மறதி மனிதனுக்குக்
கடவுள் கொடுத்த வரம் என்றால் எனக்கு மட்டும் கடவுள் அதிகக் கருணை காட்டி விட்டார்.
மனுஷனுக்கு மறதி வரலாம்ங்க, தப்பு இல்ல, ஆனா மறதியே ஒரு மனுசனா இருந்தா அது நாந்தாங்க! சும்மா, ஒரு பெருமைக்காகச்
சொல்லவில்லை. இதைப் படித்து முடிக்கும் போது உங்களுக்கே தெரிந்திருக்கும்.
அப்போது நான் பிளஸ்
ஒன் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் வகுப்பின் ஏழாவது பீரியட் நடந்து
கொண்டிருந்தது. மொத்தம் எட்டு பீரியட்ஸ், காலை நான்கு, மதியத்திற்கு பிறகு நான்கு
வகுப்புகள். ஏழாவது பீரியட் முடிந்தவுடன் பையை எடுத்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு நடக்க
ஆரம்பித்தேன். அன்று மட்டும் ஏன் அப்படி ஏழாவது பீரியடை எட்டாவது பீரியட் என்று
நினைத்தேன், யார் மூளைக்குள் உட்கார்ந்து அப்படி நினைக்க வைத்து பிசிக்ஸ் வகுப்பு
வாத்தியார் எஸ்.எஸ் அவர்களிடம் அடி வாங்க வைத்தது என்று இன்று வரை யோசித்துப்
பார்க்கின்றேன், தெரியவில்லை. இத்தனைக்கும் என் எதிரில் தான் அவர் வகுப்புக்குள்
வருகின்றார், வேற எந்த மாணவர்களும் வகுப்பை விட்டு வெளியே வரவில்லையே!!, நாம் மட்டும் செல்கின்றோமே, என்று எந்த
எண்ணமும் வரவில்லை, பின்னாலேயே தொடர்ந்து வந்த தினகரன் என்னை ‘பிசிக்ஸ் வாத்தியார்
கூப்பிடுறார், வாடா’ என்று அழைக்கும் வரை.
எனக்கு அப்போது தான்
நான் செய்திருக்கின்ற தவறே ஞாபகம் வருகின்றது. பிசிக்ஸ் வாத்தியாருக்கும் எனக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம்.
நான் அவரிடம் டியூஷன் சேரவில்லை என்று அவருக்குக் கோபம். அவரிடம் எல்லா மாணவர்களும் டியூஷன் சேர
வேண்டும், அப்படி சேராத மாணவர்களை வேண்டும் என்றே கேள்வி கேட்டு அடிக்கும் பழக்கம்
இருந்தது. அது மட்டுமல்ல, டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு மந்த்லி டெஸ்டில்
கேட்கப்படும் கேள்விகளை தேர்வுக்கு முதல் நாள் சொல்லி விடுவார். எனது நண்பர்களின்
மூலம் எனக்கும் கிடைத்து விடும். எனவே டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக நானும் மதிப்பெண்கள் வாங்கி விடுவதால் என்னை அடிப்பதற்கு அது வரை அவருக்கு
வாய்ப்பு கிடைக்கவில்லை.
அன்று தான் நான்
மாட்டினேன். நான் சொன்ன காரணம் எனக்கே நம்புவதற்கு கஷ்டமாக இருந்த சூழ்நிலையில்
அவர் அவ்வளவு சுலபமாக நம்பி விடுவாரா என்ன?. 'என்னது, ஏழாவது பீரியட எட்டாவது பீரியட்னு
நினைச்சு வீட்டுக்குப் போனியா, ஏன் பைத்தியம் பிடுச்சுடுச்சா, யார் கிட்ட கதை விடுற'
என்று, சும்மா பின் பக்கம் வீங்கிப் போகிற அளவுக்கு நல்லாவே கொடுத்தார்.
ஆனால் படிப்பது
எல்லாம் ஞாபகம் இருக்கும். முதல் ரேங்க் இல்லாவிட்டாலும் முதல் மூன்று
ரேங்க்களுக்குள் வந்து விடுவேன். ஆனாலும் இந்த மறதி எனபது, இரண்டு கைகளிலும் ஏதாவது ஒரு பொருளை வைத்திருந்தால் எங்காவது
எதை ஒன்றையாவது வைத்து விடும் அளவுக்கு என்னை படுத்தி எடுக்கின்றது.
ஸ்க்ரிப்ளிங் பேடு,
டைரி என்று நாளை செய்ய வேண்டிய வேலைகளை குறித்து வைத்துக் கொள்வதாலும், மெயில்
செக் பண்ணும் போதே மார்க் பண்ணி வைப்பதாலும் அலுவலக வேலைகளில் மறதியிலிருந்து தப்பித்து விடுவேன்.
ஆனால் பைக் ஸ்டாண்டில் வண்டியை எங்கே நிப்பட்டினோம் என்று நிப்பாட்டிய இடத்தைத் தேடுவது, எடுத்து வராத வண்டியை
எடுக்க பைக் ஸ்டான்டுக்குப் போவது, வேறொரு ஸ்டாண்டில் அவசரம் காரணமாக நிறுத்தி
விட்டு வழக்கமாக பைக் விடும் ஸ்டாண்டில் தேடுவது என எனது திருவிளையாடல்கள் இன்னும்
தொடரத் தான் செய்கின்றது
மீனா ஐந்து சாமான்கள்
சொன்னால் ஏதாவது ஒன்று மறந்து போகும். அதற்கு வேறு ஏதாவது காரணத்தை, அவள் ‘வாங்குவதற்கு
மறந்து விட்டேன்’ என்று தோணும் படி இல்லாமல், உடனடியாகச் சமாளிக்க ரொம்ப பயிற்சி
வேண்டும். எதை மறந்தோம் என்று தெரியாமல், ஏங்க, என்னாச்சுங்க இதக் காணோம் என்று
வாங்க மறந்த பொருளைக் கேட்கும் போது, அந்த நேரத்தில் யோசிக்க அவகாசம் இருக்காது,
உடனே காரணம் சொல்ல வேண்டும்.
மீனாவைக் கூட
சமாளித்து விடலாம், ஆனால் பாலா, சான்சே இல்ல, திரும்ப வண்டியை எடுக்க வேண்டியது
தான்.
அலுவலகத்தில் சமாளிப்பது ரொம்ப
சுலபம். என்னாச்சு சோமு, அந்த கோட் அனுப்பலையா? என்று கேட்டால், சார், எவரிதிங் ரெடி
சார், ஜஸ்ட் ஐ ஹாவ் டு சென்ட்’ என்று எப்போதும் ஒரே பதிலை வைத்து சமாளித்து
விடலாம்.
ஆனால் டீ குடித்து
விட்டு, காசு கொடுக்காமல் ஏதாவது பேசிக் கொண்டே வண்டி எடுக்க முயற்சிக்கும் போது,
கடைக்காரர், சார், காசு கொடுக்கல என்று தயங்கிய படி சொல்வார். சாரி,
மறந்துட்டேன் என்று அசடு வழியக் கொடுப்பேன்.
நீங்கள் யோசிக்கலாம்,
கடைக்காரர் ஏன் கோபப்படாமல், தயங்கிய படியே கேட்கிறார் என்று. நான் பெரும்பாலும்
அந்த அந்த ஏரியாவிற்கு என்று ஒரு டீக் கடை பிடித்து வைத்திருக்கிறேன். தாம்பரம்
வந்தால் பாலத்திற்கு கீழே உள்ள நாயர் கடை. ஆபீஸ் என்றால் கொஞ்சம் தள்ளி உள்ள டீக்
கடை, ஆழ்வார்பேட்டை வந்தால் எஸ்.ஐ.டி காலேஜ் எதிரே உள்ள ஒரு கடை, என்று.
தாம்பரம் டீக்கடையில்
வண்டியை நிறுத்தும் போதே, என்னைப்
பார்த்தவுடன் ஒரு டீ சொல்லிவிட்டு கிங்க்ஸ் சிகரெட் எடுத்து மேலே வைத்து விடுவார்.
இவர் காசு கொடுக்காமல் சென்ற நாட்களில் கூப்பிட்டுக் கேட்க மாட்டார். மறுநாள்,
காசு கொடுக்கும் போது, சார், நேத்து டீக்கு காசு கொடுக்கல, என்று சொல்வார். அதே
போல் சில்லறை வாங்காமல் மறந்து போன நாட்களிலும், மறுநாள் ஞாபகத்தோடு கொடுக்கும்
நல்லவர் இவர்.
அப்படி என்றால்
அறிமுகம் இல்லாத இடங்களில் டீயே சாப்பிட்டதில்லையா சரவணா? என்று நீங்கள் கேட்கலாம்.
அப்படியொரு நிலை ஏற்பட்டால், முதலில் காசைக் கொடுத்து விட்டுத் தான் டீ குடிப்பேன்.
எதுக்குப்பா ரிஸ்க்?
அப்படி என்றால் கடவுள்
வரம் கொடுத்தார் என்று சொன்னாயே? அப்போ எல்லாமே சாபம் தானா என்று நீங்கள் நினைத்து
விடக் கூடாது.
அப்படி இல்லை. மஞ்சுவின்
துரோகம் மறக்க முடிந்ததே.
எனக்கு யாரையும்
எதிரியாகப் பார்க்க முடியவில்லை. உண்மைலேயே அவர்கள் எனக்கு என்ன தீங்கு செய்தார்கள்
என்பதே நினைவு இருக்காது. உதவி என்று
யாராவது சொந்தக்காரர்கள், வந்து நிற்கும் போது, என்னால் முடிந்த உதவி செய்து
அனுப்பி விடுவேன். அவர்கள் போன பின்பு தான் அம்மாவோ அல்லது மீனாவோ அவர்கள்
எனக்குச் செய்திருந்த கெடுதலை சொல்வார்கள்.
விடும்மா! எனக்கே
ஞாபகம் இல்ல, போகட்டும் என்று சொல்வது உண்மையிலேயே சுலபமாக, சுகமாக இருக்கின்றது.
எவ்வளவு தான் முயன்றாலும்,
இன்னும் சாவியை வண்டியிலேயே வைத்து விடுவது, பணம் எடுத்து முடித்தவுடன் ஏ.டி.எம் கார்டை
எடுக்காமல் வந்து விடுவது, ஐந்தில் ஒரு சாமானை வாங்க மறப்பது என இன்னமும் எனது
மறதி தொடரத்தான் செய்கின்றது.
என்ன செய்யலாம்......., வல்லாரையை
வளச்சு வளச்சு சாப்பிடலாமா, இல்லை பறந்து கொண்டே இருக்கும் எனது மனசு தான்
பிரச்சினையா என்று தெரியவில்லை.
இந்த ப்ளாக்கில் கடைசி
பஞ்ச் என்று எதுவும் கிடையாது. ஆனால் நேற்று எழுதிய இந்த ப்ளாக்கை இன்று காலையில்
அப்லோட் செய்ய மறந்து விட்டேன். எனது தோழியிடம் சாரி சொல்லவும் தான்.

Hi... nanum dhan marandhuten... Saturday leave nu solla.. ahhh...
ReplyDeleteunga maradhi varam dhan... pisasu mari ellathaium gnabagam vechikitu.. adhuvum aduthavanga thappai innum adhigama gnabagam vechikara saban evlo thollaiyanadhunu enaku therium...
adhanla vallaraikaga alaiyama ipdiye irunga.. sometimes... 'இன்னும் சாவியை வண்டியிலேயே வைத்து விடுவது, பணம் எடுத்து முடித்தவுடன் ஏ.டி.எம் கார்டை எடுக்காமல் வந்து விடுவது, ஐந்தில் ஒரு சாமானை வாங்க மறப்பது' idhellam vazhkaiya interesting a aakkum...
adhanala ungaluku vallaraiye kedaikkama poga en vazhthukkal.. ahhhhhh
keep going...