனா நீயே கண்டுபிடிச்சன்ணா அடுத்த தடவ ஒனக்கு ஞாபகம் இருக்கும். அப்படியும் முடியலன்னா வேற ஏஜென்ட் யாரவது பக்கத்துல இருந்தா கேட்டுக்கோ எனக்கு வேற வேலை இருக்கு என்று சொல்லி விட்டார். அப்புறம் ஒரு வழியாக கண்டு பிடித்து சரி செய்து கொண்டேன்.

இரண்டு மாதத்தில் அவரை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி விட்டார்கள். அப்போது ஒரு இம்போர்ட் கிளியரன்ஸ் வந்தது. கவுண்டரில் வேறு ஒரு வயதானவர் இருந்தார். அப்பா.. தப்பிச்சோம், இவர பார்த்தா அப்படி ஒன்னும் செக் பண்றவரா தெரியல, நம்ம வேலை ஈசியா முடிஞ்சுடும் என்று மனதிற்குள் நினைத்தேன்.

டாகுமெண்ட் செக் பண்ணியவுடன் இவரும் சொன்னார். தம்பி.. ஒரு தப்பு இருக்கு பாருங்க, சரி பண்ணிக் கொடுங்க என்று. என்னால் ஆச்சரியத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதெப்படி சார், எல்லாருமே ஜீனியஸா இருக்கீங்க, இதுக்கு முன்னாடி இருந்த சுப்பையா சாராவது ஒரு இருபது விநாடி செக் பண்ணிட்டு தான் ஏதாவது தப்பு இருந்தா சொல்லுவார், ஆனா நீங்க அஞ்சு செகன்ட் கூட ஆகல.. அதுக்குள்ள கண்டு பிடிச்சுட்டீங்க என்று கேட்டேன்.

அது ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் இல்ல தம்பி.. ஒரு டாகுமென்ட்ல இருபத்தி ஒன்னு கை எழுத்து இருக்கணும், அப்படி இல்லனா ஏதோ தப்பு இருக்குனு அர்த்தம். எங்களுக்கு கஸ்டம்ஸ் பார்மாலிடீஸ் எல்லாம் தெரியாது. இருபத்தொரு கை எழுத்துல ஒன்னு கொறஞ்சா ஒங்ககிட்ட திருப்பி கொடுத்துடுவோம்..

இதை எண்ரதுல சுப்பையா தான் லேட். அதனால அவன சுலோ சுப்பையான்னு சொல்லுவோம் என்றார்.

(போர்ட் டிரஸ்ட் கேங் எனப்படும் தொழிலாளர்கள் அடித்த கூத்து, இன்னமும் எஸ்.எஸ் & எஸ் .எம் என்று அழைக்கப்படும் அதிகாரிகள் எடுக்கும் அதிகாரப் பிச்சை என துறைமுகத்தின் மறுமுகம்  தொடரும் ....)

2 comments:

  1. wowwww.. interesting............. kalakkala iruku... plzz.. continue..

    keep rocking..

    ReplyDelete
  2. i think you missed to read 'kappu 2'

    ReplyDelete