July 4, 2012

வாடகை வீடு




என் சிறு வயது முதல் பெண்கள் சூழ் உலகிலேயே வளர்ந்தேன். மூன்றாம் வகுப்பில் படிக்கும் போது ‘தினமும் சீரகச் சம்பா அரிசி ஊற வைத்து எடுத்து வரும் செந்தாமரை’, நெல்லிக்காய் கடித்துத் தரும் சாரதா அக்கா, அவ்வப்போது காசு கொடுக்கும் ஹேமா, குழம்பு, காய், என ஏதாவது தந்து கொண்டே இருக்கும் ஜெயா அத்தை, விமலா அத்தை, எங்கள் வீட்டிற்கு தினமும் வரும் சத்தியா என எங்கள் வீடு பெண்கள் கூடும் இடமாக இருந்ததற்கு எங்கள் அப்பா எப்போதும் வீட்டில் இல்லாதது காரணமாக இருக்கலாம்.
அப்பா ஒரு காண்ட்ராக்டர். அ.தி.மு.க ஆட்சி என்றால் ரொம்பவும் பிஸியாக இருப்பார். காலையில் ஆறு மணிக்கு ‘நீராகாரம்’ குடித்து விட்டு கிளம்பினார் என்றால் இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குத் தான் வீடு திரும்புவார். வீட்டுக்குத் தேவையான பல சரக்கு வாங்கி வருகிறாரோ இல்லையோ, ‘பழ சரக்கு’ போடாமல் வீடு திரும்பியது இல்லை.
ஆனாலும் வாழ்க்கை கொண்டாட்டமாக இருந்தது. அதற்குக் காரணம் எங்கள் ஊர். எதிர்ப்படும் எல்லோரும் ஏதாவது ஒரு உறவு சொல்லி கூப்பிடுவார்கள்.
இப்பவும் ஊருக்குச் சென்றால் கண்ணில் படும் எல்லோரும் நலம் விசாரிப்பார்கள். யார் வீட்டிலும் சுதந்திரமாக நுழையவும், சாப்பிடவும், தூங்கவும் செய்திருக்கிறேன்.
குடிப்பது வேண்டுமானால் கொண்டாட்டமாக இருக்கலாம். ஆனால் குளிப்பதே கொண்டாட்டமாக இருக்க முடியுமா?  ஆனால் ஒரு காலத்தில் இருந்தது.
எங்கள் ஊரில் ‘குளிப்பதற்கான தகுதி உடைய’ கிணறுகள் நான்கு இருந்தன. ‘கோட்டையா வீட்டு கிணறு’ என்பது நல்ல ஆழமுடையது. பாசம் கொஞ்சம் வழுக்கும். அதிகமாக பெரியவர்கள் குளிக்கும் கிணறு. எனவே அதிக நேரம் கு(தி)ளித்து விளையாட முடியாது.
அவசரமாக எங்கேனும் போக வேண்டுமென்றால் நாங்கள் குளிப்பது இந்த கிணற்றில் தான்.
அதற்கு அடுத்ததாக ரேங்க் லிஸ்டில் இருப்பது ‘காவக்கார வீட்டு கிணறு’
இந்த கிணற்று நீர் எப்போதும் ‘ஜில்லென்று’ இருக்கும். காரணம் வெயில் கிணற்றுக்குள் விழாத வகையில் மரங்கள் வளர்ந்திருக்கும். மிக நீண்ட நேரம் குளிப்பதற்கு ஏற்ற கிணறு இது.
கொஞ்சம் தூரமாக, அதே சமயம் நல்ல குளிர்ந்த நீர் இருக்கும் கிணறு ‘பல்லங்கண்மாய்’ கிணறு. இது ஒரு மண் கிணறு. அதனால் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். காலையில் குளிக்கச் சென்றால், மதிய சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வருவோம்.
நான் குளியலறையில் குளித்ததே என் கல்லூரி விடுதியில் தான்.

எங்கள் ஊரில் இருந்தவரை நான் அவ்வளவாக கவலைப் பட்டதில்லை. ஏனென்றால் அங்கே தேவைகள் மிகவும் குறைவானவை. அறியாமையே வரம் என்று சொல்வார்களே! அது போல 'இல்லாமையே' வரமாக இருந்தது ஒரு காலம்.
சொந்த ஊரிலிருந்து புலம் பெயர்ந்த எனக்கு சென்னை வசிக்க இடமளித்தது. ஆனால் வாழ அல்ல.
வாடகை வீட்டில் வசிக்கலாம், ஆனால் வாழ முடியாது. சென்னை எனக்கு வாடகை வீடு.

3 comments:

  1. ei.. unga ezhuthula nalla munnetram.. flow semathiya iruku... indha line semathiya irundhadhu 'வீட்டுக்குத் தேவையான பல சரக்கு வாங்கி வருகிறாரோ இல்லையோ, ‘பழ சரக்கு’ போடாமல் வீடு திரும்பியது இல்லை.'..... um.. idhai padikum podhu oorunu onnu illama indha concrete kattukulaiye life i tholachitomo nu ekkama iruku....

    keep going...

    ReplyDelete
  2. 'concrete kattukulaiye' நல்ல சொல்லாடல். நீங்க ஏங்க திரும்பவும் எழுதக் கூடாது.

    உங்களுக்குள்ள ஒரு நல்ல எழுத்தாளன் 'போர்வைய' இழுத்து போர்த்திகிட்டு தூங்கிட்டு இருக்கான். ப்ளீஸ் அவன தட்டி எழுப்புங்களேன்

    ReplyDelete
    Replies
    1. ahhh.. avana thatti ezhupina.. sahithya academy ungaluku epdi kedaikkum.. adhan... sedation kuduthu thoonga vechiruken.. ahhhhh

      Delete