December 25, 2017

மருத்துவம் மறு





மீண்டும் ஒரு ஹாஸ்பிடல் வாசம்.. அதே விஜயா ஹாஸ்பிடல் வடபழனி. அதே வயசான நர்ஸ்கள். நல்லா இருக்கீங்களா சார் னு ரவுண்ட்ஸ் வரும் சிறு வயது பெண் டாக்டர்கள் ( இதே தாத்தாவாக இருந்திருந்தால் நல்லா இருந்தா நா ஏன்மா இங்க இருக்கேன்.. இந்த நேரம் பிரியாணி சாப்பிட்டுட்டு இருப்பேன் என்று சொல்லியிருப்பார் ) ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம் என நொந்து கொண்டே வேலை செய்யும் லிப்ட் ஆபரேட்டர்கள் என இருபது வருடங்களாக எதுவுமே மாறவில்லை.

இந்திரா பார்த்தசாரதி ஒரு கதையில் எழுதி இருப்பார்.. பிணியிலிருந்து விடுபட வேண்டும் என்ற சித்தார்த்தனின் கனவு தான் எவ்வளவு உயர்ந்த கட்டடங்களாக வளர்ந்து இருக்கின்றன என்று. ஆனால் விஜயா ஹாஸ்பிடல் மட்டும் உயரமாக வளராமல் அகலமாக விரிந்து பரந்திருக்கின்றது. உள்ளே செல்லும் வழி ஒன்று தான். அனால் அந்த வார்டு நம்பர் காட்டும் அம்புக் குறி செல்லும் வழி தினத் தந்தியின் சிந்துபாத் கதை போல நீண்டு கொண்டே செல்லும். உள்ளே சென்ற நீங்கள் எப்போதும் எக்சிட் என்ற அறிவிப்பு பலகை காட்டும் வழியிலே தான் வர முடியுமே தவிர தானா கண்டு பிடிச்சு வெளியே போயிட முடியாத ஒரு அமைப்பைக் கொண்டது இந்த மருத்துவமனை. ரெட்டி இதனை என்னவாக கட்டி இருப்பார் மருத்துவமனையாக மாற்றுவதற்கு முன் என யோசித்து பார்த்திருக்கிறேன். இது வரை தெரியவில்லை 

பில் செட்டில் பண்ணாம யாரும் வெளிய போகக் கூடாதுனு ரெட்டிகாரு போட்ட பிளான் போல. யாரிடமாவது விசாரித்தே வெளியே செல்ல முடியும்.

மருத்துவமனையில் இரவில் உடன் தங்குதல் எப்போதும் ஒரு பயத்தை வர வைப்பது. தூக்கம் தொலைய வைக்கவும் தூங்க கூடாத நேரத்தில் தூக்கம் வருவதாகவும் சரி தூங்குவோம் என படுத்தால் அது வர மறுப்பதாகவும் என விசித்திர இரவாக அது இருக்கும்.

மருந்து அதன் கடமையை செய்து நோய் போக்குவதை விட உடன் இருந்து பார்த்துக் கொள்பவர்களின் அன்பும் அக்கறையுமே நோய் தீர்க்கும் அருமருந்தாக இருக்கக் கூடும். இதனால் தானோ என்னவோ உடல் நிலை சரி இல்லாதவரை சென்று பார்ப்பது ஒரு கலாச்சாரமாக பின்பற்றப் படுகின்றது. எவ்வளவு பணம் இருந்தும் கவனிக்க ஆளில்லாமல் இருப்பதெல்லாம் வாழ்வின் சாபம். இறப்பு எப்படி நேர்ந்தது என தெரியாமல் கூட போகலாம்.அனால் என்றைக்கு இறந்தார் என்றே தெரியாமல் போவதும் அதற்கு விசாரணை கமிசன் வைத்து தெரிந்து கொள்ள வேண்டியதும் அவர்  வாழ்ந்த காலத்தில் செய்த பாவங்கள்.

தாத்தா பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டபோது கூட இருந்து கவனித்துக் கொண்டதும் அதில் இருந்து கற்றுக் கொண்டதும் எனக்கான வாழ்க்கை  பாடம். எவ்வளவு சிடு சிடு என்று பேசினாலும் சிரித்துத்கொண்டே பதில் சொன்ன அந்த மலையாள நர்ஸ்கள். அத்தையிடம் நீ வர வேணாம்.. சரவணன வர சொல்லு ..அவன்தான் முதுகுல கை வைச்சு அழகா தூக்கி வலிக்காம உக்கார வச்சான் என தாத்தா சொன்னது இன்னமும் காதில் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.

உடல் நலமில்லாத சமயத்தில் எல்லோரும் மென்மையான இதயம் கொண்டவர்களாக மாறி விடுவது இயல்பு. வாழ்வின் நிலையாமை மீதான எண்ணம் வந்து  சக உயிர்களின் மீதான அன்பை அதிகப் படுத்தும் தருணங்கள் அவை. அப்போது அவர்கள் பகிர்ந்து கொள்ளும் கதைகள் யாவும் மனதின் நெகிழ்ச்சியை அதிகப்படுத்துவதாக அமையும்.

சில மருத்துவமனை நேரங்கள் நெஞ்சை விட்டு நீங்காத வாழ்நாள் அதிர்ச்சியை அளிக்கவல்லவை. ஜெயா அத்தை, மணி மாமா, சாரதி சித்தப்பா இவர்களின் தற்கொலைகள் இயந்திர மனிதர்களின் மனங்களை காட்டும் அரசு மருத்துவமனைகளின் மற்றொரு முகம்.

முதன் முறையாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் சிறப்பு பிரிவு அவ்வளவு ஒரு மகிழ்ச்சியை அளித்தது. அந்த ஹால் எங்கும் பிள்ளை செல்வங்கள். சில பேருக்கு கட்டில்களும் நிறைய பேர்கள் தரையிலுமாக பிறந்த சிசுக்களுடனும் வாய் நிறைய சிரிப்போடும் என மகிழ்வான நிறைவான உணர்வை அளித்தது.

காட்ல இருந்து வந்தார்ங்க.. சுடு தண்ணி கொஞ்சம் வச்சு குடும்மா நெஞ்ச கரிக்கிர மாதிரி இருக்குன்னார்..எடுத்துட்டு வரதுக்குள்ள கழுத்து ஒரு பக்கமா சாஞ்சிருச்சு என்பதாகவே பெரும்பாலும் மரணங்கள் இருக்கும் நமது சொந்த ஊரில். இப்போது எதற்கெடுத்தாலும் மருத்துவமனை சென்று டெஸ்ட் எடுத்து தெரிந்து கொள்ளும் வசதி வந்தாலும் இவை எதுவும் இல்லா அந்த நாட்களில் வாழ்ந்தது வரமாகவே படுகின்றது.

எப்போதும் தண்ணீ தம் என வாழ்ந்த மாதவன் சித்தப்பாவை அவ்வளவு செலவு செய்து கிட்னி பிரச்சினையை சரி ஆக்கி டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த நேரம் அது. ஒரு நாளில் மனது உடைந்த நிலையில் சொன்னார். எதுக்குடா சரவணா இப்படி எல்லாத்துக்கும் கஷ்டத்த குடுத்துகிட்டு.என்னால ஒரு பிரயோசனம் இல்ல இந்த வீட்ல. இந்த சின்ன பசங்க சம்பாதிக்கிறத எனக்கு செலவு பண்ணிட்டு இருக்கானுக.. என்னைய அப்படியே ஊர்லயே விட்ருந்தா என்னோட இஷ்டத்துக்கு வாழ்ந்துட்டு செத்து போயிருப்பேன்ல என்று சொன்னவரை கண்ணீரோடு கட்டி அனைத்துக் கொள்ளத்தான் முடிந்தது.

உடம்பு சரி இல்லாதவரை காப்பாற்றுகிறோம் என்று சொல்லி அவருக்கு விருப்பமே இல்லாத ஒரு வாழ்வியல் முறையைத் தருவது உண்மையில் சரியா.. வாழ்வென்பது அவரவர் விருப்பம் தானே..

சித்தப்பா சொன்னது இது தான். ஒரு டீ குடிக்க முடில.. தம் அடிக்க முடியல..அப்புறம் என்ன இந்த வாழ்க்கை பு** வேண்டியிருக்கு என்றார்.          
    
       
    

No comments:

Post a Comment