December 5, 2017

ஆளில்லா வீடு








முன்னொரு காலத்தில் இங்கொரு வீடொன்று இருந்தது. அன்பினால் கட்டப்பட்ட அழகு வீட்டின் பெருமை அரசு இயந்திரத்தின் இரும்பு கைகள் அறியாதவை.
வீடென்று எதனை சொல்வீர்.. அப்பா வெற்று மார்பு சுவரில் பட சாய்ந்திருக்க அவர் மடியில் தலை சாய்த்து படுத்த நினைவுகள் இருந்தால் உங்களுக்கும் வீடு பேறு வாய்க்கப் பட்டிருக்கும் எனப் பொருள். இதை எல்லாம் சினிமாவில் பார்த்து மட்டுமே வாழ வாய்ப்பு கிடைத்து வாழ்ந்தவனுக்கு எதெல்லாம் வீடென தெரிந்தால் வியப்படைவீர்கள். ரேஷன் கடை மொட்டை மாடி, அய்யனார் கோவில் மணற்குவியல், கல்லு வீட்டு திண்ணை, கடக் கம்பு காடு இவையெல்லாம் எனக்கு வீடு. இரவு எங்கு முடிகின்றதோ அதனை வீடு எனச் சொல்லலாமெனில் எனக்கு அன்று எங்கு முடிகிறதன்றே தெரியாத ஒரு இனிமையான சவாலான வாழ்க்கை எனச் சொல்வது ஆப்டிமிசம். அதனை இல்லாதவனின் வாழ்க்கை என சொன்னால் அது பெசிமிசம்.

அம்மாவின் பேய் பயத்திற்கு கதவு சன்னல்கள் இறுக சாத்தி வைக்கப் பட புழுக்கத்துடன் தூங்கியது எனது பால்யம். இது என் இடமல்ல என்று வீட்டை விட்டு துறவறம் பூண்டு திருவண்ணாமலை  கிளம்பிய ரமணரைப் போல தூங்குவதற்கு இடம் தேடி கிளம்பிய போது வயது பத்து.
அழகிய நினைவுகளைக் கொண்டது வீடெனில் அதுவும் சாத்தியமில்லா வறுமை கோட்டு வாழ்க்கை. நேராக இருந்தால் தானே அது கோடு. இது அப்படியும் இல்லை. ஒரு நாள் நல்ல சாப்பாடு மறு நாள் கூழ் கூட இல்லாத நிலை என இருந்த ஒன்றை வறுமை கிறுக்கல் என்று தான் சொல்ல வேண்டும்.

இருக்க இடமில்லாத வீட்டில் கழிந்தது எனது மாணவப் பருவம். புத்தகத்தின் வாசனை யாரையும் மயக்கும். அனால் எனது புத்தகங்களின் வாசனை மண் எண்ணெய் நாற்றம் கொண்டதாகவே இருக்கும். மின் விளக்கு எரியாத வீட்டில் இப்போதும் எவ்வளவோ முயன்றும் அங்கே எரிய வைக்க முடியவில்லை என்பது அழகில்லா முரண்.

ஒவ்வொரு வீடும் தனக்கே உரித்தான ஒரு வாசனையை உடையது. வீட்டிற்கும் கண்கள் உண்டு. நீங்கள் வீட்டை பார்ப்பது போல வீடும் உங்களைப் பார்த்துக் கொண்டே இருந்கின்றது.    

வீட்டில் இடமில்லாமல் வெளியே தூங்கிய வீடு சில வருடங்களில்  வீட்டில் தூங்குவதற்கு ஆளில்லாமல் வவ்வால் அடையும் வீடாக மாறியதை சம காலத்திலேயே பார்க்க நேரிட்ட கொடுமை உணர்த்துகிறது இங்கே நிலையாமையை என்னும் தத்துவத்தை.
   
வீடென்பது செங்கல், சிமென்ட் கொண்டு, வெளித் தோற்றம் நன்கு ஆடம்பரம் வெளித் தெரியுமாறு கட்டப் படுவதல்ல. அது கட்டடம்
ஒரு கட்டடம் வீடாவதும் கோயிலாவதும் வெறுமனே கட்டடமாகவே இருப்பதும் அந்த வீட்டின் பெண்கள் கைகளில் தான் இருக்கின்றது. அப்படி ஒரு வீடு உருவாகி இருக்கும் வாய்ப்பை இழந்து விட்டேனோ இல்லை இன்னமும் அதற்கான வாய்ப்பு இருக்கின்றதோ என்றொரு குழப்பமான நிலையில் வாழ்கிறேன்.

எல்லோரும் ஒரு நாள் காலி செய்ய நேரிடும் இந்த உலகமெனும் வாடகை வீட்டில் உன் வீடு என் வீடு என பெயரிட்டுக் கொள்வதை பெரும் அபத்தமாக பார்க்கும் ஒருவனுக்கு வீடு என்பது ஒன்றுமில்லை.
                         

No comments:

Post a Comment