August 9, 2012

(கி)ராமராஜன் என்றொரு நடிகர்




இன்று ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தை திரும்பவும் முழுவதுமாகப் பார்க்க முடிந்தது. உபயம் ராஜ் டிஜிட்டல் பிளஸ். என்பதுகளில் வந்த படங்களின் தெளிவான பிரிண்ட் ராஜ் வீடியோ விஷனில் கிடைக்கும். ராஜ் டிஜிட்டல் பிளஸ் அவர்களின் சேனல் என்பதால் அதே தெளிவுடன் பழைய படங்களைப் பார்க்க முடிகின்றது. நீங்களும் கவனித்துப் பாருங்கள். இதில் இரவு பத்து மணிக்கு மேல் எம்பதுகளின் ‘மெலடி சாங்ஸ்’ கேட்பது ராஜ சுகம்.

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் டைட்டில் சாங்கிலிருந்து ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்ளும். ‘எங்க ஊரு பாட்டுக்காரன்...’ அய்யா எல்லாத்துலயும் கெட்டிக்காரன்’  என்று எங்கள் ஊரின் மேள தாளத்துடன் ஆரம்பிக்கும் பாடலில் ஹீரோவின் கேரக்டர் எப்படியானது என்று ஒரு முன்னுரையோடு கதை ஆரம்பிப்பது, படம் பார்க்கும் ரசிகனை ஓரு தயார் நிலைக்குக் கொண்டு செல்லும். இதே போல மலையூர் மம்பட்டியான் படத்தில் வரும், ‘

காட்டு வழி போற... பொண்ணே, கவலப்படாத,...

காட்டுப் புலி வழி மறைக்கும்

கலங்கி நிக்காத,

மம்பட்டியான் பேரு.. சொல்லு

புலி ஒதுங்கும் பாரு’..

என்ற டைட்டில் பாடலை இன்று கேட்கும் போதும் அந்தப் படம் முழுவதும் மனத்தில் ஓடும்.

அப்போது வெளி வந்த ராமராஜன் படங்கள் பெரும்பாலும் டைட்டில் சாங்குடன் தான் வெளி வந்தன. எங்க ஊரு பாட்டுக்காரனின் கமர்சியல் வெற்றி, எங்க ஊரு...... என்று ஆரம்பிக்கும் பல படங்களை வெளிக் கொண்டு வந்தது. கிராமராஜன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட ராமராஜனுக்கு ‘சி’ சென்டர் ரசிகர்கள் கோவில் கட்டாத குறை தான். இதில் சூப்பர் டூப்பர் ஹிட் கரகாட்டக்காரன். அதற்கு முன் வந்த தங்கமான ராசா வின் ஸ்க்ரீன் ப்ளே படு சூப்பர் ஆக இருக்கும்.


பெரும்பான்மையான படங்களுக்கு இளையராஜா தான் இசை அமைத்துள்ளார். பெரும்பான்மையான படங்களின் ஹீரோயின் கவுதமி. அம்மா, தங்கை செண்டிமெண்ட், தாய் மாமன் உறவு, பங்காளி சண்டை, அக்கா மகளோ அல்லது அத்தை மகளோ சுற்றி சுற்றி வருவது  என பெரும்பாலான படங்களின் கதைக்களம் ஒரே வட்டத்தை சுற்றி சுற்றி வந்ததாலும், அத்தனை படங்களிலும் ஒரே மாதிரியான உடல் மொழியுடன் நடித்தாலும் ரசிகர்கள் ராமராஜனை அவ்வளவு நாள் கொண்டாடியது மிக ஆச்சர்யம் தான்.

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் நடித்த, நிசாந்தி அந்தப் படத்தில் தற்கொலை செய்து கொண்டது போல உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இப் படத்தில் அவர் வெளிப் படுத்தியிருக்கும் நடிப்பு ஒரு சிறந்த நடிகையை திரை உலகம் இழந்து விட்டது எனத் தோண வைக்கின்றது. கிராமத்தில் தாவணி அணியும் பெண் கேரக்டருக்கு அவர் அப்படியே பொருந்துகிறார். (கிராமத்தான்கிறத இங்க காட்டிட்டேயே சரவணா!!!) அவரின் அப்பாவாக வரும் செந்தாமரை, சொல்லவே தேவை இல்லை. அவரெல்லாம் நாடகத்தில் நடித்து சினிமாவுக்கு வந்தவர். சும்மா அசால்டா நடிச்சுட்டுப் போயிட்டே இருப்பார்.

‘எனக்கு பாட்டுக்காரனத்தான்பா புடிச்சிருக்கு.... அவன் பாட்டுன்னா எனக்கு உயிர்..., என்று சொல்லும் மகளின் மனசைப் புரிந்து கொள்ளாமல்.  ‘அதுக்கு என்னம்மா, கல்யாணத்துக்கு பின்னாலயும் ஒவ் வீட்டுக்கு அனுப்பி பாடச் சொல்றேன்’ என்ற செந்தாமரையின் வசனம் ஒரு தகப்பனுக்கு மகள் எப்போதும் குழந்தை மாதிரி தான் என்று சொல்லாமல் சொல்லும்.

செத்துப் போன செண்பகத்தின் ஞாபகத்திலேயே வாழும் பாட்டுகாரனுக்கு ரேகாவை திருமணம் செய்து வைக்கின்றார்கள். இந்தப் படத்தில் ரேகா போட்டிருக்கும் கொண்டை எங்க அப்பத்தா போடும் கோடாலிக் கொண்டை.  ரேகாவின் கண்கள் இந்தப் படத்தில் இளம் மனைவியின் ஏக்கத்தை அப்படியே பிரதிபலிக்கிறது. இப்போதைய மொழி நடையில் சொல்ல வேண்டுமானால் இரண்டு பேருக்குமிடையே நல்ல கெமிஸ்ட்ரி.

அதுவும் தனது அப்பா தனது வீட்டிற்கு வந்திருக்கும் போது, மூவருக்கும் சாப்பாடு போடும் போது, கணவனை பார்க்கும் ஒரு பார்வை..... இத எப்படித் தான் டைரக்டர் சொல்லிக் கொடுத்திருப்பாரோ? என்று யோசிக்க வைக்கிறது.

‘ஜிஞ்சனக்கு ஜனக்கு, நா சொல்லித் தரேன் கணக்கு’ என்ற பாடல் எடுக்கப் பட்டிருக்கும் விதம் இப்போது ரீமிக்ஸ் போடலாம்.

மதுரா மரிக்கொழுந்து வாசம்

ஏ(ன்) ராசாத்தி உன்னுடைய நேசம் .....

என்ற பாடல் எங்கே கேட்டாலும் அங்கேயே நின்று இன்னமும் முழுப் பாடலையும் கேட்டு வந்திருக்கிறேன். இதே மாதிரி தான் வெட்டி வேரு வாசம், விடலப் புள்ள நேசம்... என்ற முதல் மரியாதை படத்தில் வரும் பாடலும்.

நேசத்திற்கும், வாசத்திற்கும் என்ன சம்பந்தம். வெறும் எதுகை மோனைக்காக எழுதப்பட்டதா? இல்லை. மரிக் கொழுந்து வாசம் முகத்துக்கு அருகே காட்டினால் மட்டும் வாசம் தரும் மற்ற பூக்கள் போல அல்ல.

வெட்டி வேரும், மரிக் கொழுந்தும் காய்ந்து போனாலும் வாசம் போகாதது. அருகே இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் சுகமான வாசம் பரப்புவவை.

காதலும் அப்படித்தானே? என்பதுகளின் பாடல்கள் போல என்றுமே அலுக்காதவை.



மரிக்கொழுந்து வாசமாய் ஒரு காலத்தில் ஓகோ வென்று கிராமத்தின் பட்டி தொட்டிகளில் வாழ்ந்த கலைஞன் இன்று அடையாளம் இல்லாமல் எங்கோ ஒரு மூலையில் வாழ்வது காலம் ஆடிய கண்ணா மூச்சி ஆட்டம்.

1 comment:

  1. woww.. gramarajan i r rasichi solirukinga... enakum avana pidikum.. neraiya yosika tension agama avan padatha pakkalam... karakatta karan padathukku pakkathu veetu akka oda school cut adichitu Indira theatre la pathadu innum gnabagamirukku... ore expression dhanalum.. something is there in him... or the music grabs towards the film.... yahh.. i too agree with you Rekha kannula nejammave sema look irukum...


    think Nishanthi north indian i marriage panikitu settle ayita nu... ava suicide panna mari therila.. may be i am wrong...

    keep going saravanan!!!

    ReplyDelete