December 24, 2017

பிக் பாஸ் 1980 - 90



அது தொன்னூறின் ஆரம்பம் அல்லது எண்பதின் இறுதியாக இருக்கலாம். ஊரில் பத்தாம் வகுப்பு முடித்தோ முடிக்காமலோ சுற்றிக் கொண்டிருந்தவர்களை ‘போங்கடா மெட்ராஸுக்கு’ என பத்தி அனுப்பிவிட்ட ஊர் பெருசுகள். நம்பி வந்த எல்லோர்க்கும் வாழ்வளிக்கும் இடமாக கார்கோ கம்பனிகள் இருந்தன. வேலை எங்கடா என்றால் ஏர்போர்ட்ல, கஸ்டம்ஸ்ல என பெருமையாக சொல்லித் திரிவார்கள்.  ஆனாலும் சம்பளம் என்பது வயிற்றுக்கும் வாய்க்கும் சரியாகவோ சில நேரங்களில் போதாததாகவோ இருந்த காலம்.

தனி வீட்டிற்கு வாடகை கொடுத்து கட்டுபடி ஆகாது என ஐந்து பேர் முதல் பத்து பேர் வரை சேர்ந்து ஒரே வீட்டில் வாழும் பிக்பாஸ் வீடுகள் பல்லாவரம் மற்றும் கிரோம்பேட்டை பகுதிகளில் இருந்தன. முன் கோபம் அதிகமாக உள்ளவர்கள் முதல் அயன் பாக்ஸில் முட்டை ஆம்லேட் போடும் வல்லுனர்கள் வரை சேர்ந்து வாழ்ந்து சந்தோசத்தையும் துக்கத்தையும் ஷேர் செய்து கொண்டனர். ஒரு கடையில் கணக்கு வைத்துக் கொண்டு மாதத்தின் மொத்த செலவை சமமாகப் பிரித்துக்கொண்டனர். பெரும்பாலும் வைப்பதற்கு சுலபமான ரசம், முட்டைக் கொழம்பு, துவையல் ஆகியவையே டெய்லி மெனுவாக இருந்தன . செலவில் சிக்கனம், உணவில் தன்னிறைவு என்பதே இக்கூட்டணியின் குறைந்த பட்சகொள்கை.. அதிக பட்ச ஆசை.

சம்பாதிக்கும் பையன் பணம் அனுப்புவான் என்ற பெற்றோரின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக வாங்கும் சம்பளத்தில் வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி ஊருக்கு அனுப்பிய அண்ணன்கள் சித்தப்பாக்கள் எல்லாம் வாழும் தெய்வங்கள். பெரும்பாலும் எவரும் மூன்று வேலை உணவு சாப்பிட்டு இருக்க மாட்டார்கள். வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்புவார்கள் எதையோ சாப்பிட்டு உறங்கி காலையில் சமைக்க நேரம் இல்லாமல் வேலைக்கு கிளம்பினர். எனவே காலை உணவு கட்டாயம் இல்லை. மதிய உணவு அன்றைய வேலையைப் பொருத்து மாலை உணவாக மாறக் கூடும். இரவு உணவு மட்டுமே நிச்சயம். அதனால் ஞாயிற்றுக் கிழமை அவர்களின் நாள். அவர்களுக்கேயான நாள். பெரும்பாலும் எல்லா வீடுகளும் எலிமிநேசன் இல்லாத பிக்பாஸ் வீட்டைப் போல ஜாலியாக இருக்கும். ஊரிலிருந்து யாரவது வந்து விட்டால் வறுமையிலும் ‘செம்மையாக’ விருந்து படைப்பார்கள். விடுமுறை நாட்களில் இந்த வீடுகளுக்கு விருந்தினராக சென்றது ‘உண்டு’. துணி துவைத்தல், சமைத்தல், வீடு சுத்தப் படுத்துதல் கணக்கு வழக்கு சரி பார்த்தல் என வேலைகள் ஒவ்வொரு மாதமும் பிரித்துக் கொடுக்கப்படும். இப்போது நடக்கும் ஷோ வுக்கு முன்னோடி இந்த கூடி வாழ்ந்த வாழ்க்கை முறையே ஆகும்.

இவர்களுக்குள்ளும் சண்டை சச்சரவுகள் வந்தாலும் ஒருவர் மீது ஒருவர்க்கு அக்கறை இருந்து கொண்டே இருந்தது. வாங்கும் சொற்ப சம்பளத்தில் சீட்டு போட்டு வீட்டுக்கு அனுப்பி தீபாவளி பொங்கலுக்கு துணிமணி அனுப்பி என எப்போதும் வீட்டையே சுமந்து வாழ்ந்த சுமைதாங்கிகளாய் ஒரு தலைமுறை வாழ்ந்தது என்பது இன்றைய இளைய தலைமுறை கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடம்.  

திருமணம் ஆகி இன்று வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் இந்த பிக் பாஸ் வீடுகளில் வாழ்ந்தவர்களுக்கெல்லாம் ..ச்சே எப்படி ஜாலியா இருந்தோம்ல என எப்போதாவது நினைக்க வைக்கும்படியான ரசனையான நினைவுகள் ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரம் இருக்கும்.
இப்போதும் இதே மாதிரி அறையை பகிர்ந்துகொள்ளும் நண்பர்களிடம் விசாரிக்கின்றேன். சமைக்க நேரமில்ல சார் ஹோட்டல் சாப்பாடு தான் எல்லோர்க்கும் என்கின்றார்கள். அறையை பகிர்ந்து கொள்கிறார்களே தவிர மனசை அல்ல. ஒரே அறையில் வசிக்கின்றார்களே தவிர யாரும் வாழ்வதில்லை.           

No comments:

Post a Comment