July 27, 2012

முனி பார்ட் - 3



எங்கள் பள்ளி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் முக்குளம் என்ற ஊரில் இருந்தது. ஸ்கூல் பஸ் வசதி எல்லாம் கிடையாது. எங்கள் ஊர் பஸ்களை அது வரும் நேரம் சொல்லி அழைக்கும் அளவுக்கு, ஒரு மணிக்கு அல்லது இரண்டு மணிக்கு ஒரு தடவை தான் வரும். பத்தரை போயிடுச்சா, ரெண்டு மணி பஸ் வந்துடுச்சு, இன்னும் இந்த ஆளக் காணோம்’ என்பது எங்கள் ஊரின் பேச்சு வழக்கு.

உழவு நேரம் முடிவுக்கு வருவதும், களை எடுக்கும் ஆட்கள் கஞ்சி குடிப்பதும் பஸ் வரும் நேரக் கணக்கை வைத்தே. எங்கள் ஊர் பஸ்கள் பயணிக்கப் பயன்பட்டதை விட நேரம் அறிந்து கொள்ள பயன் பட்டதே அதிகம்

இந்த ஐந்து கிலோ மீட்டர் சாலை, கொஞ்சம் தெய்வங்களையும் , கொஞ்சம் பேய்களையும் கொண்ட ஒரு முரணான சாலை. வீட்டில் இருந்து நாங்கள் தனித் தனியாக கிளம்பினாலும், ஒத்த வீடு வரும் போது யாருடனாவது சேர்ந்து தான் நடப்போம். ஏனெனில் ‘முத்தம்மா செத்த இடம்’ அங்கிருந்து அரைக் கிலோ மீட்டர் தொலைவில் வருகின்றது. பகலிலியே அதைத் தனியாக கடக்கும் தைரியம் யாருக்கும் கிடையாது. எங்கள் ஊர் அப்போது நிறைய பேய்க்கதைகளால் சூழப்பட்டிருந்தது. வயதுக்கு வந்த பெண்களில் யாராவது ஒருவருக்கு, ஏதாவது ஒரு நாளில் பேய் பிடித்து ஆ(ட்)டும்.

அந்த நேரத்தில், எப்போதும் அதிர்ந்து பேசாத, சொல்லப் போனால், யார் கண்ணிலும் படாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்க்கப்படும் அந்தப் பெண் ‘டேய், எனக்கு பீடிக் கட்டு வாங்கிட்டு வாடா’, என்றும், ஒரு சில நேரம் சாராயம் வாங்கி வாடா, (குடிகாரப் பேய்??) என்றும் சொல்லி அதிர வைத்து, பீடியும் குடிக்கும்.

டேய், பேய் இருக்கிறது உண்ம தாண்டா? இல்லன்னா இந்த அக்கா பீடி எல்லாம் குடிப்பாங்களா’ என்று கணேஷ் வேறு பீதியைக் கிளப்புவான். பேய் ஓட்டும் ‘ரங்கத்தார்’ என்ற தாத்தா ‘ நீ யாரு? எப்பிடி நீ வந்த? என்று கேட்டால், ஒ.. என்று அழுகும் பேய், ‘இவ தண்ணி எடுக்க ரெண்டு மணிக்கு வந்தாடா, அவ கூட வந்தேன்’ என்று சொல்லி’ ஆடும் போது, திருநீறை எடுத்து, மண்டையில் ஒரு அடியுடன் பூச, பேயானது, ஓடி விடும். அந்த நேரத்தில் யாரும் எதிர்க்க இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவர்களைப் பிடித்துக் கொள்ளும் என்று தீர்க்கமாக நம்பினார்கள்.

இவை எல்லாம் ‘முத்தம்மா செத்த இடம்’ தாண்டும் போது ஞாபகம் வரும். எனவே நாங்கள் துணைக்கு யாராவது வரும் வரை ஒத்த வீடு ஸ்டாப்பில்  காத்திருப்போம்.

எங்களுக்கு முத்தம்மா கதை இப்படியாகத் தான் சொல்லப்பட்டது. முத்தம்மாள் எங்கள் வூருக்குப் பக்கத்துக்கு ஊரான சொக்கனேந்தல். விறகு வெட்ட அவளும், அவள் வீட்டுக்காரன் முருகனும் வரும் போது வர்ற வழியில் சண்டை வர, அவன் கையில் இருந்த அரிவாளால், முத்தம்மாவின் தலையை தனியாக வெட்டி, போலீஸ் ஸ்டேஷனில் சரண்டர் ஆகி விட்டான் எனவும் அந்த முத்தம்மா இப்போது ஆவியாக அலைந்து அந்தப் பக்கம் வருகின்றவர்களிடம் தண்ணி கேட்கிறாள்’ எனபதும் கதை.

அந்த இடத்தைத் தாண்டி வந்தால் முதலில் வரும் சாமி ‘முனியாண்டி சாமி’. ‘முனியான்டி' கொஞ்சம் தள்ளி கருவேலக் காட்டுக்குள் இருந்தாலும், ஏதாவது வேலையாகச் செல்பவர்கள், ரோட்டிலேயே தேங்காய் உடைப்பதும், சூடம் காமிப்பதும் வழக்கம்.

நாங்கள் ஏதாவது பேசிக் கொண்டே அந்த இடத்தைக் கடந்தாலும், வலது கை அனிச்சைச் செயலாக, ஸ்கூல் பையை தாங்கிவரும் இடக்கையோடு சேர்ந்து ஒரு அவசரக் கும்பிடு போடும்.

இதற்கு அடுத்து வருவது யானை செத்த இடம். ஒரு வயதான யானையை அதன் பாகன் அழைத்து வரும் போது, அந்த இடத்தில் இறந்து விட்டது. புதைத்த இடத்தில் ஒரு சின்ன பிள்ளையார் கோவிலைக் கட்டி விட்டார்கள். அந்த இடத்திலும் போடுவோம் ஒரு அவசரக் கும்பிடு.

கடைசியாக பள்ளி நெருங்கும் போது ஒரு அம்மன் கோவில். அப்புறம் பள்ளியில் உள்ள ஒரு பிள்ளையார் கோவில்.

இந்த சாமிகளில் ஏதாவது ஒரு சாமியை கும்பிட மறந்து விட்டால், அதுவும் அன்றைய நாளில் ஏதாவது ஒரு ஆசிரியரிடம் அடி வாங்கி விட்டால், அதற்கு கும்பிட மறந்த சாமி தான் காரணம் என்று நினைப்போம்.

தினமும் சாதாரணக் கும்பிடு போடும் நாங்கள், தேர்வு நடக்கும் முதல் நாளில் பத்தி, சூடம் என பட்டையைக் கிளப்புவோம். அன்று முனியாண்டி சாமியை, ரோட்டோரம் கும்பிட மாட்டோம். கருவேலக் காட்டுக்குள் சென்று மணி அடித்து, கீழே விழுந்து கும்பிடுவோம். திருநீறு பூசி மிகப் பக்தி மயமாகக் காட்சி அளிப்போம். இதே ஆடம்பரத்தை ரிசல்ட் வரும் நாளிலும் சாமிக்கு அளிப்போம்.

ஏதாவது ஒரு நாளில் காய்ச்சல் என்று படுத்தால் அப்பத்தா சாமி ஆட ஆரம்பிச்சுடும். ஏன்டா அந்த இடத்துல கால் இடருச்சே, கவனிக்கலையா என்றும், எங்க வந்த? நான் யாருன்னு நினச்ச என்று நாக்கைத் துருத்தி முத்தம்மாவுக்கு ஏத்த முனியம்மாவாகக் காட்சி தரும். நாம் எதிர்பாரத ஒரு தருணத்தில் தலையில் விழும் ஓர் அடியில் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு சிலிர்ப்பு வந்து வேர்த்து ஊத்தும். உண்மையிலேயே முத்தம்மா போய் விட்டிருக்குமா அல்லது காய்ச்சலுக்கே எங்க அப்பத்தாவப் பாத்து பயம் வந்திருக்குமா தெரியாது. ஆனால் காய்ச்சல் விட்டிருக்கும்.

வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் எங்கள் சாமி வீடு, தாவணிப் பெண்களால் நிரம்பி இருக்கும். அப்பத்தாவிடம் திருநீறு வாங்க! ( வரும் முன் காக்கும் திட்டம்???)

அதில் ஏதாவது ஒரு பெண் அப்பத்தாவைப் பார்த்து சிரித்தால், அன்றைய ஆட்டம் ஆரம்பம்.

வழக்கம் போல எங்க வந்த? எதுக்கு இந்தக் குதிரைய புடிச்சிருக்க? எப்ப போவ? என்று பேயுடன் பேச ஆரம்பித்தால், எங்களுக்கான ‘காஞ்சனா’ படம் ரெடி.

இந்தப் பாதையில் வரும் போது தான் சிறுவநூர் சாராய வியாபாரி ஆறுமுகம் ‘முனி அடித்துச் செத்துப் போனார். முனிக்குச் சாராயம் ரொம்பப் பிடிக்கும். அவர் சாராயம் எடுத்து வரும் போது, நில்ரா, எனக்குக் குடுத்துட்டுப் போடா’ என்று ஒரு குரல் கேட்டதாக வீட்டிற்கு வந்தவுடன் சொல்லி இருக்கிறார். கொஞ்ச நேரத்தில் செத்துப் போனார்.

இவை மட்டுமில்லாமல், இடி விழுந்து செத்துப் போன போஸ் சித்தப்பா, கண்மாய்க்குள் மூச்சுத் திணறி இறந்து போன ராதிகா, தூக்குப் போட்டு செத்துப் போன செந்தி, மற்றும் பலரை ஆவியாக, இராத்திரி நேரத்தில் பார்த்ததாகச் சொல்லும் கதைகள், அந்த இடத்தை துணை இல்லாமல் கடக்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.

போன மாசம் ஊருக்குச் சென்றிருந்தேன். நேரமாகி விட்டதால் கடைசி பஸ் போய் விட்டிருந்தது. மதுரையில் இருக்கும் என் அண்ணனின் பைக்கில் போய் விட்டு காலையில் திரும்பி விடலாம்’ எனப் பிளான்.

பள்ளியில் படித்த நண்பனுடன் பேசி விட்டு கிளம்பும் போது மணி பதினொன்னு ஆகி விட்டது. நல்ல இருட்டு, வண்டியின் லைட்டை அணைத்தால் ஒன்றுமே தெரியவில்லை. அந்த அளவு இருட்டு. இவ்வளவு வயதாகியும் இன்னும் எனக்குப் பேய் பயம் போயிருக்கவில்லை என்பது அப்போது தான் தெரிந்தது.

லாரி அல்லது ஏதாவது வண்டி வந்தால் அவர்களோடு சேர்ந்து போகலாம் என வண்டியை ரெடியாக ஸ்டார்ட் செய்து வைத்திருந்தேன். நம்பிக்கை பொய்க்கவில்லை. ஒரு டூ வீலர் கொஞ்சம் ஸ்பீடாக வந்தது. சரி அவரோடு செல்லலாம் என பின் தொடர்ந்தால், அந்த வண்டி வேகம் எடுத்தது. நானும் ஸ்பீடை அதிகரிக்க அந்த வண்டியும் அதிகரித்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த டூ வீலர் காரன் அவன் வீடு போய் சேர்ந்தவுடன் இப்படிச் சொல்லியிருக்கக் கூடும். ‘ மாப்ள, ஒரு திருடன் முக்குளத்துல இருந்து பின்னாடியே வந்தாண்டா, நல்ல வேள, ஸ்பீடா வந்து தப்பிச்சுட்டேன். இனிமே ராத்திரியில் தனியாப் போகக் கூடாதுரா!!!!     

2 comments:

  1. woww.... Muni Part 3,4,5,6,7,8... nu neraiya matters irukum pola unga kita... r simple ana manushanga kooda irundhirukinga.. endha vidha veli poochumilladha.. quite interesting..

    may be andha two wheeler ungala Muniyan nu nenachirupano!.. modern muniyan in two wheeler.. next day avanukku fever vandhirukumo!!!!

    ReplyDelete
  2. may be andha two wheeler ungala Muniyan nu nenachirupano!.. modern muniyan in two wheeler.. next day avanukku fever vandhirukumo!!!!

    nice!!! vanthirukkalaam,

    ReplyDelete